search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TRAI"

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் காலாண்டு வருவாய் அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி ஜியோ மொத்த வருவாய் ரூ.831 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. #RelianceJio



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் டிசம்பர் 31, 2018 வரையிலான மூன்றாவது காலாண்டு வருவாய் அறிக்கை வெளியாகியுள்ளது. அதன் படி இந்த காலாண்டில் ஜியோவின் மொத்த வருவாய் ரூ.10,383 கோடியாக அதிகரித்துள்ளது.

    முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 12.4 சதவிகிதம் அதிகம். வருடாந்திர அடிப்படையில் 50.9 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. மூன்றாவது காலாண்டை பொருத்த வரை ஜியோவின் நிகர லாபம் ரூ.831 கோடியாகும். இது காலாண்டு வாக்கில் 22.1 சதவிகிதமும், வருடாந்திர அடிப்படையில் 65 சதவிகிதம் அதிகம் ஆகும்.

    முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது ஜியோவின் சேவை வருவாய் மட்டும் 12.4 சதவிகிதம் அதிகரித்து ரூ.12,252 கோடி ஈட்டியிருக்கிறது. டிசம்பர் 31, 2018 வரையிலான காலக்கட்டத்தில் ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 28.01 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. முந்தைய காலாண்டு வரை ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 25.23 கோடியாக இருந்தது.



    - ரிலையன்ஸ் ஜியோ ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வருவாய் - மாதம் ரூ.130

    - ஜியோ வாடிக்கையாளர்களின் மொத்த வயர்லெஸ் டேட்டா - 864 கோடி ஜி.பி.

    - ஜியோ வாடிக்கையாளர்களின் வாய்ஸ் கால் பயன்பாடு - தினமும் 63,406 கோடி நிமிடங்கள், மாதம் ஒரு வாடிக்கையாளர் 794 நிமிடங்கள்

    - ஜியோ வாடிக்கையாளர்களின் வீடியோ பயன்பாடு - மாதம் 460 கோடி மணி நேரம்

    - ஜியோ வாடிக்கையாளர்களின் மாதாந்திர டேட்டா பயன்பாடு - 10.8 ஜி.பி. சராசரி

    ஜியோவின் ஜிகாஃபைபர் சேவைகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி துவங்கியது. இதைத் தொடர்ந்து நாடு முழுக்க சுமார் 1400 நகரங்களில் இருந்து ஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்த பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 
    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் ரூ.153 மாத கட்டணத்தில் 100 சேனல்களை தேர்வு செய்யலாம். #TRAI



    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கேபிள் மற்றும் டி.டி.ஹெச். சேவை கட்டணம் பற்றி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 100 இலவச அல்லது கட்டண சேனல்களை ரூ.153.40 கட்டணத்திற்கு பார்க்க முடியும்.

    புதிய கட்டணம் மாதம் ரூ.130 என்றும் ஜி.எஸ்.டி. சேர்த்து மாதம் ரூ.154 கட்டணம் செலுத்த வேண்டும். புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் 100 சேனல்களை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். பின் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலாக இருக்கிறது.

    டிராய் அறிவிப்பில் ஹெச்.டி. சேனல்கள் இடம்பெறாது. முன்னதாக வெளியாகி இருந்த தகவல்களில் வாடிக்கையாளர்கள் ஹெச்.டி. சேனல்களையும் தேர்வு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்களுக்கு சேனல்களின் கட்டணம் செட் டாப் பாக்ஸ் மூலம் நேரடியாகவே காண்பிக்கப்படும்.



    புதிய கட்டண முறையில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் 011-23237922 (ஏ.கே. பரத்வாஜ்) மற்றும் 011-23220209 (அரவிந்த் குமார்) தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டோ அல்லது advbcs-2@trai.gov.in, arvind@gov.in மின்னஞ்சல் முகவரிக்கு சந்தேகங்களை எழுப்பலாம் என தெரிவித்துள்ளது.

