search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panguni festival"

    • மாரியம்மன் கோவில் பங்குனி விழா நடந்தது.
    • ஏற்பாடுகளை டிரஸ்டி லட்சுமணராக்கு சுவாமிகள், செர்டுபாண்டி, போதும் பொண்ணு மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் அம்ம னுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெறும்.

    விழாவையொட்டி அம்மன் கையில் காப்புகட்டும் பூஜை நடந்தது. நாளை (5-ந்தேதி) திருவிளக்கு பூஜையும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா 6-ந்தேதியும் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, வேல் குத்துதல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். இதற்கான ஏற்பாடுகளை டிரஸ்டி லட்சுமணராக்கு சுவாமிகள், செர்டுபாண்டி, போதும் பொண்ணு மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். 

    • இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை நடக்கிறது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில சாஸ்தா கோவில்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    இந்த மாவட்டங்களில் உள்ள சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாஸ்தா கோவில்களில் பொதுமக்கள் திரண்டு வழிபடுவார்கள். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை நடக்கிறது.

    இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில சாஸ்தா கோவில்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடை பெற்றது.

    அந்த வகையில் சிறப்பு பெற்ற தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. இரவு 8 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இன்று அதிகாலை தாமிரபரணி ஆற்றில் புனித நீர் எடுத்துவரப்பட்டு கற்குவேல் அய்யனார், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.

    இதில் கலந்து கொள்வதற்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மட்டுமின்றி சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று கோவிலில் வந்தனர்.

    பங்குனி உத்திரத்தையொட்டி நாளை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இன்று மகாவீரர் ஜெயந்தி விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

    மேலப்புதுக்குடி எட்டு பங்கு இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று தொடங்கியது. காலை 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதலே கோவிலில் குவிந்தனர். அவர்கள் அருஞ்சுனை தீர்த்தத்தில் புனித நீராடிய பின்னர் கோவிலில் வழிபட்டனர். பிற்பகல் சிறப்பு அலங்கார தீபாராதனை, உபய நிமித்தங்கள் செலுத்தி அய்யனாரை வழிபடுதல் உள்ளிட்டவை நடைபெற்றது.

    பங்குனி உத்திர திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினரான ஆத்திக்கண் நாடார், செந்தில் நாடார், அகோபால் நாடார், நாராயணராம் நாடார், உதயகுமார் நாடார், சுப்பிரமணியன் நாடார், தினேஷ் நாடார், கண்ணன் நாடார் ஆகியோர் செய்திருந்தனர்.

    ஆண்டுதோறும் பாப நாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் திரள்வார்கள். இங்கு நாளை பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது.

    வழக்கமாக முந்தைய நாளே பொதுமக்கள் வேன், கார், மோட்டார் சைக்கிள்களில் வந்து கோவில் அருகே குடில் அமைத்து தங்குவார்கள். இந்த ஆண்டு நாளை பங்குனி உத்திர திருவிழா நடப்பதை யொட்டி இன்று முதலே பொதுமக்கள் அங்கு குவியத் தொடங்கி உள்ளனர். இன்று இரவு முதல் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று தங்குவதற்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. வள்ளியூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சித்தூர் மகாராசுவரர் கோவிலில் நாளை பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது.

    இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சாஸ்தா வழிபாடு நாளை நடைபெற உள்ளது. பக்தர்கள் வசதிக்காக நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.

    • உற்சவர் முருகப்பெருமானுக்கு 250 பால்குட அபிஷேகம் நடந்தது.
    • பொது வழியில் மூலவரை தரிசிக்க, 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா இன்று விமரிசையாக நடை பெற்றது. இதைதொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கவேல், தங்ககீரிடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தனர். 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள், மயில்காவடிகள் எடுத்தும், 250 பெண்கள் பால்குடம் தலையில் சுமந்தும், மலையடிவாரத்தில் உள்ள திருக்குளத்தில் இருந்து மலைப்படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர்.

    காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு, விபூதி, நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம் மற்றும் 250 பால்குட அபிஷேகம் நடந்தது.

