search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்யுத்த வீரர்கள் போராட்டம்"

    • பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் மத்திய அரசு வழங்கிய விருது, பதக்கங்களை திருப்பி அளிப்பதாக அறிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
    • இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அமைத்தது.

    புதுடெல்லி:

    பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர், விராங்கனைகள் டெல்லியில் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து மல்யுத்த சம்மேளன நடவடிக்கைகளில் இருந்து பிரிஜ் பூஷன் ஒதுங்கினார். கோர்ட்டு உத்தரவுப்படி அவர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடக்கிறது.

    கடந்த 21-ந்தேதி டெல்லியில் நடந்த இந்திய மல்யுத்த சமமேளன புதிய நிர்வாகிகள் தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்சய் சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த கனமே, மல்யுத்தத்தில் மீண்டும் பிரச்சினை வெடித்தது. பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் யாரும் மல்யுத்த சம்மேளனத்தில் இருக்கக்கூடாது என்பது தான் வீரர்களின் பிரதான கோரிக்கை. தாங்கள் நினைத்தபடி நடக்காததால் வீராங்கனைகள் மறுபடியும் கோதாவில் குதித்துள்ளனர். பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் மத்திய அரசு வழங்கிய விருது, பதக்கங்களை திருப்பி அளிப்பதாக அறிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, புதிய தலைவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்ததால் இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கடந்த 24-ந்தேதி மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. மேலும், வீரர்களுக்கு போதிய அவகாசம் வழங்காமல் ஜூனியர் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பை இந்த மாத இறுதிக்குள் நடத்தப்போவதாக புதிய நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்றும் விளையாட்டு அமைச்சகம் சுட்டிக்காட்டியது. அத்துடன் மல்யுத்த நிர்வாகத்தை தற்காலிகமாக கவனிக்க இடைக்கால கமிட்டியை அமைக்கும்படி இந்திய ஒலிம்பிக் சங்கத்தை கேட்டுக் கொண்டது.

    இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அமைத்தது. இந்திய உசூ சம்மேளன தலைவர் பூபிந்தர் சிங் பஜ்வா கமிட்டியின் தலைவராகவும், முன்னாள் ஆக்கி வீரர் எம்.எம். சோமயா, முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை மஞ்ஜூஷா கன்வார் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இந்த கமிட்டியில் இருப்பார்கள்.

    வீரர்கள் தேர்வு, சர்வதேச போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்கான பதிவை சமர்ப்பிப்பது, போட்டிகளை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு, வங்கி கணக்கு விவரங்களை கையாள்வது, இதன் இணையதளத்தை நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளை எல்லாம் இடைக்கால கமிட்டி மேற்கொள்ளும்.

    ஏற்கனவே நிர்வாகிகள் தேர்தலுக்கு முன்பாக சில மாதங்கள் இடைக்கால கமிட்டி தான் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாக பணிகளை கவனித்தது. அதில் பூபிந்தர் சிங் பஜ்வாவும் ஒரு உறுப்பினராக இருந்தார். அந்த அனுபவம் அவருக்கு நிர்வாகத்தை திறம்பட வழிநடத்த உதவிகரமாக இருக்கும்.

    பஜ்வா கூறுகையில், '2024-ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது. அதற்கு தயாராவதை உடனடியாக தொடங்க வேண்டும். பயிற்சி முகாமுடன் சீனியர் மற்றும் ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளை விரைவில் நடத்துவோம். நாட்டில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக மல்யுத்தம் திகழ்கிறது. முடிந்த அளவுக்கு ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வெல்லும் வாய்ப்பை உருவாக்குவதே எங்களது இலக்கு' என்றார்.

