search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதார் அட்டை"

    • ஷபிபுல்லா கைரேகை வைத்தபோது அந்த நபர் போலியானவர் என்பதை சார்பதிவாளர் கண்டறிந்தார்.
    • இடத்தின் உரிமையாளரான கணபதி இறந்துவிட்டார் என்பதையும் அவர் அறிந்தார்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மீனாட்சிபுரத்தை சேர்ந்த கணபதி என்பருக்கு சொந்தமான இடம் உள்ளது.

    இதனை அதே பகுதியில் பள்ளிக்கூடம் தெருவில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவரது மகன் சேகர் முருகன் என்ற ஷபிபுல்லா(வயது 41) என்பவர் போலி ஆவணங்கள் மூலமாக பத்திரப்பதிவு செய்ய முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து சார்பதிவாளர் செல்வக்குமார் அளித்த புகாரின்பேரில் செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் ஷபிபுல்லாவிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், தற்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆதார் எண் மூலம் அடையாளம் காணும் வசதியால் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    அதாவது மீனாட்சிபுரத்தில் வேறு ஒருவருக்கு சொந்தமான 36 சென்ட் இடத்தை அதே பகுதியை சேர்ந்த செல்லம் என்பவருக்கு பத்திரப்பதிவு செய்ய ஷபிபுல்லா ஏற்பாடு செய்துள்ளார். உடனே அவர் பத்திர எழுத்தர் அழகுதுரையிடம் பேசி அவரும் சம்மதம் தெரிவித்து போலி பத்திரம் தயார் செய்து கொடுத்துள்ளார்.

    மேலும் இந்த பத்திரத்திற்கு சாட்சி கையெழுத்து போடுவதற்காக அதே ஊரை சேர்ந்த ஆறுமுகசாமி, முத்துக்குமார் ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றபோது சொத்தை வாங்குபவர், விற்பவரின் கைரேகை மற்றும் கருவிழி பதிவு செய்யப்பட்டது.

    அதில் ஷபிபுல்லா கைரேகை வைத்தபோது அந்த நபர் போலியானவர் என்பதை சார்பதிவாளர் கண்டறிந்தார். மேலும் அந்த இடத்தின் உரிமையாளரான கணபதி இறந்துவிட்டார் என்பதையும் அவர் அறிந்தார். இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார் என்ற விபரம் தெரியவந்தது.

    இதனால் போலீசார் ஷபிபுல்லா, செல்லம், ஆறுமுகசாமி, முத்துக்குமார், அழகுதுரை ஆகிய 5 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 467-ன்படி போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • தற்போது குழந்தைக்கு 5 வயதாகும் போது கைரேகைகள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகள் சேர்க்கப்படுகிறது.
    • குழந்தைக்கு 15 வயது ஆகும்போது பயோமெட்ரிக் விபரங்கள் புதுப்பிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய அரசால் கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரியில் நிறுவப்பட்ட சட்டப்பூர்வ ஆணையமாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூ.ஐ.டி.ஏ.ஐ.) விளங்குகிறது.

    மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட இந்த ஆணையம், ஆதார் விதிகளின் கீழ் இந்தியாவில் உள்ள மக்களுக்கு தனித்துவமான 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை வழங்கி வருகிறது.

    அரசின் திட்ட நிதிகள், மானியங்கள், நன்மைகள் மற்றும் சேவைகள் சட்டம், 2016 மூலம் இந்த ஆதார் எண் கொண்ட மக்களுக்கு அரசின் சேவைகள் வழங்கப்படுகிறது.

    2012-ல் எடுக்கப்பட்ட தரவுகளோடு இருக்கும் இந்த ஆதார் அட்டையின் விபரங்களை தற்போதைய நிலைக்கு மேம்படுத்தி கொள்ள ஆதார் அட்டை முகமம் மக்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்துள்ளது.

