search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர்  மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் - அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு
    X

    கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் - அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு

    கடலூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
    கடலூர்:

    பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக கடலூரை மாற்ற வேண்டும் என்ற முழக்கத்துடன் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணி கடலூரில் நேற்று நடந்தது. இந்த பேரணிக்கு மாவட்ட கலெக்டர் வெ.அன்புசெல்வன் தலைமை தாங்கினார். தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 2003-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மழைநீர் சேகரிப்பு திட்டம் என்ற முன்னோடி திட்டத்தை கொண்டு வந்தார். அதேப்போல் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத தமிழகம் என்பது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முன்னோடி திட்டம் ஆகும். இந்த திட்டத்தை செயல்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தனி மனிதனுடைய சுற்றுப்புறத்தை பாதிக்கக்கூடியது. சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது. எனவே ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கடலூர் மாவட்டத்தில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழிப்பதில் முன்னோடி மாவட்டமாக கடலூர் மாவட்டம் திகழ வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

    பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பேரணி அண்ணா விளையாட்டரங்கில் தொடங்கி பாரதி ரோடு வழியாக சென்று மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கில் நிறைவு அடைந்தது.

    முன்னதாக கடலூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லா மாவட்டமாக மாற்றிட தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

    இந்த பேரணியில் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆனந்தராஜ், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) கோவிந்தராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் ஹெலன்ராணி, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுகம், மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் ரகுபதி மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அமைச்சர் எம்.சி.சம்பத் நிருபர்களிடம் கூறுகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது என்று அரசு அறிவித்துள்ளதால் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசு உணர்ந்துள்ளது. எனவே மாற்றுத்தொழில் தொடங்குவதற்கு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் அரசை அணுகினால், துணிப்பை, பேப்பர் கப், பாக்குமரத்தட்டு போன்ற சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களை உற்பத்தி செய்ய தொழில்நுட்ப உதவி, மானியம் போன்றவற்றை வழங்க அரசு தயாராக உள்ளது. எனவே அவர்கள் மாற்று தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்றார். 
    Next Story
    ×