    மதியம் 1 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாரா தனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பங்குனி உத்திரம் விழாவையொட்டி மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொளுத்தும் வெயிலால், பக்தர்களின் வசதிக்காக மலைக்கோவில் வளாகத்தில் வெள்ளை வண்ணம் பூசப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

    • தீர்த்தக்குடங்களை அலங்கரிக்க காவடி கயிறுகள் பயன்படுகின்றன.
    • காவடி கயிறுகள் மிக அழகான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும்.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், கார்த்திகை திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்பு பெற்றதாகும். தேவர்களை காக்க பன்னிரு கைகள், அறுமுகங்களோடு முருகப்பெருமான் சூரர்களுடன் போரிட்டு வெற்றி கண்டார். அதைத்தொடர்ந்து முருகனுக்கு இந்திரன் தன் மகள் தெய்வானையை பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் திருமணம் செய்து கொடுக்கின்றார். இந்த நாளே பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    பங்குனி உத்திர திருவிழாவில் கொங்கு பகுதி மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து மேள, தாளம் முழங்க பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். பின்னர் முருகப்பெருமானுக்கு தாங்கள் கொண்டு வந்த தீர்த்தத்தை அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

    தீர்த்தம் நிறைந்த செம்பை தீர்த்தக்குடம் என்றும், தீர்த்தக்காவடி என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். தீர்த்தக்குடங்களை அலங்கரிக்க காவடி கயிறுகள் பயன்படுகின்றன. காவடி கயிறுகள் மிக அழகான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். குடத்தை மூடுவதற்கு வண்ண, வண்ண பட்டு துணிகளை பயன்படுத்துகின்றனர். தீர்த்தக்காவடி குடத்தை பக்தர்கள் தங்களது தலையில் வைத்து கைகளால் 2 புறத்தில் உள்ள கயிற்றை பிடித்து சுமக்கின்றனர்.

    பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவின்போது கொடுமுடியில் இருந்து தீர்த்தக்காவடி கொண்டு வருவதற்கு கொங்கு பகுதி கிராமங்களில் பழனி முருகன் கோவில் தீர்த்தக்காவடி சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். தீர்த்தக்குடத்தில் பழம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, இனிப்பு வகைகளை உள்ளே போட்டு துணியால் மூடி கட்டுகின்றனர். இந்த தீர்த்தக்காவடி எடுப்பதன் மூலம் நம்மை பிடித்துள்ள பாவ, கர்ம வினைகள் நீங்கும். ஆயுள், செல்வம் பெருகும்.

    • தெய்வ திருமணங்கள் பல, பங்குனி உத்திர நாளில்தான் நிகழ்ந்தன.
    • காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்தது பங்குனி உத்திரத்தன்று தான்.

    * தெய்வ திருமணங்கள் பல, புனிதமான இந்த பங்குனி உத்திர திருநாளில்தான் நிகழ்ந்தன.

    * மீனாட்சி-சுந்தரேசுவரர், முருகன்-தெய்வானை, ஆண்டாள்-ரெங்கமன்னார், ராமர்-சீதா தேவி திருமணங்கள் பங்குனி உத்திர திருநாளில் நடந்தன.

    * முருகனின் துணைவியான குறமகள் வள்ளி, ஐயப்பன், வில்வித்தையில் சிறந்தவரும், பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் ஆகியோர் பங்குனி உத்திர நாளன்று பிறந்தனர்.

    * சிவபெருமான், தனது நெற்றிக்கண் கொண்ட நெருப்பினால் சாம்பலாக்கிய பின், ரதியின் வேண்டுகோளை ஏற்று மன்மதனை எழுப்பியதும் பங்குனி உத்திர நாளில்தான்.

    * இந்திராணியை பிரிந்து, பின்னர் கடும் விரதம் மேற்கொண்ட தேவலோக அதிபதி இந்திரன் மீண்டும் மனைவியை அடைந்தது பங்குனி உத்திரத்தன்று தான்.

    * மகாலட்சுமி உத்திர விரதத்தை அனுசரித்து விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றது பங்குனி உத்திர திருநாளில் தான்.

    * 27 கன்னியர்களை தனது மனைவிகளாக சந்திரன் ஏற்றுக் கொண்டது பங்குனி உத்திர நாளில் தான்.

    * காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்தது பங்குனி உத்திரத்தன்று தான்.

