search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Ponmudi"

    • பாலிடெக்னிக் பட்டய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது.
    • அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மேலும் 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஒரு மாதம் முன் கூட்டியே தொடங்குகிறது. ஜூலை 2-ந்தேதி கலந்தாய்வு தொடங்கி நடைபெறும்.

    பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வசதிக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கல்லூரிகளில் திறந்து இருக்கும். சி.பி.எஸ்.இ., மாநில கல்வி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் முன்னதாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

    முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்க உள்ள நிலையில் ஜூலை 7-ந்தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கும்.

    பாலிடெக்னிக் பட்டய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது.

    அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை கட்டணம் குறைக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் பலவிதமான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. ஏழை மாணவர்கள் நலன் கருதி எல்லா கல்லூரிகளிலும் சேர்க்கை கட்டணம் ஆண்டுக்கு ரூ.200 வீதம் ஒவ்வொரு ஆண்டிற்கும் இனி வசூலிக்கப்படும்.

    அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மேலும் 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. 22-ந்தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்த 6 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர்.
    • தமிழகத்தில் குட்கா, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதை பொருட்கள் விற்பனை அதிகரித்தது கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தான்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்த 6 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். மேலும் 28 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று மதியம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர். மேலும், அங்கிருந்த டாக்டர்களிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

    பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் குட்கா, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதை பொருட்கள் விற்பனை அதிகரித்தது கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தான். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்கவைத்ததே அவர்கள்தான்.

    கடந்த 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது தொடர்பாக சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக காவல்துறைக்கு அவர் அடிக்கடி ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். மேலும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறையில் தனி ஆணையத்தையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி உள்ளார். அதனால் தான் குறைந்துள்ளது.

    தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை. கடந்த காலத்தில் ஜெயலலிதா ஆட்சியில் தான் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுவை அரசே விற்பனை செய்யும் என அறிவித்தார். அரசின் வருமானத்திற்காக டாஸ்மாக் மூலம் மது விற்பனையை கொண்டு வந்தார். அதற்கு சட்டமன்றத்தில் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். தற்போது வேண்டுமென்றே அரசின் மீது குறை, பழி சொல்லவேண்டும் என ஒருவர் பேசியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்தது.
    • 5-வது நாளாக நீடித்த ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    சென்னை:

    TET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தகுதி தேர்வு நடத்தப்படும் என்ற அரசாணையை திரும்ப பெறக்கோரி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்தது. இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில், 5-வது நாளாக நீடித்த ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    • உதயநிதிக்கு எல்லா தகுதியும், திறமையும் உள்ளது.
    • முதலிலே அவரை அமைச்சராக ஆக்கி இருந்தால் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வந்திருப்பார்.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். அடுத்த கல்வியாண்டில் தமிழ்வழிப் பாடம் எல்லா வகுப்பிலும் நடத்தப்படும்.

    பல்கலைக்கழக மானிய குழுவின் வழிகாட்டுதலின்படி பி.எச்.டி. போன்ற தகுதி பெற்ற தமிழ் படித்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். முதன்முதலாக தமிழ்வழி கல்வியை அறிமுகம் செய்தவர் கலைஞர்.

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உள்ள உதயநிதிக்கு எல்லா தகுதியும், திறமையும் உள்ளது. மிக திறமையுள்ள இளைஞர். திரைத்துறை, அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    1½ ஆண்டுக்கு முன்பே அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து இருக்க வேண்டும். இதை கால தாமதமாக நான் கருதுகிறேன். அவருக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்பதை முதலமைச்சர் நாளை அறிவிப்பார்.

    முதலிலே அவரை அமைச்சராக ஆக்கி இருந்தால் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வந்திருப்பார். அவருக்கு வழங்க உள்ள பொறுப்பில் திறம்பட செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நலமான சமுதாயம் அமைப்போம் திட்டத்தின் கீழ் கிராமப்புற ஏழை-எளிய பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கவும், பல்வேறு சிகிச்சைகள் சம்பந்தமாக வழி காட்டவும் தாண்டவமூர்த்திகுப்பத்தில் மருத்துவ மையம் அமைக்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு மருத்துவ மையத்தை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.

