search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thamirabarani river"

    • எப்போது சொந்த ஊருக்கு செல்வோம் என வெள்ளத்தில் காத்திருத்தோம்.
    • 3 நாட்களுக்கு பிறகு உயிர் தப்பி விட்டோம் என்ற நிம்மதி.

    ஆம்னி பஸ்சில் சிக்கி தவித்த பெண் பயணி நந்தினி கூறியதாவது:-

    நான் கடந்த 18-ந் தேதி சென்னையில் இருந்து எனது 2 குழந்தைகளுடன் ஆம்னி பஸ்கள் சொந்த ஊரான குலசேகரபட்டினத்திற்கு புறப்பட்டு சென்றேன். 19-ந் தேதி காலை தூத்துக்குடி வந்தபோது மழை வெள்ளத்தால் ஊரே தத்தளித்து கொண்டிருந்தது.

    வெள்ளத்தில் மிதந்தபடி நாங்கள் வந்த பஸ் சிரமத்திற்கு இடையே மாற்று வழியில் ஏரல் அருகே உள்ள தென் திருப்பேரை வந்தது.

    அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பஸ் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.

    எங்களை பின் தொடர்ந்து வந்த சுமார் 25 ஆம்னி பஸ்கள் வரிசையாக அங்கேயே நிறுத்தப்பட்டன. சுமார் 500 பேர் என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தைகளுடன் பரிதவித்தோம். 19-ந் தேதி மதியம் தென் திருப்பேரை பேரூராட்சியில் உணவு கொடுத்தனர். பின்னர் யாரும் கண்டு கொள்ளவில்லை. சாப்பாடு மற்றும் செல்போன் இணைப்பு கிடைக்காமல் மின்சாரமும் இல்லாத இடத்தில் இரவு முழுவதும் தவித்து வந்தோம்.

    யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. நேற்று (20-ந் தேதி) தகவலறிந்து ஹெலிகாப்டர் மூலம் எங்களுக்கு உணவு பொட்டலங்களை வீசினர். அதில் பொட்டலங்கள் மழை வெள்ளத்தில் விழுந்தன.

    என்ன செய்வதென்று தெரியாமல் எப்போது சொந்த ஊருக்கு செல்வோம் என வெள்ளத்தில் காத்திருத்தோம். வெள்ளம் வடிந்து வரும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு சில பஸ்களில் அனைவரையும் ஒன்றாக ஏற்றி நாசரேத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு வந்து சேர்ந்தோம். 3 நாட்களுக்கு பிறகு உயிர் தப்பி விட்டோம் என்ற நிம்மதியும் மகிழ்ச்சியும் உள்ளது என்று அவர் கூறினார்.

    • தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
    • நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏராளமான பொதுமக்கள் பள்ளிகள் மற்றும் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியான ஊட்டுவாழ்மடத்தில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து அரசாங்க உதவிகள் கிடைக்கின்றனவா என்று கேட்டறிந்தார்.

    பின்னர் நாகர்கோவில், வடிவீஸ்வரம் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி. ஏற்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

    இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு கே.எஸ். அழகிரி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இதேபோன்று நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக வெள்ள பாதிப்புகள் ஒவ்வொரு முறையும் ஏற்பட்டு வருகிறது. இது இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது. எனவே தமிழக அரசு இதனை ஒரு முக்கிய பிரச்சினையாக கருதி நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதில் வசதி படைத்தவர்கள் இல்லாதவர்கள் என்ற பாகுபாடு பார்க்க கூடாது. அதற்கான ஒரு முழு திட்டத்தையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சென்னையை பொறுத்த வரை 17 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் பாதிப்பை சந்திக்க நேர்ந்தது. இந்தியாவில் எந்த மாநிலமும் இதுபோன்று 17 மணி நேரம் தொடர்ச்சியாக மழையை சந்தித்த மாநிலம் கிடையாது எனினும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் ஓராண்டுக்குள் ஆக்கிரமிப்புகளை நீர் நிலைகளில் இருந்து அகற்றி வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல கிராமங்கள் மீட்பு குழுவினரின் கவனத்திற்கு வரவில்லை.
    • நெல்லை கலெக்டருக்கு கவர்னர் தமிழிசை பாராட்டும், நன்றியும் தெரிவித்து தகவல் அனுப்பியுள்ளார்.

