search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுத பூஜை"

    • வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
    • லெஜண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்தார்.

    தமிழ்நாடு முழுக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வார இறுதியை தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை என நீண்ட விடுமுறை காரணமாக பலரும் தங்களது சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாடினர்.

     

    இந்த நிலையில், லெஜண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டுனர்களுடன் ஆயுத பூஜையை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆயுத பூஜை சிறப்பு பரிசை வழங்கிய லெஜண்ட் சரவணன் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    கொண்டாட்டத்தின் அங்கமாக, ஆட்டோ ஓட்டுனரின் ஆசைக்கு இணங்க லெஜண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்தார். மேலும் அங்கு கூடிய பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுமக்களின் வசதிக்காக தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
    • சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    இந்த ஆண்டு 2023 ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முடிந்து சென்னைக்கு திரும்ப வரும் பயணிகளின் வசதிக்காக இன்று பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் 1213 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 3313 பேருந்துகள் இயக்கப்படுகிறது மற்றும் பிற பகுதிகளிலிருந்து முக்கிய தொழில் நகரங்களுக்கு செல்லும் வகையில் 1846 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பொதுமக்களின் வசதிக்காக தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற தொழிற் கருவிகளையும், இயந்திரங்களையும் தூய்மைப்படுத்தி, சந்தனம், குங்குமம் இட்டு அவற்றை இறை பொருளாகக் கருதி வழிபடும் நன்னாள் ஆயுத பூஜை திருநாளாகும்.
    • விஜயதசமி அன்று தொடங்கும் அனைத்து தொழில்களும், செயல்களும் தெய்வ சக்தியின் அருளால் வெற்றியடையும் என்பது நமது நம்பிக்கை.

    சென்னை:

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் 9-வது நாளில் ஆயுத பூஜையையும், 10-வது நாளில் விஜயதசமியையும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்ற அவரவரது தொழில் வளம் பெருகிட, மக்கள் அன்னையின் அருள் வேண்டி, தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற தொழிற் கருவிகளையும், இயந்திரங்களையும் தூய்மைப்படுத்தி, சந்தனம், குங்குமம் இட்டு அவற்றை இறை பொருளாகக் கருதி வழிபடும் நன்னாள் ஆயுத பூஜை திருநாளாகும்.

    விஜயதசமி அன்று தொடங்கும் அனைத்து தொழில்களும், செயல்களும் தெய்வ சக்தியின் அருளால் வெற்றியடையும் என்பது நமது நம்பிக்கை.

    அனைவரது வாழ்விலும் அனைத்து செல்வங்களும் தழைத்தோங்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து, அன்பார்ந்த தமிழக மக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மேலும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரும் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • ஆயுத பூஜை நாளில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பட்டறைகள் என அனைத்து இடங்களிலும் பூஜை செய்வது வழக்கம்.
    • அதன்படி சேலம் கடைவீதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

    சேலம்:

    ஆயுத பூஜை பண்டிகை நாளை (திங்கட்கிழமை) மற்றும் விஜயதசமி நாளை மறுநாள் (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை நாளில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பட்டறைகள் என அனைத்து இடங்களிலும் பூஜை செய்வது வழக்கம். மேலும், வீடுகளிலும் பூஜை செய்து கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கு திருஷ்டி சுற்றி சாம்பல் பூசணி உடைப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    பூஜை பொருட்கள் விற்பனை

    அதன்படி சேலம் கடைவீதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் பூஜைக்கு தேவையான பழங்கள், தேங்காய், இலை, விபூதி, குங்குமம், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம், விளக்கு எண்ணெய், அலங்கார தோரணங்கள், பொரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை, கடலை உருண்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி சென்றனர்.

    இதனால் பூஜை பொருட்களின் வியாபாரம் மும்முரமாக நடந்தது. சின்னக்கடை வீதியில் ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் அதிகளவில வாங்கி சென்றனர்.

    சேலம் மாநகரில் செவ்வாய்ப்பேட்டை, பால் மார்க்கெட், கடைவீதி, அம்மாபேட்டை, பட்டைக்கோவில், வ.உ.சி மார்க்கெட், ஆனந்தா இறக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாம்பல் பூசணி விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தன. ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்பல் பூசணியை பொதுமக்கள் பலர் வாங்கி சென்றனர்.

