search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadhar card"

    • அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.
    • செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ய முடியாது.

    புதுடெல்லி:

    வருமான வரி செலுத்துவதற்கான நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி வருமான வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.

    தற்போது இதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை நிர்ணயித்து இருக்கிறது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள பொது அறிவுறுத்தல் நோட்டீசில், 'வருமான வரிச்சட்டம் 1961-ன்படி, விலக்கு பெறாத அனைத்து பான் கார்டுதாரர்களும் 31.3.2023-க்குள் தங்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். ஆதார் இணைக்காத பான் கார்டுகள் 1.4.2023 முதல் செயலற்றதாகி விடும்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மேலும், 'இது கட்டாயம், அவசியம். தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்' என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

    கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, அசாம், காஷ்மீர், மேகாலயா மாநிலங்களை சேர்ந்தவர்கள், வருமான வரிச்சட்டம் 1961-ன் படி வீடில்லாதவர்கள், 80 மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்கள், இந்தியர் அல்லாதவர்கள் போன்ற பிரிவினர் விலக்கு பெற்றவர்கள் ஆவர்.

    எனவே இவர்களை தவிர மீதமுள்ளவர்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆகும்.

    அதேநேரம் ஒருவரின் பான் கார்டு செயலற்றதாகி விட்டால், வருமான வரிச்சட்டத்தின் அனைத்து விளைவுகளுக்கும் அந்த தனிநபர் பொறுப்பாவதுடன், பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தது.

    அந்தவகையில், செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ய முடியாது; நிலுவையில் உள்ள வருமானம் செயலாக்கப்படாது; நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப் பெற முடியாது; குறைபாடுள்ள வருமானம் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது மற்றும் அதிக விகிதத்தில் வரி கழிக்கப்பட வேண்டும்.

    இவற்றைத் தவிர, அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கான முக்கியமான கே.ஒய்.சி. (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) அளவுகோல்களில் ஒன்று பான் என்பதால், வங்கிகள் மற்றும் பிற நிதி இணையதளங்கள் போன்ற பல்வேறு தளங்களிலும் வரி செலுத்துவோர் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது.

    • தற்போது குழந்தைக்கு 5 வயதாகும் போது கைரேகைகள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகள் சேர்க்கப்படுகிறது.
    • குழந்தைக்கு 15 வயது ஆகும்போது பயோமெட்ரிக் விபரங்கள் புதுப்பிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய அரசால் கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரியில் நிறுவப்பட்ட சட்டப்பூர்வ ஆணையமாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூ.ஐ.டி.ஏ.ஐ.) விளங்குகிறது.

    மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட இந்த ஆணையம், ஆதார் விதிகளின் கீழ் இந்தியாவில் உள்ள மக்களுக்கு தனித்துவமான 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை வழங்கி வருகிறது.

    அரசின் திட்ட நிதிகள், மானியங்கள், நன்மைகள் மற்றும் சேவைகள் சட்டம், 2016 மூலம் இந்த ஆதார் எண் கொண்ட மக்களுக்கு அரசின் சேவைகள் வழங்கப்படுகிறது.

    2012-ல் எடுக்கப்பட்ட தரவுகளோடு இருக்கும் இந்த ஆதார் அட்டையின் விபரங்களை தற்போதைய நிலைக்கு மேம்படுத்தி கொள்ள ஆதார் அட்டை முகமம் மக்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்துள்ளது.

    அதன்படி 10 ஆண்டுகளுக்கு முன் தனித்த ஆதார் அடையாள எண் பெற்று புதிய விபரம் எதுவும் சேர்க்காதவர்கள் உடனடியாக அந்த விபரங்களை சேர்த்து கொள்ளலாம் என்று ஆதார் எண்களை வழங்கும் அரசு முகமை (யூ.ஐ.டி.ஏ.ஐ.) அறிவுறுத்தி உள்ளது.

    தற்போது நாடு முழுவதும் 16 மாநிலங்களில் குழந்தைகளின் பிறப்பு சான்றுகளுடன் ஆதார் எண் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண்ணையும் ஒரே நேரத்தில் வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை யூ.ஐ.டி.ஏ.ஐ. மேற்கொண்டு வருகிறது.

