search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை கடற்கரையில் நடைபயிற்சி சென்ற ஜனாதிபதி- அரவிந்தர் ஆசிரமத்தில் தியானம் செய்தார்
    X

    புதுவை கடற்கரையில் நடைபயிற்சி சென்ற ஜனாதிபதி- அரவிந்தர் ஆசிரமத்தில் தியானம் செய்தார்

    • ஜனாதிபதி நடைபயிற்சிக்காக துப்புரவு பணியாளர்கள் கடற்கரை சாலையை சுத்தப்படுத்தியிருந்தனர்.
    • அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்ற ஜனாதிபதி அங்கு அரவிந்தர் மற்றும் அன்னை சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இரவு கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

    இன்று காலை 6 மணி முதல் 6.45 மணி வரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நடைபயிற்சி மேற்கொள்வார் என்பதால் அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள போலீசார் தடை விதித்திருந்தனர்.

    இன்று காலை 5.25 மணிக்கே தங்கியிருந்த விருந்தினர் மாளிகையிலிருந்து ஜனாதிபதி நடைபயிற்சிக்கு கிளம்பினார்.

    தொடர்ந்து ஜனாதிபதி கடற்கரை சாலையில் நடைபயிற்சி செய்தார். ஜனாதிபதி நடைபயிற்சிக்காக துப்புரவு பணியாளர்கள் கடற்கரை சாலையை சுத்தப்படுத்தியிருந்தனர். நகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் கடற்கரையில் இருந்தனர்.

    ஜனாதிபதி முன்கூட்டியே நடைபயிற்சி தொடங்கியதை தொடர்ந்து அவர்களும் ஜனாதிபதியோடு நடந்தனர். புஸ்சி வீதி விருந்தினர் மாளிகையிலிருந்து பழைய கலங்கரை விளக்கம் வரை ஜனாதிபதி நடந்து சென்று திரும்பினார்.

    அப்போது காந்தி சிலையை நின்று பார்த்தார். அங்கிருந்த அதிகாரிகள், சிலை வரலாறு குறித்து தெரிவித்தனர். பழைய கலங்கரை விளக்கம், புதிதாக நிறுவப்பட்டுள்ள தியாகச்சுவர், தேசிய கொடிக்கம்பம் ஆகியவற்றை ஜனாதிபதி பார்த்தார். அவரோடு நடந்து வந்த அதிகாரிகள் சிலர் ஜனாதிபதியுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

    மீண்டும் ஜனாதிபதி 6.05 மணிக்கு விருந்தினர் மாளிகைக்கு திரும்பினார். சுமார் 40 நிமிடம் ஜனாதிபதி நடைபயிற்சி மேற்கொண்டார்.

    பின்னர் காலை உணவு சாப்பிட்ட பின் புதுவை முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். அதன் பின்னர் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்ற ஜனாதிபதி அங்கு அரவிந்தர் மற்றும் அன்னை சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்தார்.

    அதனைதொடர்ந்து அங்கிருந்து ஜனாதிபதி ஆரோவில் சென்றார். அங்குள்ள மாத்ரி மந்திரில் தியானம் செய்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஓவிய கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்.

    அதன்பின்னர் அங்கு நடந்த அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசினார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி புதுவை ஆரோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×