search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "President"

    • ஜனாதிபதி தங்கியிருந்த விருந்தினர் மாளிகை கடற்கரை சாலையில் கடலை பார்க்கும் வகையில் அமைந்துள்ளதாகும்.
    • ஜனாதிபதி செல்லும் வழிகளில் ஹெலிகாப்டர் மூலமும் கண்காணிப்பு பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

    புதுவைக்கு வந்த ஜனாதிபதி கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

    ஜனாதிபதி தங்கியிருந்த விருந்தினர் மாளிகை கடற்கரை சாலையில் கடலை பார்க்கும் வகையில் அமைந்துள்ளதாகும். அதோடு இன்று காலை ஜனாதிபதி கடற்கரை சாலையில் நடைபயிற்சி செய்தார். இதனால் அவர் தங்கியிருந்த மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    மேலும் கடல்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு போலீசார் இணைந்து கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை, காரைக்காலில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆயுதங்களுடன் கூடிய 2 இந்தியன் கோஸ்டல்கார்டு கப்பல்கள் ஜனாதிபதி தங்கியிருந்த விருந்தினர் மாளிகை எதிரே கடல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஜனாதிபதி செல்லும் வழிகளில் ஹெலிகாப்டர் மூலமும் கண்காணிப்பு பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

    • டெரகோட்டா முனுசாமி 30 நொடிகளில் உருவாக்கிய விநாயகர் சிலையை கண்டு பாராட்டினார்.
    • திடீரென காரை நிறுத்த சொன்ன ஜனாதிபதி, சாலையோரம் காத்திருந்த குழந்தைகள், சிறுவர்கள் அருகில் சென்று சாக்லேட் கொடுத்தார்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு 2 நாள் பயணமாக வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று காலை ஜிப்மரில் புற்றுநோய்க்கான நவீன கதிரியக்க கருவியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மாலை மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்றார்.

    அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழுங்க பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் மணக்குள விநாயகரை தரிசித்தார். கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ஜனாதிபதி வருகையின்போது, மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    அங்கிருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, முருங்கம்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினை கிராமத்துக்கு சென்றார். அங்கு கேரள செண்டை மேளம், தவில் நாதஸ்வரம் இசையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பொம்மலாட்டம், புலியாட்டம், தெருக்கூத்து கலைஞர்கள் நடனமாடி வரவேற்றனர்.

    கைவினைக் கிராம வளாகத்தில் உள்ள அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்ட சுடுமண் சிலை, காகித கூழில் வடிவமைத்த உருவங்களை ஜனாதிபதி பார்வையிட்டார். ஜனாதிபதி உருவத்தில் வரையப்பட்டிருந்த மணல் சிற்பம், ரங்கோலி ஆகியவற்றை பார்த்து ரசித்தார்.

    டெரகோட்டா முனுசாமி 30 நொடிகளில் உருவாக்கிய விநாயகர் சிலையை கண்டு பாராட்டினார். திருவள்ளுவர் சிலை, ஓவியம் ஆகியவை ஜனாதிபதிக்கு பரிசாக வழங்கப்பட்டது. நெசவு தறியை பார்வையிட்ட ஜனாதிபதி நெசவாளரிடம் கைத்தறி போர்வையை பணம் செலுத்தி பெற்றார்.

    புலியாட்டம் ஆடிய சிறுவனை அழைத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டி அந்த சிறுவனுக்கு சாக்லேட் வழங்கினார். சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். நாட்டுப்புற கலைஞர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

