search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rama navami"

    • சிவபெருமான் சூரியன், சந்திரன் இருவருக்கும் தனி காலக்கணக்கை உருவாக்கினார்.
    • சந்திரனின் பணிக்காலத்தில் சில மாற்றங்களைச் செய்தார் சிவபெருமான்.

    சிவபெருமான் பூலோகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான அடிப்படை சக்திகளை, பாகுபாடு இல்லாமல் வழங்க சூரியன், சந்திரன் இருவருக்கும் தனி காலக்கணக்கை உருவாக்கினார். அதன்படி சூரியனும், சந்திரனும் தங்கள் பணியை செய்து வந்தனர். சிறிது காலத்திற்குப் பின்பு சந்திரன் தனது பணியை சரியாகச் செய்யாமல் அவ்வப்போது ஏமாற்றத் தொடங்கினார். இதனால் பூலோகத்தில் இருக்கும் உயிரினங்கள், சந்திரனிடமிருந்து தங்களுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் துன்பமடைந்தன.

     இதை அறிந்த சிவபெருமான், சந்திரனை அழைத்து பணியை ஒழுங்காகச் செய்யும்படி அறிவுறுத்தினார். சந்திரனோ, `இறைவா! என்னுடைய தொடர் பணிக்கு இடையில், அவ்வப்போது சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. ஓய்வு இருந்தால் மட்டுமே தனது பணியை சிறப்பாகச் செய்ய முடியும்' என்றார். இறைவனும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

    அதன்பிறகு சந்திரனின் பணிக்காலத்தில் சில மாற்றங்களைச் செய்தார் சிவபெருமான். சந்திரன் பணியின் இடையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியதுடன், பணி நேரத்தில் ஏமாற்றாமல் இருக்க, சந்திரனின் பணியை பார்வையிடுவதற்காகவும் சிலரை நியமிக்கவும் முடிவு செய்தார். அதற்காக 16 பேரை தோற்றுவித்து, அவர்களுக்கான பணி நேரத்தைத் சமமாகப் பிரித்து புதிய காலக்கணக்கை உருவாக்கினார்.

     அந்த கணக்கின்படி சந்திரனுக்கு ஒருநாள் முழுவதும் எந்தப் பணியும் இல்லாமல் முழு ஓய்வு கொடுக்கப்பட்டது. சந்திரனின் ஓய்வுக்கு யாரும் இடையூறு செய்யாமல் பார்த்துக் கொள்ள ஒருவரை நியமித்து அவருக்கு `மறைமதி' (அமாவாசை) என்று பெயரிட்டார்.

    ஓய்வு நாளுக்குப் பின்னர் 14 நாட்கள், சந்திரனின் பணிகளை ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அதிகரித்தார் ஈசன். அந்த 14 நாட்களும், சந்திரனின் பணி நேரத்தை கவனிக்கவும், அவரது ஓய்வு நேரத்தை இடையூறு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும் 14 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி என்று பெயரிட்டார் சிவபெருமான்.

    கடைசியாக சந்திரனுக்கு ஒரு நாள் முழுவதும் முழுநேரப் பணி அளித்து, அன்றைய தினம் அவருடைய முழுநாள் பணியையும் பார்த்துக் கொள்வதற்குத் தான் தோற்றுவித்தவர்களில் மீதம் இருந்த ஒருவரை நியமித்து, அவருக்குப் பூரணை (பவுர்ணமி) என்று பெயரிட்டார்.

    சந்திரனின் முழுநாள் பணிக்குப் பின்பு, ஒவ்வொரு நாளும் அவருக்குச் சிறிது சிறிதாகப் பணி நேரத்தைப் பதினான்கு நாட்களுக்குக் குறைத்துக் கொண்டே வந்தார் சிவபெருமான். இந்த நாட்களுக்கு, முன் பகுதியில் சந்திரன் பணிநேரத்தைப் பெற்ற பதினான்கு பேருக்கும், அதே வரிசையில் சந்திரனின் பணிநேரத்தையே கொடுத்து பணி நேரத்தை சமன் செய்தார்.