    • பிரிஜ் பூஷன் சிங் மீது சிறுமி அளித்த பாலியல் புகாரில் போதுமான ஆதாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது.
    • முழு அரசு எந்திரமும் பாலியல் குற்றவாளியை காப்பாற்ற முடுக்கி விடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

    டெல்லியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள், பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராடி வந்தனர். அவர்கள் கொடுத்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார், இன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், 18 வயதுக்குட்பட்ட சிறுமி, பிரிஜ் பூஷன் சிங் மீது அளித்த பாலியல் புகாரில் போதுமான ஆதாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:

    இன்று இந்திய விளையாட்டுத்துறைக்கு ஒரு, "கருப்பு தினம்". இந்த நாட்டின் சட்ட அமைப்பு பா.ஜ.க.வின் அரசியல் புல்டோசரின் கீழ் நசுக்கப்பட்டு, இந்திய மகள்களின் நீதிக்கான கூக்குரல் குப்பைதொட்டியில் போடப்பட்டு புதைக்கப்பட்டு விட்டது. முழு அரசு எந்திரமும் ஒரு சர்வாதிகாரிக்கு வேண்டிய பாலியல் குற்றவாளியை காப்பாற்ற முடுக்கி விடப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் சட்டத்தால் தொட முடியாதவர்கள் என்ற செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் நீதிமன்றம் அந்த மகள்களுக்கு தகுந்த நீதியை வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மற்றொரு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா சிரினாடே கூறியிருப்பதாவது:

    ஒரு சிறுமி, மிகப் பெரிய பதவியில் உள்ள இந்திய மல்யுத்த பயிற்சியாளரான பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பாலியல் புகார் அளித்திருக்கிறார். இதற்காக டெல்லியில் ஒரு நீண்ட போராட்டம் நடைபெற்று, மோடி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்திருந்ததால் போராட்டத்தையும் கைவிட்டனர்.

    இந்நிலையில் பிரிஜ் பூஷனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் சிறுமி அளித்த புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்து அவர் மீது போக்சோ சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது.

    புகார் அளித்த உடனேயே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதற்கு மாறாக அவர் 45 நாட்கள் சுதந்திரமாக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார். காவல்துறை, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள என அனைவரும் அந்த சிறுமிக்கு எதிராகவும், பிரிஜ் பூஷனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு அவரை பாதுகாத்திருக்கின்றனர். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ இது குறித்து வாயே திறக்கவில்லை. பா.ஜ.க. வின் தற்போதைய முழக்கம், "பெண் குழந்தையை தொந்தரவு செய்வோம், பூஷனை காப்பாற்றுவோம்" என்பதாக மாறியிருக்கிறது.

    45 நாட்களாக ஏன் பூஷன் விசாரிக்கப்படவில்லை என்றும், குற்றவியல் நடுவர் முன்பு வாக்குமூலம் எந்த சூழ்நிலையில் மாறியது என்றும் நீதிமன்றங்கள் விசாரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும்போதெல்லாம் குற்றவாளிக்கு ஆதரவாகத்தான் பா.ஜ.க. செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமித் ஷாவிடம் வலியுறுத்தினர்.
    • சாக்சி மாலிக், வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோர் ரெயில்வேயில் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

    புதுடெல்லி:

    மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ள 7 மல்யுத்த வீராங்கனைகள், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக முன்னணி மல்யுத்த வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.

    இந்நிலையில், மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சத்யவர்த் காடியன், வீராங்கனைகள் சாக்சி மாலிக், சங்கீதா போகத் உள்ளிட்டோர் நேற்று இரவு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்தனர். அப்போது பிரிஜ் பூஷன் சிங் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    அனைவருக்கும் சட்டம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று மல்யுத்த வீரர்களுக்கு அமித் ஷா உறுதியளித்துள்ளார். மேலும், சட்டம் அதன் கடமையை செய்யும் என்றும் கூறியிருக்கிறார்.

    இந்நிலையில் சாக்சி மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் ரெயில்வேயில் தங்கள் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளனர். இந்த செய்தியுடன், போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் சாக்சி மாலிக், போராட்டத்தில் இருந்து விலகியதாக செய்தி பரவியது. ஆனால் இந்த தகவலை சாக்சி மாலிக் மறுத்துள்ளார்.