    பெரு மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தனி தீவுகளாக மாறி உள்ளன. இன்னும் பல கிராமங்கள் மீட்பு குழுவினரின் கவனத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் உமரி காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் மூன்று நாட்களாக தங்கள் கிராமத்தினர் வெளியேற முடியாமலும் யாரும் உதவிக்கு வராமலும் தவித்துக் கொண்டிருப்பதாக தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    அதை பார்த்ததும் நேற்று நள்ளிரவில் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு தகவல் அனுப்பியுள்ளார். கலெக்டரும் அதை பார்த்துவிட்டு உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக பதில் தெரிவித்துள்ளார். நள்ளிரவிலும் தூங்காமல் பணியாற்றிய நெல்லை கலெக்டருக்கு கவர்னர் தமிழிசை பாராட்டும், நன்றியும் தெரிவித்து தகவல் அனுப்பியுள்ளார்.

    • கடந்த 2 நாட்களாக ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை.
    • சென்னைக்கு ஆம்பி பஸ் சேவை அடியோடு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    தென் மாவட்டங்களில் பெய்த அதிகன மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு கடந்த 2 நாட்களாக ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை.

    சென்னையில் இருந்து கடந்த 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டு சென்ற ஆம்னி பஸ்கள் இன்னும் சென்றடையவில்லை.

    தென்திருப்பேரியில் 24 பஸ்கள் சிக்கி கொண்டதாக வெளிவந்த தகவலை தொடர்ந்து அதில் உள்ள பயணிகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம், நாசரேத், திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆம்னி பஸ்கள் இயக்க முடியவில்லை.

    மேலும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட 50 ஆம்னி பஸ்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. கடந்த 17-ந்தேதி புறப்பட்ட பஸ்கள் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன.

    அந்த பஸ்களை இதுவரையில் வெளியே எடுக்க முடியவில்லை. பஸ்சின் பாதி அளவிற்கு வெள்ளம் புகுந்ததால் சேதம் அடைந்துள்ளன.

    இதுகுறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. தண்ணீர் வடியாததால் 2 நாட்களாக மீட்க முடியவில்லை. இன்று தான் அவற்றை வெளியே எடுக்க வேண்டும். தற்போது மழை நின்று வெள்ளம் வடிந்து வருவதால் சிக்கிய பஸ்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் இருந்து 3 நாட்களாக சென்னைக்கு ஆம்பி பஸ் சேவை அடியோடு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    சென்னையில் இருந்து புறப்படடு செல்லக்கூடிய ஆம்னி பஸ்கள் தூத்துக்குடி சுங்கசாவடி வரை தற்போது இயக்கப்படுகிறது. திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கு சேவை சீராகி விட்டது. வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டு உள்ளது. மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி, திருச்செந்தூரில் இருந்து இன்னும் ஆம்னி பஸ் சேவை முழுமையாக தொடங்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிவாரணப் பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள் விளையாட்டரங்கம் செயல்படும்.
    • மாநில ஒருங்கிணைப்பாளராக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா செயல்படுவார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,

    கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கும், திருநெல்வேலி மாவட்டத்திற்கும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக சிறப்பு அலுவலர்களை நியமிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு செந்தில்ராஜ் ஒருங்கிணைப்பு அலுவலராக தூத்துக்குடியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி எண். 7397770020. பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள் விளையாட்டரங்கம் செயல்படும்.

    தூத்துக்குடியில் உள்ள இந்தக் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலர்கள் பின்வருமாறு:-

    1. ஐஸ்வர்யா இஆப கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தூத்துக்குடி, தொலைபேசி எண். 8973743830.

    2. ராஜாராம், துணை ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி தொலைபேசி எண். 9943744803 3. அமுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக தூத்துக்குடி, தொலைபேசி எண். 9445008155 உதவியாளர் (பொது).

    இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் இப்பணிகளை திருநெல்வேலி மாவட்ட நகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைக்க அவரது பெயர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், இ.ஆ.ப தொலைபேசி எண். 9442218000.

    அங்கு கூடுதலாக பின்வரும் அலுவலர்கள் இப்பணியினை ஒருங்கிணைப்பார்கள்.

    1. கிஷன் குமார். இஆப உதவி ஆட்சியர் (பயிற்சி), திருநெல்வேலி தொலைபேசி எண் 9123575120 2. ரேவதி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், திருநெல்வேலி. தொலைபேசி எண் 9940440659. இப்பணிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா செயல்படுவார்.

    • தேவையான உதவிகளையும் அரசு செய்து தரவேண்டும்.
    • போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென்மாவட்ட வரலாற்றில் பதிவு செய்யப்படாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு தீவாக காட்சியளிப்பதோடு எங்கும் போய்வர முடியாத அளவிற்கு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆற்று போக்கு இல்லாத இடங்களில் உள்ள சத்துணவு மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், பள்ளிகளில் பொதுமக்களை தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, உடை, போர்வைகள் போன்றவைகளை வழங்குவதோடு அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அரசு செய்து தரவேண்டும்.

    மேலும் வீடுகளிலிருந்து வெளியே வரமுடியாமல் துண்டிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான பால், குடித்தண்ணீர், ரொட்டி, பெட்ஷீட், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களையும் அரசு போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். வெள்ளப்பகுதிகளில் அரசு இயந்திரங்களை முடுக்கிவிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு என்.ஆர்.தனபாலன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

    • வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டது.
    • சுவர் மற்றும் தரை கற்களும் சேதம் அடைந்து காணப்படுகிறது.

    தென்காசி:

    கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்திருக்கும் குற்றால அருவிகளில் நேற்று முன்தினம் முதல் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று முழுவதும் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் மழையின் தாக்கம் குறைந்ததால் தற்போது குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.

    மெயின் அருவி பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கினால் மெயின் அருவி மேல் பகுதியில் இருந்து மரத்துண்டுகள், பாறைகள் மற்றும் மண் அடித்து வரப்பட்டுள்ளது. மேலும் அருவி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சுவர் மற்றும் தரை கற்களும் சேதம் அடைந்து காணப்படுகிறது.

    வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளதால் முற்றிலும் குறைந்த பின்னர் அருவிப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.

    • தாமிரபரணி கரையோரம் வசித்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
    • நெல்லையில் இருந்து நாகர்கோவில், சாத்தான்குளம், ராதாபுரம், திசையன்விளை, கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட தொடங்கின.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் சுமார் 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை மாநகராட்சி பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த அதி கனமழையின் காரணமாக மாநகர பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. கிட்டத்தட்ட ஒரு தீவு போல் மாநகர பகுதி முழுவதும் காட்சியளித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கி நேற்று மதியம் வரையிலும் பெய்த மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது. ஒருகட்டத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கும் வெள்ள நீர் புகுந்தது. மாநகர பகுதியில் உள்ள சுலோச்சன முதலியார் பாலம் உள்ளிட்டவற்றை தொட்டபடி வெள்ளம் சென்றன. 

    தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் சற்று வெள்ளம் குறைந்து செல்வதை காணலாம்.

    தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் சற்று வெள்ளம் குறைந்து செல்வதை காணலாம்.

    இதன்காரணமாக தாமிரபரணி கரையோரம் வசித்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த வெள்ளம் காரணமாக மாநகர பகுதிக்குள் முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தென்காசி, நாகர்கோவில், மதுரை, பாபநாசம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் மாநகர பகுதிக்குள் வரும் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று மதியத்திற்கு பிறகு மழை குறைந்ததால் வெள்ளம் மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. இன்று காலையில் மாநகரில் பிரதான நெடுஞ்சாலைகளில் வெள்ளம் வடிந்தது.

