search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் மேலும் 3 அரசு பஸ்கள் கல்வீசி உடைப்பு- போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்
    X

    குமரி மாவட்டத்தில் மேலும் 3 அரசு பஸ்கள் கல்வீசி உடைப்பு- போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு கண்டித்து குமரி மாவட்டத்தில் மேலும் 3 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்டத்தில் போராட்டங்கள் நீடித்து வருகிறது. இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

    பாதுகாப்பு கருதி கிராமப்புறங்களில் இரவில் தங்கும் அனைத்து அரசு பஸ்களையும் டெப்போக்களுக்கு கொண்டு வர நேற்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்படி அனைத்து பஸ்களும் டெப்போக்களுக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டன.

    இந்தநிலையில் நேற்று இரவு 3 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து பள்ளம் நோக்கிச் சென்ற அரசு பஸ் மேலகிருஷ்ணன் புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் பஸ்சின் மீது கல்வீசி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன.

    இதேபோல கேசவன் புதூரில் இருந்து நாகர்கோவில் வந்த மற்றொரு அரசு பஸ் வட்டக்கரை பாலம் என்ற இடத்தில் வந்தபோது கல்வீசி தாக்கப்பட்டது. இறச்சக்குளத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ் புறப்பட்ட சிறிது தொலைவிலேயே மர்ம நபர்களால் கல்வீசி உடைக்கப்பட்டது.

    ஏற்கனவே நேற்று முன்தினம் இரவு கரியமாணிக்கபுரம் பகுதியில் 2 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதனையும் சேர்த்து கல்வீசி உடைக்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. பஸ்கள் உடைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பஸ்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதால் குமரி மாவட்டத்தில் இன்று பஸ் போக்குவரத்து தாமதமாக தொடங்கியது. வழக்கமாக அதிகாலை 4.30 மணிக்கு பஸ்கள் டெப்போக்களில் இருந்து புறப்பட்டு பஸ்நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டு இயக்கப்படும். ஆனால் இன்று காலை 6 மணிக்கு தான் டெப்போக்களில் இருந்து பஸ்கள் வெளியே கொண்டு வரப்பட்டன. மேலும் 4,5 பஸ்களாக சேர்த்து போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன.

    நாகர்கோவிலில் இருந்து அஞ்சுகிராமம், கூடங்குளம், உவரி வழியாக திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடிக்கு இயக்கப்படும் பஸ்கள் இன்று 3-வது நாளாக இயக்கப்படவில்லை. குமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 12 டெப்போக்களில் இருந்து 805 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 750 பஸ்கள் இயக்கப்பட்டன.

    குமரி மாவட்டத்துக்கு வரும் கேரள அரசு பஸ்கள் இன்று எல்லையில் உள்ள களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன. தமிழக பஸ்கள் வழக்கம்போல் திருவனந்தபுரத்துக்கு சென்று வந்தன.
    Next Story
    ×