    எனவே நாடு முழுவதும் அனைத்து பிறப்பு சான்றுகளும் விரைவில் ஆதார் உடன் வரும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது குழந்தைக்கு 5 வயதாகும் போது கைரேகைகள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகள் சேர்க்கப்படுகிறது. குழந்தைக்கு 15 வயது ஆகும்போது பயோமெட்ரிக் விபரங்கள் புதுப்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இதுவரை 134 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஆனாலும் அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் இன்னும் தனித்துவ அடையாள அட்டை பெறாத மாநிலங்களில் ஒன்றாக உள்ளன. தொலைதூர பகுதிகளில் உள்ள மக்கள் தொகை முழுமையாக பதிவு செய்யப்படாததால் லடாக் மற்றும் நாகலாந்திலும் இந்த பணிகள் முழுமை அடையவில்லை.

    கடந்த ஆண்டு பெறப்பட்ட 20 கோடி கோரிக்கைகளில் 4 கோடி மட்டுமே புதிய ஆதார் பதிவுக்காகவும் மீதமுள்ளவை தனிப்பட்ட விபரங்களை புதுப்பிப்பதற்காகவும் இருந்தன.

    இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூ.ஐ.டி.ஏ.ஐ.) பல ஆதார் வைத்திருப்பவர்கள் புதிய முகவரிக்கு மாறியிருப்பதால் அல்லது தங்கள் மொபைல் எண்ணை மாற்றியதால் தங்கள் விபரங்களை தானாக முன் வந்து புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த புதுப்பிப்பை ஆன்லைனில் எம் ஆதார் செயலி மூலமாக அல்லது ஆதார் மையங்களில் ரூ.50 செலவில் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதியோர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காலை 8 மணி முதல் ஆதார் சேவை மையத்தில் காத்திருந்தனர்.
    • 60 நபர்களுக்கு மட்டுமே இன்று பதிவு செய்யப்படும் என்றதால் பயனாளிகள் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டத்தில் கைரேகை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் முதியோர் உள்ளிட்ட மாற்றுதிறனாளிகளுக்கு கைரேகை பதிவாகாமல் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் பயன்பெறும் வகையில் அவினாசி தாலுகா அலுவலகத்தில் ஆதார் பதிவில் கைரேகை புதுப்பித்தல் சிறப்பு முகாம் நடந்தது. இதில் முதியோர் உள்ளிட்டநூற்றுக்கு மேற்பட்டவர்கள் காலை 8 மணி முதல் ஆதார் சேவை மையத்தில் காத்திருந்தனர். 10.30 மணி அளவில அலுவலர் வந்து 60 நபர்களுக்கு மட்டுமே இன்று பதிவு செய்யப்படும் என்றதால் பயனாளிகள் அனைவரும் நாங்கள் காலை 8 மணிமுதல் இதற்காக காத்து நிற்கிறோம். அனைவருக்கும் இன்றே பதிவு செய்ய வேண்டும் என்று அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து ஆதார் பதிவு அலுவலர் கூறுகையில் ,ஒரு நபருக்கு முழுமையாக பதிவு செய்வதற்கு 20 நிமிடங்கள் ஆகிறது. இரவு 8 மணி வரை எவ்வளவு பேருக்கு பதிவு செய்ய முடியுமோ அதை செய்யஉள்ளதாக கூறினார்.

    ஈரோடு மாவட்ட தபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்று தபால் அதிகாரி கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 45 தபால் அலுவலகங்களில் ஆதார் அட்டைக்கு கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம் என ஈரோடு கோட்ட தபால் கண்காணிப்பாளர் சுரேக் ரகுநாதன் கூறினார்.