    மேலும் தனியே சேனல் ஒன்றுக்கான கட்டணம் மாதம் அதிகபட்சம் ரூ.19 வரை மட்டுமே நிர்ணயம் செய்யப்பட வேண்டும். முதல் முறையாக வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து பார்த்துரசிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு சேனலை தனியாகவோ அல்லது ஒன்றிணைந்த நோக்கில் சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம். 

    இவ்வாறு வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்களை அவரவர் விருப்பப்படி தனியாகவோ அல்லது குழு அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்ட சேனல்கள் என எப்படி வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். சேனல்களின் கட்டண விவரங்களை சேவை நிறுவனங்கள் 999 என்ற பிரத்யேக சேனலில் வழங்கவும் டிராய் உத்தரவிட்டுள்ளது.
    கால் டிராப் விவகாரம் தொடர்பாக டெலிகாம் நிறுவனங்கள் ரூ.56 லட்சம் அபராதம் செலுத்த மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #TRAI



    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் கால் டிராப் பிரச்சனைக்காக டெலிகாம் நிறுவனங்களுக்கு ரூ.56 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

    டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு அதிகபட்சமாக ரூ.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட கால் டிராப் அளவுகளை ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். போன்ற நிறுவனங்கள் கடந்துவிட்டன.

    அந்த வகையில் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்களுக்கு முறையே ரூ.10 லட்சம் மற்றும் ரூ.12 லட்சம் அபராதமாக செலுத்த டிராய் இரு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகை இந்த ஆண்டின் முதல் அரையாண்டு வரையிலான காலக்கட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.



    இதேபோன்று சேவை தரத்தை மேம்படுத்தாத காரணத்தால் டெலினார் நிறுவனத்திற்கு ரூ.6 லட்சம் அபராதம் செலுத்த டிராய் உத்தரவிட்டுள்ளது. 

    அக்டோபர் 1, 2017 முதல் அமலாக்கப்பட்ட டிராய் விதிமுறை கடுமையாக்கப்பட்டு வருவதன் காரணமாக டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் தரப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கால் டிராப் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. என டெலிகாம் மந்திரி மனோஜ் சின்கா தெரிவித்தார்.

    ஜூலை 2015 முதல் டெலிகாம் நிறுவனங்கள் சார்பில் கூடுதாலக 9.74 லட்சம் மொபைல் சைட்களை 2ஜி, 3ஜி, 4ஜி எல்.டி.இ. சைட்களை நிறுவியிருக்கிறது. அந்த வகையில் நவம்பர் 2018 வரையிலான காலக்கட்டத்தில் மொபைல் சைட்களின் எண்ணிக்கை 20.07 லட்சமாக அதிகரித்து இருக்கிறது.
    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. #TRAI



    இந்தியாவில் டெலிகாம் சேவையை பயன்படுத்தும் பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் போதுமான பேலன்ஸ் வைத்திருக்கவில்லை என்றாலும் அவர்களது இணைப்பினை துண்டிக்கக்கூடாது என மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த சில வாரங்களாக பல்வேறு டெலிகாம் நிறுவனங்களும் போதிய பேலன்ஸ் வைத்திருக்காத வாடிக்கையாளர்களின் இன்கமிங் அழைப்புகள் துண்டிக்கப்படும் என குறுந்தகவல் அனுப்பி வந்தன. இதைத் தொடர்ந்து மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வாடிக்கையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகமாக அனுப்பப்பட்டன.

    குற்றச்சாட்டுகளில், பல வாடிக்கையாளர்கள் தாங்கள் போதுமான பேலென்ஸ் வைத்திருந்தாலும், டெலிகாம் நிறுவனங்கள் அதிகளவு குறுந்தகவல்களை அனுப்பி ரீசார்ஜ் செய்யக் கோருவதாக தெரிவித்திருந்தனர். இவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் டிராய் புதிய உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.