    அதன்படி 10 ஆண்டுகளுக்கு முன் தனித்த ஆதார் அடையாள எண் பெற்று புதிய விபரம் எதுவும் சேர்க்காதவர்கள் உடனடியாக அந்த விபரங்களை சேர்த்து கொள்ளலாம் என்று ஆதார் எண்களை வழங்கும் அரசு முகமை (யூ.ஐ.டி.ஏ.ஐ.) அறிவுறுத்தி உள்ளது.

    தற்போது நாடு முழுவதும் 16 மாநிலங்களில் குழந்தைகளின் பிறப்பு சான்றுகளுடன் ஆதார் எண் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண்ணையும் ஒரே நேரத்தில் வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை யூ.ஐ.டி.ஏ.ஐ. மேற்கொண்டு வருகிறது.

    எனவே நாடு முழுவதும் அனைத்து பிறப்பு சான்றுகளும் விரைவில் ஆதார் உடன் வரும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது குழந்தைக்கு 5 வயதாகும் போது கைரேகைகள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகள் சேர்க்கப்படுகிறது. குழந்தைக்கு 15 வயது ஆகும்போது பயோமெட்ரிக் விபரங்கள் புதுப்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இதுவரை 134 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஆனாலும் அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் இன்னும் தனித்துவ அடையாள அட்டை பெறாத மாநிலங்களில் ஒன்றாக உள்ளன. தொலைதூர பகுதிகளில் உள்ள மக்கள் தொகை முழுமையாக பதிவு செய்யப்படாததால் லடாக் மற்றும் நாகலாந்திலும் இந்த பணிகள் முழுமை அடையவில்லை.

    கடந்த ஆண்டு பெறப்பட்ட 20 கோடி கோரிக்கைகளில் 4 கோடி மட்டுமே புதிய ஆதார் பதிவுக்காகவும் மீதமுள்ளவை தனிப்பட்ட விபரங்களை புதுப்பிப்பதற்காகவும் இருந்தன.

    இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூ.ஐ.டி.ஏ.ஐ.) பல ஆதார் வைத்திருப்பவர்கள் புதிய முகவரிக்கு மாறியிருப்பதால் அல்லது தங்கள் மொபைல் எண்ணை மாற்றியதால் தங்கள் விபரங்களை தானாக முன் வந்து புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த புதுப்பிப்பை ஆன்லைனில் எம் ஆதார் செயலி மூலமாக அல்லது ஆதார் மையங்களில் ரூ.50 செலவில் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பீகாரில் காணாமல் போன சிறுவன் மகாராஷ்டிரா மாநிலத்தில் மீட்பு.
    • ஆதார் அட்டை முகவரி மூலம் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    நாக்பூர்:

    கடந்த 2016 ஆண்டு நவம்பர் 28 ந்தேதி நாக்பூர் ரெயில் நிலையத்தில் 15 வயதுள்ள பேச்சு மற்றும் கேட்புத் திறன் இல்லாத சிறுவனை மீட்ட ரெயில்வே அதிகாரிகள் அவனை நாக்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த சிறுவனுக்கு பிரேம் ரமேஷ் இங்காலே என பெயரிடப்பட்டது. இந்தப் பெயரில் அந்த சிறுவனுக்கு ஆதார் அட்டை பெற அந்த காப்பகத்தின் கண்காணிப்பாளர் வினோத் தேப்ராவ் விண்ணப்பித்தார்.

    ஆனால், அந்த சிறுவனின் கைரேகை ஏற்கனவே ஒரு ஆதார் எண்ணுடன் பொருந்தியிருந்ததால் புதிய ஆதார் எண்ணை உருவாக்க முடியவில்லை. இதையடுத்து, மும்பையில் உள்ள ஆதார் ஆணையத்தின் மண்டல அலுவலகத்திற்கு சென்ற அந்த காப்பக கண்காணிப்பாளர் பரிசோதித்துப் பார்த்ததில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் குமார் என்ற பெயருடன் 2016 ஆண்டு ஆதார் எண் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் பீகாரில் உள்ள ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுவனான சச்சின்குமார் 2016 ஆண்டு நவம்பர் முதல் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த ஆதார் அட்டையில் இருந்த முகவரிக்கு காவல்துறை மூலம் பெற்றோருக்கு தகவல் அனுப்பப்பட்டது.

