search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wrestlers Protest"

    • மல்யுத்த வீராங்கனைகள் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நாட்டில் உள்ள மகளிர் அனைவரும் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியான 66 வயது பிரிஜ் பூஷன் சரண் சிங்கிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், விராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் பிரிஜ் பூஷனை கைது செய்யக் கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக், ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற வினேஷ் போகட் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

     

    "இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவருக்கு ஆதரவாக இருந்து கொண்டு நாங்கள் பொய் கூறுகிறோம் என்று சொல்பவர்களிடம், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி பிரிஜ் பூஷன் சரண் சிங்-ஐ உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக் தெரிவித்தார்.

    "யார் தப்பு செய்திருந்தாலும், அவர்களை தூக்கிலிடுங்கள். நிர்பயா வழக்கின் போது வழங்கியதை போன்றே நாட்டில் உள்ள மகளிர் அனைவரும் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நாங்களும் பெண்களுக்காகவே போராடி வருகிறோம். இதில் நாம் வெற்றி பெற்றால், மிகவும் உறுதியான தகவலை உலகிற்கு தெரிவிக்க முடியும். ஆனால் தோல்வியுற்றால் நாம் 50 ஆண்டுகள் பின்செல்ல வேண்டி இருக்கும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    இன்றைய போராட்டத்தின் போது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கருப்பு நிற பேண்ட்களை அணிந்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    • பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
    • தெருக்களில் போராட்டம் நடத்துவது ஒழுக்கமின்மைக்கு சமம் என பி.டி.உஷா முன்பு கூறியிருந்தார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை வழங்கிவிட்டது. எனினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் 11வது நாளாக இன்றும் நீடிக்கிறது.

    இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, இன்று டெல்லி ஜந்தர் மந்தர் சென்று போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை சந்தித்து பேசினார்.

    முன்னதாக அவர்களின் போராட்டம் குறித்து பி.டி.உஷா கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "மல்யுத்த வீரர்,வீராங்கனைகள் தெருக்களில் போராட்டம் நடத்துவது ஒழுக்கமின்மைக்கு சமம். இது இந்தியாவின் நற்பெயரைக் கெடுக்கும்" என பி.டி.உஷா கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மல்யுத்த வீரர், வீராங்கனைகளும் எதிர்ப்பை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் சக்திவாய்ந்த நபருக்கு எதிராக போராடுவது என்பது கடினமான விஷயம்.
    • ஒரு குழுவை உருவாக்கி, அந்த விஷயத்தை மூடிமறைக்க முயன்றதாக குற்றம்சாட்டினார்

    மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி உள்ள மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யும்வரை போராட்டம் தொடரும் என கூறி உள்ளனர்.

    மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சிங் மீது இரண்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நீண்ட காலமாக அதிகாரத்தையும் பதவியையும் தவறாக பயன்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த நபருக்கு எதிராக போராடுவது என்பது கடினமான விஷயம் என்றார்.

    வினேஷ் போகத் மேலும் கூறியதாவது:-

    நாங்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்குவதற்கு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு, ஒரு அதிகாரியை சந்தித்தோம். அப்போது, விளையாட்டு வீராங்கனைகள் எப்படி பாலியல் ரீதியாகயும், மனரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை எல்லாம் அவரிடம் கூறினோம். நடவடிக்கை எடுக்காத நிலையில், தர்ணாவில் அமர்ந்தோம்.

    மத்திய விளையாட்டுத் துறை மந்திரியுடன் (அனுராக் தாக்கூர்) பேசியபிறகு போராட்டத்தை முடித்துக் கொண்டோம். அப்போது பாலியல் துன்புறுத்தல் பற்றி அவரிடம் அனைத்து விளையாட்டு வீரர்களும் கூறியிருந்தனர். ஆனால் அவரோ ஒரு குழுவை உருவாக்கி, அந்த விஷயத்தை மூடிமறைக்க முயன்றார். அந்த சமயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் 9வது நாளாக நீடிக்கிறது.
    • பாலியல் புகார் தொடர்பாக பிரிஜ் பூஷன் சிங்கை விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கோண்டா:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங் எம்.பி., இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக 18 வயதுக்கு கீழுள்ள வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் புகார் அளித்தனர். பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் காலம் தாழ்த்தியதால் மல்யுத்த நட்சத்திரங்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் இன்று 9வது நாளாக நீடிக்கிறது. பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்படும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

    போராட்டம் தீவிர மடைவதால் பிரிஜ் பூஷன் சிங்கை விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.

    இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

    போராட்டம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக அனைத்து மல்யுத்த நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. என்னை தூக்கில் வேண்டுமானாலும் போடுங்கள், ஆனால் மல்யுத்த செயல்பாடுகளை நிறுத்தக்கூடாது என சொல்கிறேன். குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, திரிபுரா என யார் ஏற்பாடு செய்தாலும், போட்டிகளை நடத்த அனுமதிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வரும் 7ம் தேதி மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், அந்த தேர்தலை விளையாட்டு அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது. அத்துடன், 45 நாட்களுக்குள் தேர்தலை நடத்துவதற்கும், மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிப்பதற்கும் ஒரு தற்காலிக குழுவை அமைக்கும்படி இந்திய ஒலிம்பிக் சங்கத்தை விளையாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    இதையடுத்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சுமா ஷிரூர், இந்திய வுஷூ சங்க தலைவர் பூபேந்திர சிங் பஜ்வா ஆகியோர் கொண்ட தற்காலிக குழுவை ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.

    போட்டிகளை யார் நடத்தினாலும் மல்யுத்த கூட்டமைப்புக்கு பிரச்சனையில்லை, வழக்கம்போல் போட்டிகளை நடத்தவேண்டும் என்று மல்யுத்த வீரர்கள், ஒலிம்பிக் சங்கம் மற்றும் அரசாங்கத்தை பிரிஜ் பூஷன் கேட்டுக்கொண்டுள்ளார். இல்லையெனில் மல்யுத்த கூட்டமைப்பு அதற்கான ஏற்பாட்டை செய்யமுடியும் என்றார்.

    • திமுக எம்.பி. அப்துல்லா ஜந்தர் மந்தர் சென்று திமுக சார்பில் ஆதரவு தெரிவித்தார்.
    • போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை காண நெஞ்சம் பதைக்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், திமுக எம்.பி. அப்துல்லா இன்று ஜந்தர் மந்தர் சென்று போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு திமுக சார்பில் ஆதரவு தெரிவித்தார்.

    டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம் என திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • சர்வதேச அரங்கில் இந்த வீராங்கனைகள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
    • பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்தனர்.

    டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். மேலும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    "சர்வதேச அரங்கில் இந்த வீராங்கனைகள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஆனாலும், இவர்கள் ஒருவார காலமாக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏன் தெரியுமா? நம் தேசத்திற்கு பெருமை தேடிக் கொடுத்த பெண்கள் மற்றும் நம் சகோதரிகளிடம் பெரிய அரிசயல்வாதி தவறாக நடந்து கொண்டுள்ளார்," என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

     

    "இந்த நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக உள்ளனர். நாட்டிற்கு நற்பெயர் பெற்றுக் கொடுத்த இந்த வீராங்கனைகள் நமது குழந்தைகள், இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளி எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் பரவாயில்லை, அவருக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட் செய்துள்ளார்.

    உச்சநீதிமன்ற உத்தரவின் படி இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். இவர்களது போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்று வருகிறது. 

    • டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • டெல்லி கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் இரண்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராஙகனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியதுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு தலைவர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லி ஜந்தர் மந்தர் சென்று போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை சந்தித்து சிறிது நேரம் பேசினார். அப்போது அவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்பதாக பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.

    இதற்கிடையே 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் மீது டெல்லி காவல் துறை வழக்குபதிவு செய்துள்ளது. அவர் மீது டெல்லி கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் இரண்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஜனவரி மாதமும் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர்.
    • பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்தனர்.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராஙகனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினர். இந்நிலையில், நடவடிக்கை எடுக்கப்படாததால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

     

    இந்த நிலையில், பிரிஜ் பூஷன் மீது இன்று (ஏப்ரல் 28) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று டெல்லி காவல் துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் டெல்லி காவல் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தரப்பில் மூத்த வழக்கறிஞரான கபில் சிபில் ஆஜராகி மைனர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக குற்றம்சாட்டி தனது பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.

    இதையடுத்து, "ஆவணங்களில் உள்ள தரவுகளை வைத்து பார்க்கும் போது, மைனர் வீராங்கனைக்கு தேவையான பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று டெல்லி காவல் துறை ஆணையருக்கு உத்தரவிடுகிறோம்," என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    "இது வெற்றியின் முதல்படி, ஆனாலும் எங்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்," என்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

    • நீதி கிடைக்கும் வரை இதே இடத்தில் தான் சாப்பிடுவோம். தூங்குவோம்.
    • பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று பஜ்ரங் பூனியா ஆவேசமாக கூறினார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டிய இந்திய முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுட்டனர்.

    3 நாள் நீடித்த போராட்டத்தை பேச்சுவார்த்தையில் முடிவுக்கு கொண்டு வந்த மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட மேற்பார்வை கமிட்டியை அமைத்தார். விசாரணை முடியும் வரை தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷனை ஒதுங்கி இருக்கவும் உத்தரவிட்டார்.