    நாகர்கோவிலில் இருந்து வரும்போது டக்கரம்மாள்புரம், கே.டி.சி.நகர் பகுதி, மதுரையில் இருந்து வரும்போது தாழையூத்து பகுதி, தச்சநல்லூர் வழியாக சங்கரன்கோவில் சாலை, தென்காசியில் இருந்து வரும்போது பழையபேட்டை, கண்டியப்பேரி, வழுக்கோடை, தொண்டர் சன்னதி, ஆர்ச், ஸ்ரீபுரம் சாலை, சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், வண்ணார்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலைகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் அனைத்தும் முற்றிலுமாக வடிந்தது.

    அதேநேரத்தில் சந்திப்பு பஸ் நிலையத்தில் நேற்று சுமார் 7 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி கிடந்தது. மழை வெள்ளம் செல்வதற்கு வழியில்லாமல் இருந்த காரணத்தினால் ரெயில் நிலையம் செல்லும் சாலை, மதுரை சாலை, ராஜாபில்டிங் சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் மூழ்கின. சந்திப்பு பஸ் நிலையத்தில் முதல் தளத்தை தொடும் வகையில் மழை வெள்ளம் தேங்கி கிடந்தது. இந்த வெள்ளமானது இன்று அதிகாலை 5 மணிக்கு 4 உயரத்திற்கு குறைந்தது. தொடர்ந்து காலை 9.30 மணி அளவில் முற்றிலுமாக தணிந்தது.

    சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடைமேடைகள் முற்றிலுமாக மூழ்கிவிட்டதால் இன்று 2-வது நாளாக ரெயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. சந்திப்பு பகுதியை ஒட்டி அமைந்துள்ள சிந்துபூந்துறை, மீனாட்சிபுரம், சி.என்.கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று படகு மூலமாக பொதுமக்கள் மீட்கப்பட்டனர். சில இடங்களில் மாடிகளில் இருந்த மக்களுக்கு படகு மூலம் உணவு வழங்கப்பட்ட நிலையில் இன்று அந்த பகுதிகளிலும் முற்றிலுமாக வெள்ளம் வடிந்துவிட்டது. ஆனால் டவுனை பொறுத்தவரை வெள்ளம் வடியவில்லை. டவுனில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட குறுகலான தெருக்களில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்த நிலையில் அவை வெளியேறாமல் தொடர்ந்து தேங்கி கிடக்கிறது. டவுன் காட்சி மண்டபம் பகுதி, அங்கிருந்து சந்தி பிள்ளையார் கோவில் செல்லும் சாலைகளில் இடுப்பு அளவுக்கு மழைநீர் தேங்கி கிடக்கிறது.

    பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் அதாவது பாளை பஸ் நிலையம், வ.உ.சி. மைதானம், ஆயுதப்படை சாலை, ஐகிரவுண்டு சாலை, அன்பு நகர், பெருமாள்புரம், பொதிகை நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம் சாலை, ரக்மத் நகர் 60 அடி சாலை, தியாகராஜநகர், மாருதி நகர், டி.வி.எஸ் நகர், சீனிவாச நகர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நேற்று தேங்கிய வெள்ளம் முற்றிலுமாக வடிந்ததை பார்க்க முடிந்தது.

    இன்று வெள்ளம் வடிந்த நிலையில் 2 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து மெல்ல மெல்ல ஓட தொடங்கி உள்ளது. மாநகர பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் மற்றும் அரசு பஸ்கள் ஒரு சில ஓட தொடங்கியது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடையம் செல்லும் பஸ்கள் சேரன்மகாதேவி, சங்கன்திரடு, முக்கூடல், பொட்டல்புதூர் வழியாக கடையம் செல்லும் வகையில் இயக்கப்பட்டது. பாபநாசம் செல்லும் பஸ்கள் வழக்கமாக செல்லும் வழித்தடமான சேரன்மகாதேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் வழியாக செல்கின்றன.