    அந்த தகவலின் அடிப்படையில் அவனது தாய் மற்றும் உறவினர்கள் நாக்பூர் வந்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து சச்சின் குமாரை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். 6 ஆண்டுகளுக்கு முன்னாள் காணால் போன சச்சின் குமார் ஆதார் அட்டை உதவியுடன் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

    • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி 1.8.2022 தொடங்கி 31.3.2023 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் தற்போது மொத்தம் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்கள் உள்ளனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி கடந்த ஆகஸ்டு 1-ந்தேதியில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் இந்த பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி, ஆதார் விவரங்களை வாக்காளர்கள் படிவம் 6பி என்ற படிவத்தில் பூர்த்தி செய்து, உரிய வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் நேரடியாகவோ அல்லது என்.வி.எஸ்.பி, வி.எச்.ஏ என்ற ஆன்லைன் மூலமோ வழங்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி 1.8.2022 தொடங்கி 31.3.2023 வரை (8 மாதம்) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களே வீட்டுக்கு நேரடியாக வந்து, விண்ணப்ப படிவத்தை வழங்கி, வாக்காளர்களின் விவரங்களை பூர்த்தி செய்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் இந்த பணி ஆரம்பத்தில் மந்தமாக இருந்தாலும், தற்போது பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு அதிகம் பேர் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் தற்போது மொத்தம் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 கோடியே 66 லட்சத்து 48 ஆயிரத்து 608 பேர் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்க்க பதிவு செய்துள்ளனர்.

    இது 27.78 சதவீதம் ஆகும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் 6.08 சதவீதம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில், தற்போது கூடுதலாக 21 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க விண்ணப்பம் அளித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறும்போது, 'இவர்களில் 90 சதவீதம் பேருக்கும் மேற்பட்டவர்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வழியாக பதிவு செய்துள்ளனர். வருகிற நவம்பர் மாதம் 9-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 9-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெறும். அப்போது அதிகம் பேர், ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பு உள்ளது' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.
    • ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களின் நகலையும் அளிக்க வேண்டியது இல்லை.

    சென்னை:

    நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரிசெய்யும் நோக்கில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

    நீதிமன்ற உத்தரவு இருப்பதால், ஆதார் எண்ணை கட்டாயம் தர வேண்டும் என்று அறிவுறுத்தாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் வெளிப்படைத் தன்மையை பேணும் வகையில் ஆதார் அல்லது குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட 11 ஆவணங்களையும் இணைக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னையில் ஆவடி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வீடு வீடாக வரும் வாக்காளர் பதிவு அலுவலர்கள், '6பி' படிவத்தை அளித்து, அதில் விவரங்களை பதிவு செய்வதுடன், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல்களை கேட்பதாகவும், ஒரு வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தனித்தனி செல்போன் எண்ணை கட்டாயம் தரவேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் புகார் எழுந்தது.

    இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-

    நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி ஆதார் இணைப்பு பணிகள் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் இதுவரை 97 லட்சம் பேர் ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க பதிவு செய்துள்ளனர். வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் பொதுமக்கள் "6பி" படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களின் நகலையும் அளிக்க வேண்டியது இல்லை.

    அதேபோல, தேசிய வாக்காளர் சேவை அமைப்பான 'என்.வி.எஸ்.பி. போர்ட்டல்' (https://www.nvsp.in ), வாக்காளர் சேவை எண் '1950' போன்றவற்றின் மூலமாகவும் வாக்காளர்கள் இந்த இணைப்பை மேற்கொள்ளலாம்.

