search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new bus station"

    • பஞ்சப்பூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணியில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வாய்ப்பு வழங்க கோரி மனு அளித்தனர்.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலெக்டரிடம் அளித்தனர்

    திருச்சி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி செயலாளர் வேலுச்சாமி மற்றும் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரு மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;-

    திருச்சி பஞ்சப்பூர், ராமச்சந்திரா நகர், செட்டியபட்டி, எடமலைப்பட்டி புதூர், பிராட்டியூர், கிராப்பட்டி, காஜாமலை, சாத்தனூர் ஆகிய பகுதிகளில் விவசாய தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பசியும் பட்டினியமாக இருந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பஞ்சபூர் பஸ் நிலையத்தில் வேலை தீவிரமாக நடந்து வருகிறது. எனவே புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தில் திருச்சி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மேலும் பஞ்சப்பூர் பகுதியில் விபத்தை தடுப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பாதுகாப்பு தடுப்பு வேலி அமைத்து விபத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்.

    பஞ்சப்பூர் பகுதியில் அமைந்துள்ள பூங்காவை பராமரிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பூங்காவை பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு நிரந்தரம் ஆக்கிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு அளித்த போது சதாசிவம், சேட்டு, பழனிவேல்,மோகன்ராஜ், பெரியசாமி, நஜ்மா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • இருட்டில் தவிக்கும் பயணிகள்
    • காலி இடம் பரப்பளவு அதிகமாக உள்ளதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறதுஎஎ8520

    வேலூர்,

    வேலூர் புதிய பஸ் நிலையம் ரூ.53 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 9.25 ஏக்கர் பரப்பளவில் 2 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் மொத்தம் 84 பஸ்கள் நிற்க முடியும். இதன் முகப்பு கட்டிடத்தில் 82 கடைகள் கட்டப்பட்டுள்ளன.

    வெளியில் 1450 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்கிங் வசதி, பஸ் நிலையம் பின்புறம் உள்ள அடுக்குமாடி கார் பார்க்கிங்கில் 300 கார்கள் வரை நிறுத்த முடியும்.

    மேற்கு பக்கம் 2 நுழைவு வாயில், கிழக்கு பக்கம் ஒரு நுழைவு வாயில் உள்ளது.மின் சிக்கனத்திற்காக பஸ் நிலையம் முழுவதும் எல்.இ.டி பல்புகள் பயன்படுத்தப்படுகிறது. 4 உயர் கோபுர விளக்குகள் உள்ளன.

    கிழக்கு பகுதியில் செல்லியம்மன் கோவில் அருகே மின்விளக்கு குறைவாக இருக்கும் காரணத்தினால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. அந்த பகுதியில் தற்போது ஒரு உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த வெளிச்சம் போதுமானதாக இல்லை. காலி இடம் பரப்பளவு அதிகமாக உள்ளதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    செல்லியம்மன் கோவில் நுழைவு வாயிலில் மின் விளக்குகள் எதுவும் பொருத்தப்படவில்லை. கோவிலுக்கு பின்புறம் பஸ் நிலைய வளாகத்திலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது

    காட்பாடியில் இருந்து ரெயில்களில் வரும் பொது மக்கள் இரவு நேரங்களில் புதிய இறங்கி செல்லியம்மன் கோவில் முன்பு பஸ் நிலையத்திற்கு வருகின்றனர். நுழைவு வாயில் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது.

    இதனை தடுக்க செல்லியம்மன் கோவில் நுழைவுவாயில் பகுதியில் கூடுதலாக மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • போதிய இடவசதி இல்லாததால் பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டி நிற்கின்றன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மையப்பகுதியில் 1985-ம் ஆண்டு 2 ஏக்கர் பரப்பளவில் 50 பஸ்கள் நிற்கும் வகையில் பஸ் நிலையம் கட்டப்பட்டது. தற்போது இங்கு மதுரை, சென்னை, திருச்சி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், நகர பஸ்கள் என தினசரி நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. போதிய இடவசதி இல்லாததால் பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டி நிற்கின்றன.

    ஆண்டாள் கோவில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில், பிளவக்கல் அணை, செண்பக தோப்பு உள்ளிட்ட இடங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்க ணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் பஸ் நிலையத்தில் பஸ் நுழைவு கட்டணம், கடைகளின் வாடகை என மாதம் பல லட்சம் வருவாய் வந்தாலும் கழிப்பறை, காத்திருப்பு அறை, வாகன காப்பகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

    நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ள தால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம், திருக்கல்யாணம், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் புரட்டாசி உற்சவம் உள்ளிட்ட விழா காலங்களில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடியாமல் விழாக்காலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    பஸ் நிலையம் அருகில் அரசு மருத்துவமனை, மார்க்கெட், கடை வீதிகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. மார்க்கெட், வணிக நிறுவனங்களுக்கு வரும் சரக்கு வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் பஸ்கள் வரும் வழி ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது.