    நெல்லையில் இருந்து நாகர்கோவில், சாத்தான்குளம், ராதாபுரம், திசையன்விளை, கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட தொடங்கின. மேலும் மதுரை, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் வெள்ளம் அதிக அளவு செல்வதாலும், அந்த பாலம் சற்று பலமிழந்து காணப்படுவதாலும் இரு புறங்களிலும் பேரிகார்டுகள் வைத்து சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் பஸ்கள் 4 வழிச்சாலை வழியாகவோ அல்லது சந்திப்பு, டவுன் ஆர்ச், நயினார்குளம் மார்க்கெட் வழியாக தச்சநல்லூர் சென்று அங்கிருந்து தாழையூத்து வழியாக நான்கு வழிச்சாலையில் செல்கிறது. தென்காசிக்கு இன்னும் பஸ் சேவை தொடங்கப்படவில்லை.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தின் எதிரே உள்ள எஸ்.டி.சி கல்லூரி சாலை, பஸ் நிலையம் பின்புறம் உள்ள சேவியர் காலனியில் நீர் முற்றிலுமாக வடிந்துள்ளது. வடக்குப் புறவழிச்சாலை வாகனங்கள் செல்லும் வகையில் ஏதுவாக உள்ளன. ஆனால் இந்த சாலை வழியாக சங்கரன்கோவில் பஸ்கள் இவ்வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. சந்திப்பு செல்லும் பஸ்கள் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. உழவர் சந்தைகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. ஒரு சில பகுதிகளில் மட்டும் மின்சாரம் இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகர் மற்றும் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. குறிப்பாக ஒரு ஆண்டு முழுவதும் காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழை மட்டுமே பெய்யும் நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 93 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

    தூத்துக்குடி மாநகரில் வழக்கமான மழையின்போது பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலையில், கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் மாநகர பகுதி முழுவதும் தீவாக மாறி உள்ளது. வீடுகளில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு படகு மூலமாகவும், ஹெலிகாப்டர் மூலமாகவும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு மழைநீர் வடிந்து இயல்பு நிலை திரும்ப ஒரு வாரம் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.

    மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் தாமிரபரணி ஆற்றில் வந்த வெள்ளத்தின் காரணமாக தீவுபோல் மாறியது. ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், கருங்குளம், ஆழ்வார்தோப்பு, முத்தாலங்குறிச்சி, வல்லநாடு அருகே வசவப்பபுரம், அகரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தது. அந்த பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மின்சார இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. மேலும் நெட்வொர்க் மற்றும் இணைய சேவை பாதிப்பின் காரணமாக செல்போனில் தொடர்பு கொள்ள முடியாத நிலை நிலவி வருகிறது.

    • தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சென்னை-குருவாயூர், திருச்சி-திருவனந்தபுரம், நாகர்கோவில்-கோவை ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருதால் ஒருசில இடங்களில் ரெயில்களை இயக்க முடியாத அளவிற்கு தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தென் மாவட்ட பகுதிகளில் இருந்து ரெயில்கள் சென்னைக்கு இயக்க முடியவில்லை.

    இதே போல சென்னையில் இருந்து மதுரைக்கு மேல் ரெயில்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    எழும்பூரில் இருந்து இன்று காலை 9.40 மணிக்கு கொல்லம் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பகல் 3 மணிக்கு நெல்லைக்கு புறப்படக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து எழும்பூருக்கு புறப்பட முடியாத நிலை இருந்ததால் ரத்து செய்யப்பட்டன.

    அதே போல மாலை 4.05 மணிக்கு புறப்படக்கூடிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்தாகிறது. இந்த ரெயில் திருச்செந்தூரில் இருந்து எழும்பூருக்கு வரவில்லை. அதனால் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    • ஆல்பர்ட் ஆத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
    • ஆற்றில் விழுந்த ஆல்பர்ட்டுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லை பேட்டையை அடுத்த கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட்(வயது 35). இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் கொக்கிரகுளம் சுலோச்சன முதலியார் ஆற்று பாலத்தின் மீது நடந்து சென்று கொண்டிருந்தார். பாலத்தின் மீது அவர் சென்று கொண்டிருந்தபோது ஆற்றில் செல்லும் தண்ணீரை வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் விழுந்தார். தாமிரபரணி ஆற்றில் தற்போது மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் செல்வதால், விழுந்த ஆல்பர்ட்டுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சந்திப்பு போலீசார் அங்கு விரைந்து வந்து ஆற்றில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தவறி கீழே விழுந்தாரா? அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? என விசாரித்து வருகின்றனர்.

