search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker murder"

    DGL0405052024: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சின்ன ஓவுலாபுரம் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரவேல்முருகன் (வயது 49). கூலித் தொழிலாளி. இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று கூடலூருக்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்ற சந்திரவேல்

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சின்ன ஓவுலாபுரம் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரவேல்முருகன் (வயது 49). கூலித் தொழிலாளி. இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று கூடலூருக்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்ற சந்திரவேல் முருகன் இரவு வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் எரசக்கநாயக்கனூர் பகுதியில் உள்ள தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணற்றில் சந்திரவேல் முருகன் மற்றும் அவரது பைக் கிடந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உடலில் வெட்டுக்காயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். மேலும் சந்திரவேல் முருகனுக்கு யாருடனும் முன் பகையா என விசாரணை மேற்கொண்டனர். இதில் அவரது உறவினர் கவிசீலன் மகன்கள் நிஷாந்த் (வயது 26), நிவிஸ் (24) ஆகியோர் முன் விரோதம் காரணமாக சந்திரவேல்முருகனை வெட்டிக் கொன்று கிணற்றில் வீசியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 2 பேரையும் கைது செய்தனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், சந்திரவேல் முருகன் குடும்பத்துக்கும் கவிசீலன் குடும்பத்துக்கும் முன் பகை இருந்துள்ளது. கடந்த வருடம் வருசநாடு தருமராஜபுரம் பகுதியில் நடைபெற்ற பஞ்சாயத்தில் சந்திரவேல்முருகனின் மருமகன் நல்லசாமி கொலை செய்யப்பட்டார். இது குறித்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டது. இதில் சந்திரவேல்முருகன் கவிசீலனின் மனைவி பேச்சியம்மாளை தாக்கியுள்ளார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை மனதில் வைத்துக் கொண்டு மகன்கள் நிஷாந்த், நிவிஸ் ஆகியோர் சந்திரவேல்முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் உடல் மற்றும் பைக்கை கிணற்றில் வீசி சென்றுள்ளனர் என தெரிவித்தனர்.

    • கோவில் விழாவில் மது அருந்தி ஒருவர் பலியான சம்பவம் தற்கொலை வழக்கிலிருந்து கொலை வழக்கமாக மாற்றப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் பாப்பாக்குடியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 32), துப்புரவு தொழிலாளி. இவர் கடந்த மாதம் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து கோட்டார் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோட்டார் போலீசார் பால்ராஜ் குடிபோதையில் தவறி விழுந்து இறந்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் பால்ராஜின் உடல் பிரேத பரிசோதனையில் அவர் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

    கோட்டார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தன்று பால்ராஜிக்கும், வாலிபர் ஒருவருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாகவும் அப்போது அந்த வாலிபர் பால்ராஜை தாக்கியதும் தெரியவந்துள்ளது.

    மேலும் நள்ளிரவு மீண்டும் பால்ராஜை அவர் அடித்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வாலிபர் யார்? என்பது குறித்து கோட்டார் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பால்ராஜ் பிணமாக கிடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் அந்த வாலிபரின் முகம் பதிவாகியுள்ளது.

    ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. கொலையாளியின் புகைப்படத்தை கோட்டார் போலீசார் வெளியிட்டுள்ளார். அவரை பற்றி தகவல் தெரிந்தால் கோட்டார் போலீசார் மற்றும் கட்டுப்பட்டறைக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டுமே 4 வழக்குகள் தற்கொலை வழக்குகளாக பதிவு செய்யப்பட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

    வடசேரி ஆம்னி பஸ் நிலையத்தில் டிரைவர் ஒருவர் பிணமாக கிடந்ததை வடசேரி போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு கொலை வழக்கமாக மாற்றப்பட்டது. இதேபோல் கோட்டார் பகுதியில் கோவில் விழாவில் மது அருந்தி ஒருவர் பலியான சம்பவம் தற்கொலை வழக்கிலிருந்து கொலை வழக்கமாக மாற்றப்பட்டது.