    "நீதிக்கான போராட்டத்தில் இருந்து யாரும் பின்வாங்கவில்லை. போராட்டத்துடன், ரெயில்வேயில் எனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறேன், நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். தயவு செய்து தவறான செய்திகளை பரப்பவேண்டாம்" என சாக்சி கூறியிருக்கிறார்.

    • இந்த வழக்கு விசாரணையில் பாரபட்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
    • மல்யுத்த வீராங்கனைகள் குறிப்பிடும் சம்பவங்கள் 7 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி :

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பாலியல் தொந்தரவு புகார் கூறும் மல்யுத்த வீராங்கனைகள், அவரை கைது செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள். அந்த போராட்டத்தின் ஒருபகுதியாக அவர்கள் தங்களின் பதக்கங்களை கங்கை நதியில் வீசச் சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தியா பொருளாதார மாநாட்டின் உரையாடல் நிகழ்வில் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    'மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு நியமித்த குழுவின் அறிக்கையை தொடர்ந்து அவர் மீது டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகிறது.

    பாரபட்சமற்ற விசாரணைக்கு ஆதரவாகத்தான் அரசு உள்ளது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் உரிய சட்ட நடைமுறைக்குப் பின்பே அது நடக்கும்.

    இந்த வழக்கு விசாரணையில் பாரபட்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. டெல்லி போலீஸ் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். விரைவான விசாரணைக்கு ஆதரவாகவே நாங்கள் உள்ளோம்.

    பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு அமைப்பு, மல்யுத்த சம்மேளன நிர்வாகத்தை கவனிக்க ஒரு குழுவை நியமிக்க இந்திய ஒலிம்பிக் சங்கத்தை கேட்டுக்கொண்டது என மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் ஒவ்வொரு கோரிக்கையையும் அரசு ஏற்றது. ஒரு வீராங்கனைக்கு எதிராகவோ அல்லது ஒரு பெண்ணுக்கு எதிராகவோ அராஜகம் நடந்தால், உடனடியாக அவருக்கு நீதி கிடைக்க வேண்டும்.

    பிரிஜ் பூஷன் தொடர்பாக மல்யுத்த வீராங்கனைகள் குறிப்பிடும் சம்பவங்கள் 7 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படுகிறது.

    அவருக்கு எதிராக எந்த போலீஸ் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யலாம் என்று மல்யுத்த வீராங்கனைகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள்தான் அரசு தலையிட வேண்டும் என்று கூறினர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்ய 9-ந் தேதிவரை மத்திய அரசுக்கு கெடு விதிக்கப்பட்டது.
    • மல்யுத்த வீராங்கனைகளின் நிலைக்கு மோடி அரசே பொறுப்பு.

    புதுடெல்லி :

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்கள் கூறி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், டெல்லி கன்னாட்பிளேஸ் போலீஸ் நிலையத்தில் போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

    இவற்றில், 6 மல்யுத்த வீராங்கனைகள் புகாரின்பேரில் ஒரு வழக்கும், 18 வயது பூர்த்தியடையாத ஒரு மல்யுத்த வீராங்கனையின் தந்தை அளித்த புகாரின்பேரில் 'போக்சோ' சட்டப்படி ஒரு வழக்கும் பதிவு செய்துள்ளனர். 'போக்சோ' வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.

    6 மல்யுத்த வீராங்கனைகள் புகாரின்பேரில் பதிவான வழக்கில், பிரிஜ் பூஷன் சரண்சிங் செய்த பாலியல் அத்துமீறல்கள் பற்றி கூறப்பட்டுள்ளன. ஒரு வீராங்கனை கூறியிருப்பதாவது:-

    நான் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பிரிஜ்பூஷன் தனியாக அழைத்தார். அவர் மற்ற பெண்களை தகாத முறையில் தொடுபவர் என்பதால் நான் செல்ல மறுத்தேன். ஆனால் அவர் மறுபடியும் அழைத்தார். என் டி-சர்ட்டை தூக்கிவிட்டு, தன் கையால் என் வயிற்றை தடவினார். மூச்சை பரிசோதிப்பதாக தொப்புளில் கை வைத்தார்.