    புதுச்சேரி:

    அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நலமான சமுதாயம் அமைப்போம் திட்டத்தின் கீழ் கிராமப்புற ஏழை-எளிய பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கவும், பல்வேறு சிகிச்சைகள் சம்பந்தமாக வழி காட்டவும் தாண்டவமூர்த்திகுப்பத்தில் மருத்துவ மையம் அமைக்கப்பட்டது.

    இந்த மருத்துவ மையம் திறப்பு விழாவுக்கு தாண்டவ மூர்த்திக்குப்பம் கவுன்சிலர் ராஜாத்தி வெங்கடேசன் தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் பொது மேலாளர் சவுந்தரராஜன், துணைப் பொது மேலாளர் புகழேந்தி, கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் ஆர்.எஸ்.வாசன், கண்டமங்கலம் தி.மு.க. பிரமுகர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு மருத்துவ மையத்தை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலி யர்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பொறியியல் பட்டப்படிப்பு சிவில், மெக்கானிக்கல் என்பதையும் தாண்டி, கணினி அறிவியல் பிரிவிலும் தமிழில் தொடங்கப்பட்டுள்ளது.
    • தமிழர் மரபும், தமிழரின் தொழில்நுட்பமும் நடப்பாண்டில் பொறியியல் கல்லூரிகளில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    "தமிழ்மொழி மிகவும் தொன்மையானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த மொழியின் அருமையைத் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் தமிழ்வழியில் பாடத் திட்டங்களைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்" என உள்துறை மந்திரி அமித்ஷா சென்னையில் நடைபெற்ற "இந்தியா சிமென்ட்ஸ்" நிறுவன பவள விழாவில் பேசியிருக்கிறார்.

    அன்னைத் தமிழ் மொழி மீது உள்துறை அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள ஆர்வத்திற்கும் அக்கறைக்கும் முதலில் தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் எங்கள் தாய்மொழி. எங்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்த மொழி.

    ஆகவே தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வருகின்ற காலத்தில் எல்லாம் தமிழ் மொழியை அரியணையில் அமர வைத்து அழகு பார்ப்பதுதான் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் ஆட்சி நடத்தும் எங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலையாய பணி.

    ஆகவே, தமிழ்மொழிக் கல்விக்காகத் தி.மு.க. அரசு ஆற்றிய பணிகள் சிலவற்றை உள்துறை மந்திரிக்கு நினைவூட்டிட விரும்புகிறேன்.

    இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளை தமிழில் எழுதினால் அதிகம் பேர் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதற்காக, 1997-2001-ல் தமிழ்மொழி, இலக்கிய வரலாறு, புவியியல், வரலாறு போன்ற பாடங்கள் தமிழில் தனித்தனியே தொகுத்து வெளியிட முடிவு எடுக்கப்பட்டு, முதல் முயற்சியாக தமிழ்மொழி வரலாறு வெளியிடப்பட்டது.

    பள்ளிப்படிப்பில் 10-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தமிழ் கட்டாயப்பாடம் என தி.மு.க. அரசில்தான் சட்டம் இயற்றி, அந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் வரை அங்கீகரித்தது.

    கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நிதியுதவி அளிக்கும் திட்டம் தி.மு.க.வின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 1967-68-ல் அறிவிக்கப்பட்டு, அது படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது ஆண்டிற்குத் தமிழ்வழியில் பயிலும் ஒரு மாணவருக்கு ரூ.900 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமும் கழக அரசின் திட்டம்தான்.

    உள்துறை மந்திரி இப்போது சுட்டிக்காட்டியுள்ள பொறியியல் பட்டப்படிப்பை முதன்முதலில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில், கலைஞர் கருணாநிதி 2010-ம் ஆண்டே அறிமுகப்படுத்தி விட்டார்.

    இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பொறியியல் படிப்பினைத் தாய்மொழியில் கற்க ஏற்பாடு செய்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டிட (சிவில்) மற்றும் இயந்திரப் (மெக்கானிக்கல்) பொறியியல் படிப்புகளைத் தமிழில் அறிமுகம் செய்து, தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட தமிழில் பொறியியல் கல்வி இன்றும் நடைமுறையில் உள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழில் பொறியியல் படிப்பு நடைமுறையில் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழில் பொறியியல் கல்வி படித்து பி.இ., பட்டம் பெற்ற தமிழக இளைஞர்கள் இன்றைக்குப் பொதுப்பணித்துறை, வீட்டுவசதி வாரியம், மெட்ரோ ரெயில் திட்டம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் போன்ற பல துறைகளில் பொறியாளர்களாகவும், பல பன்னாட்டு நிறுவனங்களின் உயர்பதவிகளை அலங்கரிப்பவர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். ஏன், அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்ற ஐஸ்வர்யா 2020-ம் ஆண்டு குடிமைப் பணித்தேர்வில் (ஐ.ஏ.எஸ்.) வெற்றி பெற்றுள்ளார்.

    இதன் அடுத்தகட்டமாக, இப்போது 2022-23-ஆம் ஆண்டு முதல் பட்டயப் படிப்புகளிலும் மேற்காண் பாடப்பிரிவுகள் தமிழ்வழியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளன. அதற்காகப் பொறியியல் பட்டப்படிப்பிற்கான புத்தகங்கள் தமிழ்வழியில் வெளியிடப்பட்டுள்ளன. பொறியியல் பட்டப்படிப்பு சிவில், மெக்கானிக்கல் என்பதையும் தாண்டி, கணினி அறிவியல் பிரிவிலும் தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழர் மரபும், தமிழரின் தொழில்நுட்பமும் நடப்பாண்டில் பொறியியல் கல்லூரிகளில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்வழியில் பொறியியல் கல்வி தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுவிட்டாலும், மருத்துவப் படிப்பு, அதாவது எம்.பி.பி.எஸ். தமிழில் கற்பதற்கு வழி செய்யவும் இப்போது தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக மூன்று பேராசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, எம்.பி.பி.எஸ் முதலாமாண்டு பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எங்கள் அன்னைத் தமிழ் மீது காட்டியுள்ள அக்கறையோடு, சமஸ்கிருதத்திற்கு இணையாக உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசின் நிதியுதவி அளித்திடவும், உள்துறை மந்திரியே ஒப்புக்கொண்டிருப்பது போல், தொன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு உரிய ஆட்சி மொழித் தகுதியை ஒன்றிய அரசு அலுவலகங்களில் அளித்திடவும் தேவையான முயற்சிகளை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    குறிப்பாகத் தமிழகத்தில் ஒன்றிய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயத் தமிழ் பாடத்திட்டத்தை அமல்படுத்தவும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பித் தர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கல்லூரி ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
    • 5 வருடமாக நடைபெறாமல் இருந்த கவுன்சிலிங் தற்போது ஆன்லைன் வழியாக இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொறியியல் கலந்தாய்வு 4-வது சுற்று வருகிற 14-ந்தேதி தான் நிறைவடைகிறது. இதுவரையில் 89,585 பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். சென்ற ஆண்டு 80,383 பேர் சேர்ந்து இருந்தனர். 10 ஆயிரம் பேர் அதிகமாக சேர்ந்து இருக்கிறார்கள். 4-வது சுற்றிலும் மாணவர்கள் சேர உள்ளனர்.

    அதன் பின்னர் துணை கலந்தாய்வு காலி இடங்களுக்கு நடைபெறும். இந்த ஆண்டு அதிக மாணவர்கள் சேர்க்கப்படுகிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கல்லூரி ஆசிரியர்கள் 4000 பேர் தேர்வு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் இதற்கான பணி தொடங்கும். கெஸ்ட் விரிவுரையாளர் தேர்வு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கல்லூரி ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 5 வருடமாக நடைபெறாமல் இருந்த கவுன்சிலிங் தற்போது ஆன்லைன் வழியாக இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 5,408 உதவி பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    3 ஆயிரம் காலி இடங்கள் உள்ளன. விரும்பும் இடங்களை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில் காலி இடங்களுக்கு மாறுதல் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி வேலூர் முதன்மை அமர்வு செசன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார்.
    • வழக்கின் விசாரணை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    வேலூர்:

    விழுப்புரத்தை சேர்ந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த வழக்கு வேலூர் மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி வேலூர் முதன்மை அமர்வு செசன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார். வழக்கின் விசாரணை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து அமைச்சர் பொன்முடி புறப்பட்டு சென்றார்.