    ஆதார் அட்டை தொடர்பாக சேவை செய்வதில் ஈரோடு மற்றும் கோவை தலைமை தபால் நிலையம், நம்பியூர், ஒலகடம், சூரம்பட்டி, ஈரோடு கலெக்டர் அலுவலகம் ஊத்துக்குளி, ஊத்துக்குளி ஆர்.எஸ்., டி.என்.பாளையம், கருங்கல் பாளையம், பவானி கோபி தெற்கு, சித்தோடு, பி.பி. அக்ரஹாரம், கரட்டடி பாளையம், கள்ளிப்பட்டி, சிவகிரி, மொடக்குறிச்சி, துடுப்பதி தபால் நிலையங்களில் இலவசமாக ஆதார் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் பெருந்துறை, அம்மாபேட்டை, காவிரி ரெயில் நிலையம் தபால் நிலையம், ஊஞ்சலூர், சக்தி நகர், காஞ்சிக் கோவில், அரச்சலூர் ஈரோடு ரெயில்வே காலனி, சென்னிமலை, காசி பாளையம், கொடுமுடி, வீரப்பன் சத்திரம, விஜயமங்கலம் உள்பட 45 தபால் நிலையங்களில் கட்டணமில்லாமல் ஆதார் பதிவு செய்யலாம்.

    அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி, கைப்பேசி எண் போன்ற திருத்தங்களை ரூ.50 செலுத்தி செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போலி வாக்காளர்களை களைய ஆதாருடன், வாக்காளர் அட்டையை இணைக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. #Aadharcard #votercard #chennaihighcourt

    சென்னை:

    போலி வாக்காளர்களை களையும் வகையிலும், தேர்தல் முறைகேடுகளை தடுக்கவும் வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் அட்டையுடன் இணைக்க உத்தரவிட வேண்டும்.

    ஆதார் அட்டையை இணைக்கும் வரை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. சமீபத்திய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு பிறகு அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது. அதேநேரம், இது சம்பந்தமாக மத்திய அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும்’ என்று கூறினார்.

    இதையடுத்து இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை மத்திய அரசும், ஆதார் ஆணையமும் 3 வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #Aadharcard #votercard #chennaihighcourt 

    தமிழக அமைச்சர்கள் பேசும் வார்த்தைகள் அரசியல் விமர்சனத்துக்குட்பட்டவை. எனவே அவர்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். #ponradhakrishnan #tnministers

    மதுரை:

    மதுரையில் இன்று நடந்த பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் இல்ல விழாவில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆதார் கார்டு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கதாகும். இதன் வாயிலாக சாதாரண மக்களும் ஆதார் கார்டு மூலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசின் மீதான பழியும் நீங்கியுள்ளது.

    தமிழக அமைச்சர்கள் பேசும் வார்த்தைகள் அரசியல் விமர்சனத்துக்குட்பட்டவை. எனவே அவர்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சு காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்குமா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது. தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.


    பாராளுமன்ற தேர்தலில் முன்பைவிட 350 இடங்களில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழக பாரதீய ஜனதா முடிவு செய்யும். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைப்பது தான் பாரதீய ஜனதாவின் நிலைப்பாடு.

    இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #tnministers

    செல்போன்களில் தானாக பதிவான பழைய அழைப்பு எண் பதிவை வைத்து எதுவுமே செய்ய முடியாது என்று அடையாள அட்டை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. #Aadhaarcard

    புதுடெல்லி:

    ஆதார் அடையாள அட்டை ஆணையத்துக்கு 1800-300-1947 என்ற இலவச அழைப்பு எண் இருந்தது.

    தற்போது இந்த எண் எந்தவித பயன்பாட்டிலும் இல்லை. அதற்கு பதில் 1947 என்ற எண்ணை இலவச அழைப்பு எண்ணாக ஆதார் அட்டையாள அட்டை ஆணையம் வைத்துள்ளது.

    இந்த நிலையில் ஆதார் ஆணையத்தின் பயன் பாட்டில் இல்லாத பழைய உதவி எண்ணை 1800-300-1947 செல்போன்களில் பதிவானது. தானாகவே அந்த எண் காண்டக்ட் சிலிட்டில் பதிவாகி விட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    பொதுமக்கள் இது தொடர்பாக பயப்பட வேண்டியதில்லை என்று இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்தது. “வேண்டாதவர்கள் யாரோ செய்த வேலை” என்று அவர்கள் தெரிவித்தனர்.