    '6பி' படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களின்படி செல்போன் எண்ணை அளிக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் ஒரே ஒரு செல்போன் மட்டுமே இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த எண்ணை மட்டுமே கொடுத்தால் போதும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளுக்காக வழங்கப்படும் 6 முதல் 8 வரையிலான படிவங்களுக்கு வழக்கமாக ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதை பயன்படுத்தி, விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.

    ஆனால், ஆதார் இணைப்புக்கான '6பி' படிவத்துக்கு ஒப்புகைச் சீட்டு தரப்படுவது இல்லை. ஒப்புகைச்சீட்டு தராவிட்டால், ஆதார் இணைப்பு குறித்த நிலையை எப்படி அறியமுடியும் என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மற்ற படிவம்போல, ஆதார் இணைப்புக்கும் ஒப்புகைச் சீட்டு தரவேண்டும் என்று கோரியுள்ளனர்.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
    • இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்கும் பொருட்டும், வாக்கா ளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காள ர்களின் தனித் தகவல்களை உறுதிப்படுத்திடவும்,ஒரு வாக்காளரின் விபரங்கள் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இரு வேறு தொகுதிகளில் இடம்பெறுதல் ஆகியவற்றை தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணை க்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதளத்திலும் அல்லது வோட்டர் ஹெல்ப் லைன் ( VHA ) என்ற செயலி மூலமாகவும் பதிவு செய்யலாம் .

    வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கொண்டு வரும் படிவம் 6 பிஅல்லது கருடா மொபைல் ஆப்பில் பூர்த்தி செய்து கொடுத்தும், வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்கா ளர் உதவி மையம் மற்றும் இ - சேவை மையத்தினை அணுகியும் பதிவு செய்து கொள்ளலாம் .

    படிவம் 6 பிஅல்லது கருடா மொபைல் ஆப்பில் வாக்காளர் பெயர், வாக்கா ளர் அடையாள அட்டை எண், சட்டமன்ற தொகுதி, ஆதார் அட்டை எண், கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும் .

    ஆதார் அட்டை இல்லை யெனில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்ட அடையாள அட்டை, வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்பட த்துடன் கூடிய கணக்குப் புத்தகம்,தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டின் ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை,தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட இருப்பிட அடையாளச் சான்று, இந்தியக் கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்ட 11 வகையான ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும்.

    2023 ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு நடைபெறும் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு பணிகள் வருகிற 4-ந் தேதி முதல் நடைபெற உள்ளதால் தங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஏதேனும் மறுசீரமைப்பு பணிகள் இருப்பின் அது குறித்த விபரத்தினை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், உதவி பதிவு அலுவலர் ( சார் ஆட்சியர்,வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர் ) தெரிவிக்க வேண்டும்.

    மேலும் படிவம் 6 , 7 மற்றும் 8 ஆகிய படிவங்களில் சிறிய அளவிலான மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் அரவிந்த் தெரிவித்து உள்ளார்.

    • நகைக்கடன் ஏல‌ம் குறித்த தபால்கள் உள்ளிட்ட முக்கிய பதிவு தபால்கள் குப்பை போல் குவிந்து வீசப்பட்டு கிடந்தது.
    • வாகன ஓட்டிகள் சிலர், கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான மலைப்பாதையில் செண்பகனூர் அருகே சாலையோரத்தில் உள்ள ஓடையில் ஆதார் அட்டைகள், பான் கார்டுகள், அரசு பணிகள் குறித்த தபால்கள், நகைக்கடன் ஏல‌ம் குறித்த தபால்கள் உள்ளிட்ட முக்கிய பதிவு தபால்கள் குப்பை போல் குவிந்து வீசப்பட்டு கிடந்தது.

    இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சிலர், கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது அங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட தபால்கள் கிடந்தது. பின்னர் அவற்றை சேகரித்த போலீசார், கொடைக்கானல் தலைமை தபால் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    இந்த தபால்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட தபால்கள் என்று தபால் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • 2023-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது ஏராளமானவர்களுக்கு 2 இடங்களில் வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து சென்னை நகரில் 2 இடங்களில் உள்ள வாக்காளர் அடையாள அட்டைகளில் ஒன்றை நீக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். சென்னையில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் 2 இடங்களில் இருப்பது கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.

    இந்த நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் பெயர்களை அடையாளம் காண ஆதார் எண் விவரங்களை சேகரிக்கும் பணியை வருகிற 1-ந்தேதி முதல் சென்னை மாநகராட்சியின் தேர்தல் துறை தொடங்க உள்ளது.

    மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்தும், ஆதார் விவரங்களை வழங்காதவர்களுக்கு பான்கார்டு, பாஸ்போர்ட் போன்ற 11 மாற்று ஆவணங்கள் குறித்தும் அதிகாரிகளுக்கு இந்த வாரம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    இதையடுத்து சென்னையில் 3750 வாக்குச்சாவடி அலுவலர்கள் தலைமையிலான குழுக்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களிடம் ஆதார் எண்களை சேகரிக்கும் பணியை தொடங்குகிறார்கள்.

    இந்த பணிகள் 2023-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வாக்காளர்களிடம் இருந்தும் ஆதார் எண்ணை படிவத்தில் முறையாக பெறுவதற்கு தேர்தல் பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வருகிற 1-ந்தேதிக்கு பிறகு ஆதார் விபரங்கள் சேகரிப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆதார் சட்ட வழக்கில் தலைமை நீதிபதி உள்பட 4 நீதிபதிகள் ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி சந்திரசூட் மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதோடு அரசை கடுமையாக சாடினார். #AadhaarVerdict #JusticeChandrachud
    புதுடெல்லி:

    ஆதார் வழக்கில் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சிக்ரி ஆகியோர் ஒரே தீர்ப்பாக வழங்கினார்கள். இவர்கள் 3 பேருக்கும் சேர்த்து நீதிபதி சிக்ரி தீர்ப்பை வாசித்தார். மற்றொரு நீதிபதி அசோக் பூஷன் மாறுபட்ட தீர்ப்பை வழங்கவில்லை என்கிற போதிலும் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகத் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

    இதில் ஆதார் சட்டம் அரசியல்சாசனப்படி செல்லுபடியாகும். அரசின் சேவைகளைப் பெற ஆதார் அவசியம். அதேசமயம், ஆதார் இல்லாததைக் காரணம் காட்டி அரசின் சேவைகளை மக்களுக்கு அளிப்பதை நிறுத்தக்கூடாது. தனியார் நிறுவனங்கள் மக்களிடம் இருந்து ஆதார் விவரங்களைப் பெறக்கூடாது என்று கூறி ஆதார் சட்டத்தில் 57-வது பிரிவை ரத்து செய்து பெருமபான்மை நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்தனர்.

    ஆனால், இதில் மாறுபட்ட தீர்ப்பை நீதிபதி டிஒய் சந்திரசூட் வழங்கினார். மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்த நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆதார் சட்டத்தை நிறைவேற்றிய விதமே தவறானது. புறவழியாக ஆதார் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சாடினார். அவர் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

    ஆதார் சட்டத்தை நிதி மசோதாவாக மக்களவையில் நிறைவேற்றி இருந்திருக்கத் தேவையில்லை. அந்த மசோதாவை மாநிலங்களவைக்குக் கொண்டு செல்லாமல் மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றி ஆதார் சட்டத்தை கொண்டுவந்தது அரசியலமைப்புச் சட்டசத்துக்கு விரோதமானது. மோசடியாகும்.

    அரசியலமைப்புப் பிரிவு 110 பிரிவை மீறி நிறைவேற்றப்பட்டு இருப்பதால், ஆதார் சட்டத்தை ரத்து செய்யவும் முகாந்திரம் இருக்கிறது. இப்போது இருக்கும் ஆதார் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டது எனக் கருத முடியாது.

