search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
    X

    பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

    பிளாஸ்டிக் தாள், தட்டு, கைப்பை, உறிஞ்சி போன்றவற்றை விற்பனை செய்ய தமிழக அரசு தடைவிதித்துள்ளது வரவேற்கதக்கது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ என்பதை 2018 உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐ.நா. முன்வைத்துள்ள நிலையில், பிளாஸ்டிக் தாள், தட்டு, கைப்பை, உறிஞ்சிகள் ஆகியவற்றை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது. 2019 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள தமிழக அரசின் இந்த அறிவிப்பை பா.ம.க. வரவேற்கிறது. ஆனால் மக்காத, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதிப்பது இது முதல்முறை அல்ல.ஏற்கனவே 7.5.2002 அன்று பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை சட்டப்பேரவையில் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்தார். ஆனால் 30.1.2003 அன்று வெளிப்படையான காரணம் எதுவும் இன்றி அச்சட்டத்தை திரும்பப்பெற்றார்.

    அப்போது அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் 15 ஆண்டுகள் கழித்து தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் தடை சட்டத்துக்கு 2003-ம் ஆண்டில் ஏற்பட்ட நிலைமை, இப்போதைய புதிய அறிவிப்புக்கும் ஆகிவிடக்கூடாது. இந்த புதிய பிளாஸ்டிக் தடை அறிவிப்பை அரசு உறுதியாக செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு சூத்திரதாரிகள் தமிழக ஆட்சியாளர்கள் தான். அவர்களின் சதிக்கு அதிகாரிகளை பகடைக்காய்களாக பயன்படுத்தி தப்பிக்க முயற்சிக்கின்றனர். இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள பொம்மை ஆணையத்தால் எந்த பயனும் விளையாது. இதுகுறித்து பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதிகளை கொண்டு விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, துப்பாக்கி சூட்டுக்கு காரணமான அரசு உடனடியாக பதவி விலகவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×