    அதன்படி டெலிகாம் நிறுவனங்கள் போதுமான பேலென்ஸ் வைத்திருக்காத வாடிக்கையாளர்களின் இன்கமிங் அழைப்புகளை துண்டிக்கக்கூடாது என தெரிவித்துள்ளது. 

    இதேபோன்று வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் வைத்திருக்கும் சரியான பேலென்ஸ் தொகை, அதன் சரியான வேலிடிட்டி தேதி உள்ளிட்டவற்றை தெளிவாக அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் இதனுடன் குறுந்தபட்ச ரீசார்ஜ் தொகையை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என டிராய் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற அனைத்து விவரங்களும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் 72 மணி நேரத்திற்குள் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையை தங்களது பிரீபெயிட் அக்கவுன்ட்டில் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் இணைப்பை துண்டிக்கக்கூடாது என்றும் டிராய் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவிலேயே முதல் முறையாக வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் சேவை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்திருக்கிறது. #Jio



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதற்கென ரிலையன்ஸ் ஜியோ கே.கே.டி.ஐ. நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இதன் மூலம் கே.கே.டி.ஐ. நிறுவனம் தனது சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் வோல்ட்இ சேவையை வழங்கும் முதல் ஜப்பான் நிறுவனமாக இருக்கிறது.

    இதன் மூலம் வோல்ட்இ சர்வதேச ரோமிங் சேவையை வழங்கும் உலகின் நான்கு நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. ஜியோ சேவையை பல்வேறு நாடுகளுக்கும் வழங்கும் திட்டத்தின் ஒருபகுதியாக புதிய சேவையை வழங்கி இருப்பதாக ஜியோ அறிவித்துள்ளது. 

    வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் மூலம் சர்வதேச பயணர்கள் ஜியோவின் உலகத்தரம் வாய்ந்த அனைத்து IP நெட்வொர்க் சேவையை பயன்படுத்த முடியும். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் அதிவேக நெட்வொர்க் என தெரிவித்துள்ளது.



    கடந்த 20 மாதங்களாக ஜியோவின் அதிவேக நெட்வொர்க் என்றும், ஜியோவின் சராசரி டவுன்லோடு வேகம் நொடிக்கு 20.06 எம்.பி. ஆக இருக்கிறது என அந்நிறுவனம் மேலும் தெரிவித்திருக்கிறது. அக்டோபர் மாத நிலவரப்படி ஜியோவின் டவுன்லோடு வேகம் ஏர்டெல் நிறுவனத்தை விட இருமடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்திய பயனர்கள் மற்றும் இந்தியாவுக்கு வந்து செல்லும் அனைத்து பயனர்களுக்கும் அதிவேக டேட்டா மற்றும் வாய்ஸ் அனுபவத்தை வழங்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கே.கே.டி.ஐ. வாடிக்கையாளர்களை ஜியோ நெட்வொர்க்கிற்கு வரவேற்கிறோம் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் அதிவேக 4ஜி டவுன்லோடு வேகம் வழங்கும் டெலிகாம் நிறுவனங்கள் பட்டியலில் ஏர்டெல் முதலிடம் பிடித்து இருக்கிறது. #Airtel



    இந்தியாவின் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன், ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

    ஏர்டெல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த 3ஜி மற்றும் 4ஜி டவுன்லோட் வேகம் நொடிக்கு 7.53 எம்.பி. ஆக இருக்கிறது. ஏர்டெலை தொடர்ந்து மற்ற நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன், ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்டவை முறையே நொடிக்கு 5.47 எம்பி, 5.20 எம்.பி., 4.92 எம்.பி. மற்றும் 2.70 எம்.பி. வேகத்தில் டேட்டா வழங்கியிருக்கின்றன.

    இந்த தகவல் ஓபன் சிக்னல் எனும் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்டு 29ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் டேட்டா டவுன்லோட் வேகத்தில் 25 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. இதன் சராசரி டேட்டா வேகம் நொடிக்கு 9.96 எம்.பி. ஆக பதிவாகி இருக்கிறது. 