    இதேபோல், பால் மார்க்கெட் பகுதியிலும் பொரி விற்பனை மும்முரமாக நடந்தது. ஒரு பக்கா பொரி ரூ.15-க்கும், 7½ கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.550-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், பொட்டுக்கடலை ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120-க்கும், நிலக்கடலை ரூ.150-க்கும், அவுல் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும், குரங்குச்சாவடி, அஸ்தம்பட்டி, செரிரோடு உள்பட பல்வேறு இடங்களிலும், சாலையோரத்திலும் தற்காலிக பொரி, பூசணி உள்ளிட்ட கடைகளை சிலர் வைத்து வியாபாரம் செய்தனர். மேலும், சேலத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளிலும் பூக்கள், வாழைக்கன்று, மாவிலை உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை ஜொராக நடந்தது. இதுகுறித்து செவ்வாய்பேட்டையை சேர்ந்த பழ வியாபாரி ஆறுமுகம் கூறுகையில், ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.150க்கும், மாதுளை கிலோ ரூ.150 முதல் ரூ.250 வரையும், திராட்சை கிலோ ரூ.100-க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.80-க்கும், கமலா ஆரஞ்சு கிலோ ரூ.80-க்கும், கொய்யாப்பழம் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆயுத பூஜையை முன்னிட்டு வழக்கத்தைவிட பழங்கள் விற்பனை கூடுதலாக நடந்தது.

    ரூ.700 ஆக உயர்வு

    இந்த நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் மற்றும் ஈரடுக்கு பஸ் நிலையம் யொட்டி உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு கிலோ குண்டு மல்லிகை பூ கிலோ ரூ.700 ஆக உயர்ந்துள்ளது.

    சன்ன மல்லிகை ரூ.800-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், ஜாதி மல்லிகை கிலோ ரூ.280-க்கும், சாமந்தி கிலோ ரூ.120 முதல் 200-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், பட்டன் ரோஸ் ரூ.100-க்கும், அரளி பூக்கள் ரூ. 300 முதல் ரூ. 500 வரை விற்பனை ஆகிறது.

    இது குறித்து சேலத்தை சேர்ந்த பூ வியாபாரி செந்தில்குமார் கூறியதாவது:-

    இந்த மார்க்கெட்டுக்கு பூசாரிப்பட்டி, அரியனூர், சீரகாபாடி, ராயக்கோட்டை, மாரண்டஹள்ளி, கடத்தூர், பொம்மிடி ஆகிய பகுதியில் இருந்து விற்பனைக்கு விவசாயிகள் சாமந்தி பூக்கள் கொண்டு வருகின்றனர். பட்டர் ரோஸ் பெங்களூருவில் இருந்து வருகிறது. அரளிப்பூக்கள் பனமரத்துப்பட்டி, திருமனூர் வேப்பிலைப்பட்டி, வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மல்லிகை பூ மல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், குண்டுமல்லி பனமரத்துப்பட்டி பகுதியில் இருந்தும் முல்லை பூக்கள், கன்னங்குறிச்சி, வீராணம் பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பூக்களை விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர். பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்கள் விலை உயரும். அதேபோல் ஆயுத பூஜையை முன்னிட்டு வ.உ.சி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆயுத பூஜையில் பொரி, பழங்கள், இனிப்புகள் வைத்து வழிபடுவார்கள்.
    • ஆப்பிள், இன்று ரூ.140 முதல் ரூ.200 வரை விற்பனையானது.

    நெல்லை:

    நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி திருவிழாவின் 9-வது நாளான நாளை சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும், 10-வது நாள் விஜயதசமியும் கொண்டா டப்படுகிறது.

    இதில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையான நாளைய தினம் தொழிலாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு பொரி, பழங்கள் வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள். ஆயுத பூஜையில் பொரி, பழங்கள், சர்க்கரை, பழங்கள், இனிப்புகள் வைத்தும், வாழை மரக்கன்று கள் கட்டியும் பூ மாலை அணிவித்தும் பூசணிக்காய் உடைத்தும் வழிபடுவார்கள். கல்வியாளர்கள் தங்களது படிப்பறை, புத்தகங்களில் பூஜை செய்வார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் சரஸ்வதி பூஜைக்கு தேவை யான பொருட்கள் வாங்குவதற்காக இன்று சந்தைகளில் மக்கள் கூட்டம் களை கட்டியது. டவுன் போஸ் மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட்டுகளில் அவல், பொரி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் காலை முதலே வர தொடங்கினர்.

