search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramanathapuram"

    • பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    கீழக்கரை பி.எஸ்.எஸ். ஜெ.நாடார் மெட்ரிக் பள்ளி 26-ம் ஆண்டு விழா, விளையாட்டு, பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் 18 மாணவ- மாணவிகளுக்கு நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் பட்டம் வழங்கினார்.

    நாடார் மகாஜன சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் களரி குகன், கீழக்கரை வட்டகை நாடார் ஜனோபகார சங்க தலைவர் ஜெயமுருகன், துணைத்தலைவர் கோவிந்தராஜ், பொதுச்செயலாளர் நாகராஜன், துணை செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் விஸ்வநாதன், நாடார் மகாஜன சங்க நகர் தலைவர் மணிகண்டன், நாடார் மகாஜன சங்க மாவட்ட மகளிரணி தலைவர் பாப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளையாட்டு விழாவில் கீழக்கரை நகராட்சி துணைத்தலைவர் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான், தேவகோட்டை தி பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பவுலியன்ஸ், சரவணன், திருப்புல்லாணி முத்தரையர் சங்க தலைவர் முனியசாமி, வீரமுத்தரையர் சங்கத்தலைவர் செல்வம், தாளாளர் இளையராஜா, கல்வி குழு தலைவர் சுந்தரம், முதல்வர் உமா லிங்கேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்ததன. இதில் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • ராமநாதபுரம், கீழக்கரையில் திடீரென மழை பெய்தது.
    • வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் காணப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பகுதியில் அனைவரும் எதிர்பார்த்த வடகிழக்கு பருவமழை சில நாட்கள் மட்டும் லேசாக பெய்த நிலையில் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகள் வறண்டு விவசாயம் பாதிக்கப்பட்டது.

    வைகை தண்ணீர் பாய்ந்த பகுதிகளில் மட்டும் நீர் நிலைகள் நிறைந்து விவசாயம் நன்றாக உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கடலோர பகுதியில் கருமேகம் சூழ்ந்து இடைவிடாமல் 2மணி நேரம் மழை பெய்ய தொடங்கியது. சில பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழையாகவும், பல பகுதிகளில் இடை விடாமலும் பெய்தது.

    மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. மழையின்றி பனியின் தாக்கத்தில் இருந்து வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிலத்தடி நீராதாரத்திற்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    காலம் தாழ்ந்து பெய்த மழையால் நெல் விவசாயத்திற்கு எந்த பயனும் இல்லை என்றாலும் வைகை தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்துள்ள பகுதிகளுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்றும் மிளகாய், மல்லி போன்றவற்றிற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    மழையுடன் குளிர் காற்றும் வீசியதால் குளிர்ந்த நிலை நிலவியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கீழக்கரையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. போக்குவரத்து மிகுந்த முக்கிய ரோடு, தெருக்கள் சேதமடைந்து குண்டும் குழியுமாகி தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று காலை பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் காணப்பட்டது.

    • ராமநாதபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் சார்பில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மதுக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தெரிவு செய்து கொள்ளலாம். அதே போல இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பினை பெறலாம்.

    இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை 17-ந் தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து

    செய்யப்பட மாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படுமெனவும், மேலும் தனியார் துறை நிறுவனங்கள்மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது. இவ்விணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும் வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரத்தில் மலர் கண்காட்சி நடந்தது.
    • மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பது அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே அச்சடிப்பிரம்பில் தோட்டக்கலை துறையின் மூலம் 2-வது மலர் கண்காட்சி நடந்தது. இதன் தொடக்க விழாவுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி மலர் கண்காட்சியை திறந்து வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் நினைவு சின்னங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தோட்டக்கலைத்துறையின் மூலம் ராமநாதபுரம் நகர், அருகாமையில் அச்சடிபிரம்பு பகுதியில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் பாலை ஐந்திணை மரபணு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேல் பூக்கள் வரவழைக்கப்பட்டு ராமநாதபுரம், ராமேசுவரத்தின் பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் கங்காரு, டைனோசர், திமிங்கலம், முதலை ஆகியவற்றின் உருவங்களை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பது அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது. அதே போல் அப்துல்கலாமின் கண்டுபிடிப்பான பி.எஸ்.எல்.வி ராக்கெட் காய்கறிகள் மூலம் வடிவமைக்கப்பட்டதும், ராமேசுவரத்தில் உள்ள ரெயில்வே மேம்பாலம் போன்று காய்கறிகள் மூலம் வடிவமைக்கப்பட்டது. அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இது மட்டுமின்றி நறுமணம் கொண்ட திரவியங்களால் தயாரிக்கப்பட்ட யானை மற்றும் அகத்தியர் முழு உருவ சிலை நன்றாக உள்ளன. இத்தகைய மலர் கண்காட்சி மாவட்டத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட வன அலுவலர் பகவான் ஜெகதீஷ் சுதாகர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நாகராஜன் மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் கோவில்கள், தேவாலயங்களில் புத்தாண்டு வழிபாடு நடந்தது.
    • இறைமக்கள் மற்றும் பங்குப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.



    ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் தலைமை குருக்கள் மோகன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

     ராமநாதபுரம்

    ஆங்கில புத்தாண்டை யொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்கள், தேவாலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் தலைமை குருக்கள் ஆர். எஸ். மோகன் தலைமையில் நே ற்று இருமுடி கட்டுதலும். அன்னதானமும் நடந்தது. இரவு சிறப்பு பஜனை, சிறப்பு அபிஷேகம் நடந்த பின் இரவு 12 மணிக்கு வல்லபை அய்யப்பனுக்கு புத்தாண்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி, சபரிமலை யாத்திரை புறப்பாடு நடந்தது.

    கொரோனா பரவல் நீங்கி, மக்கள் நலமுடன் வாழவும், மழை வேண்டியும் தலைமை குருக்கள் ஆர். எஸ். மோகன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. குடும்பம் சகிதமாய் பங்கேற்ற பக்தர்கள், வழிபாடு நடத்தி புத்தாண்டு சிறப்பாக அமைய வேண்டினர். பின்னர் காப்பு கட்டிய பக்தர்கள் தலைமை குருக்கள் மோகன் தலைமையில் பஸ்களில் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.இதற்கான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்பன் சேவை நிலையம் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம் வழி விடு முருகன் கோவிலில் நடந்த புத்தாண்டு சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானை வழிபாடு செய்தனர். உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவில், திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில் உள்பட பல்வேறு இடங்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    ராமநாதபுரம் தூய ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நடந்த சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு, பரதர்தெரு புனித அந்தோணியார் சர்ச்சில் நள்ளிரவு 12 மணியளவில் பிறந்த புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், ஆராதனைகளும்நடந்தன. பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். கிறிஸ்துவின் மறையுரை அருளப்பட்டது.

    ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைபரிமாறிக் கொண்டனர். பண்ணாட்டார் தெருவில் உள்ள அந்தோணியார் சர்ச்சில் புத்தாண்டையொட்டி சிறப்பு ஆராதனை நடந்தது. சி.எஸ்.ஐ. தூய பேதுரு சர்ச்சிலும் நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது.

    முத்துப்பேட்டை புனித காணிக்கை அன்னை சர்ச் சில் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு கூட்டுத்தி ருப்பலி நடந்தது. உலக மக்களின் ச மா தானத்தைவலியுறுத்தியும், நன்மை வேண்டியும், ஜெபம் நடத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.இறைமக்கள் மற்றும் பங்குப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்தது. ராமேசுவரத்தில் 75.20 மி.மீ. கொட்டியது.
    • தெருக்கள் சேதமடைந்து குண்டும் குழியுமாகி தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    ராமநாதபுரம்

    தென் கடலோர பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சூழச்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்தது.

    ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் மாலையில் கருமேகம் சூழ்ந்து கனமழை பெய்யத் தொடங்கியது. ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பெய்த கன மழையால் குளுமையான சூழல் காணப்பட்டது.

    மழை காரணமாக தாழ்வான பகுதியில் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 8மணி வரை அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 75.20 மி.மீ மழையும், குறைந்தபட்சமாக கமுதியில் 7.60 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அடிக்கடி ஏற்பட்ட மின்தடையால் மக்கள் அவதிப்பட்டனர்.

    வீடுகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. போக்குவரத்து மிகுந்த சாலைகள், தெருக்கள் சேதமடைந்து குண்டும் குழியுமாகி தண்ணீர் தேங்கி நிற்கிறது. இன்று காலையும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த நிலையில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-ராமநாதபுரம்-8, மண்டபம்-23.60, ராமேசுவரம்-75.20, பாம்பன்-37.30, தங்கச்சிமடம்-40.20, பள்ளமோர்குளம்-20, திருவாடானை-24.80, தீர்த்தாண்டதானம்- 40.20, தொண்டி-19.70, வட்டாணம்-23.50, ஆர்.எஸ்.மங்கலம்-67.20, பரமக்குடி-58.80, முதுகுளத்தூர்-28, கமுதி-7.60, கடலாடி-35.20, வாலிநோக்கம்-21.60.

    • ராமநாதபுரம் மாவட்ட தடகள போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் சீதக்காதி ஸ்டேடியத்தில் சங்க செயலாளரும், மாநில சங்கத்தின் இணைச் செயலாளருமான இன்பாரகு ஏற்பாட்டில் நடந்தது. டாக்டர் ஆசிக் அமீன் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியின் நிர்வாக அலுவலர் ஹாசித், ஆடிட்டர் ராமகிருஷ்ணன் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் வருகிற 15-ந்தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்று ராமநாதபுரம் மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளர் இன்பா ரகு தெரிவித்தார்.

    • ராமநாதபுரத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • தனியார்துறை வேலை இணையம் “Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் வேலை வாய்ப்பு அலுவலர் மதுக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

    இம்முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தெரிவு செய்து கொள்ளலாம். அதேபோல இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பினை பெறலாம்.

    மேலும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம் "Tamil Nadu Private Job Portal" (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.

