என் மலர்
இந்தியா

வாக்காளர் பட்டியலில் தவறாக நீக்கப்பட்டவர்களை சேர்க்கவும் ஆதாரை ஆதாரமாக ஏற்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு
- பீகார் வாக்காளர்கள் எண்ணிக்கை 7.9 கோடியிலிருந்து 7.24 கோடியாகக் குறைந்தது.
- நீக்கப்பட்ட 65 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களுக்கு ஏன் எந்தவொரு அரசியல் கட்சியும் உதவவில்லை.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது தேர்தல் ஆணையம். கடந்த ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர்.
இதனால் பீகார் வாக்காளர்கள் எண்ணிக்கை 7.9 கோடியிலிருந்து 7.24 கோடியாகக் குறைந்தது. இந்த திருத்தத்தை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், தங்கள் வசிப்பிடச் சான்றாக ஆதார் கார்டை பயன்படுத்தவும் ஏற்கனவே உள்ள 11 ஆவணங்களுடன் ஆதார் அட்டையையும் தேர்தல் ஆணையம் சேர்த்துக்கொள்ளவும் உத்தரவிட்டனர்.
மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். நேரில் மட்டுமின்றி ஆன்லைன் முறையிலும் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு கட்சியும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று தேர்தல் ஆணைய வக்கீல் தெரிவித்தார்.
நீக்கப்பட்ட 65 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களுக்கு ஏன் எந்தவொரு அரசியல் கட்சியும் உதவவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "உங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் என்ன செய்கிறார்கள்? அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு உதவ வேண்டும்" என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