    இதுபோல் மாவட்டத்தில் வேறு 2 வழக்குகளும் தற்கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு கொலை வழக்காக மாற்றப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • தகராறில் ராமகிருஷ்ணன், விக்னேஷ் இருவரும் சேர்ந்து மது பாட்டிலால் சாமிதுரையை தாக்கியுள்ளனர்.
    • சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் ராமகிருஷ்ணன், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் பகுதியில் உள்ள பழைய ராஜவாய்க்கால் கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார்.

    உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபர் சாளரப்பட்டியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரது மகன் சாமிதுரை (வயது 42) என்பது தெரியவந்தது.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் சாமிதுரையின் தோள்பட்டையில் எலும்பு முறிவு இருப்பது தெரியவந்தது. அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்ததால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் பாட்டான் என்கிற ராமகிருஷ்ணன் (34), பாலபூபதி என்பவரது மகன் விக்னேஷ் (26) ஆகியோர் சாமிதுரையை அடித்துக்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. கட்டிடத் தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் நண்பர்களாக இருந்துள்ளனர். சம்பவத்தன்று ராஜவாய்க்கால் கரையில் அமர்ந்து மூவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

    அப்போது ஏற்பட்ட தகராறில் ராமகிருஷ்ணன், விக்னேஷ் இருவரும் சேர்ந்து மது பாட்டிலால் சாமிதுரையை தாக்கியுள்ளனர். மயங்கி விழுந்த சாமிதுரையை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளனர். பலத்த காயமடைந்த சாமிதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் ராமகிருஷ்ணன், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

    • வழக்கம்போல் நேற்று இரவு கோவில் வளாகத்தில் செல்லையா படுத்து தூங்கி உள்ளார்.
    • தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மேலத் தெருவை சேர்ந்தவர் செல்லையா (வயது 56). கூலித் தொழிலாளி.

    இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் வெளியூரில் வசித்து வருகிறார். இதனால் செல்லையா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

    இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது வீட்டை விற்று மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனால் அவர் தினமும் கூலி வேலைக்கு சென்று விட்டு இரவில் சாத்தான்குளத்தில் உள்ள கரையடி சுடலைமாடசாமி கோவில் வளாகத்தில் படுத்து தூங்கி வந்துள்ளார்.

    வழக்கம்போல் நேற்று இரவு கோவில் வளாகத்தில் செல்லையா படுத்து தூங்கி உள்ளார். இந்நிலையில் இன்று காலை கழுத்தை அறுத்து அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஜேசுராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று செல்லையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து செல்லையாவை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொலையாளியை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஸ்வரனை கல்லால் குத்திய 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

    பெரும்பாறை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் லோகேஷ்வரன் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர். திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு அருகே மூலையாறு பகுதியில் உள்ள தார் சுடுகலவை மையத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    லோகேஷ்வரனுடன் அந்த மையத்தில் உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் அங்கு பணியில் இருந்தனர். சம்பவத்தன்று வேலை செய்து கொண்டிருந்த போது லோகேஷ்வரனுக்கும், 17 வயது சிறுவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு பணி முடிந்து அனைவரும் தங்கும் அறைக்கு சென்று விட்டனர். நள்ளிரவில் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது எழுந்த சிறுவன் தன்னிடம் தகராறு செய்த லோகேஷ்வரனின் வயிற்றில் அங்கு கிடந்த கூர்மையான கருங்கல்லை எடுத்து குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து வலி தாங்க முடியாமல் லோகேஷ்வரன் அலறினார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் எழுந்தனர். பின்னர் அவர்கள் லோகேஷ்வரனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து லோகேஷ்வரனின் உறவினர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். கொலையாளியை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஸ்வரனை கல்லால் குத்திய 17 வயது சிறுவனை கைது செய்தனர். அதன் பின்பு உறவினர்கள் உடலை பெற்றுச் சென்றனர்.