     


     

    இந்த நிலையில் செல்போன்களில் தானாக பதிவான எண் மூலம் தனி நபர்களின் தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்று ஒரு தகவல் வெளியானது. இது செல்போன்களை பயன்படுத்துபவர்களிடம் கடும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

    தங்களைப் பற்றிய ரகசிய தகவல்கள் திருடப்பட்டு விடுமோ என்று பயந்தனர். ஆனால் அப்படி பயப்பட வேண்டியதில்லை என்று ஆதார் அடையாள அட்டை ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

    பழைய அழைப்பு எண் பதிவை வைத்து எதுவுமே செய்ய முடியாது என்று அடையாள அட்டை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. #Aadhaarcard

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் சிலிகுரி மாவட்டத்தில் கிடைப்பதற்கு அரிதான இந்திய ஆதார் அட்டையுடன் சீனா மற்றும் நேபாள நாட்டினர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Chinesenational #Aadharcard #Nepalcitizen
    கொல்கத்தா:

    பூட்டான், நேபாளம் மற்றும் வங்காளதேசம் நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் சாலை மார்க்கமாக நுழைவதற்கு மேற்கு வங்காளம் மாநிலத்தின் சிலிகுரி மாவட்டம் நுழைவு வாயிலாக உள்ளது.

    இந்நிலையில், இந்த மாவட்டத்தின் செவோக்கே சாலையில் இருக்கும் ஒரு ஓட்டலில் ராணுவ உளவுத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.

    அப்போது, சீனாவை சேர்ந்த புஹு வாங் மற்றும் நேபாள நாட்டை சேர்ந்த கணேஷ் பட்டாராய் ஆகியோர் இந்தியாவை சேர்ந்த பப்பாய் அகர்வால் என்பவர் மூலமாக இந்தியாவுக்குள் கள்ளத்தனமாக நுழைந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    மேலும், புஹு வாங் மற்றும் கணேஷ் பட்டாராய் ஆகியோர் தங்களது பெயர்கள் மற்றும் புகைப்படங்களுடன் கூடிய இந்திய ஆதார் அட்டைகளை வைத்திருந்தது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    இந்த மோசடி தொடர்பாக இந்தியாவை சேர்ந்த பப்பாய் அகர்வால்,  நேபாளத்தை சேர்ந்த கணேஷ் பட்டாராய் ஆகியோரை கைது செய்துள்ள அதிகாரிகள், சீனாவை சேர்ந்த புஹு வாங் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    கைதான பப்பாய் அகர்வால், கணேஷ் பட்டாராய் ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். #Chinesenational #Aadharcard #Nepalcitizen 
    வடசென்னை கோட்டத்திற்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில் ஆதார் பதிவு, திருத்தம் உள்ளிட்ட ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
    சென்னை:

    வடசென்னை கோட்டத்திற்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில் ஆதார் பதிவு, திருத்தம் உள்ளிட்ட ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை வடகோட்ட தபால் துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் க.குரு நாதன் கூறியுள்ளார்.

    அதன்படி பூங்காநகர் தலைமை தபால் அலுவலகம், அமைந்தகரை, அண்ணாநகர் மேற்கு, கிழக்கு, அரும்பாக்கம், அயனாவரம், சென்னை மருத்துவ கல்லூரி வளாகம், சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், எத்திராஜ் சாலை, பூக்கடை சாலை, புனித ஜார்ஜ் தபால் அலுவலகம், ஸ்டான்லி மருத்துவமனை, ஐகோர்ட்டு, ஐ.சி.எப்., பெரியார் நகர், கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, மண்ணடி, மின்சார வாரியத்தில் உள்ள தபால் அலுவலகம், மிண்ட் பில்டிங், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, பெரம்பூர், ரிப்பன் பில்டிங், ராயபுரம், செம்பியம், ஷெனாய்நகர், சவுகார்பேட்டை, வெங்கடேசபுரம், வேப்பேரி, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட தபால் அலுவலகங்களில் இந்த சேவைகள் அளிக்கப்படுகிறது.

    இதில் புதிதாக ஆதார் பதிவு செய்ய கட்டணம் எதுவும் கிடையாது என்று கூறியுள்ள க.குருநாதன், ஏற்கனவே உள்ள ஆதார் விவரங்களை ரூ.30 செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்து உள்ளார். 
    ×