     பவுர்ணமி, இறைவன் தனக்கு மட்டும் ஒரு நாள் முழுவதும் பணி நேரத்தைக் கொடுத்து விட்டதாக நினைத்து வருத்தப்பட்டது. அமாவாசை, தனக்குச் சந்திரனைப் பார்வையிடும் பணியைக் கொடுக்காமல், அவரின் ஓய்வுக்கு இடையூறு வராமல் பார்த்துக் கொள்ளும் பணியைக் கொடுத்ததை நினைத்து வருந்தியது. மற்றவர்கள், தங்களுக்குப் பணிநேரம் சமமாக இருந்தாலும், அமாவாசை, பவுர்ணமிக்கு மட்டும் ஒருநாள் முழுப்பணியாகவும், தங்களுக்குப் பகுதிப்பணிகளாக இரு நாட்கள் பணியும் கொடுத்து விட்டதை நினைத்துக் கவலை அடைந்தன.

    அவர்களின் கவலையை அறிந்த சிவபெருமான், `சந்திரனைப் பார்வையிடும் பணியைப் பெற்ற நீங்கள் அனைவரும், பூலோகத்தில் `திதி' என்னும் பெயரில் அழைக்கப்படுவீர்கள்' என்றார்.

    சிவபெருமான் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, அஷ்டமி, நவமி ஆகியோர் இறைவனின் பேச்சைகவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட இறைவன், அவர்களிடம் தான் சொல்வதைக் கவனிக்கும்படி சொன்னார்.

    பின்னர் தொடர்ந்து, `அமாவாசையைத் தொடர்ந்து வரும் பதினான்கு நாட்களும் உங்கள் வரிசைப் பெயரிலான திதியாகவும், அவை அனைத்தும் வளர்பிறைத் திதிகள் (சுக்லபட்சம்) என்றும் அழைக்கப்படும்.


    இதுபோல் பவுர்ணமியைத் தொடர்ந்து வரும் பதினான்கு நாட்களும் உங்கள் பெயரில் தேய்பிறைத் திதிகள் (கிருஷ்ணபட்சம்) என்றும் அழைக்கப்படும். பூலோகத்தில் இந்த நாட்களில் செய்யப்படும் அனைத்து நற்செயல்களுக்கும் உங்கள் பெயர்களும் பயன்படுத்தப்படும். அதன் மூலம் தங்களுக்குப் பூலோகத்தில் மதிப்பு கிடைக்கும்' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

    அப்போதும் ஈசனின் பேச்சைக் கவனிக்காமல் அஷ்டமி, நவமி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கண்டு கோபமடைந்த சிவபெருமான், அவர்களைப் பார்த்து, 'நான் உங்கள் பணியைப் பற்றியும், பூலோகத்தில் உங்களுக்குக் கிடைக்கவிருக்கும் சிறப்பைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தேன். நீங்கள் அதைக் கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் உங்களை எச்சரித்தும், அதைகண்டு கொள்ளவில்லை. எனவே மக்கள் உங்கள் இருவரையும் விலக்கி வைப்பார்கள். அந்த நாட்களில் எந்த நல்ல காரியங்களையும் தொடங்கமாட்டார்கள்' என்று சாபமிட்டார். அஷ்டமியும், நவமியும் கவலை அடைந்து, ஈசனிடம் சாபத்தைத் வ்திரும்பப்பெற வேண்டினர். ஆனால் இறைவன் மறுத்து விட்டார்.

     சாபவிமோசனம்

    பூலோக மக்கள், அஷ்டமி, நவமி திதி நாட்களை எந்த நற்செயலுக்கும் பயன்படுத்தாமல் விலக்கியே வைத்தனர். பூலோகத்தில் தங்கள் இருவருக்கும் மதிப்பில்லாமல் போனதை நினைத்து இருவரும் கவலை அடைந்தனர்.

    தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து விடுபட எண்ணிய அவர்கள் இருவரும், தங்களது ஓய்வு நேரத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். அவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், 'அஷ்டமி, நவமி திதிகளே...! நான் உங்களுக்கு கொடுத்த சாபத்தில் இருந்து விடுவிக்க முடியாது. நீங்கள் இருவரும் விஷ்ணுவை சந்தித்து உங்கள் குறைகளைக் கூறுங்கள், உங்களுக்கு வேறு ஒரு நல்ல பலன் கிடைக்கலாம்' என்று அருளினார்.

