search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plastic products"

    கடலூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
    கடலூர்:

    பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக கடலூரை மாற்ற வேண்டும் என்ற முழக்கத்துடன் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணி கடலூரில் நேற்று நடந்தது. இந்த பேரணிக்கு மாவட்ட கலெக்டர் வெ.அன்புசெல்வன் தலைமை தாங்கினார். தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 2003-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மழைநீர் சேகரிப்பு திட்டம் என்ற முன்னோடி திட்டத்தை கொண்டு வந்தார். அதேப்போல் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத தமிழகம் என்பது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முன்னோடி திட்டம் ஆகும். இந்த திட்டத்தை செயல்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தனி மனிதனுடைய சுற்றுப்புறத்தை பாதிக்கக்கூடியது. சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது. எனவே ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கடலூர் மாவட்டத்தில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழிப்பதில் முன்னோடி மாவட்டமாக கடலூர் மாவட்டம் திகழ வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

    பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பேரணி அண்ணா விளையாட்டரங்கில் தொடங்கி பாரதி ரோடு வழியாக சென்று மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கில் நிறைவு அடைந்தது.

    முன்னதாக கடலூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லா மாவட்டமாக மாற்றிட தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

    இந்த பேரணியில் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆனந்தராஜ், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) கோவிந்தராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் ஹெலன்ராணி, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுகம், மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் ரகுபதி மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அமைச்சர் எம்.சி.சம்பத் நிருபர்களிடம் கூறுகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது என்று அரசு அறிவித்துள்ளதால் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசு உணர்ந்துள்ளது. எனவே மாற்றுத்தொழில் தொடங்குவதற்கு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் அரசை அணுகினால், துணிப்பை, பேப்பர் கப், பாக்குமரத்தட்டு போன்ற சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களை உற்பத்தி செய்ய தொழில்நுட்ப உதவி, மானியம் போன்றவற்றை வழங்க அரசு தயாராக உள்ளது. எனவே அவர்கள் மாற்று தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்றார். 
    தூத்துக்குடி மாநகராட்சியில் நாளைமறுநாள்(புதன்கிழமை) முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலுக்கு வருவதாக, ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் நாளைமறுநாள்(புதன்கிழமை) முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலுக்கு வருவதாக, ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சி எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் விரிப்புகள், உணவு பதார்த்தங்கள் பார்சலுக்கு பயன்படுத்தும் கவர்கள், உணவு மேசை விரிப்புகள், தட்டுகள், பிளாஸ்டிக் ஒட்டப்பட்ட தட்டுகள், கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், அனைத்து வித பிளாஸ்டிக் பைகள், கொடிகள், உறிஞ்சு குழல்கள் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் தூத்துக்குடி மாநகராட்சியை பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இல்லாத நகரமாக அறிவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக கல்வி நிறுவனங்கள் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 67 வணிக கடைகளில் “பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் உணவு மற்றும் இதர பொருள்களின் பிளாஸ்டிக் பொதி தாள்களை சேகரித்து கொடுக்கும் 10 எண்ணத்திற்கு ஒரு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பிளாஸ்டிக் பொதி தாள்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. மேலும் வணிக நிறுவனங்களின் சார்பாக பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் தள்ளுபடி, சலுகைகள் மற்றும் இலவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதனால், பொதுமக்களிடம் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு, பிளாஸ்டிக் ஒழிப்பு செயல்பாடுகள் அதிகப்படியான வரவேற்பை பெற்று உள்ளது. எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டும் சுற்றுப்புறத்் தூய்மையை மேம்படுத்தும் வகையிலும் பொது மக்கள் தொடர்ந்து கடை வீதிகளுக்கு செல்லும் போது துணிப்பையை கொண்டு செல்லவும் இறைச்சி, உணவு பதார்த்தங்கள் வாங்கச் செல்லும் போது, பாத்திரங்களை கொண்டு செல்ல வேண்டும்.