    தொடர்ந்து, வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலுக்கு ஜனாதிபதி சென்றார். அவருக்கு அங்கு, பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் சங்கராபரணி ஆற்றில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ஆரத்தியில் கலந்து கொண்டார். கோவிலுக்குள் சென்று கங்கைவராக நதீஸ்வரரை தரிசித்தார். அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருக்காஞ்சியில் இருந்து அபிஷேகப்பாக்கம் வழியாக சென்றபோது சாலையோரம் பல சிறுவர், சிறுமிகள் ஜனாதிபதியை காண காத்திருந்தனர். அப்போது திடீரென காரை நிறுத்த சொன்ன ஜனாதிபதி, சாலையோரம் காத்திருந்த குழந்தைகள், சிறுவர்கள் அருகில் சென்று சாக்லேட் கொடுத்தார். பதிலுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, நீதிபதிகள் விருந்தினர் மாளிகைக்கு திரும்பினார். இரவு கவர்னர் மாளிகையில் நடந்த பாரம்பரிய உணவு விருந்தில் பங்கேற்றார். இரவில் நீதிபதிகள் விருந்தினர் மாளிகை வந்து தங்கினார்.

    • ஜனாதிபதி நடைபயிற்சிக்காக துப்புரவு பணியாளர்கள் கடற்கரை சாலையை சுத்தப்படுத்தியிருந்தனர்.
    • அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்ற ஜனாதிபதி அங்கு அரவிந்தர் மற்றும் அன்னை சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இரவு கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

    இன்று காலை 6 மணி முதல் 6.45 மணி வரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நடைபயிற்சி மேற்கொள்வார் என்பதால் அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள போலீசார் தடை விதித்திருந்தனர்.

    இன்று காலை 5.25 மணிக்கே தங்கியிருந்த விருந்தினர் மாளிகையிலிருந்து ஜனாதிபதி நடைபயிற்சிக்கு கிளம்பினார்.

    தொடர்ந்து ஜனாதிபதி கடற்கரை சாலையில் நடைபயிற்சி செய்தார். ஜனாதிபதி நடைபயிற்சிக்காக துப்புரவு பணியாளர்கள் கடற்கரை சாலையை சுத்தப்படுத்தியிருந்தனர். நகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் கடற்கரையில் இருந்தனர்.

    ஜனாதிபதி முன்கூட்டியே நடைபயிற்சி தொடங்கியதை தொடர்ந்து அவர்களும் ஜனாதிபதியோடு நடந்தனர். புஸ்சி வீதி விருந்தினர் மாளிகையிலிருந்து பழைய கலங்கரை விளக்கம் வரை ஜனாதிபதி நடந்து சென்று திரும்பினார்.

    அப்போது காந்தி சிலையை நின்று பார்த்தார். அங்கிருந்த அதிகாரிகள், சிலை வரலாறு குறித்து தெரிவித்தனர். பழைய கலங்கரை விளக்கம், புதிதாக நிறுவப்பட்டுள்ள தியாகச்சுவர், தேசிய கொடிக்கம்பம் ஆகியவற்றை ஜனாதிபதி பார்த்தார். அவரோடு நடந்து வந்த அதிகாரிகள் சிலர் ஜனாதிபதியுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

    மீண்டும் ஜனாதிபதி 6.05 மணிக்கு விருந்தினர் மாளிகைக்கு திரும்பினார். சுமார் 40 நிமிடம் ஜனாதிபதி நடைபயிற்சி மேற்கொண்டார்.

    பின்னர் காலை உணவு சாப்பிட்ட பின் புதுவை முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். அதன் பின்னர் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்ற ஜனாதிபதி அங்கு அரவிந்தர் மற்றும் அன்னை சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்தார்.

    அதனைதொடர்ந்து அங்கிருந்து ஜனாதிபதி ஆரோவில் சென்றார். அங்குள்ள மாத்ரி மந்திரில் தியானம் செய்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஓவிய கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்.

    அதன்பின்னர் அங்கு நடந்த அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசினார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி புதுவை ஆரோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • புதுவை ஜிப்மரில் நவீன கதிரியக்க சிகிச்சை கருவி அர்ப்பணிப்பு விழா நடந்தது.
    • தனது தாய்மொழியில் வரவேற்பு தெரிவித்த கவர்னருக்கு, ஜனாதிபதி பேசும்போது நன்றி தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மரில் நவீன கதிரியக்க சிகிச்சை கருவி அர்ப்பணிப்பு விழா நடந்தது.