    இதேபோன்று இந்தியா முழுக்க 16 டெலிகாம் வட்டாரங்களில் ஏர்டெல் அதிவேக டேட்டா வழங்கி இருக்கிறது. 4ஜி டேட்டா அப்லோடு வேகத்தை பொறுத்தவரை ஐடியா நிறுவனம் முதலிடம் பிடித்திருக்கிறது. ஐடியா 4ஜி அதிகபட்சமாக நொடிக்கு 3.93 எம்.பி. அப்லோடு வேகம் வழங்கி இருக்கிறது.

    ஐடியா நிறுவனம் பஞ்சாப், டெல்லி மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட வட்டாரங்களில் அதிவேக அப்லோட் வேகம் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து வோடபோன், ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. அப்லோட் வேகத்தை பொறுத்த வரை எந்த நிறுவனமும் 4 எம்.பி. வேகத்தை எட்டவில்லை.
    ரிலையன்ஸ் ஜியோவுக்கு நேரடியாக சவால் விடும் வகையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டத்தை அமல்படுத்த இருக்கிறது. #Airtel



    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை ஒரேகட்டமாக 4ஜி நெட்வொர்க்கிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. இதுவரை பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் 2ஜி மற்றும் 3ஜி சேவையை பயன்படுத்தி வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் அதிவேக 4ஜி நெட்வொர்க்கிற்கு மாற்றப்பட இருக்கின்றனர்.

    புதிய திட்டத்தின் மூலம் ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைக்கு நேரடி போட்டியாளராக உருவெடுக்கும். தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவக்கம் முதலே 4ஜி நெட்வொர்க்கில் மட்டும் நேரடியாக சேவையை வழங்கி வருகிறது. 

    ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் ஏர்டெல் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் அனைவரும் அதிவேக 4ஜி நெட்வொர்க்கிற்கு மாற்றப்படுபவர். இதற்கென ஏர்டெல் நிறுவனம் 900 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரக்கை பயன்படுத்தி 4ஜி நெட்வொர்க் சேவையை வழங்க இருக்கிறது. ஜியோவுக்கு சமமான போட்டியை வழங்க ஏர்டெல் நிறுவனத்தின் உச்சக்கட்ட முடிவாக இது இருக்கும் என கூறப்படுகிறது.



    “சமீப காலங்களில் 4ஜி நெட்வொர்க்கிற்கு அதிகளவு தேவை ஏற்பட்டு இருக்கிறது, எங்களது 900 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் 4ஜி வாடிக்கயாளர்களுக்கு அதிவேக இணைய சேவையை வழங்கும், இதே நேரத்தில் எங்களின் 2ஜி சேவைகள் 1800 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் மூலம் வழங்கப்படும்,” என ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரியான கோப்பால் விட்டல் தெரிவித்தார். 

    3ஜி நெட்வொர்க்கில் இருந்து போதுமான வருவாய் கிடைப்பதில்லை, 3ஜி தொழில்நுட்பத்தின் முடிவு நெருங்கிவிட்டது என அவர் மேலும் தெரிவித்தார். ஏர்டெல் நிறுவனம் டிரான்சிஷன் வழிமுறையை கொண்டு தனது வாடிக்கையாளர்களை 3ஜி நெட்வொர்ககில் இருந்து 4ஜி நெட்வொர்க்கிற்கு மாற்றுகிறது. 

    இந்தியா முழுக்க 16 வட்டாரங்களில் 116 யூனிட் அலைக்கற்றைகளை 900 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் ஏர்டெல் நிறுவனம் சொந்தமாக வைத்திருக்கிறது. இவை முழுக்க 4ஜி சேவைக்கென பிரத்யேகமாக பயன்படுத்தப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தில் ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் 4ஜி சேவைகளை 900 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் மூலம் வழங்குவதற்கான பணிகளை செய்துள்ளது.