    அதன்படி அஷ்டமி, நவமி திதிகள் விஷ்ணுவை வழிபட்டு வரத் தொடங்கினர். அவர்கள் முன்பாக தோன்றிய விஷ்ணு, `சிவபெருமான் கொடுத்த சாபத்தில் இருந்து உங்களை விடுவிக்க என்னாலும் முடியாது. அதே வேளையில் பூலோகத்தில் உங்களுக்கும் நல்ல மதிப்பு கிடைக்க என்னால் உதவ முடியும். அதற்கு தாங்கள் இருவரும் பல ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். உங்களால் முடியுமா?' என்றார்.

    'இறைவா...!, பூலோகத்தில் எங்களுக்கு இருக்கும் அவப்பெயர் நீங்கி, நல்ல மதிப்பு கிடைத்தால் போதும். அதற்காக எத்தனை ஆயிரம் ஆண்டுகள் வேண்டுமானாலும் நாங்கள் காத்திருக்கத் தயார்' என்றனர்.

    அதைக்கேட்ட விஷ்ணு, 'வரும் காலத்தில் பூலோகத்தில் நிகழவிருக்கும் என்னுடைய இரு அவதாரங்களுக்குப் பின்பு, உங்கள் இருவருக்கும் ஆண்டுக்கொருமுறை நல்ல மதிப்பு கிடைக்கும். அதுவரை பொறுமையுடன் காத்திருங்கள்' என்று சொல்லி மறைந்தார்.

    சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு விஷ்ணு, சித்திரை மாதம், வளர்பிறை நவமி திதியில் ராமனாக அவதாரம் செய்தார். அந்த நவமியில் பிறந்ததால் அவர் பல துன்பங்களை அடைய நேர்ந்தது. என்றாலும் ராமன் பிறந்த திதி என்பதால் பின்னாளில் `ராம நவமி' என்ற பெயரில் நவமி திதிக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது.

    ராம அவதாரத்திற்கு பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து, ஆவணி மாதம், தேய்பிறையில் அஷ்டமி திதியில் விஷ்ணு கண்ணனாக அவதாரம் எடுத்தார். பிறந்த உடனேயே பெற்றோரைப் பிரிய நேர்ந்தாலும், அவர் மனித வாழ்க்கைக்கான அறிவுரைகளை வழங்கி கண்ணன் உயர்ந்து நின்றார். கண்ணனின் பிறப்பால் அஷ்டமி திதியும் நன்மதிப்பைப் பெற்றது.

    சிவபெருமானால் கொடுக்கப்பட்ட சாபத்தில் இருந்து முழுமையாக விடுபட முடியாவிட்டாலும், விஷ்ணுவின் அவதாரங்களால் தங்களுக்குக் கிடைத்த தனிச்சிறப்பை நினைத்து அஷ்டமி, நவமி திதிகள் மகிழ்ச்சி அடைந்தன.

    தங்களை விட மேலான நிலையில் இருப்பவர்கள் அறிவுரை வழங்கும்போது, அதனை காதுகொடுத்து கேட்க வேண்டும். அந்த அறிவுரைகளை அலட்சியம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் பெரும் துன்பமும், அவமதிப்பும் வந்து சேரும் என்பதையே அஷ்டமி, நவமி திதிகளின் சாப- விமோசனக் கதை நமக்கு எடுத்துரைக்கிறது.

    • ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமியாகும்.
    • இந்நாட்களில் விரதம் இருந்து ராமாயணம் படிப்பதும், சொற்பொழிவுகள் செய்வதும் உண்டு.

    ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமியாகும்.

    இது ஆண்டுதோறும் சித்திரை மாதம் நவமியும் புனர்வசு நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளில் வரும்.

    ஸ்ரீராமன் பிறந்த தினத்தோடு முடியும். பத்து நாட்கள், முன் பத்து எனப் பெறும்.