    தனது மீதான புகார்களை திட்டவட்டமாக மறுத்த பிரிஜ் பூஷன் தலைவர் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்று கூறினார். அதே சமயம் அடுத்த மாதம் நடைபெறும் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடமாட்டேன் என்றும் அறிவித்தார்.

    இதற்கிடையே, பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளிடம் விசாரணை நடத்திய 6 பேர் கமிட்டி விசாரணை அறிக்கையை சமீபத்தில் மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. ஆனால் அந்த அறிக்கை விவரத்தை விளையாட்டு அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை.

    இந்த நிலையில் நாட்டின் முன்னணி மல்யுத்த பிரபலங்களான ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத் உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

    விசாரணை கமிட்டியின் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும், பிரிஜ் பூஷன் மீது அளிக்கப்பட்ட புகார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

    சாக்ஷி மாலிக் நிருபர்களிடம் கூறுகையில், 'பிரிஜ் பூஷன் மீது டெல்லியில் உள்ள சி.பி. போலீஸ் நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு புகார் அளித்தோம். ஆனால் இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. புகார் அளித்த 7 மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவர் சிறுமி. இது போக்சோ வழக்கு. ஆனால் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என்றார். நீதி கிடைக்கும் வரை... வினேஷ் போகத் கூறுகையில், 'ஏற்கனவே போராட்டம் நடத்தி 3 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் நீதி கிடைக்கவில்லை. அதனால் தான் மீண்டும் அதே இடத்திற்கு வந்திருக்கிறோம்.நீதி கிடைக்கும் வரை இதே இடத்தில் தான் சாப்பிடுவோம். தூங்குவோம்.

    விசாரணை அறிக்கையை வெளியிட இன்னும் எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை கேட்டு கேட்டு சோர்ந்து போய் விட்டோம்' என்றார். பேசும்போது, ஒரு கட்டத்தில் சாக்ஷியும், வினேஷ் போகத்தும் வேதனையில் கண்ணீர் விட்டு அழுதனர். பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று பஜ்ரங் பூனியா ஆவேசமாக கூறினார். மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் மீண்டும் இந்திய விளையாட்டு அரங்கில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    • மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது வீரர், வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர்.
    • இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க 7 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஷ் பூஷன் ஷரண் சிங் மற்றும் பயிற்சியாளர்கள் மீது மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்டமைப்பின் தலைவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு 7 பேர் கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. இந்த குழுவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், வில்வித்தை வீராங்கனை டோலா பானர்ஜி, பளுதூக்குதல் கூட்டமைப்பு தலைவர் சதேவ் யாதவ், அலாக்நந்தா அசோக் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    ஏற்கனவே மல்யுத்த வீரர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவுக்கு கடிதம் அனுப்பினர். அதில், பல்வேறு இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருந்தனர். 4 கோரிக்கைகளையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுடன் நேற்று நள்ளிரவு விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை கைவிடுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர்.

    கண்காணிப்பு குழு அமைக்கப்படும். அதற்கான பெயர்கள் நாளை அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழு 4 வாரங்களுக்குள் விசாரணையை முடித்துவிடும். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மற்றும் அதன் தலைவர் மீது சுமத்தப்பட்ட நிதி அல்லது பாலியல் துன்புறுத்தல் என அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் இது முழுமையாக விசாரிக்கும்.

    விசாரணை முடியும் வரை அவர் (சிங்) ஒதுங்கி விசாரணைக்கு ஒத்துழைப்பார். மேற்பார்வைக் குழு மல்யுத்த கூட்டமைப்பின் அன்றாட விவகாரங்களை நடத்தும் என மந்திரி அனுராக் தாக்கூர் உறுதி அளித்தார்.

    • மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
    • மல்யுத்த வீரர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவத் பி.டி.உஷாவுக்கு கடிதம் அனுப்பினர்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஷ் பூஷன் ஷரண் சிங் மற்றும் பயிற்சியாளர்கள் மீது மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்டமைப்பின் தலைவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு 7 பேர் கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. இந்த குழுவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், வில்வித்தை வீராங்கனை டோலா பானர்ஜி, பளுதூக்குதல் கூட்டமைப்பு தலைவர் சதேவ் யாதவ், அலாக்நந்தா அசோக் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    முன்னதாக, மல்யுத்த வீரர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவுக்கு கடிதம் அனுப்பினர். அதில், பல்வேறு இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருந்தனர். 4 கோரிக்கைகளையும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

    ×