    நேற்று தொடங்கி 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பெரும்பாலா னோர் தங்களது குடும்பத்து டன் இன்று மார்க்கெட்டு களில் குவிந்தனர். இதனால் மார்க்கெட்டுகள் களைகட்டி காணப்பட்டது. தொடர்ந்து அவர்கள் தக்காளி, கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், கேரட், கொத்தமல்லி இலை உள்ளிட்ட அனைத்து வகையான காய்கறிகளையும் வாங்கி சென்றனர்.

    பண்டிகை தினம் என்பதால் அவற்றின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. காய்கறிகள் மட்டுமல்லாது பழங்களின் விலையும் உயர்ந்திருந்தது. கடந்த வாரம் ரூ.120 முதல் ரூ.180 வரை விற்கப்பட்ட ஆப்பிள், இன்று ரூ.140 முதல் ரூ.200 வரை விற்பனையானது. கொய்யாப்பழம், மாதுளை, அன்னாசி பழம் உள்ளிட்ட அனைத்து பழங்களும் கிலோவுக்கு ரூ.25 வரை அதிகரித்து காணப்பட்டது.

    இதேபோல் பூஜைக்கு தேவைப்படும் முக்கிய பொருளான பொரி ஒருபடி ரூ.45-க்கு விற்பனையானது. உடைத்த கடலை கிலோ ரூ.70-க்கும், சிறிய ரக அவல் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகளில் வெள்ளை பூசணிக்காய் கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையானது. வாழைத் தார்கள் ரூ.300 முதல் ரூ.500 வரையிலும், சிறிய ரக வாழைகள் ரூ.40 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    பாளை காந்தி மார்க்கெட்டில் மல்லிகை, பிச்சிப்பூக்களின் விலை நேற்று உயர்ந்து காணப்பட்ட நிலையில் இன்று மேலும் ரூ.300 வரை அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனையான நிலையில் இன்று ரூ.1,800 வரை விற்கப்பட்டது. பிச்சிப்பூ விலை நேற்று ரூ.1,200 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.1,500 ஆக அதிகரித்தது.

    மேலும் சம்பங்கி ரூ.500, ரோஜா ரூ.300, கேந்தி ரூ.100-க்கு விற்பனை யானது. இதேபோல் அரளி பூ ரூ.500-க்கும், கோழி பூ ரூ.60-க்கும், நந்தியா விட்டம் ரூ.500-க்கும் விற்பனை யானது. பூக்கள், காய்கறிகள், பூஜை பொருட்கள் விலை உயர்ந்து காணப்பட்டாலும் பொதுமக்கள் அதனை கருத்தில் கொள்ளாமல் வாங்கி சென்றனர்.

    இன்று மாலை மார்க்கெட்டுகளில் பொருட் கள் வாங்க வரும் பொது மக்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் அந்த பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று வரு கின்றனர். மாவட்டத்தில் திசையன் விளை, வள்ளியூர், அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பகுதி களிலும் பஜார் பகுதிகளில் களை கட்டி காணப்பட்டது.

    இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களி லும் சரஸ்வதி பூஜையை யொட்டி பொதுமக்கள் அதிகளவில் மார்க்கெட்டு களில் குவிந்தனர்.

    சங்கரன் கோவில், தென்காசி பூ மார்க்கெட்டு களிலும் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. தூத்துக்குடி யில் பஜார் பகுதிகளில் காலை முதலே அவல், பொரி வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.


    சந்திப்பு மேல்பாலம் கீழ் பகுதியில் சிறிய வாழைகள் விற்பனை நடைபெற்ற காட்சி.

    சந்திப்பு மேல்பாலம் கீழ் பகுதியில் சிறிய வாழைகள் விற்பனை நடைபெற்ற காட்சி.


    நெல்லை சந்திப்பில் அவல், பொரி, கடலை விற்பனை மும்முரமாக நடைபெற்ற காட்சி.

    நெல்லை சந்திப்பில் அவல், பொரி, கடலை விற்பனை மும்முரமாக நடைபெற்ற காட்சி.


