என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து நாளை சிறப்பு ரெயில்கள் இயக்கம்
- அரசு விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருகின்றன.
- 3 சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை, புதன், வியாழக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருகின்றன. வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுப்பு போட்டால் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கிறது. கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நாளை (30-ந் தேதி) சென்னையில் இருந்து திருவனந்தபுரம், செங்கோட்டை, மதுரை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்கள் விடப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 10.15 மணிக்கு இந்த ரெயில் புறப்படுகிறது. மறுநாள் பகல் 2.05 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையம் சென்றடைகிறது.
அதேபோல 5-ந்தேதி திருவனந்தபுரம் வடக்கில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் எழும்பூர் வந்தடைகிறது. இந்த ரெயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து நாளை மாலை 4.15 மணிக்கு செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டை செல்கிறது. விழுப்புரம், அரியலூர், திருச்சி வழியாக இந்த ரெயில் இயக்கப்படுகிறது.
எழும்பூரில் இருந்து மதுரைக்கு ஒரு வழி மெமு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாளை இரவு 11.45 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு மறுநாள் காலை மதுரை சென்றடைகிறது.
இந்த ரெயில் மயிலாடு துறை, சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த 3 சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.