    அதனால்தான், தடகள வீராங்கனைகள் அவரை தனியாக சந்திப்பதை தவிர்க்க, குழுவாக சென்று வருவதை கவனித்தேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்

    2-வது வீராங்கனை கூறியிருப்பதாவது:-

    தரையில் பாய் விரித்து நான் உடற்பயிற்சி செய்தபோது, பிரிஜ்பூஷன் அங்கு வந்து என்னை பார்த்தபடி நின்றார். திடீரென குனிந்து, என் டி-சர்ட்டை தூக்கிவிட்டு, என் நெஞ்சில் கை வைத்தார். பிறகு, மூச்சை பரிசோதிப்பதாக வயிற்றில் கை வைத்தார். தகாத முறையில் தொட்டார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்

    3-வது வீராங்கனை கூறியிருப்பதாவது:-

    ஒருமுறை குழு புகைப்படம் எடுப்பதற்காக நான் கடைசி வரிசையில் நின்றபோது, பிரிஜ்பூஷன் அங்கு வந்து என் அருகில் நின்றார். திடீரென என் பின்புறத்தில் யாரோ கை வைப்பதை உணர்ந்தேன். திரும்பி பார்த்தால், பிரிஜ் பூஷன்தான் அப்படி செய்தார்.

    நான் நகர முயன்றபோது, என் தோள்பட்டையை பிடித்துக்கொண்டார். எப்படியோ அவரது பிடியில் இருந்து விடுபட்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்

    4-வது வீராங்கனை கூறியிருப்பதாவது:-

    பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியின்போது, பிரிஜ் பூஷன் என்னை அழைத்து தனிப்பட்ட கேள்விகளை கேட்க தொடங்கினார். நிகழ்ச்சி முடிந்த பிறகு, புகைப்படம் எடுக்கும் சாக்கில், என் விருப்பமின்றி என்னை இழுத்தார்.

    என்னிடம் செல்போன் இல்லை என்று தப்பிக்க முயன்றேன். ஆனால் அவர், தன்னிடம் உள்ள செல்போனில் எடுக்கலாம் என்று புகைப்படம் எடுத்தார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்

    5-வது வீராங்கனை கூறியிருப்பதாவது:-

    நான் பதக்கம் வென்றிருந்த சமயத்தில், என் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது, பிசியோதெரபி நிபுணர் வந்து, தலைவர் (பிரிஜ் பூஷன்) என்னை அழைப்பதாக தெரிவித்தார். பதக்கம் வென்றதற்கு வாழ்த்து தெரிவிப்பார் என்று நினைத்து சென்றேன்.

    தன் செல்போனில் என் பெற்றோருடன் பேச வைத்தார். பிறகு அவர் அமர்ந்திருந்த படுக்கைக்கு வருமாறு அழைத்தார். திடீரென என்னை கட்டி அணைத்தார். அவரது ஆசைக்கு இணைங்கினால், எனக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்களை வாங்க பணம் தருவதாக ஆசை காட்டினார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    18 வயது பூர்த்தியடையாத வீராங்கனையின் தந்தை தனது புகாரில் கூறியிருப்பதாவது:-

    பிரிஜ் பூஷன் என் மகளை வலுக்கட்டாயமாக இழுத்து பாலியல் தொல்லை கொடுத்தார். அதனால் என் மகள் பதற்றமடைந்தாள். பதக்கம் வென்றபோது, புகைப்படம் எடுக்கும் சாக்கில், அவளை இறுக பிடித்துக்கொண்டார். அப்போது, தவறான முறையில் தொட்டார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பதக்கம் வென்ற நிகழ்வுகள், மல்யுத்த கூட்டமைப்பு அலுவலகம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடந்த நிகழ்வுகளை மல்யுத்த வீராங்கனைகள் கூறியுள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பிரிஜ் பூஷன் சரண்சிங் மறுத்துள்ளார்.