    பிறந்த தினத்திலிருந்து கொண்டாடப்பெறும் பின் பத்து நாட்கள், பின் பத்து எனப்பெறும்.

    சில வைணவத் தலங்களில் இத்தினங்களை முன்பத்து, பின்பத்து என்று மிகவும் சிறப்பான திருவிழாவாகக் கொண்டாடுவார்கள்.

    இந்நாட்களில் விரதம் இருந்து ராமாயணம் படிப்பதும், சொற்பொழிவுகள் செய்வதும் உண்டு.

    பூஜைகளும் நிகழும்.

    ராமாயணம் படித்துப் பட்டாபிஷேகம் செய்து ஆஞ்சநேயர் உற்சவமும் செய்து பூர்த்தி செய்வார்கள்.

    பானகம், நீர்மோர், சந்தனம், சுண்டல், சர்க்கரைப் பொங்கல் ஆகியவை வினியோகங்களாக அமையும்.

    விளக்கு ஏற்றும்பொழுது நாராயணனுக்கு உரிய நல்லெண்ணை ஊற்றி ஏற்றுவது சிறப்பாகும்.

    ராம நவமி விரதத்தை தவறாமல் கடைப் பிடிப்பவர்களுக்கு பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும்.

    இது தவிர புரட்டாசி மாதத்திலும் ராமாயணம் முழுவதையும் ஒரு மாத காலத்திற்குப் படித்துப் பொருள் சொல்வதுண்டு.

    • சோழவந்தானில் ராமநவமி திருக்கல்யாணம் நடந்தது.
    • கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ராம பக்த சபாவின் சார்பில் ராம நவமிவிழா 4 நாட்கள் நடந்தது. ராம நாம பாராயணத்துடன் விழா தொடங்கியது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை உஞ்சவிருத்தி நடைபெற்று ஒற்றை அக்ரகாரத்தில் இருந்து பெண்கள் வானவேடிக்கை, மேளதாளத்துடன் சீர்வரிசை எடுத்து இரட்டை அக்ரஹாரம் கிருஷ்ணன் கோவில் முன்பு அமைந்திருக்கும் திருமண வைபவம் நடக்கும் மேடையில் வந்து சேர்ந்தனர். அங்கு சீதா கல்யாணம் மற்றும் ஆஞ்சநேயர் விழா நடந்தது. இன்று இரவு சுவாமி புறப்பாடு வீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ராம பக்த சபா நிர்வாகிகள் காசி விசுவநாதன், தலைவர் வரதராஜப் பண்டிட், செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் மகாதேவன், உதவி தலைவர் ரமணி, இணைச்செயலாளர் விசுவநாதன் ஆகியோர் செய்துள்ளனர். விழாவில் மலையாளம் கிருஷ்ண அய்யர் சாரிட்டிஸ் வேத பாடசாலை, சீர்திருத்தினம் அய்யர் ரூரல் டெக்னாலஜி பவுண்டேசன் சார்பில் அன்னதானம் நடந்தது.

    எம்.வி.எம். குழுமத் தலைவரும், பா.ஜ.க. மாநில விவசாய அணி செயலாளருமான மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை ராம நவமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை

    ராமபிரான் அவதரித்த தாக நாளாக கருதப்படும் ராமநவமி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பஞ்சாங்க குறிப்புகளின் படி நவமி திதி என்பது நேற்று 29-ந் தேதி இரவு 11.49 மணிக்கு தொடங்கி நாளை (31-ந் தேதி) அதி காலை 1.40 மணி வரை ஆகும்.

    நாடு முழுவதும் ராமநவமி வழிபாடு இன்று நடந்தது. ஜோதிட சாஸ்திரப்படி ராமர் பிறப்பதற்கு முன்பு உள்ள 9 நாட்கள் ஒரு விரத முறையாகவும், அதன் பிறகு வரும் 9 நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுசரிக்கப் பட்டு வருகிறது. அதாவது சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள 9 நாள் 'கர்ப்போஸ்தவம்' விரத காலமாகும். அடுத்த படியாக சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதி யில் இருந்து அடுத்து வரும் 9 நாட்கள் 'ஜன்மோதீஸவம்' விரத காலமாகும்.