    • பல திசைகளிலும் இருந்து பறந்து வந்த கேள்விக்கணைகளால் திக்குமுக்காடிய அமைச்சர் ஒரு கட்டத்தில் ஆவேசப்பட்டு ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
    • ஒருமையில் பேசினாலும் எங்கள் கட்சியை சார்ந்தவர் என்பதால் உரிமையுடன் பேசினேன் என்று அமைச்சர் பொன்முடி விளக்கமும் அளித்து உள்ளார்.

    மூத்த அமைச்சரான பொன்முடிக்கு அவ்வப்போது சோதனை ஏற்படுகிறது. அவர் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். சமீபத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதை ஓசியில் பயணிப்பதாக பேசியதால் சர்ச்சையில் சிக்கினார். கடைசியில் வருத்தம் தெரிவிக்கும் அளவுக்கு அந்த பிரச்சினை பூதாகரமானது.

    அது ஓய்ந்திருந்த நிலையில் தற்போது அடுத்த சிக்கலில் மாட்டி இருக்கிறார். அவரது சொந்த தொகுதியான விழுப்புரத்தில், சித்தலிங்கமடம் என்ற கிராமத்தை இரண்டாக பிரித்து தனி வருவாய் கிராமம் உருவாக்கப்படுவதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்காக கிராம சபை கூட்டத்தையும் புறக்கணித்த அவர்களிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த சொந்த தொகுதி மக்கள்தானே என்ற உரிமையோடு புறப்பட்டு சென்றார் அமைச்சர் பொன்முடி. மழை கொட்டிக் கொண்டிருந்தது. கொட்டும் மழையிலும் சமாதானப்படுத்த சென்ற அமைச்சரை மக்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்கள்.

    அமைச்சராக இருந்தாலும் மனுஷன்தானே என்பதைபோல் ஒரு கட்டத்தில் டென்ஷனாகி விட்டார். அதனால் பல திசைகளிலும் இருந்து பறந்து வந்த கேள்விக்கணைகளால் திக்கு முக்காடிய அமைச்சர் ஒரு கட்டத்தில் ஆவேசப்பட்டு ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதுவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ஒருமையில் பேசினாலும் எங்கள் கட்சியை சார்ந்தவர் என்பதால் உரிமையுடன் பேசினேன் என்று அவர் விளக்கமும் அளித்து உள்ளார். இதை பார்த்த உடன்பிறப்புகள்... என்னடா இது அண்ணன் பொன்முடிக்கு வந்த சோதனை என்று பேசிக் கொள்கிறார்கள்.

    • மேற்கு வங்க அரசை எதிர்த்த, ஜெகதீப் தன்கர், குடியரசு துணைத் தலைவரானார்.
    • அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவது கண்டிக்கத்தது.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்ச்சிகளில் ஆற்றும் உரையின்போது புதிய கல்விக் கொள்கை, இந்துமதம், சனாதனம், திருக்குறள் ஆகியவை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கருத்துகளை ஆளுநர் வெளியிடுவதாக அண்மையில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் கையெழுத்திட்ட மனுவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கவும் திமுக திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளதாவது: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்களை தூண்டி விட்டு பாஜக சிந்தனைகளை தூண்டுவதற்கு அவர்கள் (மத்திய அரசு) முயற்சி செய்து வருகிறார்கள்.

    கேரளா, தமிழ்நாட்டில், மேற்கு வங்கத்தில் அதுதான் நடக்கிறது. அண்மையில் சென்னை வந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதைத்தான் தெரிவித்தார். மேற்கு வங்க அரசை எதிர்த்ததால், அந்த மாநில ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர், குடியரசு துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்று விட்டார்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் கூட தமிழக அரசை எதிர்த்தால் உயர் பதவி பெறலாம் என்று எண்ணத்தில் கூட இது போன்ற கருத்துக்களை தெரிவிக்கலாம். எது எப்படி இருந்தாலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவது கண்டிக்கத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழ்நாட்டில் வருகிற கல்வி ஆண்டு முதல் என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2 பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும்.
    • கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் பலருக்கு வேலை கொடுப்பவர்களாக மாறவேண்டும்.

