search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi Gunfire"

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து குமரியில் 8 இடங்களில் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 247 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 8 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் வக்கீல் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் 81 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதேபோல கன்னியாகுமரி கொட்டாரம் சந்திப்பில் நடந்த தி.மு.க. மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆஸ்டின் எம்.எல்.ஏ., தாமரை பாரதி உள்பட 41 பேர் மீதும், சுசீந்திரம், பறக்கை சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்தில் 20 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    ராஜாக்கமங்கலத்தில் நடந்த மறியல் போராட்டத்தில் 12 பேர் மீதும், தக்கலை அழகிய மண்டபத்தில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 20 பேர் மீதும், ஆரல்வாய்மொழியில் நடந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 26 பேர் மீதும், மணவாளக்குறிச்சி சந்திப்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக 12 பேர் மீதும். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தூத்துக்குடியில் நடந்த போலீசாரின் துப்பாக்கி சூடு கண்டித்து களியக்காவிளையில் காங்கிரஸ் சார்பில் சவபெட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட 35 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் நேற்று நடந்த தொடர் போராட்டத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மொத்தம் 247 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.#SterliteProtest
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு கண்டித்து குமரி மாவட்டத்தில் மேலும் 3 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்டத்தில் போராட்டங்கள் நீடித்து வருகிறது. இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

    பாதுகாப்பு கருதி கிராமப்புறங்களில் இரவில் தங்கும் அனைத்து அரசு பஸ்களையும் டெப்போக்களுக்கு கொண்டு வர நேற்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்படி அனைத்து பஸ்களும் டெப்போக்களுக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டன.

    இந்தநிலையில் நேற்று இரவு 3 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து பள்ளம் நோக்கிச் சென்ற அரசு பஸ் மேலகிருஷ்ணன் புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் பஸ்சின் மீது கல்வீசி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன.

    இதேபோல கேசவன் புதூரில் இருந்து நாகர்கோவில் வந்த மற்றொரு அரசு பஸ் வட்டக்கரை பாலம் என்ற இடத்தில் வந்தபோது கல்வீசி தாக்கப்பட்டது. இறச்சக்குளத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ் புறப்பட்ட சிறிது தொலைவிலேயே மர்ம நபர்களால் கல்வீசி உடைக்கப்பட்டது.

    ஏற்கனவே நேற்று முன்தினம் இரவு கரியமாணிக்கபுரம் பகுதியில் 2 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதனையும் சேர்த்து கல்வீசி உடைக்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. பஸ்கள் உடைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பஸ்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதால் குமரி மாவட்டத்தில் இன்று பஸ் போக்குவரத்து தாமதமாக தொடங்கியது. வழக்கமாக அதிகாலை 4.30 மணிக்கு பஸ்கள் டெப்போக்களில் இருந்து புறப்பட்டு பஸ்நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டு இயக்கப்படும். ஆனால் இன்று காலை 6 மணிக்கு தான் டெப்போக்களில் இருந்து பஸ்கள் வெளியே கொண்டு வரப்பட்டன. மேலும் 4,5 பஸ்களாக சேர்த்து போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன.

    நாகர்கோவிலில் இருந்து அஞ்சுகிராமம், கூடங்குளம், உவரி வழியாக திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடிக்கு இயக்கப்படும் பஸ்கள் இன்று 3-வது நாளாக இயக்கப்படவில்லை. குமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 12 டெப்போக்களில் இருந்து 805 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 750 பஸ்கள் இயக்கப்பட்டன.

    குமரி மாவட்டத்துக்கு வரும் கேரள அரசு பஸ்கள் இன்று எல்லையில் உள்ள களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன. தமிழக பஸ்கள் வழக்கம்போல் திருவனந்தபுரத்துக்கு சென்று வந்தன.
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நடந்த மறியலில் மணக்கோலத்தில் புதுமண தம்பதியினர் கலந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.#bansterlite #sterliteprotest
    ராயபுரம்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று காலை தண்டையார்பேட்டை சிக்னல் அருகே திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் ஆர்.கே.நகர் பகுதி தி.மு.க. பொறுப்பாளர் மருது கணேஷ், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    மறியல் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது தண்டையார்பேட்டை சிக்னல் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் புது வண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டத்தை சேர்ந்த பாரி- தமிழரசிக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் புதுமண தம்பதிக்கு அப்பகுதியில் மறியல் நடந்து கொண்டு இருக்கும் தகவல் கிடைத்தது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்த அவர்கள் மணக்கோலத்தில் திருமண மண்டபத்தில் இருந்து வெளியே வந்தனர்.

    பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினருடன் சேர்ந்து சாலையில் அமர்ந்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுமண தம்பதியினர் பாரி-தமிழரசி ஆகியோர் தாங்கள் கொண்டு வந்திருந்த மெழுகுவர்த்திகளை அங்கிருந்தவர்களிடம் கொடுத்தனர். பின்னர் அவர்களும் மெழுகுவர்த்தியை ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

    சிறிது நேரத்துக்கு பின்னர் புதுமண தம்பதியினர் போராட்டத்தை முடித்துக் கொண்டு திருமண மண்டபத்துக்கு சென்றுவிட்டனர். இதுபற்றி புதுமாப்பிள்ளை பாரியிடம் கேட்டபோது, ‘தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானது வருந்தத்தக்கது. இதனை கண்டித்து இன்று காலை அரசியல் கட்சியினர் திருமண மண்டபம் அருகே போராட்டத்தில் ஈடுபடுவதை அறிந்தோம். இதில் நாங்களும் பங்கு கொள்ள வேண்டும் என்று நினைத்தோம்.

    எனவே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்த மனநிம்மதி ஏற்பட்டுள்ளது’ என்றார்.

    புதுமண தம்பதியினர் சென்ற சிறிது நேரத்தில் தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட எர்ணாவூர் நாராயணன், மருதுகணேஷ் உள்ளிட்ட 250 பேரை கைது செய்தனர். அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.#bansterlite #sterliteprotest
    ×