    இந்த விழாவில் கவர்னர் தமிழிசை பேச அழைக்கப்பட்டார். அப்போது கவர்னர் தமிழிசை, அனைவருக்கும் தாய்மொழி என்றால் சிறப்பும், பெருமிதமும் இருக்கும்.

    புதுவைக்கு வந்துள்ள ஜனாதிபதியை அவரின் தாய்மொழியில் வரவேற்கிறேன் எனக்கூறி, பழங்குடியினர் மொழியில் ஜனாதிபதிக்கு வரவேற்பு தெரிவித்தார். தனது தாய்மொழியில் வரவேற்பு தெரிவித்த கவர்னருக்கு, ஜனாதிபதி பேசும்போது நன்றி தெரிவித்தார்.

    • உலகிற்கே ஜனாதிபதி முன்மாதிரியாக விளங்குகிறார்.
    • ஆதி சமூகத்தில் பிறந்து ஆதிக்க சமுதாயத்தில் இந்த பதவியை பெற அவர் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மரில் நடந்த விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    பிரதமர் மோடியின் பெஸ்ட் புதுவையை பாஸ்ட் புதுவையாக மாற்றி வரும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டுகள். ஜிப்மர் நிர்வாக ரூ.17 கோடியில் நவீன கதிரியக்க சிகிச்சை கருவியை நிறுவியது பாராட்டுக்குரியது.

    துறை வேகமாக வளர்ந்து வருகிறது. உலகிற்கே ஜனாதிபதி முன்மாதிரியாக விளங்குகிறார். புதுவை ஆன்மிக மண். நாட்டின் முன்னேற்றம், சுதந்திரத்தில் புதுவைக்கும் பங்கு உண்டு.

    இந்த மண்ணுக்கு சிலர் வரும்போது சரித்திரமாகிறது. அரவிந்தர், பாரதியார் வந்தது சரித்திரமானது.

    அதேபோல ஜனாதிபதியின் வருகை புதுவை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வது என்ற பாரதியாரின் எழுத்துக்களை உண்மையாக்கும் வகையில் திரவுபதி முர்மு ஜனாதிபதியாகியுள்ளார்.

    ஆதி சமூகத்தில் பிறந்து ஆதிக்க சமுதாயத்தில் இந்த பதவியை பெற அவர் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். அவரை கண்டு இந்த உலகம் வியக்கிறது. பெண்மையின் பெருமையை உணர்த்தும் உருவமாக உள்ளார். பிரதமர் மோடி கண்டெடுத்த மாணிக்கம் நம் ஜனாதிபதி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சர்வதேச யோகா விழா நடத்தி யோகாவை புதுவை ஊக்குவிக்கிறது.
    • சர்வதேச அளவில் புதுவை சமூக முன்னேற்றத்தில் முதலிடத்தில் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மரில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:-

    புதுவைக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்களில் ஒருவரான அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறும்போது இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.

    புதுவையில் மணக்குள விநாயகர், திருக்காஞ்சி கோவில்களில் தரிசனம் செய்து கடவுள்களின் ஆசீர்வாதம் பெற திட்டமிட்டுள்ளேன். புதுவையின் ஆன்மிக அம்சங்களில் யோகாவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.

    சர்வதேச யோகா விழா நடத்தி யோகாவை புதுவை ஊக்குவிக்கிறது. புதுவையில் வசித்தவர்கள் சுதந்திர போராட்டத்தின்போது இந்திய மக்களோடு சமமாக செயல்பட்டனர். புதுவை சிறந்த எழுத்தாளர்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் தாயகமாக திகழ்ந்துள்து. பாரதிதாசன் இங்கு பிறந்தவர்.

    மகாகவி பாரதியார் இங்கே வசித்து சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். வி.வி.எஸ்.ஐயர் சிறந்த தமிழ் அறிஞர், சுதந்திர போராட்டத்தில் புதுவையில் தங்கி பங்கேற்றார். புதுவையின் அரசியல், சமூகவியல் அசாதாரணமானது.

    புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியங்களையும், மொழி வேற்றுமையில் ஒற்றுமை என கலாச்சாரம், பாரம்பரியத்தை முன்னெடுத்துச்செல்கிறது.