    விழுப்புரம்:

    அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளான ஆரணி, காஞ்சிபுரம், பண்ருட்டி, திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா இன்று காலை விழுப்புரத்தில் நடந்தது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று 1144 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    கல்லூரியில் படிக்கும் போதே மாணவ-மாணவிகள் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் முன்னேறுவதற்காகத்தான் நாம் முதல்வன் என்ற திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழ்மொழிக்கு, அதுவும் தாய்மொழிக்கு ஆபத்து என்றால் முதலில் குரல் கொடுப்பது திராவிட கட்சிகள்தான். திராவிட கட்சிகள் இல்லையென்றால் என்றைக்கோ தமிழ்மொழி மறைந்திருக்கும், மறைத்தும் இருப்பார்கள்.

    தமிழ்நாட்டில் வருகிற கல்வி ஆண்டு முதல் என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2 பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும். கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் பலருக்கு வேலை கொடுப்பவர்களாக மாறவேண்டும். அதற்கு தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.

    நாங்கள் புதிய கல்வி கொள்கைக்கு எதிரானவர்கள் அல்ல. மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை திட்டத்தில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை கொண்டு வருகிறது. இந்த தேர்வு தேவையற்றது. 3-வது மொழியாக இந்திமொழியை மத்திய அரசு திணிக்கக்கூடாது. அதற்கு பதிலாக மாணவர்கள் விருப்பப்படிதேர்வு செய்யலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நான் யாரையும் புண்படுத்த வேண்டும் என்று பேசவில்லை.
    • கலோகியலா நாங்கள் எல்லாம் எங்கள் கடலூர் மாவட்டத்தில் பேசும் வார்த்தை அது.

    சென்னை:

    சென்னை அம்பத்தூரில் கடந்த மாதம் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, அரசு பஸ்களில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வது தொடர்பாக சில கருத்துக்களை பேசினார்.

    `இப்போ பஸ்சில் எப்படி போறீங்க... ஆ... இங்கிருந்து கோயம்பேடு போக வேண்டும் என்றாலும் இங்கிருந்து எங்கே போக வேண்டுமானாலும் எல்லாம் ஓசி பஸ்சில் போறீங்க' என்று பெண்களை பார்த்து பேசி இருந்தார்.

    இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தது. அவரது பேச்சு அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் அளவுக்கு சென்றுவிட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டதுடன் தி.மு.க. பொதுக்குழுவிலும் வேதனைப்பட்டு பேசினார்.

    இந்த சூழலில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    நான் பேசிய ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு என்னை என்னென்ன சொன்னார்கள் என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும்.

    அதைகூட தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை பார்த்து அதையெல்லாம் சொல்லாதீங்க... அந்த மாதிரியெல்லாம் பேசாதீர்கள் என்று சொன்னார். கலோகியலா நாங்கள் எல்லாம் எங்கள் கடலூர் மாவட்டத்தில் பேசும் வார்த்தை அது.

    அங்கிருக்கும் போதும், விழுப்புரத்தில் நாங்கள் படிக்கும் போதும் ஒரு கலோக்கியலா பேசிக்கொள்கிற வார்த்தையை பேசியதற்காக எவ்வளவு பேர், அதுவும் குறிப்பாக இந்த `பி.ஜே.பி.' எங்களையெல்லாம் ஒரு டார்கெட் செய்து சில பேர்களை தாக்க வேண்டும் என்று தாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

    அதற்கு கூட எங்கள் முதல்-அமைச்சர் என்னிடம் வேண்டாங்க அதெல்லாம்... எதற்காக இப்படி பேசுறீங்க? என்று எனக்கு ஒரு அறிவுரையை சொன்ன தலைவர்தான் இன்றைய முதல்வர்.

    எனவே அப்படி யாராவது மனதும் புண்பட்டு இருக்குமானால் உண்மையாகவே நான் வருந்துகிறேன். நான் யாரையும் புண்படுத்த வேண்டும் என்று பேசவில்லை. அது கலோக்கியலாக பேசுகிற ஒரு வார்த்தை தான்.

    இவ்வாறு பொன்முடி கூறினார்.

    ×