    ராமநவமியின்போது காலை முதல் உணவு அருந்தாமல் விரதம் இருந்து ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்ச நேயரின் அருள் கிடைக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்த வர்கள் ஒன்று சேருவர். குடும்ப நலம் பெருகி, வறுமை, பிணி அகலும் என்பது நம்பிக்கை.

    இன்று ராமநவமியை யொட்டி மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் தென்மாட வீதி கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில், மதனகோபால சுவாமி கோவில், மணி நகரம் இஸ்கான் கோவில் கூடலழகர் பெருமாள் கோவில், திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில், ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோவில், தெற்கு கிருஷ்ணன் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், மதுரை மேலமடை தாசில்தார் நகர் சவுபாக்கியா கோவில், சோழவந்தான் சந்தானகிருஷ்ணன் கோபால்சாமி கோவில், திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ராமநவமி விழா கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது.

    இதில் முக்கிய நிகழ்ச்சியான ராமநவமி விழா இன்று கொண்டா டப்படுகிறது. இன்று கோவில் கொடிமரத்தின் முன்பு ராமர், சீதை, லட்சுமணன், அனுமனுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருமஞ்சனம் நடந்தது. லட்சுமி நாராயணர், சஞ்சீவி ஆஞ்ச நேயர், யோக நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இரவு ராம நவமி ஆஸ்தானம் கடைபிடிக்கப்படும்.
    • நாளை ஸ்ரீராமர் பட்டாபிஷேக ஆஸ்தானம் நடக்கிறது.

    திருமலையில் ஆண்டு தோறும் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு 2 நாட்களுக்கு திருவிழா நடை பெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஸ்ரீராம நவமி கொண்டாடப்பட்டது.

    இதை யொட்டி இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை திருமலையில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் உற்சவர்களான சீதாதேவி, ஸ்ரீராமர், லட்சுமணர் மற்றும் அனுமனுக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை திருமலையில் அனுமன் வாகனத்தில், ஸ்ரீராமர் அலங்காரத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இதனைத் தொடர்ந்து இரவு ராம நவமி ஆஸ்தானம் கடைபிடிக்கப்படும். நாளை இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீராமர் பட்டாபிஷேக ஆஸ்தானம் கோவில் தங்க வாசல் அருகே நடைபெற உள்ளது.

    ராமபிரானுக்கு விரதத்தை மேற்கொள்வதன் மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். செல்வம், புகழ் உள்ளிட்ட எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
    ராமாயணத்தின் நாயகனாகவும், மனித உருவில் வாழ்ந்த தெய்வமாகவும் போற்றப்படுபவர், ராமபிரான். இவர் சித்திரை மாதம் வளர்பிறையான நவமி திதியில் பிறந்தவர். அதைத் தான் ‘ராம நவமி’ என்ற பெரும் விழாவாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். எந்த ஒரு காரியத்தை அஷ்டமி மற்றும் நவமி திதிகளில் செய்யாமல், மக்கள் தவிர்த்து விடுவார்கள். இதனால் அந்த இரண்டு திதிகளும் மிகவும் வருத்தம் கொண்டன. அவை தங்களின் கவலையை, மகா விஷ்ணுவிடம் சென்று வெளிப்படுத்தின.

    “இறைவா! நாங்கள் என்ன பாவம் செய்தோம்? எங்களை மட்டும் மற்ற திதிகளைப் போல் பார்க்காமல், மக்கள் ஒதுக்கி வைக்கிறார்களே. எங்களுக்கு இதில் இருந்து விமோசனம் இல்லையா?” என்றனர்.

    அதைக் கேட்டு மனம் இரங்கிய மகாவிஷ்ணு, “மக்கள் உங்கள் இருவரையும் போற்றித் துதிக்கும் நாள் ஒன்று வரும். நான் உலக நன்மைக்காக பூமியில் அவதரிக்கும் போது, உங்களின் இந்த வருத்தம் மறைந்து போகும்” என்று அருள்புரிந்தார்.