     


     


    • சுற்றுலா தலங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு
    • போலீசார் கடைவீதிகளில் மப்டி உடைகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    ஆயுத பூஜை விழா நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் ஏற்க னவே கடந்த 8 நாட்களுக்கு முன்பு நவராத்திரி கொலு வைத்து பொதுமக்கள் வீடு களிலும், கோவில்களிலும் வழிபாடு நடத்தி வருகி றார்கள்.

    நாளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை விமர்சையாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகரில் பல்வேறு இடங்களில் இன்னிசை கச்சேரிகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    வேப்பமூடு பகுதிகளில் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்க ளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆயுத பூஜை யையொட்டி இன்னிசை நிகழ்ச்சிகள், பட்டி மன்றங்கள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்கு போலீ சார் பல்வேறு கட்டுப்பாடு களை விதித்துள்ளனர். நிகழ்ச்சிகள் நடத்தும்போது போலீசாரிடம் உரிய அனுமதி பெற்று நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    ஆயுத பூஜை விழா தொடர் விடு முறையையடுத்து மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம். எனவே சுற்றுலா தலங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோ சனை மேற் கொண்டார். அங்கு பாதுகாப்பை அதி கரிக்கவும் அவர் அறி வுறுத்தினார்.

    வெளியூர்களில் இருந் தும் பஸ்கள் மற்றும் ரெயில்க ளில் ஏராளமான பொது மக்கள் சொந்த ஊருக்கு திரும்பிய வண்ணம் உள்ள னர். இதனால் பஸ்கள் மற்றும் ரெயில்களில் கூட்டம் அலைமோதி வரு கிறது. பஸ் நிலையங்களிலும், ரெயில் நிலையங்களிலும் போலீ சார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வரு கிறார்கள். கடை வீதிக ளிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. பூஜைக்கு தேவை யான காய்கனிகளை பொது மக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    எனவே மார்க்கெட்டு களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாகர் கோவில் அப்டா மார்க்கெட், கனகமூலம் சந்தை மற்றும் மார்த்தாண் டம், தக்கலை, குளச்சல், குலசேகரம் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. காய்கறிகள் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. வெள்ள ரிக்காய், பீன்ஸ், சேனை, உள்ளி, பல்லாரி விலை வழக்கத்தை விட சற்று உயர்ந்து காணப்பட்டது. இதேபோல் வாழைத் தார்கள் விலையும் இன்று அதிகமாக இருந்தது.

    கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து போலீசார் கடைவீதிகளில் மப்டி உடைகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கடை வீதிகளில் சந்தேகப்ப டும்படியாக நபர்கள் சுற்றித்திரிந்தால் போலீ சாருக்கு உடனே தகவல் தெரிவிக்குமாறு அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    ஓடும் பஸ்களில் பெண் கள் கூட்டத்தை பயன் படுத்தி செயின் பறிப்பில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வரு கிறார்கள். பொதுமக்கள் எச்சரிக்கையு டன் இருக்குமாறு அறிவுறுத்தி யுள்ளனர்.

    • தென்மாவட்டங்களை நோக்கி ஏராளமான அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், வாகனங்கள் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • ஆயத பூஜை தொடர்விடுமுறையையொட்டி பஸ்கள், கார்கள், ரெயில்கள் மூலம் இதுவரை சுமார் 7 லட்சம் பேர் சென்னையில் இருந்து வெளியூர் பயணம் செய்து உள்ளனர்.

    தாம்பரம்:

    ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி நாளை, நாளை மறுநாள் தொடர்ந்து விடுமுறைகள் வருகின்றன. இதற்கு முன்னதாக சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் நேற்று முன்தினம் முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர். அவர்களுக்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    நேற்று இரவு வழக்கத்தை விட ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையம், ரெயில்நிலையத்தில் குவிந்தனர். சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் 950 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்ததால் நள்ளிரவு வரை பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தங்கி இருந்தவர்கள் ஏராளமானோர் சொந்த கார்களிலும் நேற்று இரவு புறப்பட்டு சென்றனர். தென்மாவட்டங்களை நோக்கி ஏராளமான அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், வாகனங்கள் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கோயம்பேடு பஸ்நிலைய பகுதி, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் நள்ளிரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

    இதேபோல் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அருகே மழைநீர் கால்வாய் அமைக்க சென்னை-திருச்சி நெடுஞ்சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு நேற்று பணிகள் நடந்தன. போக்குவரத்து எதிர்திசையில் மாற்றப்பட்டு இருந்தன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரனூர் சுங்கச்சாவடியிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று சென்றன.