    தமிழ் நாடு, உத்திர பிரதேசம் மேற்கு மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாயை அதிகப்படுத்தும் நோக்கில், ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் புதிய சலுகைகளை அறிவித்தது. இவற்றின் விலை ரூ.25 முதல் துவங்குகிறது.
    இந்தியாவில் 4ஜி போன்றே அதிவேக 5ஜி சேவையை வழங்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது. #5G #Jio



    இந்திய டெலிகாம் சந்தையில் இன்னமும் பெருமளவு பயனர்கள் ஃபீச்சர்போன் பயன்படுத்தி வருவாதல், டெலிகாம் சேவை கட்டணம் தற்சமயம் அதிகக்கும் வாய்ப்புகள் குறைவு தான என ஜியோ தெரிவித்துள்ளது. 

    இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் இன்றும் ஃபீச்சர் போன் பயன்படுத்தி வருகின்றனர், இதனால் தற்சமயம் சேவை கட்டணம் தற்சமயம் அதிகரிக்கப்பட மாட்டாது என ரிலையன்ஸ் ஜியோ தலைவர் மேத்யூ உம்மன் தெரிவித்தார். டெலிகாம் நிறுவனங்கள் புதுமையில் கவனம் செலுத்தவில்லை எனில் கடுமையான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்தார்.

    5ஜி பயன்பாடு குறித்து பேசும் போது, 2019-20ம் ஆண்டுகளில் 5ஜி சூழல் தயார் நிலையில் இருக்கும், எனினும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட விலை குறைந்த சாதனங்களின் பயன்பாடு இந்தியாவில் 2021ம் ஆண்டு வாக்கில் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார். 



    இந்தியாவில் 5ஜி புதிய தொழில்நுட்பம் என்ற வகையில் டெலிகாம் சந்தை மட்டுமின்றி ஒவ்வொரு துறையையும் மாற்றியமைக்கும் என அவர் தெரிவித்தார். 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மொபைல் சாதனங்கள் தற்சமயம் வெளியாகாத நிலையில், இவை 2019ம் ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    “2020ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2021ம் ஆண்டு வாக்கில் பயன்பாட்டிற்கு வரயிருக்கும் புதிய தொழில்நுட்பத்தின் கட்டணத்தை 2018ம் ஆண்டில் கணிப்பது கடினமான ஒன்று,” என மேத்யூ தெரிவித்தார். இந்தியாவில் ஜியோ நிறுவனத்துக்கு 5ஜி தொழில்நுட்பத்தை சோதனை செய்ய 28 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ஜியோ நிறுவனம் ஸ்வீடன் நாட்டு டெலிகாம் உபகரணங்களை உற்பத்தி செய்யும் எரிக்சன் நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஓட்டுனர் இன்றி இயங்கும் காரினை சோதனை செய்தது.

    4ஜி தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும் போது 5ஜி தொழில்நுட்பத்திற்கான கட்டணம் குறைவாகவே இருக்கும் என எரிக்சன் நிறுவனத்தின் இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஒசியானா மற்றும் நுன்சினோ மிர்டிலோ பகுதிகளுக்கான தலைவர் தெரிவித்தார்.
    இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவைகள் வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது. #Jio



    இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவுக்கு பின் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. போட்டி நிறுவனங்கள் தங்களது சேவை கட்டணங்களை குறைத்தும், ஏற்கனவே வழங்கி வரும் சலுகைகளில் கூடுதல் பலன்களை அறிவித்து வருகின்றன.

    புதிய சலுகை மட்டுமின்றி நாட்டில் 4ஜி சேவை பயன்பாடும் வேகமாக அதிகரிக்க ரிலையன்ஸ் ஜியோ மிகமுக்கிய காரணமாக இருந்தது. அந்த வகையில், மற்ற நிறுவனங்களுக்கு முன்னதாகவே 5ஜி சேவைகளையும் முதலில் வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து இணையத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்ற ஆறே மாதங்களில் இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்க ஜியோ திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 



    இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற இருக்கும் நிலையில், இந்தியாவில் ஜியோ 5ஜி சேவைகள் 2020-ம் ஆண்டின் மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