    மதுரையில் இருந்து வரும் பஸ்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் சர்ச் நிறுத்தத்தில் இருந்து நேதாஜி சாலை வழியாக பஸ் நிலையம் வந்து, பின் திருவண்ணாமலை சாலை வழியாக ராமகிருஷ்ணா புரம் சென்று மீண்டும் சர்ச் வழியாக ராஜபாளையம் செல்கிறது. இதனால் நேதாஜி சாலை, திருவண்ணாமலை சாலை, ராமகிருஷ்ணாபுரம், பென்னிங்கடன் மார்க்கெட், அரசு மருத்துவமனை, சின்னக்கடை பஜார் உள்ளிட்ட முக்கிய சாலை கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் நகராட்சி குப்பை கிடங்கு அருகில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யாததால் பஸ் நிலையம் கட்டப்படவில்லை. தற்போது திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலைக்கான பூர்வாங்க பணிகள் முடிவடைந்து விரைவில் பணிகள் தொடங்க உள்ளன.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 4வழிச்சாலை அருகே போதிய அடிப்படை வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது.
    • தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டியும் புதிய பஸ் நிலையத்துக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார்.

    திருச்சி,

    திருச்சி ஸ்ரீரங்கத்தில் உலக பிரசித்தி பெற்ற ெரங்கநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு வருகை தரும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் பஸ்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை.

    மேலும் வழிநெடுகிலும் சாலைகளில் பஸ்களை நிறுத்தி விடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தில் ஒரு பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் தீர்க்கப்படாமல் இருக்கும் அடிமனை பிரச்சனைக்கும் தீர்வு காண வேண்டும் என குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்ரீரங்கம் பஸ் நிலைய பிரச்சினைக்கு விடிவு காலம் பிறந்து இருக்கிறது. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டியும் புதிய பஸ் நிலையத்துக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார்.

    இதையடுத்து தமிழக பட்ஜெட்டிலும் ஸ்ரீரங்கம் புதிய பஸ் நிலையம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் புதிய பஸ் நிலையத்துக்கு இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.

    இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையாளர் வைத்திநாதன் ஆகியோர் ஸ்ரீரங்கம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகாமையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பழைய கிளப் இடத்தை பார்வையிட்டனர்.

    சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அந்த இடம் அமைந்துள்ளது. அதில் பஸ் நிலையம் அமைக்க அமைச்சர் கே.என்.நேரு பச்சைக்கொடி காட்டி விட்டதாக மேயர் மு.அன்பழகன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ஸ்ரீரங்கம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற கிடைத்த வாய்ப்பினை எண்ணி பெருமிதம் கொள்கிறோம்.

    அமைச்சர் தேர்வு செய்துள்ள இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திட்ட மதிப்பீடு முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும். சுமார் ரூ.25 கோடி அளவுக்கு திட்ட மதிப்பீடு வரும் என எதிர்பார்க்கிறோம். இந்த புதிய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் வந்து செல்ல வசதி செய்யப்படும்.

    மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோவிலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களை யாத்திரி நிவாஸ் எதிர்ப்புறம் உள்ள கோவிலுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த திட்டமிட்டு ெரங்கநாதர் கோவில் அறநிலைய துறையிடம் கேட்டிருக்கிறோம். ஏற்கனவே யாத்ரி நிவாஸ் கட்டுவதற்கு மாநகராட்சிக்கு சொந்தமான இடம் கொடுக்கப்பட்டது. அதற்கு மாற்றாக மாநகராட்சிக்கு இடம் தருவதாக அப்போது ஒப்புக் கொண்டுள்ளனர்.

    அந்த அடிப்படையில் யாத்திரி நிவாசுக்கு எதிர்ப்புறம் உள்ள நிலத்தை கேட்போம். அதனை அவர்கள் தர ஒப்புக் கொள்ளவில்லை என்றால் தரை வாடகைக்கு கேட்டு சுற்றுலா பஸ்கள் மற்றும் இதர வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்யப்படும். அதன் மூலம் கோவில் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.

    ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் நகர நல சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் கே.சீனிவாசன் கூறும் போது, ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற இருக்கும் அமைச்சர் கே.என்.நேரு, பழனியாண்டி எம்.எல்.ஏ., மேயர் அன்பழகன் ஆகியோருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இதேபோன்று அடிமனை பிரச்சினைக்கும் நல்ல தீர்வினை ஏற்படுத்தித் தருமாறு அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம் என்றார். இந்த புதிய பஸ் நிலையம் அமைவதன் மூலம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • இப்பகுதி மக்களின் கோரிக்கைகளில் ஒன்று ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கவேண்டும் என்பதுதான்.

    திருச்சி,

    திருச்சி ஸ்ரீரங்கம் நகர நலச்சங்க துணைத் தலைவர் செல்வி குமரன் மற்றும் மக்கள் செய்தி தொடர்பாளர் ரொட்டேரியன் டாக்டர் கே.சீனிவாசன் ஆகியோர் தெரிவிக்கையில்,

    பூலோக வைகுண்டம் என்றும், பெரிய கோவில் என்றும் போற்றப்படும் ஸ்ரீரெங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் கங்கையை காட்டிலும் புனிதமாக கருதப்படும் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ளது.

    இக்கோவிலை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் கோரிக்கைகளில் ஒன்று ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கவேண்டும் என்பதுதான். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நீண்ட நாட்களாக ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி வந்தோம். எங்களின் கோரிக்கைகளை நேற்று நடந்த திருச்சி மாநகராட்சியில் அவசர மற்றும் சாதாரண கூட்டத்தில், காங்கிரஸ் கவுன்சிலர் ஜவஹர் வலியுறுத்தி பேசியதற்கும், இதற்கு ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகேயுள்ள மாநகராட்சி கிளப் இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கபட உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அடிக்கல் நாட்ட ப்பட உள்ளது என்று மேயர் தெரிவித்ததற்கும், இத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்கும், பாராட்டி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

    • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
    • ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல்லை வேய்ந்தான்குளம் பஸ் நிலையம் புதிதாக கட்டப் பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று மேயர் சரவணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.

    கவுன்சிலர்கள் நித்திய பாலையா, சுந்தர் ஆகியோர் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மேயர், துணைமேயரை முற்றுகையிட்டு ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:-

    ஸமார்ட் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல்லை வேய்ந்தான்குளம் பஸ் நிலையம் புதிதாக கட்டப் பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 2 நடை மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு பிளாட்பாரத்தில் இருந்து அதிக தூரத்தில் இருசக்கர வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாகர்கோவில் செல்லும் பயணிகள் வாகனங்களை காப்பகத்தில் நிறுத்திவிட்டு வெகு தூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.

    புதிய பஸ்நிலைய பகுதியில் சுமார் 132 ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. பஸ் நிலையத்திற்குள் ஆட்டோக்களை அனுமதிப்பதில்லை.

    இதனால் வெளியூர்க ளுக்கு செல்லும் முதி யவர்கள், மாற்று திறனாளிகள் பஸ் நிலைய நுழைவு வாயிலில் இருந்து பிளாட்பாரத்திற்கு சிரமத்து டன் நடந்து செல்கிறார்கள்.

    எனவே அவர்கள் நலன் கருதி 5 ஆட்டோக்கள் மட்டும் பஸ் நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விட அனுமதி வழங்க வேண்டும். நாங்கள் சுழற்சி முறையில் 5 ஆட்டோக்களாக தினமும் சென்று வருவோம்.

    இதற்கு மாநகராட்சி மற்றும் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, புதிய பஸ் நிலையத்தில் சமீப காலமாக தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.

    தேவையில்லாத கூட் டத்தை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவும், விபத்து அபாயத்தை தடுக்கவும் ஆட்டோக்கள் பஸ் நிலையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நிரந்தர தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பாபநாசம் பஸ்சில் ஏறிய மகாலட்சுமி என்ற பெண்ணிடம் இருந்து 21 கிராம் நகை, ரூ. 2000 பணம் திருட்டு போனது.
    • திருட்டு குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 49).

    இவர் நேற்று பாளை பெருமாள்புரம் மகிழ்ச்சி நகரிலுள்ள கணவரின் சகோதரி வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் கணவரின் தாயாரின் செயினை அவரது சகோதரி கொடுத்துள்ளார். அதனை வாங்கி பர்சில் வைத்துக் கொண்டு ஊருக்கு செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.