    மேலும் வணிகர் சங்கங்கள் கையிருப்பில் உள்ள பேக்கிங் பொருட்களை முழுவதுமாக காலி செய்யும் வகையில் கால அவகாசம் நீடிப்பு செய்ய வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கையிருப்பில் உள்ள பேக்கிங் பொருட்களை காலி செய்ய 2 மாத கால அவகாசம் நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நாளைமறுநாள்(புதன்கிழமை) முதல் தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பேக்கிங் பொருட்களை தவிர இதர பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது. எனவே, தடை உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தும் பட்சத்தில் மாநகராட்சி சட்ட விதிகளின்படி தக்க மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதி செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.#MaduraiHighCourt
    மதுரை:

    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தை தூய்மையாக சுத்தமாக பராமரிக்கும் வகையிலும், பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்றும் வகையிலும் இன்று சிறப்பு தூய்மைப்பணி முகாம் நடந்தது.

    இதில் மாநகராட்சியின் சார்பில் 75துப்புரவு பணியாளர்களும், 4 டிராக்டர்களும், 1 டம்பர் பிளேசரும், 8 டம்பர் பின்களும், 1 டிப்பர் லாரியும், 1 ஜே.சி.பி. எந்திரமும், 1 மினிரோபோவும், 1 புகை பரப்பும் ஆட்டோவும், 4 கை கொசு புகைபரப்பும் எந்திரமும் ஈடுபடுத்தப்பட்டது.

    மேலும் தூய்மைப்பணிக்கான தளவாட சாமான்கள் மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை வாளிகள் பயன்படுத்தப்பட்டது.

    6-வது பட்டாலியனை சார்ந்த 40 காவலர்களும், 40 ஊராட்சி பணியாளர்களும், 45 மத்திய தொழிற்சாலை பாதுகாப்புபடை வீரர்களும் நீதிமன்ற பணியாளர்களும் இந்த தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

    குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து எடுக்கும் வகையில் பச்சை மற்றும் நீல நிற குப்பைத் தொட்டிகளையும், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாத துணிப்பைகளையும் நீதிபதிகள் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் செல்வம் (நிர்வாகம்), பசீர்அகமது, சுந்தர், நிஷாபானு, கிருஷ்ணவள்ளி, சுரேஷ் குமார், கலெக்டர் வீரராக வராவ், மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர், முதன்மை நகர்நல அலுவலர் சதீஷ் ராகவன், உதவி ஆணையாளர் பழனிச்சாமி, செயற்பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்கவேல், சித்திரைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட வளாகமாக ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதனை தொடர்ந்து கடைபிடித்தும் வருகிறோம். பொதுமக்கள் அனைவரும் சுற்றச்சுழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் கேரிபைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

    பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பையை உபயோகபடுத்தவேண்டும். ஏனென்றால் பிளாஸ்டிக் பையினை பூமியில் போட்டால் பல ஆண்டு காலத்திற்கு பிறகும் அது பிளாஸ்டிக் பொருளாகவே இருக்கும். பொதுமக்கள் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீங்கினை கருத்தில் கொண்டு முற்றிலுமாக தவிர்த்து மாற்று பொருளை உபயோகப்படுத்தவேண்டும். இயற்கை வளங்களை நாம் மதித்தால்தான் இயற்கை நம்மை மதிக்கும் என தெரிவித்தார். #MaduraiHighCourt
    நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை ஒழிக்க சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை ஒழிக்க சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் நடத்திய திடீர் சோதனையில் 46 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

    நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க 1998-ம் ஆண்டு தமிழகத்திலேயே முதல் முறையாக பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து உள்ளாட்சிகளில் ஒப்புதல் பெறப்பட்டு, கடந்த 2000-ம் ஆண்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மீது அபராதம் விதிப்பதற்கான உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து நீலகிரியில் பிளாஸ்டிக் பைகளில் பச்சை தேயிலை நிரப்புவதை குறைக்க மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தென்னை நாறில் இருந்து சாக்குப்பைகள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இதை முழுமையாக மகளிர் சுய உதவிக்குழுவால் செயல்படுத்த முடியவில்லை.