    “5ஜி-க்கு தேவையான எல்.டி.இ. நெட்வொர்க் ஜியோவிடம் தயார் நிலையில் இருக்கிறது, மேலும் புதிய தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆறு மாதங்களில் வழங்க முடியும்,” என பெயர் அறியப்படாத அதிகாரி தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    எனினும் இதை செயல்படுத்துவதில் இருக்கும் மிகப்பெரிய சவால், புதிய தொழில்நுட்பத்தை சீராக இயக்கும் சாதனங்கள் வெளிவர வேண்டும். புதிய தொழில்நுட்பம் தற்போதைய 4ஜி-யை விட அதிவேகமாக இணைய இணைப்பை பயனர்களுக்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன 4ஜி சேவைகள் துவங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், விரைவில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவைகள் துவங்கப்பட இருக்கிறது. #BSNL



    இந்தியாவில் 2100 Mhz பேன்ட் மூலம் 4ஜி சேவைகளை வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மத்திய டெலிகாம் துறை ஒப்புதல் அளித்துள்ளது. 4ஜி சேவைகளை வழங்க ரூ.13,885 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரமை கைப்பற்ற விரிவான அறிக்கை 2017-ம் ஆண்டில் பி.எஸ்.என்.எல். சார்பில் சமர்பிக்கப்பட்டது. 

    இதைத் தொடர்ந்து அரசு சார்பில் முதலீடாக ரூ.6,652 கோடி பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மந்திரி சபை பரிந்துரையின் பேரில் ஸ்பெக்ட்ரம் கட்டணம் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளில் இருந்து 16 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது. 

    “2100 Mhz பேன்ட் மூலம் 4ஜி சேவைகளை வழங்குவதற்கு எங்களின் கோரிக்கைக்கு மத்திய டெலிகாம் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.” என பி.எஸ்.என்.எல். நிறுவன தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். இதன் மூலம் அதிவேக 4ஜி எல்.டி.இ. சேவை வழங்க முடியும்.

    இந்தியாவில் மற்ற டெலிகாம் நிறுவனங்களில், பி.எஸ்.என்.எல். மட்டும் இதுவரை 4ஜி சேவையை வழங்காமல் இருக்கிறது. எனினும், சேவை வழங்க அனுமதி கிடைத்திருக்கும் நிலையி்ல், பி.எஸ்.என்.எல். வழங்கும் சலுகைகள் சந்தையில் போட்டியை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி சேவைகளை 2100 Mhz பேன்ட் சேவைகளை உரிமம் பெற்று இருக்கும் 21 வட்டாரங்களில் விரைவில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 4ஜி சேவைகள் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டுள்ளது.
    ட்ராய் அமைப்பின் தலைவராக இருந்துவந்த ராம் சேவாக் ஷர்மா அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், தற்போது மீண்டும் ட்ராய் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். #TRAI #RamSewakSharma
    புதுடெல்லி:

    ட்ராய் எனப்படும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ராம் சேவாக் ஷர்மா. இவர் இதற்கு முன்னர் ஆதார் ஆணையத்தின் இயக்குனராக பணிபுரிந்தார். இவர் சமீபத்தில் தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிவிட்டு, முடிந்தால் இந்த ஆதார் எண்ணை பயன்படுத்தி எனக்கு பாதகம் விளைவிக்க முயற்சியுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

    இவரது இந்த ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர், இந்த சவாலை ஏற்று, ஷர்மாவின் முழு விவரங்களையும் ட்விட்டரில் பதிவிட்டார். அதுமட்டுமின்றி, அவருடைய வங்கி கணக்கில் 1 ரூபாய் பணத்தை டெபாசிட்டும் செய்தார்.