    அதன்பின்னர் பாபநாசம் பஸ்சில் ஏறிய மகாலட்சுமி டிக்கெட் எடுப்பதற்காக கட்டைப் பையில் இருந்த மணி பர்சை எடுத்துள்ளார். அப்போது பர்ஸ் திறக்கப்பட்டு அதில் இருந்த 21 கிராம் நகை, ரூ. 2000 பணம், ஏடிஎம் கார்டு மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து மகாலட்சுமி மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் மற்றும் பணத்தை எடுத்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • 85 சதவீத பணிகள் நிறைவு.
    • மணல் கடத்தலை தடுக்க 12 குழுக்கள் அமைத்து கண்காணிப்பு.

    வேலூர்:

    வேலூரில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 20 அல்லது 21-ந் தேதி திறந்து வைக்க உள்ளார்.

    இதன் காரணமாக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று புதிய பஸ் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர்ஆனந்த் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-

    புதிய பஸ் நிலையத்தில் விளக்குகள் அமைத்தல், கழிவுநீர் கால்வாய் மற்றும் பயணிகளின் இருக்கைகள் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை தேவைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது, புதிய பஸ் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

    மீதமுள்ள பணிகள் வரும் ஒரு வார காலத்திற்குள் முழுவதுமாக முடிக்கப்படும்.வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் அதிக அளவில் மணல் காணப்படுகிறது.

    இந்த மணலை இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மணல் கடத்திச் செல்வதாக புகார்கள் வருகின்றன.

    மணல் திருட்டை தடுக்க வேலூர் மாவட்டத்தில் 48 பேர் கொண்ட 12 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரித்தார்.

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் வீரராகவராவ் அதிரடி சோதனை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு கடைகளுக்கு அபராதம் விதித்து எச்சரித்தார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேற்று காலை புதிய பஸ் நிலையத்திற்கு திடீரென சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். புதிய பஸ் நிலைய பகுதியில் நகரசபை நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகள், சுகாதார மேம்பாடு, ஆக்கிரமிப்புகள் அகற்றம் போன்ற பணிகளை ஆய்வு செய்தார். பஸ் நிலைய பகுதிகளில் முழுமையாக ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மாடி பகுதிக்கு சென்று கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். பஸ் நிலைய பகுதியில் பொதுமக்கள் நிற்க கூட முடியாத அளவிற்கு கடைக்காரர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்ததை கண்ட கலெக்டர் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

    மேலும், பாலூட்டும் தாய்மார்கள் அறையை மறைத்து அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பழக்கடைகளை அகற்றவும் உத்தரவிட்டார். மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த கடைகளில் இருந்து பழங்கள், பேக்கரி உணவுகள் போன்றவற்றை நகரசபை வண்டிகளில் அள்ளி அப்புறப்படுத்துவதற்கு பதிலாக பயனுள்ள வகையில் அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு இலவசமாக அள்ளிக்கொடுத்தார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதன்பின்னர் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு சென்ற கலெக்டர் திரும்பி வந்து பார்த்தபோது மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வைத்திருந்ததை கண்டு ஆத்திரமடைந்த அவர் நகராட்சி குப்பை வண்டிகளை வரவழைத்து ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அள்ளிச்செல்ல உத்தரவிட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த முறை ஆய்வின்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்த போதும் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாலும், தொடர் புகார்கள் வந்திருந்ததாலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியிருந்த கடைக்காரர்களுக்கு தலா ரூ.1000 வீதம் 10 கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    அதன்பிறகு கலெக்டர் வீரராகவராவ் கூறியதவாது:- ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம், மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி என அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் சார்ந்த அலுவலர்கள் மூலமாக அந்தந்த பகுதிகளில் மழைநீர் தேங்காமல் சுத்தமாக பராமரித்து சுற்றுப்புற தூய்மை பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் தொடர் புகார்கள் வந்ததன் அடிப்படையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமைதாரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய நிலையிலேயே இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் நகரசபை நிர்வாகத்தின் மூலம் தலா ரூ.1000 வீதம் 10 கடைகளுக்கு மொத்தம் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நகரசபை அதிகாரிகள் கவனமாக கண்டிப்புடன் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். அடுத்தமுறை ஆய்வின்போது ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு மறு டெண்டர் விடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது நகரசபை துப்புரவு ஆய்வாளர் இளங்கோவன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர். 
    மாதவரம் புதிய பஸ் நிலையம் தொடங்கப்பட்ட நிலையிலும் கோயம்பேட்டில் இருந்து பஸ்களை இயக்கி வருவதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