    மேலும் தேயிலைத்தூள் நிரப்பும் பைகளின் உள்பகுதியில் பிளாஸ்டிக் இருக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு, தற்போது துணிப்பைகளில் தேயிலைத்தூள் பேக்கிங் செய்யப்படுகிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடுகாணி, எருமாடு, கக்கனல்லா, பாட்டவயல், குஞ்சப்பனை, பர்லியார், முள்ளி ஆகிய சோதனைச் சாவடிகளில் சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை பெற்று, அவர்களிடம் துணிப்பைகள் வழங்கப்பட்டது. நாளடைவில் துணிப்பை வழங்குவது குறைக்கப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் விவரங்கள் மாவட்ட அரசிதழில் கடந்த மே மாதம் 9-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன் பின்னர் புகாரின் பேரில், ஊட்டி நகரில் 2 ஓட்டல்களில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து ரூ.55 ஆயிரம் நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க மாவட்ட அளவிலான சிறப்பு கண்காணிப்புக்குழு தற்போது அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த குழுவில் கலால்துறை தாசில்தார், ஊட்டி தாசில்தார், நகராட்சி அதிகாரிகள், உணவுத்துறை அதிகாரி மற்றும் அரசு துறை அதிகாரிகள் அடங்கி உள்ளனர். இந்த சிறப்பு கண்காணிப்புக்குழு அதிகாரிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். மார்க்கெட்டில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளில் 51 மைக்ரான் அளவுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப் படுகிறதா என்பது குறித்து பிளாஸ்டிக் தடிமானம் கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்தனர். இதில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கோட்டிங் போடப்பட்ட பேப்பர்கள் உள்ளிட்டவை 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் சோதனையால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதுபோல் கீழ்குந்தா பேருராட்சிக்குட்பட்ட மஞ்சூர் பஜாரில் அமைந்துள்ள அனைத்து வணிக வளாகங் களில் கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் குந்தா வட்ட வழங்கல் அலுவலர் ஷிராஜ் நிஷா முன்னிலையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் 2 கிலோ பிளாஸ்டிக் பேப்பர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் கிடைத்தன. இதனை தொடர்ந்து கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.3700 அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து கடைக் காரர்களிடம் எச்சரித்த செயல் அலுவலர் ரவிக்குமார், இனியும் பிளாஸ்டிக் பொருட் களை விற்பனை செய்வது, அடுத்த முறை சோதனையில் தெரிய வந்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பதுடன் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும் என கூறினார்.

    குன்னூர் பெட் போர்டு பகுதியில் உள்ள 5 கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன் படுத்தப்படுகிறதா? என்று நகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் ரகுநந்தன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மொத்த விற்பனை கடை மற்றும் 4 கடைகளில் சுமார் 34 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த 5 கடை களுக்கு 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் மொத்த விற்பனை துணி கடைக்குமட்டும் 53 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனை தொடரும் என்று அதிகாரிகள் கூறினர்.

    இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:-

    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதை வரவேற்கிறோம். இதன் மூலம் வனவிலங்குகள், கால்நடைகள், பறவைகள் பாதுகாக்கப்படும். அதிக அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், தற்போது பல்வேறு இடங்களில் விதிமுறைகளை மீறியும், அனுமதி இல்லாமலும் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை கண்டறிய பல்வேறு அரசு துறைகள் அடங்கிய ஒரு குழு மாவட்ட அளவில் அமைக்க வேண்டும். அப்போது தான் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் முழுமையாக பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
    பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பில் அரசு அலுவலகங்கள் முன் மாதிரியாக விளங்க வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்தார்.
    பெரம்பலூர்:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி 110-ன் மூலம் தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனையொட்டி இத்திட்டத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பிளாஸ்டிக் பொருட் களின் பயன்பாட்டை தடை செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கலெக்டர் சாந்தா தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை குறைக்கும் வகையிலும், அதற்கு பதிலாக மாற்று பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும், தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை குறைத்தல் தொடர்பான பயிற்சி பட்டறை வகுப்பில் ஒவ்வொரு அரசு அலுவலகங்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான நடைமுறை சாத்தியங்கள் குறித்தும், மாற்று பொருட்கள் பயன்பாடுகள் குறித்தும், அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தினை பெரம்பலூர் மாவட்டத்தில் முழுமையாக அமல்படுத்த அரசு அலு வலர்களும், பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை அனைத்து அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். இதன் மூலம் அரசு அலுவலகங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பில் பொதுமக்களுக்கு முன் மாதிரியாக விளங்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, திட்ட இயக்குனர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன், இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) டாக்டர் சசிகலா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் 15-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகிற 15-ந்தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் விரிப்புகள், உணவு பொருட் களை எடுத்து செல்ல பயன்படுத்தும் பிளாஸ் டிக் கைப்பைகள், தட்டுகள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகியவற்றை முற்றிலும் பயன்படுத்த கூடாது.

    எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து துறை அரசு அலுவலர்களும் கடைபிடிப்பதுடன் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை அனைத்து அலுவலகங்களிலும் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பை, காகிதப்பை, பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகிற 15-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
    நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு ஒழிப்பு குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு ஒழிப்பு குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்று ச்சூழலை மாசுபடுவதை தடுக்கவும் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக பசுமைப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ் டிக் பொருட்கள் அரசி தழில் வெளியிடப்பட்டது. அவைகள் அனைத்து தடிமனாலான பிளாஸ்டிக் பைகள், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கப்புகள், ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், கத்திகள், முள்கரண்டிகள், பிளாஸ்டிக் உறிஞ்சும் குழல், காகித கப்புகள், காகித டம்ளர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், ஸ்டைலோபோம் தெர்மாகோல் தட்டுகள் மற்றும் பிறவகை தெர்மகோல், நெய்யப்படாத வகையிலான பைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் சமையலர் தொப்பிகள், பிளாஸ்டிக் கையுறைகள், பிளாஸ்டிக் குடிநீர் பாக்கெட்டுகள், சில்வர் பூச்சு கொண்ட பைகள், பிளாஸ்டிக் பேக்கிங் செய்யப்படும் பொருட்கள், பூச்செண்டுகள் மற்றும் பரிசு பொருட்கள் சுற்றப்பயன்படும் பிளாஸ் டிக்குகள், லாமினே‌ஷன் செய்யப்பட்ட காக்கி தாள்கள், லாமினே‌ஷன் செய்யப்பட்ட பேக்கரி அட்டை பெட்டிகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவ தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் போன்றவைகள் ஆகும்.

    மாவட்டத்தின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு 51 மைக்ரானுக்கு மேற்பட்ட கவர்கள் (மளிகை தேயிலை மற்றும் பேக்கரி பொருட்களை பேக்கிங் செய்ய மட்டும், முடிச்சு கவர்களாக பயன்படுத்தக்கூடாது. உணவகங்களில் பயன்படுத்தும் சில்வர் பாயில் கண்டெயினர்கள் மற்றும் பேக்கரி பொருட்கள், சாக்லெட் பேக்கிங் செய்ய பயன்படுத்தும் பிளாஸ்டிக் கண்டெயினர்கள் , கட்டை கைப்பிடியுடன் கூடிய நெய்யப்படாத பைகள் ஆகியவற்றிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுப்பொருட்கள் கண்டறியும் வரை இந்த விதிவிலக்கு அளிக்கப்படு கிறது. இத்தடையை செவ்வனே பயன்படுத்தி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை பெருமளவில் குறைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைத்து வணிகர்களும், பொதுமக்களும் ஒத்து ழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ ராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை திரும்ப பெற வேண்டும் என்று பிளாஸ்டிக் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் தலைவர் ஜி.சங்கரன் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் ஆகியோர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    தமிழகத்தில் 10 ஆயிரம் பதிவு பெற்ற பிளாஸ்டிக் நிறுவனங்களும், 12 ஆயிரம் பதிவு பெறாத நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 95 சதவீத நிறுவனங்கள் சிறு மற்றும் குறுந்தொழில் வகையைச் சேர்ந்தவை.

    இவற்றின் மூலம் நேரடியாக 2 லட்சம் பேரும், மறைமுகமாக 3 லட்சம் பேரும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். அவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்.