    மேலும் குரோம்பேட்டை தனியார் வணிக வளாகங்களில் பொதுமக்கள் பொருட்களை வாங்க குவிந்து இருந்ததால் குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் சானிடோரியம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது. போக்குவரத்து போலீசார் குறைந்த அளவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

    ஆயத பூஜை தொடர்விடுமுறையையொட்டி பஸ்கள், கார்கள், ரெயில்கள் மூலம் இதுவரை சுமார் 7 லட்சம் பேர் சென்னையில் இருந்து வெளியூர் பயணம் செய்து உள்ளனர். இன்று இரவும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

    வெளியூர் செல்லும் பொதுமக்களின் தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று சென்னையில் இருந்து இயக்கப்படும் 2100 பஸ்களுடன் சேர்ந்து 950 பஸ்கள் இயக்கப்பட்டது. நேற்று 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். பல்வேறு விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட 1545 பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.27.67 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு ரூ.15.41 லட்சம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ரூ.24.53 லட்சம் வரி விதிக்கட்ட நிலையில் ரூ.7.54 லட்சம் வசூலிக்கப்பட்டது. 102 பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன. சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்புவதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    • மல்லி ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டது.
    • சம்பங்கி ரூ.220, கனகாம்பரம் ரூ.180, சாமந்தி ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    ஆயுத பூஜையை முன்னிட்டு காஞ்சிபுரம் மார்க்கெட்டுகளில் இன்று பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

    மல்லி ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டது. ரோஜா ரூ.150-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. சம்பங்கி ரூ.220, கனகாம்பரம் ரூ.180, சாமந்தி ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    • திண்டிவனம், விழுப்புரம், கிருஷ்ணகிரி ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் பூசணிக்காய் விற்பனைக்கு குவிந்துள்ளது.
    • அவல், பொறி, கடலை, வாழைத்தோரணம், பழங்கள் விற்பனை களைகட்டி உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    போரூர்:

    ஆயுத பூஜை பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை முதலே கோயம்பேடு மார்கெட்டில் குவிந்த சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்ல குவிந்தனர். இதனால் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

    ஆண்டு தோறும் கோயம்பேடு பூ மார்கெட் வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏலம் நடத்தி சிறப்பு சந்தைக்கு அனுமதி கொடுக்கப்படுவது வழக்கம். மெட்ரோ ரெயில் பணி, ஆக்கிரமிப்பு கடைகள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த ஆண்டு சிறப்பு சந்தை நடத்த ஏலம் நடத்தப்படவில்லை.

    இதையடுத்து சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் பூஜை பொருட்களை வாங்கி சென்றிட வசதியாக மளிகை மார்கெட் வளாகத்தில் கடந்த 18-ந்தேதி அங்காடி நிர்வாக குழு சார்பில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டது.

    இந்த சிறப்பு சந்தையில் 100-க்கும் மேற்பட்ட வெளி வியாபாரிகள் அவல், பொரி, கடலை, பூசணிக்காய், தேங்காய், வெற்றிலை உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    திண்டிவனம், விழுப்புரம், கிருஷ்ணகிரி ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் பூசணிக்காய் விற்பனைக்கு குவிந்துள்ளது.

    அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் படவேடு ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட லாரிகளில் வாழைகன்று விற்பனைக்கு வந்திருந்தன. இவை அனைத்தும் கோயம்பேடு மார்கெட்டை ஒட்டியுள்ள "இ மற்றும் ஏ" சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    அவல், பொறி, கடலை, வாழைத்தோரணம், பழங்கள் விற்பனை களைகட்டி உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அவல் ஒரு படி ரூ.100-க்கும், பொரி-ரூ.20, கடலைரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளம் பழங்கள் விலையும் அதிகமாக இருந்தது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் விலை விபரம் வருமாறு:- ஆப்பிள்-ரூ.200, சாத்துக்குடி-ரூ.100, மாலூர் கொய்யா-ரூ.150, மாதுளம் பழம்-ரூ.250, அவல் ஒரு படி (பெரியது) -ரூ.100, பொரி ஒரு படி-ரூ.20, கடலை ஒரு படி-ரூ.150, நாட்டு சர்க்கரை ஒரு கிலோ-ரூ.100, தேங்காய் ஒன்று-ரூ.20-ரூ.25வரை, வாழை இலை ஒன்று-ரூ.10, வாழைகன்று (10எண்ணிக்கை - 1 கட்டு) -ரூ.100, பூசணிக்காய் (1கிலோ)-ரூ.10, எழுமிச்சை கிலோ ரூ.120, தோரணம் (20எண்ணிக்கை) -ரூ.50, மாங்கொத்து ஒரு கட்டு ரூ.15, வெற்றிலை கவுளி(80 எண்ணிக்கை)-ரூ.40 மஞ்சள் வாழைத்தார் ஒன்று- ரூ.500.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, அங்காடி நிர்வாக குழு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000வசூல் செய்து வருகின்றனர். ஆனால் மார்கெட் வளாகத்தை சுற்றி உள்ள சாலைகளில் நேரடியாக வியாபாரிகள் பலர் தற்காலிக கடைகள் அமைத்தும் வாகனங்களில் வைத்தும் நேரடியாக பூஜை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவல்,பொரி, கடலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை ஆகாமல் அதிகளவில் தேக்கமடைந்து பெருத்த நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் கண்காணிப்பு செய்து ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆயதபூஜையையொட்டி ஆந்திரா, திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து இன்று 80-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூ விற்பனைக்கு குவிந்து உள்ளது. பூக்கள் விலை அதிகமாக காணப்பட்டது. சாமந்தி ஒரு கிலோ ரூ.200-க்கும், மல்லி மற்றும் கனகாம்பரம் ரூ.900-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் வலை விபரம்(கிலோவில்)வருமாறு:-

    சாமந்தி பூ -ரூ.200-க்கும், பன்னீர் ரோஜா-ரூ.150-க்கும், சாக்லேட் ரோஜா-ரூ.250, மல்லி மற்றும் கனகாம்பரம்-ரூ.90, அரளி-ரூ500, ஜாதி-ரூ.450,முல்லை-ரூ.600, சம்பங்கி-ரூ250 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மார்கெட்டில் உள்ள கடைகளில் பூக்கள் விலை மேலும் பல மடங்கு எகிறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு.
    • இரு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் ரெயில் இயக்கம்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிக்காக மாலையில் நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவை, இன்று 21-ந்தேதி இரவு 8 மணி முதல் 10 மணிவரை 6 நிமிடத்துக்கு ஒரு ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.

    இந்நிலையில், 19-ந் தேதி அன்று 3,43,922 பயணிகளும், 20-ந்தேதி அன்று இதுவரை இல்லாத அளவில் 3,60,743 பயணிகளும் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை.

    இதில் அதிகபட்சமாக புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 28,021 பயணிகளும், கிண்டி மெட்ரோ ரெயில் நிலையத்தில் 20,423 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 18,375 பயணிகளும், விமான நிலையம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 18,113 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கியூ.ஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட் போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (83000 86000) மூலமாக மற்றும் பேடிஎம் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.240-க்கு விற்கப்படுகிறது.
    • தினசரி 15 முதல் 20 லாரிகளில் மட்டுமே சாத்துக்குடி விற்பனைக்கு வருவது வழக்கம்.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களின் விற்பனை களை கட்டியது.

    பூ மார்கெட்டுக்கு ஆந்திரா மாநிலம் குப்பம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து இன்று ஏறத்தாழ 80 வாகனங்களில் சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்கு குவிந்துள்ளது. வழக்கமாக தினசரி 40 வாகனங்கள் மூலம் மட்டுமே பூ விற்பனைக்கு வரும். இந்த நிலையில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பூக்கள் வரத்து 2 மடங்காக அதிகரித்து உள்ளது.

    கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.240-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் பன்னீர் ரோஜா ஒரு கிலோ-ரூ.150 முதல் 200வரையிலும், சாக்லேட் ரோஜா ஒரு கிலோ -ரூ.240-க்கும், மல்லி ஒரு கிலோ ரூ.900-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் பூக்கள் விலை மேலும் பல மடங்கு எகிறி உள்ளது.

    மற்ற பூக்கள் விலை விபரம் வருமாறு (கிலோவில்) ஜாதி-ரூ.600, முல்லை-ரூ.700, கனகாம்பரம்-ரூ.1100, அரளி-ரூ.500, சம்பங்கி-ரூ.300. இதேபோல் பழ மார்க்கெட்டுக்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்து இன்று 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் சாத்துக்குடி பழங்கள் விற்பனைக்கு குவிந்துள்ளது. தினசரி 15 முதல் 20 லாரிகளில் மட்டுமே சாத்துக்குடி விற்பனைக்கு வருவது வழக்கம்.

