search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    என்னடா இது... பொன்முடிக்கு வந்த சோதனை
    X

    என்னடா இது... பொன்முடிக்கு வந்த சோதனை

    • பல திசைகளிலும் இருந்து பறந்து வந்த கேள்விக்கணைகளால் திக்குமுக்காடிய அமைச்சர் ஒரு கட்டத்தில் ஆவேசப்பட்டு ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
    • ஒருமையில் பேசினாலும் எங்கள் கட்சியை சார்ந்தவர் என்பதால் உரிமையுடன் பேசினேன் என்று அமைச்சர் பொன்முடி விளக்கமும் அளித்து உள்ளார்.

    மூத்த அமைச்சரான பொன்முடிக்கு அவ்வப்போது சோதனை ஏற்படுகிறது. அவர் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். சமீபத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதை ஓசியில் பயணிப்பதாக பேசியதால் சர்ச்சையில் சிக்கினார். கடைசியில் வருத்தம் தெரிவிக்கும் அளவுக்கு அந்த பிரச்சினை பூதாகரமானது.

    அது ஓய்ந்திருந்த நிலையில் தற்போது அடுத்த சிக்கலில் மாட்டி இருக்கிறார். அவரது சொந்த தொகுதியான விழுப்புரத்தில், சித்தலிங்கமடம் என்ற கிராமத்தை இரண்டாக பிரித்து தனி வருவாய் கிராமம் உருவாக்கப்படுவதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்காக கிராம சபை கூட்டத்தையும் புறக்கணித்த அவர்களிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த சொந்த தொகுதி மக்கள்தானே என்ற உரிமையோடு புறப்பட்டு சென்றார் அமைச்சர் பொன்முடி. மழை கொட்டிக் கொண்டிருந்தது. கொட்டும் மழையிலும் சமாதானப்படுத்த சென்ற அமைச்சரை மக்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்கள்.

    அமைச்சராக இருந்தாலும் மனுஷன்தானே என்பதைபோல் ஒரு கட்டத்தில் டென்ஷனாகி விட்டார். அதனால் பல திசைகளிலும் இருந்து பறந்து வந்த கேள்விக்கணைகளால் திக்கு முக்காடிய அமைச்சர் ஒரு கட்டத்தில் ஆவேசப்பட்டு ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதுவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ஒருமையில் பேசினாலும் எங்கள் கட்சியை சார்ந்தவர் என்பதால் உரிமையுடன் பேசினேன் என்று அவர் விளக்கமும் அளித்து உள்ளார். இதை பார்த்த உடன்பிறப்புகள்... என்னடா இது அண்ணன் பொன்முடிக்கு வந்த சோதனை என்று பேசிக் கொள்கிறார்கள்.

    Next Story
    ×