    புதுவையின் கட்டிடக்கலை, திருவிழாக்கள், வாழ்க்கை முறை பல்வேறு தாக்கங்களை பிரதிபலிக்கிறது. பிரான்ஸ், இந்தியா இடையிலான நட்புறவின் வாழும் பாலமாக புதுவை விளங்குகிறது.

    சர்வதேச அளவில் புதுவை சமூக முன்னேற்றத்தில் முதலிடத்தில் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கல்வியறிவில் புதுவை முதலிடத்தில் உள்ளது பாராட்டுக்குரியது. புதுவைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் கல்வி கற்க மேல்படிப்புக்காக வந்து செல்கின்றனர்.

    ஜிப்மர் அப்துல்கலாம் அரங்கில் நாம் உள்ளோம். அவரின் பங்களிப்புகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மருத்துவ நோக்கங்களுக்காக பாதுகாப்பு ஆராய்ச்சியை பயன்படுத்தும் முயற்சிகளை மருத்துவ மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காரில் புறப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்தார்.
    • வில்லியனூரில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனையை காணொளி மூலம் திறந்து வைத்தார்.

    புதுச்சேரி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று புதுவை வந்தார்.

    காலை 9.55 மணிக்கு சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு 10.35 மணிக்கு புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வரவேற்றனர்.

    அங்கிருந்து காரில் புறப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்தார். அங்கு ரூ.17 கோடியில் புதிதாக வாங்கப்பட்டுள்ள புற்றுநோய்க்கான நவீன கதிர் வீச்சு சிகிச்சை எந்திரத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவிலேயே வில்லியனூரில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனையையும் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

    இதையடுத்து மதியம் 12.45 மணிக்கு கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகைக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டு தங்கி ஓய்வெடுத்தார்.

    இன்று மாலை 4 மணிக்கு புறப்பட்டு மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று ஜனாதிபதி சாமி தரிசனம் செய்கிறார். மாலை 4.40 மணிக்கு முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு சென்று கலைநிகழ்வுகளை பார்க்கிறார்.

    மாலை 5.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருக்காஞ்சி கஞ்கைவராக நதீஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். 6.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் விடுதிக்கு வந்து ஓய்வெடுக்கிறார். இரவு 8 மணிக்கு கவர்னர் மாளிகையில் ஜனாதிபதிக்கு பாரம்பரிய இரவு விருந்து அளிக்கப்படுகிறது.

    பின்னர் மீண்டும் விடுதிக்கு திரும்பி ஓய்வெடுக்கும் அவர் நாளை (செவ்வாய்கிழமை) காலை 6 முதல் 6.45 மணி வரை கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொள்கிறார். அவர் அமரும் வகையில் கல் மேடைகள் சிவப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளன.

    ஜனாதிபதி கடற்கரைப் பகுதிக்கு வருவதால் காலை 4 முதல் 7 வரை தினமும் வழக்கமாக நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 9.15 முதல் 9.45 மணி வரை புதுவையின் முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்கிறார்.

    10.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அரவிந்தர் ஆசிரமம் சென்று தியானம் செய்கிறார். அங்கிருந்து 11.15 மணிக்கு காரில் ஆரோவில் மாத்ரி மந்திருக்கு சென்று பார்வையிடுகிறார். அங்கேயே மதிய உணவை முடித்துவிட்டு 2.45 முதல் 4 மணி வரை நடைபெறும் ஆரோவில் கண்காட்சி, கருத்தரங்கில் பங்கேற்கிறார்.

    பின்னர் 4 மணிக்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு காரில் லாஸ்பேட்டை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து 4.25 மணிக்கு ஹெலிகாப்டரில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதி புதுவை வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 750 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 250 போக்குவரத்து போலீசாரும் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை ஆவடி, நெய்வேலியில் இருந்து 200 துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புதுவை விமான நிலையம், ஜிப்மர், ஆசிரமம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பேசினார்.
    • முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று மாலை வருகை தந்தார்.

    நீலிகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பார்வையிட்டார்.

    முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பேசினார்.

    மேலும், ஆஸ்கர் விருது வென்ற தி எலிபாண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்பட புகழ் 'பொம்மி' யானைக்கு கரும்பு வழங்கினார்.

    அதனை தொடர்ந்து முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.

    • புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்திக்கிறார்.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் முதுமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஊட்டி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று மாலை வருகிறார்.

    இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூர் விமான தளத்துக்கு மதியம் 2.30 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு மசினகுடிக்கு வருகிறார்.

    அங்கிருந்து கார் மூலமாக சிறப்பு பாதுகாப்பு படையினருடன் 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்கிறார்.

    முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்திக்கிறார்.

    அப்போது அவர்களை பாராட்டுவதோடு, அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடுகிறார். அதனை தொடர்ந்து முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.

    பின்னர் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளையும் பார்வையிடுகிறார். ஜனாதிபதி வரும் போது 12 வளர்ப்பு யானைகள் அனைத்தும் வரிசையாக நிற்கவைக்கப்பட உள்ளது.

    அப்போது அந்த யானைகளுக்கு ஜனாதிபதி, பழங்கள் மற்றும் உணவுகளை வழங்குகிறார். சிறிது நேரம் யானைகளை பார்வையிடும் அவர், தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பழங்குடியின மாதிரி கிராமத்தையும் பார்வையிடுகிறார்.

    ஒரு மணி நேரம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இருக்கிறார்.

    அதன்பின்னர் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு காரில் மசினகுடிக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மைசூர் சென்று, அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 போலீஸ் சூப்பிரண்டுகள், 7 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 18 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 36 இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் முதுமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    முதுமலையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் மசினகுடி, முதுமலை மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமு க்குள்ளும் பலத்த பாதுகாப்புகள் போட ப்பட்டுள்ளது. இதுதவிர மசினகுடி-தெப்பக்காடு, தொரப்பள்ளி-தெப்பக்காடு சாலை, பந்திப்பூர்-தெப்பக்காடு சாலை உள்ளிட்ட சாலைகளிலும் நக்சல் தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    இதேபோல் முதுமலை வனப்பகுதிக்குள் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டம் உள்ளரா எனவும் போலீசார் கண்காணித்தனர்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, மசினகுடி-தெப்பக்காடு சாலையில் இன்று மாலை மட்டும் சில மணி நேரங்கள் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும். ஆனால் மைசூர்-கூடலூர் சாலையில் வாகனங்கள் வழக்கம் போல இயங்கும். மேலும் ஜனாதிபதி வந்து செல்லும் வரை தமிழகம், கேரளா, கர்நாடக ஆகிய 3 எல்லை சாலைகளும் மூடப்படுகிறது எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    • ஜனாதிபதி செல்லும் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம், மசினகுடி ஹெலிகாப்டர் தளம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
    • தெப்பக்காடு அடர்ந்த வனப்பகுதி என்பதால் போலீஸ் மட்டுமின்றி, நக்சல் தடுப்பு பிரிவினர், அதிரடிப்படை பிரிவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் உள்ள யானைகள், பாகன்களுக்கு இடையேயான பாச பிணைப்பை பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது பெற்றது.

    மேலும் இந்த படத்தில் நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை முதுமலைக்கு வருகிறார்.

    இதற்காக அவர் நாளை காலை 11.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினகுடியில் உள்ள ஹெலிபேட் தளத்திற்கு மாலை 3.30 மணிக்கு வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க 3.45 மணியளவில் 12 கி.மீ. தொலைவில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்கிறார்.

    முகாமில் பாகன் தம்பதிகள் பொம்மன், பெள்ளியை சந்தித்து பாராட்டு தெரிவித்து அவர்களுடன் சிறிது நேரம் உரையாடுகிறார். மேலும் வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவு மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உணவு வழங்குகிறார்.

    தொடர்ந்து அங்குள்ள ஆதிவாசி மக்கள் மற்றும் பாகன்களையும் சந்தித்து பேசுகிறார். மேலும் அங்குள்ள பழங்குடியின மாதிரி கிராமத்தையும் பார்வையிடுகிறார்.

    நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்து கொண்டு, மீண்டும் மாலை 4.45 மணிக்கு தெப்பக்காடு முகாமில் இருந்து காரில் புறப்பட்டு மசினகுடி ஹெலிகாப்டர் தளத்திற்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூர் செல்லும் ஜனாதிபதி, அங்கிருந்து சென்னை செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அவருக்கு வரவேற்பு அளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த 31-ந் தேதியில் இருந்து நாளை வரை தெப்பக்காடு யானைகள் முகாம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள தங்கும் விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.

    ஜனாதிபதியை வருவதையொட்டி 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 18 ஏ.டி.எஸ்.பிக்கள், 36 இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி செல்லும் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம், மசினகுடி ஹெலிகாப்டர் தளம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அந்த பகுதிகள் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தெப்பக்காடு அடர்ந்த வனப்பகுதி என்பதால் போலீஸ் மட்டுமின்றி, நக்சல் தடுப்பு பிரிவினர், அதிரடிப்படை பிரிவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவர்கள் வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதவிர மசினகுடி, மாவனல்லா, பொக்காபுரம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு மைசூரில் இருந்து மசினகுடிக்கு ஹெலிகாப்டரில் வருவதையொட்டி, நேற்று 2 ஹெலிகாப்டர்கள் தனித்தனியாக இயக்கப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது மைசூரில் இருந்து மசினகுடி ஹெலிபேடுவுக்கு 2 ஹெலிகாப்டர்கள் தனித்தனியாக இயக்கப்பட்டு வந்து மீண்டும் திரும்பி செல்வதன் மூலம் ஒத்திகை நடைபெற்றது.

    இதற்கிடையே நேற்று தெப்பக்காடு யானைகள் முகாம் கூட்டரங்களில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் ஆலோசனை நடந்தது.

    கூட்டத்தில் தலைமை முதன்மை வன உயிரின காப்பாளர் சீனிவாச ரெட்டி, கலெக்டர் அம்ரித், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஜனாதிபதி வருகைக்கான ஏற்பாடு பணிகள், துறை அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

    • சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரும் 6-ந்தேதி நடக்க இருக்கிறது.
    • பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உள்பட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரும் 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உள்பட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

    முன்னதாக கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்குள்ள தர்பார் அரங்கத்தின் பெயரை மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கம் என்று பெயர் மாற்றம் செய்து, அதற்கான கல்வெட்டையும் திறந்து வைக்க இருக்கிறார்.

    • ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக 95 மசோதாக்கள் மத்திய அரசுக்கு வந்துள்ளன.
    • விளக்கங்கள் பெற நேரம் எடுக்கும் என்பதால், ஒப்புதலுக்கான கால நிர்ணயம் எதுவும் பரிந்துரைக்க முடியாது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் மற்றும் நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பான கேள்விக்கு மக்களவையில் மத்திய மந்திரி அஜய் குமார் மிஷ்ரா எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அவர் கூறியிருப்பதாவது:-

    2014ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வரப்பெற்ற 247 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் இருந்து வந்த 24 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் இருந்து வரப்பெற்ற 23 மசோதாக்கள், மகாராஷ்டிராவில் இருந்து வந்த 22 மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

    2014- 2022 காலகட்டத்தில் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக 95 மசோதாக்கள் மத்திய அரசுக்கு வந்துள்ளன. இந்த சட்ட மசோதாக்கள் அனைத்தும் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளன.

    மசோதாக்கள் தொடர்பாக மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஆராயும்போது, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் விளக்கங்கள் மற்றும் கருத்துகள் கேட்கப்படுகின்றன. இதுபோன்று ஆலோசனை செயல்முறை, கருத்துகள் மற்றும் விளக்கங்களைப் பெறுவதற்கு நேரம் எடுக்கும். எனவே, ஒப்புதலுக்கான கால நிர்ணயம் எதுவும் பரிந்துரைக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×