    • தாரகாசூரன், சிறுவன் என முருகனை கேலி செய்தான்.
    • கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார்.

    பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாள், பங்குனி உத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில்தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப் பெருமான் தன் தாய், தந்தையை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். குதிரைகள் பூட்டிய தேரில் முருகப்பெருமானுக்கு வாயு பகவான் சாரதியாக இருக்க முருகனின் படைகள் அணிவகுத்துச் சென்றன.

    அப்போது வழியில் ஒரு சிறியமலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாகப் பெரிதாகவளர ஆரம்பித்தது. காரணம் அறியாது அனைவரும் திகைத்து நின்றனர். அங்கிருந்த நாரதர் அம்மலையைப் பற்றிச் சொல்ல தொடங்கினார்.

    இந்த மலை ரவுஞ்சன் என்னும் அசுரனாக இருந்து, எல்லோருக்கும் எல்லையில்லா தீமைகளை புரிந்த தீயசக்தி ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னைக் கடந்து செல்பவர்களை ஏமாற்றித் தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்று மலையைப் பற்றிச் சொன்னவர், இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில் சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் சொன்னார்.

    அதைக் கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்துக் கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படிக் கட்டளையிட்டார். தலைவரின் கட்டளைப்படி வீரபாகுவின் தலைமையில் முருகனின் படைகள் மாயாபுரி பட்டினத்திற்குள் நுழைந்தன. விஷயமறிந்து தாரகாசுரனும், பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். ஆயுதங்களும், அஸ்திரங்களும் மோதின. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர்.

    போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான வீரகேசரியைத்தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்ததைக் கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனைக் கடுமையாகத் தாக்கினான். கோபம் கொண்ட தாரகாசுரன் தினமும் பூஜை செய்யப்பட்ட சிவசக்தியை எறிய, தன் கூர்மையான திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மூர்ச்சையாகி விழுந்த வீரபாகுவையும், முருகப்பெருமானையும் தாரகாசுரன் எள்ளி நகையாட, தலைமையற்ற நிலையில் முருகப் படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின.

    மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு மூர்க்கத்தனமாகத் தாக்க, எதிர்தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலைதன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது வேறுவழியின்றி மலைக்குள் அகப்பட்டு நிற்கும் வேளையில், வெளியில் தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்படைகளைப் பெரிய அளவில் தாக்கி அழித்தன.

    தளபதியும், வீரர்களும் இடர்பட்டும், தாக்கப்பட்டும் நிற்பதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க்களத்திற்கு வந்தார். வந்தவரின் வலிமையறியாத தாரகாசுரன், சிறுவன் என எள்ளி நகையாட, கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனைக் கடுமையாகத்தாக்க ஆரம்பித்தார். தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளைக் காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான் தன் வேலாயுதத்தைக் கையில் எடுத்து வீசி எறிந்தார்.

    துள்ளி வந்த வேல், கிரவுஞ்ச மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து தாரகா சுரனைக் கொன்றது. தாரகாசுரனைக் கொன்ற முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும். பங்குனி உத்திரத்தன்று விரதமிருந்து, திருமுகனை வேண்டினால், பிறவிப்பலனையும், நாற்பத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து இவ்விரதம் இருந்து வந்தால் அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீகத்தன்மையையும் அடையலாம் எனப் புராணங்கள் கூறுகின்றன.

    • கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி படப்பு போட்டு வழிபாடு நடத்துவார்கள்.
    • சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல நாளை இரவு முதல் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது

    தென்மாவட்டங்களில் பொதுமக்கள் கொண்டாடும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழாவும் ஒன்றாகும். இந்நாளில் மக்கள் தங்களது குல தெய்வமான சாஸ்தாவை குடும்பத்துடன் சென்று வழிபட்டுவது வழக்கம்.

    குலதெய்வத்தை வழிபடுவதால் நமக்கு முன்னோர்களின் ஆசியும், ஆண்டவனின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். சாப விமோசனம், திருமண தடை நீங்கும். மனதில் நினைத்த காரியம் நடக்கும்.