    அதன்படியே தசரதர்- கவுசல்யா தம்பதியருக்கு, நவமி திதியில் ராமனாக அவதரித்தார், மகாவிஷ்ணு. அதே போல் மற்றொரு அவதாரத்தில் வசுதேவர்-தேவகி தம்பதியருக்கு மகனாக அஷ்டமி திதியில் கிருஷ்ணராக பிறந்தார். இந்த இரண்டு அவதாரங்களின் மூலமாக, அஷ்டமி மற்றும் நவமி திதிகள் பெரும் பேறு பெற்றன. இறைவனின் அவதாரங்கள் உதித்த அந்த இரண்டு நாட்களையும் மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    நவமியில் பிறந்த ராமபிரான், இலங்கையை ஆட்சி செய்து வந்த ராவணனை வதம் செய்வதற்காகவே அவதரித்தவர். சிவபெருமானிடம் இருந்தும், பிரம்மதேவனிடம் இருந்தும் பல சக்திவாய்ந்த வரங்களைப் பெற்றிருந்த ராவணன், அந்த வரங்களைக் கொண்டு, முனிவர்களையும், தேவர்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் தயவு தாட்சன்யம் இன்றி துன்புறுத்தினான்.

    கர்மவினையின் பயனாக, ராம அவதார நோக்கம் நிறைவேறுவதற்காக ராமபிரான் வனவாசம் செல்ல நேர்ந்தது. அவரோடு சீதையும், லட்சுமணரும் உடன் சென்றனர். வனத்தில் இருந்தபோது, சீதையின் அழகு பற்றி அறிந்த ராவணன், அவளைக் கடத்திச் சென்றான். இதனால் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் வந்தது. வானர வீரர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு, கடலில் பாலம் அமைத்து, இலங்கை சென்ற ராமர், ராவணனை அழித்து சீதையை மீட்டார். அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்பட்டது.

    ராமபிரான் அவதரித்த நாளில் விரதம் இருப்பது மிகவும் நன்மை அளிக்கக்கூடியது. இந்த விரதமானது, இரண்டு விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சித்திரை மாதம் வளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை ஒன்பது நாட்களுக்கு கடைப் பிடிக்கும் விரதத்திற்கு ‘கர்ப்போஸ் தவம்’ என்று பெயர். நவமி திதியில் இருந்து அடுத்துவரும் ஒன்பது நாட்களுக்கு கடைப்பிடிக்கப்படுவது ‘ஜன்மோதீஸவம்’ என்று பெயர்.

    விரதம் இருப்பதற்கு முன்தினம் வீட்டை சுத்தம் செய்துவிட வேண்டும். விரத தொடக்க நாள் முதல், ஒரு வேளை மட்டும் உணவு உண்ண வேண்டும். விரதம் இருக்கும் ஒன்பது நாட்களும் ராம நாமத்தை உச்சரித்தபடியே இருக்க வேண்டும். ஒன்பது நாட்களும் ராமபிரானுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம் என நைவேத்தியம் படைத்து வழிபடுவது சிறப்பு. ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்தி வணங்குங்கள். ஒன்பது நாட்களும் நைவேத்தியம், மாலை அணிவிக்க முடியாதவர்கள், ராமநவமி அன்று மட்டுமாவது அதைச் செய்வது நல்லது. இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். செல்வம், புகழ் உள்ளிட்ட எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
    ராமர் நவமி திதியில் பிறந்ததால் அன்றைய தினம் ‘ராமநவமி’ என்று அழைக்கப்படுகிறது. ராமநவமியான இன்று சொல்ல வேண்டிய ஸ்ரீராமர் ஸ்லோகத்தை பார்க்கலாம்.
    ஸ்ரீராமர் ஸ்லோகம்

    ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
    ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
    ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
    ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்

    கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
    துறு துறு சிறுவன் தசரத ராமர்
    கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
    ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்

    இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
    ராஜ குருவாம் பரத ராமர்
    தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
    அன்புள்ள கணவன் சீதா ராமர்

    மூத்த மகனாம் சுமித்ர ராமர்
    மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
    மன்னித்தருளும் கைகேயே ராமர்
    மகனே போன்றவர் ஜனக ராமர்