    இவ்விணையதளத்தில் பதிவு செய்து பயன் பெற லாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு செய்யப்படமாட்டாது எனவும் அலுவலக அரசுத் பதிவு எக்காரணத்தை கொண்டும் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா, உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ராமநாதபுரம் அரண்மனை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அக்கிம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்தானதாஸ், பொதுக்குழு உறுப்பினர் சகுபர் சாதிக், செயற்குழு உறுப்பினர் சண்முகம் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முத்துராமன் வரவேற்றார்,

    புகையிலை, குட்கா, கஞ்சா, மது போதைப்பொருட்களால் இளைஞர்களின் வாழ்வாதாரம் சீரழிந்து வருவதை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாவட்ட பொருளாளர் ஆயிஷா பேசினார். மாவட்ட அமைப்புச் செயலாளர் ஆடிட்டர் சதாம் ராஜா, அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட துணைத் தலைவர் (திருவாடானை தொகுதி) முகமது அலி, மாவட்ட துணைத் செயலாளர் திருஞானம், பசுமைத் தாயகம் மாவட்ட செயலாளர் கர்ண மகாராஜா, மாவட்ட தலைவர் ஸ்டாலின், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் கவின் ராகேஷ், மாவட்ட தலைவர் சத்யா, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் இஸ்மாயில், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, ராமநாதபுரம் நகரத் தலைவர் ராஜா ரபீக், ராமநாதபுரம் ஒன்றிய தலைவர் கனகு, மண்டபம் ஒன்றிய அமைப்பாளர் ஜாகிர் உசேன்.

    கீழக்கரை நகர செயலாளர் லோகநாதன், நகர தலைவர் அப்துல் லத்தீப், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், இளைஞர் சங்க தலைவர் கார்த்திக், ஆர், எஸ், மங்கலம் ஒன்றிய செயலாளர் ஜிந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    • ராமநாதபுரத்தில் நாளை மின்தடை ஏற்படும்.
    • ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர்பாலமுருகன் மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர்பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் பட்டிணம்காத்தன் துணை மின் நிலையத்தில் உள்ள உயர் மின் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி நடை பெறுவதால் காவனூர், தொருவளூர், வயலூர், பனையூர், குளத்தூர், தேர்த்தாங்கல், கிளியூர், முதலூர், கடம்பூர், இல்லுமுள்ளி, வைரவனேந்தல், வீரவனூர், பாப்பாகுடி, வன்னிவயல், கவரங்குளம், திருப்பாலைக்குடி சுற்றியுள்ள பகுதிகள், பொட்டகவயல், கருப்பூர், சம்பை, வெண்ணத்தூர், வைகை, பத்தனேந்தல், மாதவனூர், பாப்பனேந்தல், பூத்தோண்டி, அரசனூர், நாரணமங்கலம், எருமைப்பட்டி, வளமாவூர், சோழந்தூர், காட்டூரணி சுற்றியுள்ள பகுதிகள், ஆர்.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர், ரமலான்நகர், மேலக்கோட்டை, மாடக்கொட்டான், இளமனூர், தில்லைநாயகபுரம், தேவிபட்டிணம் சுற்றியுள்ள பகுதிகள், கழனிக்குடி, சித்தார்கோட்டை, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தை கூட்டம், எம்.ஜி.ஆர். நகர், எம்.எஸ்.கே.நகர், திருப்புல்லாணி, அம்மன்கோவில், தெற்குதரவை, எல்.கருங்குளம், மஞ்சன மாரியம்மன் கோவில், லாந்தை, புத்தனேந்தல், தெற்குத்தரவை, பசும்பொன் நகர், கூரியூர், பொக்கானேந்தல், பால்கரை, பேராவூர், நாகநாதபுரம், இந்திராநகர் பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மேற்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் நியமனம் செய்யப்பட்டார்.
    • கடந்த 2 ஆண்டுகளில் 4 கலெக்டர்கள் மாற்றப்பட்டு, 5-வதாக ஜானி டாம் வா்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த சங்கா் லால்குமாவத் மாற்றப்பட்டார். புதிய கலெக்டராக ஜானி டாம் வா்கீஸை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்களாக வீரராகவ ராவ், சந்திரகலா, தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், சங்கா் லால் குமாவத் ஆகியோா் பணியாற்றினா். தற்போது ஜானி டாம் வா்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 4 கலெக்டர்கள் மாற்றப்பட்டு, 5-வதாக ஜானி டாம் வா்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 68 மி.மீ. மழை பதிவானது.
    • தொண்டி கடலோரப்பகுதியில் நேற்று நள்ளிரவில் இடியுடன் பலத்த மழை பெய்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடலோரப்பகுதியில் நேற்று நள்ளிரவில் இடியுடன் பலத்த மழை பெய்தது. ஓட்டு வீடு, கூரை வீடுகளில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    தொண்டி சத்திரம் தெரு, வெள்ளை மணல் தெரு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு தலைமையில் சுகாதார மேஸ்திரி கோவிந்தராஜன் பேரூராட்சி பணியாளர்களுடன் சாய்ந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    தொண்டி வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் 68 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் இப்பகுதியில் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியது.

    ×