    இந்த சாஸ்தா கோவில்கள் பெரும்பாலும் கிராம பகுதியிலும், காட்டு பகுதியிலும், குளக்கரையிலும் தான் அதிகம் இருக்கின்றன. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கிறது. இந்த 3 மாவட்டங்களிலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாஸ்தா கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்களில் சாஸ்தா அதாவது அய்யனார், பூரண, புஷ்கலை என்ற தேவியரோடு காட்சி தருவார். சாஸ்தாவுக்கு பிரதான காவல் தெய்வமான கருப்பசாமி எதிரே குதிரை வாகனத்துடன் காட்சி தருவார். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    அன்று அதிகாலை 5 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கும். பக்தர்கள் பொங்கலிட்டு, சைவ படப்பு போட்டு வழிபடுவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு பிறகு கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி படப்பு போட்டு வழிபாடு நடத்துவார்கள்.

    இதற்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சாஸ்தா கோவில்களில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி கோவிலில் சுவாமியின் பூடங்கள் கழுவி சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான கோவில்களில் வர்ணம் பூசி புதுப்பிக்கும் பணிகள் முடிவடைந்து பந்தல் போடுதல், வண்ண விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில், சேரன்மாதேவி செங்கொடி சாஸ்தா, பூதத்தான் குடியிருப்பு பொன்பெருமாள் சாஸ்தா, கல்லிடைக்குறிச்சி மலையன்குளம் பாடக மகாலிங்க சாஸ்தா, பிராஞ்சேரி வீரியபெருமாள் கரையடி மாடசாமி சாஸ்தா, நெல்லை டவுன் முருங்கையடி சாஸ்தா, மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா உள்ளிட்ட ஏராளமான சாஸ்தா, அய்யனார் கோவில்களில் பங்குனி உத்திரத்திருவிழா நாளை நடக்கிறது. இதனையொட்டி கோவில்களில் நாளை காலை முதல் நாளை மறுநாள்(புதன்கிழமை) இரவு வரை சிறப்பு பூஜை களும், அன்னதானங்களும் நடக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டும் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல மேலப்புதுக்குடியில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா நாளை விமரிசையாக நடக்கிறது.

    தென்காசி மாவட்டத்திலும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சாஸ்தா வழிபாடு நாளை நடைபெற உள்ளது.

    ஆண்டுதோறும் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திரளான பொதுமக்கள் வேன், கார், மோட்டார் சைக்கிள்களில் வந்து முந்தைய நாளே கோவில் அருகே குடில் அமைத்து தங்குவார்கள். இந்த ஆண்டு நாளை மறுநாள்(புதன்கிழமை) அங்கு பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

    இதற்காக நாளை இரவு முதல் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று தங்குவதற்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதையொட்டி நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து உள்மாவட்டத்திற்கு மட்டுமல்லாது தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 8-ந்தேதி ஹோமம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
    • 9-ந்தேதி தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நடக்கிறது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவமும் ஒன்றாகும்.

    இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு அன்று காலை 10.30 மணிக்கு மேல் பகல் 12 மணிக்குள் சாமி சன்னதியில் சாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

    முன்னதாக கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. அன்று இரவு 8 மணி அளவில் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் முன்பு சாமியும், அம்மனும் எழுந்தருளி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும்.

    இரவு 11 மணி அளவில் திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர் திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் சாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி உலா வருகின்றனர்.

    அதனைத்தொடர்ந்து 5-ந் தேதி இரவு 8 மணி அளவில் கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகப்படி நிகழ்ச்சியும், 6-ந் தேதி இரவு கோவிலில் திருக்கல்யாண மண்டபத்தில் நலங்கு உற்சவம் நடக்கிறது. மறுநாள் 7-ந் தேதி காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் ஹோமம் மற்றும் இரவு ஊஞ்சல் உற்சவமும், 8-ந் தேதி காலை ஹோமம் மற்றும் இரவு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

    9-ந் தேதி பகல் 12 மணிக்கு தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சியும், தாமரைக்குளம் ராஜா மண்டபத்தில் அபிஷேகமும் மாலையில் குமர கோவிலில் மண்டப படியும் நடக்கிறது. அன்று இரவு காமாட்சி அம்மன் கோவில் தெரு வழியாக சாமி வீதி உலாவும் நடைபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் ஏகாம்பரேஸ்வரர், காசி விஸ்வநாதர் ஆகிய கோவில்களில் வருகிற 4-ந் தேதி மாலை 5 மணிஅளவில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

    இதை முன்னிட்டு காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடக்கிறது. மாலை 5 மணிஅளவில் சீர்வரிசை நிகழ்ச்சி, மாலை 6 மணிஅளவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

    இரவு 7.30 மணிஅளவில் பஞ்ச மூர்த்திகளுடன் சாமி திருவீதி உலாவும் நடக்கிறது.