    ஆனால் கடந்த 2 நாட்களாக அதன் வரத்து 3 மடங்கு வரை அதிகரித்து உள்ளது. எனினும் எதிர்பார்த்த விற்பனை நடக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் சாத்துக்குடி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.35 முதல் ரூ40-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் இருந்து 4 வகையான ஆப்பிள் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 10 லாரிகளில் ஏறத்தாழ 150 டன் ஆப்பிள் பழங்கள் விற்பனைக்கு வரும். இதில் தினசரி விற்பனை ஆவது போக மீதமுள்ள ஆப்பிள் பழங்களை வியாபாரிகள் குளிர்சாதன வசதி கொண்ட குடோனில் வைத்து பதப்படுத்தி வைத்து பின்னர் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்வது வழக்கம்.

    தற்போது ஆயுத பூஜை பண்டிகை என்பதால் கடந்த சில நாட்களாக வியாபாரிகள் அதிகளவில் ஆப்பிள் பழங்களை கொள்முதல் செய்து தங்களது குடோனில் கையிருப்பில் வைத்து தற்போது விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இமாச்சல் ஆப்பிள் 25 கிலோ பெட்டி -ரூ.5 ஆயிரத்துக்கும், காஷ்மீர் ஆப்பிள் 14 கிலோ பெட்டி- ரூ.2ஆயிரத்துக்கும், இத்தாலி ராயல்கலா ஆப்பிள் 18 கிலோ பெட்டி- ரூ.3800-க்கும், கின்னூர் ஆப்பிள் 10 கிலோ பெட்டி-ரூ.2200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கர்நாடக மாநிலம் மாலூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, திருப்பத்தூர் அடுத்த ஒடுக்கத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து கொய்யா பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் கொய்யா பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. மாலூர் கொய்யா 25 கிலோ பெட்டி ரூ.2 ஆயிரம், மற்ற கொய்யா 25 கிலோ பெட்டி ரூ1200-க்கும் விற்கப்படுகிறது.

    இதேபோல் மாதுளை மற்றும் மஞ்சள் வாழைத்தார் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. மாதுளம் பழம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.180-க்கும், மஞ்சள் வாழைத்தார் ஒன்று ரகத்தை பொறுத்து ரூ.300 முதல் 500 வரை விற்பனை ஆகி வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு தொடங்கி மழை பெய்து வருவதால் வெளிமார்கெட் மற்றும் பல்வேறு பகுதிகளில் தற்காலிக கடைகள் மூலம் பூஜை பொருட்களை விற்பனை செய்து வரும் வியாபாரிகள் மழை தொடருமா என்கிற அச்சத்தின் காரணமாக பெரிதும் கவலை அடைந்து உள்ளனர்.

    • சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு கட்டண ரெயில் காரைக்குடிக்கு நாளை இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.
    • நாகர்கோவிலில் இருந்து சிறப்பு கட்டண ரெயில் 24-ந்தேதி இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்து சேருகிறது.

    சென்னை:

    ஆயுத பூஜை கூட்ட நெரிசலை குறைக்க தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்கள் அறிவித்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு கட்டண ரெயில் எண்.06039 காரைக்குடிக்கு நாளை (22-ந்தேதி) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 9 மணிக்கு சென்றடைகிறது.

    இதேபோல் எண். 06040 காரைக்குடியில் இருந்து 23-ந்தேதி இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேருகிறது.

    நாகர்கோவிலில் இருந்து சிறப்பு கட்டண ரெயில் எண்.06046 24-ந்தேதி இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்து சேருகிறது. எழும்பூரில் இருந்து எண்.06045 சிறப்பு ரெயில் 25-ந்தேதி காலை 10.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

    இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் நிலையங்களில் நின்று செல்லும்.

    இந்த ரெயிலில் ஏசி 2-ம் வகுப்பு படுக்கை வசதி ஒரு பெட்டி, 3-ம் வகுப்பு ஏசி படுக்கை பெட்டிகள் 5, சாதாரண 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள்-11, 2 பொதுப்பெட்டிகள் இடம்பெற்று உள்ளன.

    சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

    ×