    இன்றைய சூழலில் மொபைல்போன் மிக முக்கியமான கருவியாக மக்களின் வாழ்க்கையில் மாறிவிட்டது. செல்போனில் ஆதார் விவரங்களை இணைத்த விவகாரம் தனிநபர்களின் அந்தரங்கத்துக்கும், சுதந்திரத்துக்கும், சுய அதிகாரத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். மொபைல் சேவை நிறுவனங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் ஆதார் விவரங்களை திருத்தக்கூடிய வாய்ப்பையும் உருவாக்கி இருந்தது.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச்சட்டத்தின்படி வங்கியில் உள்ள ஒவ்வொரு வாடிக்கையாளரும் கடன் பெற்றவர்கள். அந்த அடிப்படையில்தான் வங்கியில் கணக்கு தொடங்கும் ஒவ்வொரு தனிமனிதர்களையும் தீவிரவாதிபோல் சித்தரித்து, கடன்காரர் போல் பாவித்துள்ளார்கள் இது மிகவும் கொடூரமானது.

    தனிமனிதர்களின் விவரங்களை ஒட்டுமொத்தமாகத் தனியார் நிறுவனங்கள் திரட்டுவதன் மூலம் அதை வேறு எந்தக் காரணங்களுக்காகவும் பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தனிமனிதரின் உரிமையின்றி, அனுமதியின்றி அவரின் விவரங்களை அடுத்தவர்கள் தவறாக பயன்படுத்தவும் அனுமதிக்கிறது.

    தகவல் சுதந்திரம், சுயஉரிமை, மற்றும் புள்ளிவிவரங்கள் பாதுகாப்பு ஆகியவற்றை மீறும்வகையில் ஆதார் திட்டம் இருக்கிறது. அரசின் சலுகைகளைப் பெற ஆதார் கார்டை கட்டாயக்கி இருப்பது, மக்களின் தனிப்பட்ட உரிமையைப் பறிப்பதாகும். குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆதார் வழங்கும் யுஐடிஏஐ நிறுவத்துக்கு இருக்கிறது. ஆனால், முறையான பாதுகாப்பு அம்சம் இல்லாமல் இருக்கிறது.

    இன்று இந்தியாவில் ஆதார் இல்லாமல் வாழமுடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது, இதுவே அரசியலமைப்புச்சட்டம் 14-வது பிரிவை மீறியது போன்றது. நாடாளுமன்றம் ஆதார் குறித்து சட்டம் இயற்ற உரிமை இருக்கும்போது, மக்களின் விவரங்களைப் பாதுகாக்காமல் இருந்தால், அது பல்வேறு உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும்

    இவ்வாறு நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
    காங்கிரசை பொருத்தவரை ஆதார் என்பது இந்தியரை வலுப்படுத்தும் சாதனம். காங்கிரசின் நோக்கத்துக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். #AadhaarVerdict #RahulGandhi
    புதுடெல்லி:

    ஆதார் அட்டைக்கு சட்ட அங்கீகாரம், அரசு சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயம், செல்போன் நம்பர் மற்றும் வங்கி சேவையை பெற ஆதார் கட்டாயம் ஆகியவை தொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கல்வின்கர், ஏகே சிக்ரி, அஷோக் பூஷன், சந்த்ரசூட் ஆகியோர் அமர்வு இன்று மிக முக்கியமான இந்த தீர்ப்பை வழங்கியது. 

    ஆதார் அட்டை சட்ட அங்கீகாரம் கொண்டது எனவும், அரசின் சேவைகளை பெற ஆதார் கட்டாயம் எனவும் 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். எனினும், வங்கிக்கணக்கு, செல்போன் எண், தனியார் நிறுவனங்கள், பள்ளி கல்லூரி சேர்க்கை ஆகியவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை எனவும் தீர்ப்பு வழங்கினர்.