    இதற்கிடையே, மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக அரியானா மாநிலம் குருஷேத்திராவில் விவசாயிகளின் மகாபஞ்சாயத்து நடந்தது.

    அதில், பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்ய 9-ந் தேதிவரை மத்திய அரசுக்கு கெடு விதிக்கப்பட்டது. அதற்குள் கைது செய்யாவிட்டால், நாடு முழுவதும் மகாபஞ்சாயத்து நடத்தப்படும், போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று பாரதீய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் எச்சரிக்கை விடுத்தார்

    இப்பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    25 சர்வதேச பதக்கங்களை வென்ற மகள்கள், நீதி கோரி தெருவில் போராடுகிறார்கள். 15 கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை சந்திக்கும் எம்.பி., பிரதமரின் அரவணைப்பில் பாதுகாப்பாக இருக்கிறார்.

    மல்யுத்த வீராங்கனைகளின் நிலைக்கு மோடி அரசே பொறுப்பு.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று கேட்டுள்ளார்.

    • பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டம்.
    • தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தூக்கில் தொங்கவும் தயார் என பிரிஜ் பூஷன் சிங் அறிவிப்பு.

    தேசிய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பாலியால் குற்றச்சாட்டு தெரிவித்து, நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று பாஜக எம்பி மேனகா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக எம்பி-யான மேனகா காந்தி, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இறுதியில் அவர்களுக்கு நிச்சம் நீதி கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்," என்று பதில் அளித்தார்.

    பிரிஜ் பூஷன் சிங் தங்களிடம் பாலியல் துன்புறத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ள மல்யுத்த வீராங்கனைகள், அவரை கைது செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் அங்கமாக, வீராங்கனைகள் வென்று குவித்த பதக்கங்களை கங்கையில் வீசுவதாக அறிவித்து, மல்யுத்த வீராங்கனைகள் ஹரித்வார் சென்றனர்.

    அங்கு விரைந்த விவசாய அமைப்பினர், மல்யுத்த வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பதக்கங்களை வீச வேண்டாம் என்று வலியுறுத்தினர். விவசாய அமைப்பின் கோரிக்கை ஏற்று பதக்கங்களை வீசும் போராட்டத்தை மல்யுத்த வீராங்கனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். மேலும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க ஐந்து நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக இரண்டு முதல் தகவல் அறிக்கைகளை டெல்லி காவல் துறையினர் பதிவு செய்தனர். தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் பிரிஜ் பூஷன் சிங், தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தூக்கில் தொங்கவும் தயார் என்று தெரிவித்து இருக்கிறார்.

    • குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்க தயாராக இருப்பதாக பிரிஜ் பூஷன் சிங் கூறினார்.
    • போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கைகளை மாற்றி வருகிறார்கள்.

    கோண்டா:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பாலியல் புகார் கூறியுள்ள மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    இப்போராட்டத்தின் உச்சகட்டமாக மல்யுத்த வீராங்கனைகள் தங்களின் பதக்கங்களை கங்கை நதியில் வீச உள்ளதாக அறிவித்து ஹரித்வார் சென்றனர். ஆனால் கடைசி நேரத்தில் மனதை மாற்றிய அவர்கள், பதக்கங்களை கங்கையில் வீசாமல் திரும்பினர். தங்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு 5 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.

    இதற்கிடையே மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டை பிரிஜ் பூஷன் சரண் சிங் தொடர்ந்து மறுத்துவருகிறார். அத்துடன், தனக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

    இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் பிரிஜ் பூஷன் சரண் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மல்யுத்த வீராங்கனைகளின் புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையை முடிக்கட்டும். முடிவு எப்படி இருந்தாலும் அதன்படி நடப்பேன். எனவே, தேவையில்லாத கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என்று கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

    ஜனவரி 18ம் தேதி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது, சில கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர் சில நாட்களில் கோரிக்கைகளை மாற்றினர். அதன்பிறகும் கோரிக்கைகளை மாற்றுகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன்? எப்போது செய்தேன்? என்று மல்யுத்த வீராங்கனைகளிடம் கேட்டேன். ஆனால், அவர்களிடம் இருந்து இதுகுறித்து உறுதியான அறிக்கை எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விசாரணை நிறைவடைந்ததும் அரசு நடவடிக்கை எடுக்கும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்ட விஷயத்தில் மத்திய பெண்கள் நல மேம்பாட்டுத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் வெளியிட்டுயிள்ளனர்.

