search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    பாவ வினை தீர்க்கும் தீர்த்தக்காவடி
    X

    பாவ வினை தீர்க்கும் தீர்த்தக்காவடி

    • தீர்த்தக்குடங்களை அலங்கரிக்க காவடி கயிறுகள் பயன்படுகின்றன.
    • காவடி கயிறுகள் மிக அழகான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும்.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், கார்த்திகை திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்பு பெற்றதாகும். தேவர்களை காக்க பன்னிரு கைகள், அறுமுகங்களோடு முருகப்பெருமான் சூரர்களுடன் போரிட்டு வெற்றி கண்டார். அதைத்தொடர்ந்து முருகனுக்கு இந்திரன் தன் மகள் தெய்வானையை பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் திருமணம் செய்து கொடுக்கின்றார். இந்த நாளே பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    பங்குனி உத்திர திருவிழாவில் கொங்கு பகுதி மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து மேள, தாளம் முழங்க பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். பின்னர் முருகப்பெருமானுக்கு தாங்கள் கொண்டு வந்த தீர்த்தத்தை அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

    தீர்த்தம் நிறைந்த செம்பை தீர்த்தக்குடம் என்றும், தீர்த்தக்காவடி என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். தீர்த்தக்குடங்களை அலங்கரிக்க காவடி கயிறுகள் பயன்படுகின்றன. காவடி கயிறுகள் மிக அழகான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். குடத்தை மூடுவதற்கு வண்ண, வண்ண பட்டு துணிகளை பயன்படுத்துகின்றனர். தீர்த்தக்காவடி குடத்தை பக்தர்கள் தங்களது தலையில் வைத்து கைகளால் 2 புறத்தில் உள்ள கயிற்றை பிடித்து சுமக்கின்றனர்.

    பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவின்போது கொடுமுடியில் இருந்து தீர்த்தக்காவடி கொண்டு வருவதற்கு கொங்கு பகுதி கிராமங்களில் பழனி முருகன் கோவில் தீர்த்தக்காவடி சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். தீர்த்தக்குடத்தில் பழம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, இனிப்பு வகைகளை உள்ளே போட்டு துணியால் மூடி கட்டுகின்றனர். இந்த தீர்த்தக்காவடி எடுப்பதன் மூலம் நம்மை பிடித்துள்ள பாவ, கர்ம வினைகள் நீங்கும். ஆயுள், செல்வம் பெருகும்.

    Next Story
    ×