    நீதிபதி சந்திரசூட் மட்டும் ஆதார் அட்டைக்கு எதிராக தீர்ப்பை வழங்கினார். எனினும், 4 நீதிபதிகள் மேற்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளதால் அந்த தீர்ப்பே இறுதியானதாக இருக்கும். 



    இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளதாவது, “காங்கிரஸைப் பொறுத்தவரை ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்தியரையும் வலுப்படுத்தும் சாதனமாகும். பாஜகவை பொறுத்தவரை அது மக்களை கண்காணிக்கவும், ஒடுக்கவும் பயன்படுத்த முனைந்தது. காங்கிரஸின் நோக்கமே சரியானது என்று இன்று உச்சநீதிமன்றமே தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தி விட்டது. காங்கிரஸின் நோக்கத்தை காப்பாற்றியமைக்காக உச்சநீதிமன்றத்திற்கு நன்றி” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
    ஆதார் அடையாள அட்டை செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்றுள்ள நிதி மந்திரி அருண் ஜெட்லி, “ஆதார் அட்டையால் 90 ஆயிரம் கோடி ரூபாயை அரசு சேமித்துள்ளது’’ என தெரிவித்துள்ளார். #AadhaarVerdict #ArunJaitley
    புதுடெல்லி:

    ஆதார் அட்டைக்கு சட்ட அங்கீகாரம், அரசு சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயம், செல்போன் நம்பர் மற்றும் வங்கி சேவையை பெற ஆதார் கட்டாயம் ஆகியவை தொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. 

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கல்வின்கர், ஏகே சிக்ரி, அஷோக் பூஷன், சந்த்ரசூட் ஆகியோர் அமர்வு இன்று மிக முக்கியமான இந்த தீர்ப்பை வழங்கியது. 

    ஆதார் அட்டை சட்ட அங்கீகாரம் கொண்டது எனவும், அரசின் சேவைகளை பெற ஆதார் கட்டாயம் எனவும் 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். எனினும், வங்கிக்கணக்கு, செல்போன் எண், தனியார் நிறுவனங்கள், பள்ளி கல்லூரி சேர்க்கை ஆகியவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை எனவும் தீர்ப்பு வழங்கினர்.

    நீதிபதி சந்திரசூட் மட்டும் ஆதார் அட்டைக்கு எதிரான தீர்ப்பை வழங்கினார். எனினும், 4 நீதிபதிகள் மேற்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளதால் அந்த தீர்ப்பே இறுதியானதாக இருக்கும். 

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்றுள்ள மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, “சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆதார் அட்டையால் அரசுக்கு சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது” என தெரிவித்துள்ளார். 

    மேலும், மத்திய மந்திரிகள் ரவி சங்கர்  பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். 
    ஆதார் அட்டை திட்டத்தில் தனி நபர் அடையாளங்களை இணத்துள்ளது ஆபத்தானது என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மீண்டும் விமர்சனம் செய்துள்ளார். #MamataBanerjee
    கொல்கத்தா :

    மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அரசின் உதவிகளை பெற கட்டாயமாக்கப்பட்டுள்ள ஆதார் அட்டை திட்டத்தை பயன்படுத்தி நாட்டில் ஊடுரும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை மத்திய அரசால் கண்டுபிடிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார். 

    இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், ’அரசின் மானியங்கள் மற்றும் பிற உதவிகளை பெறுவதற்கு ஆதார் அட்டை திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி நாட்டுக்குள் அத்துமீறி நுழையும் தீவிரவாதிகளின் எவ்வளவு பேர் என்பதை மத்திய அரசினால் கண்டுபிடிக்க முடியுமா ?. ஒவ்வொரு தனி நபர் அடையாளங்களும் ஆதார் அட்டை திட்டத்தில் இணைக்கப்பட்டது சமூகத்திற்கும் தனி நபர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும்’  என அவர் விமர்சனம் செய்துள்ளார். #MamataBanerjee 
    ×