    டெல்லியில் மத்திய பெண் கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானியை காண வில்லை என்று காங்கிரஸ் போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    பா.ஜனதா எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பிரிக்பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்ட்ம தீவிரம் அடைந்து வருகிறது.

    இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் மீனாக்ஷி லேகியிடம், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து கேள்வி கேட்க, அவர் தப்பி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் தற்போது மத்திய பெண்கள், குழந்தைகள் நலன் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் அடித்து ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்ட விஷயத்தில் மத்திய பெண்கள் நல மேம்பாட்டுத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டிக்கும் விதமாகவே காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் வெளியிட்டுயிள்ளனர்.

    இதற்கு பதலடி கொடுக்கும் விதமாக ஸ்மிருதி இரானி, தாம் அமேதி தொகுதியில்தான் இருக்கிறேன் என்ற பதில் மட்டும் தராமல், முன்னாள் எம்பியை அமெரிக்காவில் தொடர்பு கொள்ளுங்கள் எனவும் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் ஸ்மிருதி இரானி.

    • வீராங்கனைகள் ஹரித்துவார் கங்கை நதியில் தங்கள் பதக்கங்களை வீச முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • மத்திய அரசுக்கு விவசாய சங்கத்தினர் 5 நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர்.

    புதுடெல்லி :

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் கூறியுள்ள மல்யுத்த வீராங்கனைகள், அவரை கைது செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். நேற்று முன்தினம் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் ஹரித்துவார் கங்கை நதியில் தங்கள் பதக்கங்களை வீச முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் அவர்களைத் தடுத்து, சமாதானப்படுத்தினார். அதையடுத்து வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை தற்காலிகமாக கைவிட்டு திரும்பிச் சென்றனர். இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதற்கு மத்திய அரசுக்கு விவசாய சங்கத்தினர் 5 நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர்.

    இந்நிலையில், மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்வதற்கு அவருக்கு எதிராக போதுமான சான்றுகளை கண்டுபிடிக்கவில்லை டெல்லி போலீஸ் கூறியதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக டெல்லி போலீசார் நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், 'மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 2 வழக்குகளில் போதுமான சான்றுகளை கண்டுபிடிக்கவில்லை என போலீஸ் கூறியதாக சில டி.வி. சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போலீஸ் அவ்வாறு தெரிவித்ததாக வெளியான செய்தி தவறு. உணர்வுபூர்மான இந்த வழக்கில், மிகுந்த உணர்வோடு விசாரணை நடைபெற்றுவருகிறது' என்று விளக்கம் அளித்துள்ளது.

    இந்நிலையில் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர், 'டெல்லி போலீஸ் தனது விசாரணையை முடிக்கும்வரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் காத்திருக்க வேண்டும். மல்யுத்தத்தையும், மல்யுத்த வீரர்களாக விரும்புவோரையும் பாதிக்கும் எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடக்கூடாது' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 'நாங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஆதரவாகத்தான் உள்ளோம்' என்றும் அவர் கூறியுள்ளார்.

    • மல்யுத்த வீரர், வீராங்கனைகள் என்னை மல்யுத்தத்தின் கடவுள் என்றனர்.
    • இரவும் பகலும் மல்யுத்தமே வாழ்க்கை என்று வாழ்ந்தவன் நான்.

