என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புலியாட்டம் ஆடிய சிறுவனை அழைத்து பாராட்டிய ஜனாதிபதி- சாலையில் நின்ற குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கினார்
    X

    புலியாட்டம் ஆடிய சிறுவனை ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டிய காட்சி. அருகில் கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் சந்திர பிரியங்கா உள்ளனர்.

    புலியாட்டம் ஆடிய சிறுவனை அழைத்து பாராட்டிய ஜனாதிபதி- சாலையில் நின்ற குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கினார்

    • டெரகோட்டா முனுசாமி 30 நொடிகளில் உருவாக்கிய விநாயகர் சிலையை கண்டு பாராட்டினார்.
    • திடீரென காரை நிறுத்த சொன்ன ஜனாதிபதி, சாலையோரம் காத்திருந்த குழந்தைகள், சிறுவர்கள் அருகில் சென்று சாக்லேட் கொடுத்தார்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு 2 நாள் பயணமாக வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று காலை ஜிப்மரில் புற்றுநோய்க்கான நவீன கதிரியக்க கருவியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மாலை மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்றார்.

    அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழுங்க பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் மணக்குள விநாயகரை தரிசித்தார். கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ஜனாதிபதி வருகையின்போது, மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    அங்கிருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, முருங்கம்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினை கிராமத்துக்கு சென்றார். அங்கு கேரள செண்டை மேளம், தவில் நாதஸ்வரம் இசையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பொம்மலாட்டம், புலியாட்டம், தெருக்கூத்து கலைஞர்கள் நடனமாடி வரவேற்றனர்.

    கைவினைக் கிராம வளாகத்தில் உள்ள அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்ட சுடுமண் சிலை, காகித கூழில் வடிவமைத்த உருவங்களை ஜனாதிபதி பார்வையிட்டார். ஜனாதிபதி உருவத்தில் வரையப்பட்டிருந்த மணல் சிற்பம், ரங்கோலி ஆகியவற்றை பார்த்து ரசித்தார்.

    டெரகோட்டா முனுசாமி 30 நொடிகளில் உருவாக்கிய விநாயகர் சிலையை கண்டு பாராட்டினார். திருவள்ளுவர் சிலை, ஓவியம் ஆகியவை ஜனாதிபதிக்கு பரிசாக வழங்கப்பட்டது. நெசவு தறியை பார்வையிட்ட ஜனாதிபதி நெசவாளரிடம் கைத்தறி போர்வையை பணம் செலுத்தி பெற்றார்.

    புலியாட்டம் ஆடிய சிறுவனை அழைத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டி அந்த சிறுவனுக்கு சாக்லேட் வழங்கினார். சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். நாட்டுப்புற கலைஞர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

    தொடர்ந்து, வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலுக்கு ஜனாதிபதி சென்றார். அவருக்கு அங்கு, பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் சங்கராபரணி ஆற்றில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ஆரத்தியில் கலந்து கொண்டார். கோவிலுக்குள் சென்று கங்கைவராக நதீஸ்வரரை தரிசித்தார். அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருக்காஞ்சியில் இருந்து அபிஷேகப்பாக்கம் வழியாக சென்றபோது சாலையோரம் பல சிறுவர், சிறுமிகள் ஜனாதிபதியை காண காத்திருந்தனர். அப்போது திடீரென காரை நிறுத்த சொன்ன ஜனாதிபதி, சாலையோரம் காத்திருந்த குழந்தைகள், சிறுவர்கள் அருகில் சென்று சாக்லேட் கொடுத்தார். பதிலுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, நீதிபதிகள் விருந்தினர் மாளிகைக்கு திரும்பினார். இரவு கவர்னர் மாளிகையில் நடந்த பாரம்பரிய உணவு விருந்தில் பங்கேற்றார். இரவில் நீதிபதிகள் விருந்தினர் மாளிகை வந்து தங்கினார்.

    Next Story
    ×