    • மூதாட்டி ஒருவர் ஆற்றின் கரையில் இருந்த சுவற்றில் ஏறி எந்தவித பயமும் இன்றி ஆற்றுக்குள் டைவ் அடிப்பது போன்று காட்சிகள் பதிவாகி உள்ளது.
    • நெல்லை பெண்களின் இந்த துணிச்சல் தேசிய அளவில் வைரலாகி வருகிறது.

    கல்லிடைக்குறிச்சி:

    மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவநீதியான தாமிரபரணி ஆறு பாரம்பரிய ஆற்றங்கரை நாகரீகத்தை கொண்டது.

    இந்த ஆற்றில் நெல்லை மக்கள் நாள்தோறும் குளித்து மகிழ்வது வழக்கம், இந்த நிலையில் கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் வயதான பெண்கள் சேலை அணிந்தபடி 'டைவ்' அடித்து ஆனந்தமுடன் குளித்து மகிழும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், மூதாட்டி ஒருவர் ஆற்றின் கரையில் இருந்த சுவற்றில் ஏறி எந்தவித பயமும் இன்றி ஆற்றுக்குள் டைவ் அடிப்பது போன்று காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை தற்போது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியா சாகு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    மேலும் கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் புடவை அணிந்த இந்த வயதான பெண்கள் சிரமமின்றி குதிப்பதை பார்த்து வியந்தேன் என பெருமையோடு அவர் பதிவிட்டுள்ளார். நெல்லை பெண்களின் இந்த துணிச்சல் தேசிய அளவில் வைரலாகி வருகிறது.

    நெல்லை, பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றுக்கு தீப ஆரத்தி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோசாலை ஜடாயூத்துறையில் வைகாசி விசாகமான நேற்று தாமிரபரணி ஆறு பிறந்த நாளையொட்டி மாலை 6 மணிக்கு தாமிரபரணிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும், சுமங்கலி பூஜையும் நடந்தது. இதைத்தொடர்ந்து ஆற்றுக்கு ஒரு கரையில் இருந்து மறுகரை வரைக்கும் 15 பட்டு புடவைகளை ஒன்றாக இணைந்து ஆற்றில் சாத்தி சிறப்பு பூஜையும், மகா ஆரத்தியும் நடத்தினார்கள். ஜடாயூத்துறையில் நேற்று அமலைசெடிகள் தேங்கி கிடந்தது. இதை அந்த ஆரத்தி பூஜைக்கு வந்தவர்கள் அகற்றினார்கள்.

    இந்த சிறப்பு பூஜையில் ராமானந்தாசுவாமிகள், ஆத்மானந்தா சுவாமிகள், வரதராஜூ சுவாமிகள், அன்னை ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாபநாசத்தில் சித்தர்கள் கோட்ட ஆரத்திக்குழு, 27 சமுதாய பொதுமக்கள் சார்பில், தாமிரபரணி பவுர்ணமி தீப ஆரத்தி விழா, வைகாசி விசாக நதி உற்பவ நாள் விழா நடந்தது. விழாவில் தத்துவ நிஷ்டானந்த சரஸ்வதி சுவாமி தாமிரபரணி நதிக்கு தீப ஆரத்தியை தொடங்கி வைத்தார். பொன் பெருமாள் தாமிரபரணி மகா புஷ்கர நினைவு கல்வெட்டை திறந்து வைத்தார்.

    தாமிரபரணி கலச பூஜை, தீப ஆரத்தி விழா நினைவு மலர் வெளியீடு, சகஸ்ரநாமம் பாராயணம் செய்யும் மகளிருக்கு மஞ்சள் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் பால்ராஜ், செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், நாகராஜன் உள்ளிட்ட பக்தர்கள் பாபநாசசுவாமி கோவிலில் இருந்து தாமிரபரணி நதிக்கு சீர்வரிசையுடன் ஊர்வலமாக வந்தனர்.
    ×