search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது
    X

    குரும்பூர் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் முன்பு திரண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது

    • இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை நடக்கிறது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில சாஸ்தா கோவில்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    இந்த மாவட்டங்களில் உள்ள சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாஸ்தா கோவில்களில் பொதுமக்கள் திரண்டு வழிபடுவார்கள். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை நடக்கிறது.

    இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில சாஸ்தா கோவில்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடை பெற்றது.

    அந்த வகையில் சிறப்பு பெற்ற தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. இரவு 8 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இன்று அதிகாலை தாமிரபரணி ஆற்றில் புனித நீர் எடுத்துவரப்பட்டு கற்குவேல் அய்யனார், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.

    இதில் கலந்து கொள்வதற்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மட்டுமின்றி சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று கோவிலில் வந்தனர்.

    பங்குனி உத்திரத்தையொட்டி நாளை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இன்று மகாவீரர் ஜெயந்தி விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

    மேலப்புதுக்குடி எட்டு பங்கு இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று தொடங்கியது. காலை 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதலே கோவிலில் குவிந்தனர். அவர்கள் அருஞ்சுனை தீர்த்தத்தில் புனித நீராடிய பின்னர் கோவிலில் வழிபட்டனர். பிற்பகல் சிறப்பு அலங்கார தீபாராதனை, உபய நிமித்தங்கள் செலுத்தி அய்யனாரை வழிபடுதல் உள்ளிட்டவை நடைபெற்றது.

    பங்குனி உத்திர திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினரான ஆத்திக்கண் நாடார், செந்தில் நாடார், அகோபால் நாடார், நாராயணராம் நாடார், உதயகுமார் நாடார், சுப்பிரமணியன் நாடார், தினேஷ் நாடார், கண்ணன் நாடார் ஆகியோர் செய்திருந்தனர்.

    ஆண்டுதோறும் பாப நாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் திரள்வார்கள். இங்கு நாளை பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது.

    வழக்கமாக முந்தைய நாளே பொதுமக்கள் வேன், கார், மோட்டார் சைக்கிள்களில் வந்து கோவில் அருகே குடில் அமைத்து தங்குவார்கள். இந்த ஆண்டு நாளை பங்குனி உத்திர திருவிழா நடப்பதை யொட்டி இன்று முதலே பொதுமக்கள் அங்கு குவியத் தொடங்கி உள்ளனர். இன்று இரவு முதல் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று தங்குவதற்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. வள்ளியூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சித்தூர் மகாராசுவரர் கோவிலில் நாளை பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது.

    இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சாஸ்தா வழிபாடு நாளை நடைபெற உள்ளது. பக்தர்கள் வசதிக்காக நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×