    • வீட்டுக்கு வந்த சின்னத்துரை வீட்டில் மனைவி, பிள்ளைகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்தார்.
    • தாயை அவதூறாக பேசியதால் தந்தையை கொன்றதாக கூறி உள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் எம்.ஜி.ஆர். பூங்கா அருகே பொது மையவாடி சுமார் 45 மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று மாலை கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    கொலை செய்யப்பட்டவர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கணேஷபுரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான சின்னத்துரை(வயது42) என்பது தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்து. அதன் விபரம் வருமாறு:-

    சின்னத்துரைக்கு திருமணமாகி ராஜேஸ்வரி (38 ) என்ற மனைவியும், 4 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது ஆறுமுகநேரி அருகே மூலக்கரை செல்லும் சாலையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். சின்னத்துரை அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்ட ராஜேஸ்வரி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார்.

    இந்நிலையில் வீட்டுக்கு வந்த சின்னத்துரை வீட்டில் மனைவி, பிள்ளைகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.

    அப்போது அவரது மகன்களில் ஒருவரான 17 வயது மகன் மட்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அவரை அழைத்து கொண்டு சின்னத்துரை பல்வேறு இடங்களில் மனைவி, குழந்தைகளை தேடி உள்ளார். பின்னர் தூத்துக்குடிக்கு வந்து, மையவாடியில் வைத்து மது குடித்துள்ளார். அதிகமான போதை ஏறிய நிலையில் மனைவியை அவர் அவதூறாக பேசி மகனையும் திட்டியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த 17 வயது மகன் அங்கிருந்த அரிவாளால் தன் தந்தையை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது மகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் தன் தாயை அவதூறாக பேசியதால் தந்தையை கொன்றதாக கூறி உள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆத்திரம் அடைந்த செல்வம் இரும்பு கம்பியால் பெருமாளை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
    • பலத்த காயம் அடைந்த பெருமாளை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருத்தணி:

    திருவாலங்காடு அருகே உள்ள ரங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(வயது60). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் கருவேல மரத்தை வெட்டி விற்பனை செய்வதில் தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே இது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வம் இரும்பு கம்பியால் பெருமாளை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த பெருமாளை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கொலை நடந்த இடத்திற்கு வீரா என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள அய்யம்பாளையம் ஆண்டிபாளையம் ரோட்டில் செங்கல் சூளை பகுதியில் உள்ள ஒரு கரும்பு தோட்டம் அருகே சின்ன கிளை வாய்க்கால் செல்லும் பாலம் மீது இன்று காலை சுமார் 46 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில கிடந்துள்ளார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை மீட்டனர். இதில் அவருக்கு உடலில் ரத்த காயங்கள் மற்றும் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது தெரிந்தது.

    பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் விசாரணையில் அவர் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி (வயது 46) என்பதும், அவர் சமையல் தொழிலாளி என்றும், அவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவியும், தட்சின் (18), கிஷோர் (16) என்ற 2 மகன்கள் உள்ளதும் தெரியவந்தது.