    • குலதெய்வம் வழிபாடு அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும்.
    • பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.

    நாம் நினைக்கும் போது உதவி செய்யும் தெய்வமே குலதெய்வம் ஆகும். நம்முடைய சமுதாயத்தில் ஒவ்வொரு குடும்ப வகைகளுக்கும்,ஒவ்வொரு குல தெய்வம் இருக்கும்.

    குலதெய்வம் வழிபாடு அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். நம்முடைய வீட்டில் எந்த சுபகாரியங்கள் செய்தாலும், முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் ஆரம்பிக்கவேண்டும். எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து விட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும். மேலும் வருடந்தோறும் நம்முடைய குலதெய்வத்தை வழிபடுவதால் நன்மைகளும்,சந்தோசங்களும் குடும்பத்தில் நிலவும் என்பது உண்மை.

    நீங்கள் எந்த சுப காரியங்கள் செய்யும் முன், குலதெய்வத்தை நேரில் தரிசிக்க முடியாவிட்டால், ஒரு தேங்காயை எடுத்துக்கொள்ளுங்கள். வீட்டின் வாசலுக்கு வந்து சூரியனை கும்பிட்டுவிட்டு உங்க வீட்டிற்கு எந்த திசையில் உங்கள் குலதெய்வம் இருக்கிறதோ, அந்த திசையை பார்த்து குலதெய்வத்தை மனதுக்குள் துதித்துக்கொண்டே தேங்காயை உடைத்து விட்டு நீங்க செய்யப்போகும் சுப காரியத்தை செய்யுங்கள். கண்டிப்பாக குலதெய்வம் உங்களை எப்போதும் பாதுகாக்கும். இதை, குலதெய்வ ஆலயத்திற்கு தொலை தூரத்தில் இருப்பவர்கள் செய்யலாம். மற்றபடி குல தெய்வ ஆலயங்களின் அருகில் இருப்பவர்கள் கட்டாயம் எந்த சுப காரியங்களை செய்வதற்கு முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு செய்வது தான் நல்லது.

    பங்குனி உத்திரம் நாளில் குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.. மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.

    குலதெய்வ கோவில்களான காவல் தெய்வங்கள் என அழைக்கப்படும் கோவில்களுக்கு பங்குனி உத்திரத்தன்று சென்று வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த குலதெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் திருகார்த்திகையின்போதும், பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் மேற்கொள்வார்கள். இதில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

    இந்த ஆண்டு 2023,ஏப்ரல் / 5 ஆம் நாள் ( 5-4-2023) பங்குனி உத்திர நட்சத்திர நாள் ஆகும். அன்றைய தினம் பௌர்ணமி என்பதால் வழிபட, மிகமிக உகந்த நாளாகவும் அமைகிறது. மற்ற நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவதுடன், பங்குனி உத்திரம் நாளில் சென்று வழிபடுவது மேலும் நல்ல நற்பயனைப் பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது !

    பங்குனி மாத பௌர்ணமியில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை தரிசித்து வாருங்கள். வழக்கமாக உங்கள் முன்னோர்களால் செய்யப்படும் பூஜைகள், அபிஷேகங்கள் செய்து பொங்கல் இட்டு குடும்பத்தோடு ஒற்றுமையாக வழிபட்டால் புண்ணிய பலன்களோடு முன்னோர்களது ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வழிபாடு முடிந்ததும் அங்கேயே சமைத்து பந்தி போட்டு பரிமாறி வீடு திரும்புவதும், குலதெய்வத்தை திருப்திப்படுத்தும்.

