search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் ஆயுத பூஜையையொட்டி பூ,பழங்கள், அலங்கார பொருட்கள் விற்பனை களைகட்டியது
    X

    பூ மார்க்கெட்டில் மாலைகள் தயார் செய்யும் பணி நடைபெறுவதையும், பழங்கள், அலங்கார பொருட்களை வாங்கும் பொதுமக்கள்.

    திருப்பூரில் ஆயுத பூஜையையொட்டி பூ,பழங்கள், அலங்கார பொருட்கள் விற்பனை களைகட்டியது

    • ஆயுத பூஜை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூரில் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
    • காலை முதல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டத்துடன் மார்க்கெட் களை கட்டியது

    திருப்பூர் :

    ஆயுத பூஜை பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூரில் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நேற்று பூ மற்றும் அலங்கார பொருட்களின் விற்பனை மும்முரமாக நடந்தது.

    ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் பூ மார்க்கெட்டில் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயுத பூஜைக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படும் செவ்வந்தி பூ அதிக அளவில் உள்ளன. நாளை ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் மார்க்கெட்டில் பூக்கள் வாங்குவதற்காக நேற்று காலை முதல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வந்தனர். இதனால் மார்க்கெட் மக்கள் கூட்டத்துடன் களை கட்டியது. பூக்களின் விலையும் அதிகமாக காணப்பட்டது. வழக்கமாக ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.400-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் நேற்று கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், முல்லை ரூ.600, ஜாதிமல்லி ரூ.600, செவ்வந்தி ரூ.300 முதல் ரூ.400 வரைக்கும், சம்பங்கி ரூ.300, செண்டுமல்லி ரூ.160, பட்டு பூ ரூ.100, அரளி ரூ.400 முதல் ரூ.600 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒவ்வொரு பூக்களின் விலையும் அதன் தரத்திற்கு தகுந்தவாறு ஏற்ற இறக்கமாக இருந்தது.

    பழங்கள் விற்பனை

    இதேபோல் பூஜைக்கு தேவையான பழங்களின் விற்பனையும் அதிகமாக இருந்தது. ஒரு கிலோ ஆப்பிள் பழம் அதன் தரத்திற்கு தகுந்தவாறு ரூ.100 முதல் ரூ.140 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஆரஞ்சு ரூ.100, மாதுளை ரூ.200 முதல் ரூ.300 வரைக்கும், சாத்துக்குடி ரூ.80, திராட்சை ரூ.120, அண்ணாச்சி பழம் ரூ.80, வாழைப்பழம் அதிகபட்சமாக ரூ.60 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. இவற்றை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர். இதேபோல் பூஜைக்கு பயன்படுத்தப்படும் அலங்கார தோரணங்களும் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் புத்தம் புது வடிவில் வைக்கப்பட்டுள்ள பல அலங்கார ெபாருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மேலும், வெண் பூசணி, எலுமிச்சம்பழம், தேங்காய் மற்றும் அவல், பொரி, கடலை உள்ளிட்ட பூஜை பொருட்களும் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனால் மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

    Next Story
    ×