    மாதவரம், அக்.19-

    சென்னை கோயம்பேடு புறநகர் பஸ்நிலையம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பஸ்கள் அங்கு வருவதால் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வெளியூர்களுக்கு குறித்த நேரத்தில் பஸ்கள் செல்ல முடியவில்லை. குறிப்பாக பண்டிகை காலங்களில் சிறப்பு பஸ்களை கையாள்வதிலும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

    கோயம்பேட்டில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க மாதவரத்தில் புதியதாக புறநகர் பஸ்நிலையம் கடந்த 10-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த புதிய புறநகர் பஸ்நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    திருப்பதி, நெல்லூர், காளகஸ்தி, சத்தியவேடு, மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு பஸ்கள் புறப்பட்டு செல்லும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக 238 தமிழக அரசு பஸ்கள், 25 தனியார் பஸ்கள் மேலும் 205 ஆந்திர மாநில அரசு பேருந்துகள் என மொத்தம் 468 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பஸ்கள் அனைத்தும் மாதவரம் புதிய புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து இனி இயக்கப்படும் என அறிவித்தும் இதுவரையில் முழுமையாக செயல்பட வில்லை. ஒருசில அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தனியார் பஸ்களும், ஆந்திர மாநில பஸ்களும் முற்றிலும் இயக்கப் படவில்லை. இதனால் பயணிகள் கூட்டமின்றி எப்போதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஆயுத பூஜை, விஜய தசமியையொட்டி 4 நாட்கள் அரசு தொடர் விடுமுறையாகும். அதனால் கடந்த புதன்கிழமை அன்றே வெளியூர் செல்லும் பஸ்கள் எல்லாம் நிரம்பி வழிந்தது.

    அன்றைய நாளில் கூட மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் முழுமையாக இயக்கப்பட வில்லை. பயணிகள் கோயம்பேட்டில் இருந்துதான் புறப்பட்டு சென்றனர்.

    புதிய பஸ்நிலையம் தொடங்கப்பட்ட நிலையிலும் கோயம்பேட்டில் இருந்து பஸ்களை இயக்கி வருவதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். புதிய பஸ்நிலையம் தொடங்கியது முதல் இனி ஆந்திர மார்க்க பஸ்கள் அங்கிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும் பெயர் அளவிற்கு மட்டுமே ஒருசில பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் மாதவரம் புதிய பஸ்நிலையம் களை இழந்து காணப்படுகின்றன.

    பண்டிகை காலங்களில் ஏற்படும் நெரிசலை குறைக்கத்தான் புதிய பேருந்து நிலையம் கட்டி திறக்கப்பட்டாலும் அதனை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டுவராமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

    தினமும் 468 பஸ்களை மாதவரத்தில் இருந்து இயக்கினால்தான் மக்களுக்கு இந்த தகவல் முழுமையாக தெரியவரும். அவர்கள் தானாக அந்த இடத்திற்கு சென்று விடுவார்கள். ஆனால் அந்த நடவடிக்கையை எடுக்காமல் தொடர்ந்து கோயம்பேட்டில் இருந்து இயக்கி வருகின்றனர்.

    மேலும் மாநகர பஸ்களும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் இதுவரையில் பஸ்நிலையத்திற்குள் எந்த பஸ்சும் வரவில்லை. இணைப்பு மாநகர பஸ்கள் மட்டும் பஸ்நிலையத்திற்கு வெளியே நின்று செல்கின்றன. பஸ்கள் முழுமையாக இயக்கப்படாததால் பயணிகளும் வருவதில்லை.

    இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புதிய புறநகர் பஸ்நிலையத்தில் இருந்து இன்று முதல் முழுமையாக பஸ்கள் இயக்கப்படும். இதுவரையில் அரசு பஸ்கள் மட்டுமே புறப்பட்டு சென்றன. இன்று முதல் ஆந்திர மாநில அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் புறப்பட்டு செல்லும். ஆந்திர அரசு பஸ்களுக்கு முன்பதிவு செய்த பயணிகள் தங்களது பயணத்தை மாதவரம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து தொடங்குவார்கள்.

    திருப்பதிக்கு முன்பதிவு செய்த பயணிகளையும் மாதவரத்திற்கு செல்லும் படி அறிவிப்பு வெளியிட்டு வருகிறோம். கோயம்பேட்டில் ஆந்திர மாநில பஸ்கள் நிற்கும் பகுதியில் ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கிறோம்.

    ஆந்திராவிற்கு செல்லக் கூடிய பயணிகள் மாதவரத்திற்கு செல்ல வேண்டும் எனவும், அங்கிருந்துதான் பஸ்கள் புறப்பட்டு செல்லும் எனவும் அறிவிக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×