    பங்குனி உத்திரத்தன்று வெளியூரிலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள் தவிர்க்க இயலாத காரணத்தினால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லையென்றால் வீட்டின் பூஜையறையில் இருக்கும் குலதெய்வத்துக்கு படையல் இட்டு மனம் உருகி வழிபாடு செய்யலாம். குலம் சிறக்கவும், குடும்பம் மேன்மை பெறவும் குலதெய்வத்தை மகிழ்விக்க பங்குனி உத்திர நாளே நல்ல நாள்... ஒருவரது குலத்தை வழி வழியாக பாதுகாக்கும் வலிமையும், சக்தியும் குலதெய்வத்துக்கே உண்டு.

    மேலும் இந்த பங்குனி உத்திர தினம் ஒரு அற்புதமான தினம். இந்த தினத்தில் அனைத்து தெய்வங்களுக்கும் திருமணம் நடந்தது. குறிப்பாக சபரி சாஸ்தா என சொல்லக்கூடிய ஐயப்பன் அவதரித்தது பங்குனி உத்திர தினம் அன்றுதான். முருகப்பெருமான் திருமணமும் அன்றுதான். இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திரத்தன்று குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை பூஜை செய்து இறைவனின் ஆசியைப் பெறுவோம்...!

    தொடர்புக்கு:- 9442729693

    • குடம் குடமாக சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறும்.
    • சர்வ அலங்காரம், தீப, தூப, பூஜைகள் நடைபெறும்.

    பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலை மலை முருகன் கோவிலும் ஒன்றாகும். மதுரையை அடுத்த அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழா 4-ந் தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி அன்று காலை 10 மணிக்கு அழகர் மலை அடிவாரத்தில் உள்ள 18-ம் படி கருப்பணசுவாமி ராஜகோபுரம் முன்பு இருந்து பக்தர்கள் 108 பால் குடங்கள் பாதயாத்திரையாக சோலைமலை முருகன் கோவிலுக்கு எடுத்து செல்வார்கள். பின்னர் பகல் 12 மணிக்கு மூலவர் சுவாமிக்கு உச்சிகால பூஜைகள் நடைபெறும். குடம் குடமாக சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறும்.

    பின்னர் சர்வ அலங்காரம், தீப, தூப, பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து உற்சவர் வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமி, பல்லக்கில் எழுந்தருளி, மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் வெளி பிரகாரங்களின் வழியாக புறப்பாடு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
    • சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு வள்ளி அம்பாள் தபசுக்கு எழுந்தருளுகிறார்.

    மாலை 5 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி மேலக்கோவில் பந்தல் மண்டப முகப்பிற்கு செல்கிறார். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்கள். இரவு 10 மணிக்கு கோவிலில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    வார விடுமுறை தினமான நேற்று கோவிலுக்கு வந்த திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான கீழ நாலுமூலைக்கிணறு குன்று மேலய்யன் சாஸ்தா கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் நடக்கிறது. அன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் மற்றும் பந்தல் வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • 2 நாட்கள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் மலை மேல் செல்ல அனுமதி இல்லை.

    பங்குனி மாதம் வரும் பவுர்ணமியில் அனைத்து முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டா டப்படும். கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

    இங்கு பங்குனி உத்திர திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை 2 நாட்கள் நடக்கிறது.

    நாளை மறுநாள் அதிகாலை 6 மணிக்கு கோபூஜை நடக்கிறது. அதை தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வரும் பால்குடம், பால் காவடிகள் மூலம் முருகப்பெருமானுக்கு மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள், காலை 8 மணிக்கு பால், பன்னீர், ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் ராஜ அலங்காரத்தில் சுப்பிரமணிய சாமி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்கிறார். 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, பாலாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறுகிறது. இதையடுத்து சுப்பிரமணியசாமி - வள்ளி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் அர்த்தமண்டபத்தில் எழுந்தருள்கிறார். மாலை 6 மணிக்கு சாயரட்ச பூஜை, தங்க ரதத்தில் சுப்பிரமணிய சாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார்.

    நாளை மற்றும் நாளைமறுநாள் ஆகிய 2 நாட்களும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் மலை மேல் செல்ல அனுமதி இல்லை.

    அதற்கு பதிலாக மலைக்கோவில் செல்வதற்கு கோவில் சார்பில் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதன் மூலம் பக்தர்கள் மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

    விழா ஏற்பாடுகளை மருதமலை கோவில் துணை ஆணையர் ஹர்சினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×