    லக்னோ :

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பாலியல் தொந்தரவு புகார் கூறி, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

    இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி நகரில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரிஜ் பூஷன் பேசியதாவது:-

    'எனக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்கூட, நானே தூக்கில் தொங்குவேன் என்று மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். கடந்த 4 மாதங்களாக, என்னை தூக்கிலிட வேண்டும் என்று மல்யுத்த வீராங்கனைகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசு என்னை தூக்கிலிடவில்லை. எனவே அவர்கள் தங்கள் பதக்கங்களை கங்கை நதியில் வீசச் சென்றார்கள். கங்கையில் பதக்கங்களை வீசுவதால் பிரிஜ் பூஷன் தூக்கிலிடப்பட மாட்டார். உங்களிடம் சான்று இருந்தால் அதை கோர்ட்டிடம் கொடுங்கள். கோர்ட்டு என்னை தூக்கில் போட்டால், அதை ஏற்றுக்கொள்கிறேன்.

    அனைத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகளும் எனது குழந்தைகள் போன்றவர்கள். நான் அவர்களை குறைசொல்ல மாட்டேன். அவர்களின் வெற்றியில் எனது ரத்தமும், வியர்வையும்கூட இருக்கிறது.

    சிறிதுகாலம் முன்புவரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் என்னை மல்யுத்தத்தின் கடவுள் என்றனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக நான் பொறுப்பேற்றபோது இந்தியா உலகளவில் 20-வது இடத்தில் இருந்தது. இன்று எனது கடின உழைப்பின் காரணமாக, உலகின் 5 சிறந்த மல்யுத்த அணிகளில் ஒன்றாக இந்தியா உருவாகியுள்ளது.

    இரவும் பகலும் மல்யுத்தமே வாழ்க்கை என்று வாழ்ந்தவன் நான். மல்யுத்தத்தில் இந்தியா வென்ற 7 ஒலிம்பிக் பதக்கங்களில் 5 பதக்கங்கள் எனது பதவி காலத்தில் வந்தவை. எனக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை.

    அயோத்தியில் வரும் 5-ந்தேதி நான் நடத்தும் 'ஜன் சேத்னா மகா பேரணி'யில் எல்லோரும் திரளாக பங்கேற்க வேண்டும்.'

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திர அரசு விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறது.
    • டெல்லி காவல்துறை விசாரணை முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

    மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    விளையாட்டு மற்றும் ஆர்வமுள்ள மல்யுத்த வீரர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. நாங்கள் அனைவரும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.

    டெல்லி காவல்துறை விசாரணை முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றனர்.
    • மல்யுத்த போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசுவதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவித்தனர்.

    மல்யுத்த வீரர், விராங்கனைகளின் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்- மல்யுத்த வீரர்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசுவதாக அறிவித்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

    "டெல்லி காவல் துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றச்சாட்டுகளில் ஏதேனும் உண்மை இருந்தால், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும். இன்று தங்களது பதக்கங்களை கங்கையில் வீச அவர்கள் ஹரித்வார் சென்றனர். ஆனால், பதக்கங்களை அவர்கள் டிகைட்-இடம் ஒப்படைத்தனர். அது அவர்களது முடிவு, அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?" என்று பிரிஜ் பூஷன் சிங் தெரிவித்தார்.

    மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் பிரிஜ் பூஷன் சிங் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற புதிய பாராளுமன்ற திறப்பு விழாவுக்கு பிரிஜ் பூஷன் சிங் வருவதை அறிந்த, மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றனர்.

    பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீராங்கனைகளை டெல்லி காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், தான் மல்யுத்த போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசி போராட்டம் நடத்துவதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று அறிவித்தனர். அதன்படி ஹரித்வார் வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் விவசாயிகள் சங்க தலைவர் நரேஷ் டிகைட் பேச்சுவார்த்தை நடத்தி, பதக்கங்களை வீச வேண்டாம் என்று வலியுறுத்தினார்.

    இவரது கோரிக்கைக்கு இணங்க, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வீசும் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு, பதக்கங்களை டிகைட்-இடம் ஒப்படைத்தனர். மேலும் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு ஐந்து நாட்கள் கெடு வழங்குவதாக அவர்கள் தெரிவித்தனர். 

    ×