    கந்து வட்டிக்கு கடன் வாங்கி, எந்திரங்களை கொள்முதல் செய்து, தொழிலை செய்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர். சிலர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடன் பெற்று தொழில் செய்து வருகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

    இது பிளாஸ்டிக் தொழில் செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

    இந்த அறிவிப்பானது தமிழகத்தில் உள்ள சிறு மற்றும் குறு பிளாஸ்டிக் தொழில் முனைவோர்கள் இடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பல லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனால் பிளாஸ்டிக் தொழிலை நம்பி இருக் கும் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமைத்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில், இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

    கடந்த 2004-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிளாஸ்டிக் தடை மசோதா தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, உண்மை நிலையை தெரிந்து கொண்டதால் அந்த மசோதாவை அவர் அமல்படுத்தவில்லை.

    எனவே முன்னாள் முதல்-அமைச்சர் செய்ய விரும்பாத செயலை, தற்போதைய முதல்-அமைச்சர் செய்யாமல், 110-விதியின் கீழ் அறிவித்த பிளாஸ்டிக் தடை அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Tamilnews
    பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்புக்கும், பயன்பாட்டிற்கும் முழு தடை விதிக்கவும், அதற்காக தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் முன்வர வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #GKVasan
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழக அரசு வருகின்ற 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்திற்கும், பயன்பாட்டிற்கும் தடை விதிப்பதாக அறிவித்திருக்கிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது.

    தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை வெறும் அறிவிப்பாக மட்டுமே அமைந்துவிடாமல் கண்டிப்பாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    எக்காரணத்திற்காகவும், எச்சூழலிலும், எக்காலத்திலும் தற்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடைக்கு தடை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் ஆளும் ஆட்சியாளர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும்.

    மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை இனிவரும் காலம் தோறும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது ஆளும் ஆட்சியாளர்கள் மற்றும் பொது மக்களின் கடமையாகும்.

    எனவே வருங்கால சந்ததியினருக்கும், சுற்றுச்சூழலுக்கும், விலங்கினங்களுக்கும், பறவைகளுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்கேற்ப பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்புக்கும், பயன்பாட்டிற்கும் முழு தடை விதிக்கவும், அதற்காக தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் முன்வர வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan
    பிளாஸ்டிக் தாள், தட்டு, கைப்பை, உறிஞ்சி போன்றவற்றை விற்பனை செய்ய தமிழக அரசு தடைவிதித்துள்ளது வரவேற்கதக்கது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ என்பதை 2018 உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐ.நா. முன்வைத்துள்ள நிலையில், பிளாஸ்டிக் தாள், தட்டு, கைப்பை, உறிஞ்சிகள் ஆகியவற்றை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது. 2019 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள தமிழக அரசின் இந்த அறிவிப்பை பா.ம.க. வரவேற்கிறது. ஆனால் மக்காத, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதிப்பது இது முதல்முறை அல்ல.ஏற்கனவே 7.5.2002 அன்று பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை சட்டப்பேரவையில் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்தார். ஆனால் 30.1.2003 அன்று வெளிப்படையான காரணம் எதுவும் இன்றி அச்சட்டத்தை திரும்பப்பெற்றார்.

    அப்போது அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் 15 ஆண்டுகள் கழித்து தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் தடை சட்டத்துக்கு 2003-ம் ஆண்டில் ஏற்பட்ட நிலைமை, இப்போதைய புதிய அறிவிப்புக்கும் ஆகிவிடக்கூடாது. இந்த புதிய பிளாஸ்டிக் தடை அறிவிப்பை அரசு உறுதியாக செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு சூத்திரதாரிகள் தமிழக ஆட்சியாளர்கள் தான். அவர்களின் சதிக்கு அதிகாரிகளை பகடைக்காய்களாக பயன்படுத்தி தப்பிக்க முயற்சிக்கின்றனர். இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள பொம்மை ஆணையத்தால் எந்த பயனும் விளையாது. இதுகுறித்து பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதிகளை கொண்டு விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, துப்பாக்கி சூட்டுக்கு காரணமான அரசு உடனடியாக பதவி விலகவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×