    உற்ற தோழன் குகனின் ராமர்
    உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
    தெய்வ உருவாம் அனுமத் ராமர்
    ஞான சூரியன் ஜாம்பவ ராமர்
    எளிய விருந்தினர் சபரியின் ராமர்
    அபயம் அளிப்பவர் விபீஷண ராமர்
    கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்
    பாப வினாசனர் கோதண்ட ராமர்

    ஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்
    பெண்கள் போற்றும் கற்புடை ராமர்
    மக்கள் மகிழும் அரசுடை ராமர்
    பக்தர் நெகிழும் பண்புடை ராமர்

    வேள்விகள் காக்கும் காவலன் ராமர்
    சாபங்கள் போக்கும் அகல்ய ராமர்
    இரு மனம் இணைக்கும் கௌதம ராமர்
    திருமண நாயகன் ஜானகி ராமர்

    சிவ வில் முறித்த பராக்ரம ராமர்
    ஹரி வில் தரித்த சத்ரிய ராமர்
    கடலை வென்ற வருண ராமர்
    பாலம் கண்ட சேது ராமர்

    மரம் ஏழு துளைத்த தீர ராமர்
    மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்
    குறையற்ற குணமகன் வீர்ய ராமர்
    குலப் புகழ் காத்த சூர்ய ராமர்

    சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
    காதலை மறவா சீதையின் ராமர்
    தாயுமானவர் லவகுச ராமர்
    தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்

    கீதை தந்த கண்ணன் ராமர்
    கண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்
    சிவனை வணங்கும் பக்த ராமர்
    சிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்

    முனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்
    தவசிகள் நினைக்கும் நித்திய ராமர்
    காந்தியின் கடவுள் சத்திய ராமர்
    அறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்

    ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்
    ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்
    ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்
    ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்

    ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்
    ராம் ராம் என்றால் உவகை பெருகும்
    ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்
    ராம் ராம் என்றால் தர்மம் புரியும்

    ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்
    ராம் ராம் என்றால் வெற்றி விழையும்
    ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்
    ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்

    ராம் ராம் என்றால் மனது அடங்கும்
    ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்
    ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்
    ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்

    ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்
    ஒரு வைரம் போல மனதில் பதித்தால்
    துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்
    இன்பம் எல்லாம் விரைவில் கூடும் 
    ராம நவமி அன்று விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும்.
    ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு 'கர்ப்போஸ்தவம்' என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை.

    இதற்கு 'ஜன்மோதீஸவம்' என்று பெயர். இவ்வாறு ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். விரதத்தை தொடங்குவதற்கு முதல் நாள், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.

    விரதம் தொடங்கும் நாளன்று ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் வரும் ஒவ்வொரு நாளும் சர்க்கரை பொங்கல், பாயசம் உள்ளிட்ட நைவேத்தியங்களை படைத்து வழிபடுவதுடன், ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்த வேண்டும்.

    இதனை ஒன்பது நாளும் சாத்த முடியாதவர்கள், ராம நவமி தினத்திலாவது செய்ய வேண்டும். ராம நவமி விரத நாட்களில் மட்டும் அல்லாத எல்லா காலங்களிலும், ராமஜாதகத்தை படமாக காகிதத்தில் வரைந்து வைத்தோ, அல்லது செப்பு தகட்டில் வரைந்து வைத்தோ வழிபடுவது சிறப்பான பலனை தரக்கூடியது.

    ராமருடைய ஜாதகத்தின்படி சூரியன்- மேஷ ராசியிலும், செவ்வாய்- மகர ராசியிலும், குரு- கடக ராசியிலும், சுக்ரன்- மீன ராசியிலும், சனி- துலாம் ராசியிலும் உச்சஸ்தானத்தில் இருக்கின்ற ஜாதகம் என்பதால் அவரின் ஜாதகம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த ஜாதகத்தை வைத்து வழிபடுவதால், நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

    ராமர் நவமி திதியில் பிறந்ததால் அன்றைய தினம் ‘ராமநவமி’ என்று அழைக்கப்படுகிறது. இன்று ராமபிரானை விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும். அனுமன் வழிபாட்டால் தம்பதியர் ஒற்றுமை உருவாகும். 
    ×