    இந்த சம்பவம் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆதார் மீது இருந்த குறைந்தபட்ச நம்பகத்தன்மையும் இதனால் பறிபோனதாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இவ்வாறு தனது ஆதார் எண்ணை பதிவிட்டதன்மூலம் ஒரே இரவில் உலக அளவில் பிரசித்தி பெற்ற ஷர்மா தற்போது மீண்டும் ட்ராய் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    2020-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை இவரது பதவிக்காலம் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TRAI #RamSewakSharma
    ‘எனது ஆதார் தகவலை வைத்துக் கொண்டு, எனக்கு பாதிப்பை ஏற்படுத்துங்கள்’ என டிராய் தலைவர் ஆர்.எஸ் ஷர்மா சவால் விடுக்க, கிடைத்த பதிலடியால் நெட்டிசன்களின் கிண்டலுக்கு அவர் உள்ளாகியுள்ளார். #Aadhaar #TRAI #RSSharma
    புதுடெல்லி:

    ஆதார் தகவல்கள் பாதுகாப்பு குறித்து நீண்ட நாட்களாக சர்ச்சை நீடித்து வருகிறது. ஆதார் தகவல்கள் அனைத்தும் பத்திரமாக இருப்பதாக அரசும் பலமுறை அறிவித்துள்ளது. எனினும், இது தொடர்பான சந்தேகங்கள் அவ்வப்போது வெடிக்கின்றன.

    இந்நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும் ஆதார் ஆணையத்தின் முன்னாள் பொதுமேலாளருமான ஆர்.எஸ் ஷர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட்டு, “உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். இந்த விவரத்தை வைத்துக் கொண்டு, எனக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்லுங்கள்' என பதிவிட்டிருந்தார்.

    ஆதார் திட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து வரும் ஷர்மாவின் இந்த திடீர் சவால் ட்விட்டரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சவாலுக்கு பதிலடியாக, பிரான்ஸை சேர்ந்த எல்லியட் ஆல்டர்சன் என்ற பாதுகாப்பு நிபுணர், ஷர்மாவின் பிறந்த தேதி, இடம், தற்போதைய முகவரி, செல்போன் எண், பான் கார்டு எண், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டார்.

    “வெளியிடப்பட்ட தகவல்கள் போதும் என நினைக்கிறேன். அதனால் நிறுத்திக்கொள்கிறேன். ஆதார் எண்ணை பொதுவெளியில் பதிவிட்டது தவறு என்பதை தற்போது புரிந்துகொள்வீர்கள் என்பதை நம்புகிறேன்” என எல்லியட் ஆல்டர்சன் ஷர்மாவுக்கு பதில் கூறியிருந்தார்.



    எல்லியட் ஆல்டர்சன் வெளியிட்ட தகவல்களுக்கு மறுப்பு தெரிவிக்காமல், “செல்போன் எண் உள்ளிட்ட தகவல்கள் தொடர்பாக நான் சவால் விடுக்கவில்லை. என்னுடைய ஆதார் எண் மூலம் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் என்ன செய்யமுடியும்? என்பதே சவால்” என மீண்டும் ஷர்மா ட்வீட் செய்திருந்தார்.

    எனினும், சமாளிக்கும் விதமான ஷர்மாவின் பதில் நெட்டிசன்களுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை. “உங்களது பிறந்ததேதி, செல்போன் எண், பான் கார்டு எண், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆதார் எண் மூலம் எடுத்துவிடலாம் என்பது பாதிப்பை ஏற்படுத்தாதா?” என பலர் ஷர்மாவிடம் கேட்டுள்ளனர்.

    மேலும், “பல அடி நீளத்தில் சுவர் கட்டி ஆதார் தகவல்களை பாதுகாப்பது இப்படிதானா?” எனவும் பலர் கேட்டுள்ளனர். 

    எல்லியட் ஆல்டர்சன் வெளியிட்ட தகவல்களை ஆதார் இல்லாமலேயே எளிதாக எடுத்துவிடலாம் எனவும் பலர் ஷர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.

    மேற்கண்ட இந்த நிகழ்வால் மீண்டும் ஆதார் பாதுகாப்பு குறித்தான சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
    ×