    மேலும் கொலை நடந்த இடத்திற்கு வீரா என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் பழைய வத்தலக்குண்டு பகுதியிலும், வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் முன்பு அடுத்தடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்த கட்டிடதொழிலாளி பாண்டியராஜன்(34). இவர் நேற்றுமுன்தினம் இரவு திண்டுக்கல் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் கத்தியால் குத்தப்பட்டு இறந்துகிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் பழைய வத்தலக்குண்டு பகுதியிலும், வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் முன்பு அடுத்தடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் அவர்களிடம் சமாதானம் செய்து கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததின்பேரில் மறியலை கைவிட்டனர். இருந்தபோதும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என இன்று 2-ம் நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பிரேத பரிசோதனை முடிந்தும் அவரது உடல் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே குற்றவாளிகளை பிடிக்க வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் தயாநிதி, கண்ணாகாந்தி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் குற்றவா ளிகள் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட பாண்டியராஜன் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் இல்லாதவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது தொடர்பில் இருந்தவர்கள் யார் என தெரியவில்லை. வேலைக்கு சென்ற இடத்தில் பழகி வந்த 3 பேர் ஒன்றாக சேர்ந்து டாஸ்மாக் கடைக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் பாண்டியராஜனுடன் சென்றவர்கள் யார் என 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செங்கல் காளவாசலில் வேலை பார்த்து வந்த பாண்டியராஜன் கடந்த சிலநாட்களாக சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
    • குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாண்டியராஜன் தினமும் கணவாய்பட்டி ரோட்டில் உள்ள கடையில் மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு செல்வது வழக்கம்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த அழகர்மகன் பாண்டியராஜன்(35). இவருக்கு திருமணமாகி கனகவள்ளி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    செங்கல் காளவாசலில் வேலை பார்த்து வந்த பாண்டியராஜன் கடந்த சிலநாட்களாக சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாண்டியராஜன் தினமும் கணவாய்பட்டி ரோட்டில் உள்ள கடையில் மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்றுஇரவு அந்த டாஸ்மாக் கடையில் மதுகுடித்துவிட்டு பின்னர் மீண்டும் திண்டுக்கல் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார்.

    அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் இன்றுகாலை பாண்டியராஜன் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைபார்த்த அப்பகுதி மக்கள் வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே வேலைக்கு சென்ற தனது கணவர் வராததது கண்டு கனகவள்ளி மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் வரவே வத்தலக்குண்டு வந்தனர்.

    இதனிடையே சம்பவ இடத்திற்கு நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட பாண்டியராஜன் உடலை கைப்பற்றி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தலை கழுத்தில் பலத்த காயம் அடைந்த சரத்பாபு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
    • கெலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

    செங்குன்றம்:

    சோழவரத்தை அடுத்த காரனோடை, லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்பாபு (வயது25). கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு காரனோடை பஜாரில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென சரத்பாபுவை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரத்பாபு அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார்.

    ஆனாலும் விரட்டி சென்ற கும்பல் ஓட, ஓட விரட்டி சரத்பாபுவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தலை கழுத்தில் பலத்த காயம் அடைந்த சரத்பாபு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். உடனே கொலை கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    கொலை குறித்து தகவல் அறிந்ததும் சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கொலையுண்ட சரத்பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கெலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கணேசன் திருவண்ணாகோவில்பட்டியில் கோவில் ஊழியம் உள்ளிட்ட கிடைக்கும் வேலைகளை செய்து சாப்பிட்டு வந்தார்.
    • கொலைக்கான காரணம்? கொலையாளிகள் குறித்து உடனடியாக தெரியவில்லை.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள எண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட திருவண்ணாகோவில்பட்டியை சேர்ந்தவர் கணேசன்(வயது 59).

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த கணேசன், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பின் சொந்த ஊரான திருவண்ணாகோவில்பட்டிக்கு வந்தார்.

    பின்னர் அவர் சென்னைக்கு செல்லவில்லை. மனைவி மற்றும் மகன்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கணேசன் திருவண்ணாகோவில்பட்டியில் கோவில் ஊழியம் உள்ளிட்ட கிடைக்கும் வேலைகளை செய்து சாப்பிட்டு வந்தார். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை தனது வீட்டில் முன் அமர்ந்திருந்தார்.

    அப்போது வாகனத்தில் வந்த சில மர்மநபர்கள் கணேசனை கற்கள் மற்றும் கட்டைகளால் கொடூரமாக தாக்கினர். இதில் அவரது முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். காலையில் விவசாய வேலைக்குச் சென்ற கூலி தொழிலாளிகள் இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கொலைக்கான காரணம்? கொலையாளிகள் குறித்து உடனடியாக தெரியவில்லை. சென்னையில் வசிக்கும் அவரது மனைவி மகன்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கோவில் ஊழியம் செய்து வந்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×