search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mehbooba Mufti"

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் ஆளுநர் இன்று ஆலோசனை நடத்தினார். #JammuKashmir #Vohra #JKAllPartyMeet
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், பி.டி.பி கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக சமீபத்தில் விலக்கிக் கொண்டது. இதனால், பி.டி.பி. கட்சி தலைவர் மெகபூபா முப்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மாநில ஆளுநர் வோரா அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. ஆளுநரின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மெகபூபா முப்தி பங்கேற்றார். இதேபோல் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.ஏ.மிர்,  பா.ஜ.க. தலைவர் சாத் சர்மா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில், காஷ்மீரில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மாநிலத்தில் அமைதி நிலவுவதற்கு என்ன செய்யலாம்? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்ற முடியாத வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் மெகபூபா வலியுறுத்தினார். 

    ஆளுநர் என்.என்.வோராவின் பதவிக்காலம் வரும் 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனினும் மறு உத்தரவு வரும் வரையில் அவர் பதவியில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. #JammuKashmir #Vohra #JKAllPartyMeet
    காஷ்மீர் கவர்னரின் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், தலைமை செயலாளராக சுப்ரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். #BJPDumpsPDP #JKGovernorRule #BVRSubrahmanyam #VijayKumarIPS
    ஜம்மு:

    காஷ்மீர் கவர்னரின் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், தலைமை செயலாளராக சுப்ரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்த நிலையில், நேற்று பகிரங்கமாக வெடித்தது. மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கப்போவதில்லை என்று பா.ஜ.க.வும் அறிவித்தது.

    இதையடுத்து அம்மாநில கவர்னரின் பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இன்று முதல் ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

    இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமலில் உள்ள நிலையில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுப்ரமணியம் (55) காஷ்மீரின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல், கவர்னரின் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் மற்றும் பி.பி.வியாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுகொன்ற அதிரடிப்படையினருக்கு விஜயகுமார் ஐபிஎஸ் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. #BJPDumpsPDP #JKGovernorRule #BVRSubrahmanyam #VijayKumarIPS
    காஷ்மீர் மாநிலத்தை சீரழித்த பிறகு கூட்டணியில் இருந்து பா.ஜ.க விலகியுள்ளதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார். #BJPDumpsPDP #MehboobaMuftiresigns #ArvindKejriwal
    புதுடெல்லி :

    காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயகக் கட்சி – பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

    இதற்கிடையே, பல்வேறு விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் ஆட்சியை தொடர்வது இயலாத காரியம் என கூறி யாரும் எதிர்பாராத விதத்தில், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக பாஜக இன்று அறிவித்தது.

    பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோருடன் அலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் மாநில பா.ஜ.க பொறுப்பாளர் ராம் மாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இதனை அடுத்து, முதல்வர் மெகபூபா முப்தி தனது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பினார். அங்கு விரைவில் கவர்னர் ஆட்சி அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு காஷ்மீரில் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை உடைத்துவிட்டதாக பா.ஜ.க சுயதம்பட்டம் அடித்துகொண்டது. ஆனால் இப்போது என்ன ஆனது ? காஷ்மீரை சீரழித்த பிறகு கூட்டணியில் இருந்து அக்கட்சி விலகியுள்ளது. என்று தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்வு குறித்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர் பதிவு மூலம் கடுமையாக விமர்சித்துள்ளார். #KashmirCMresigns #BJPDumpsPDP #MehboobaMuftiresigns
    ஜம்மு காஷ்மீரில் மூன்றாண்டுகளாக கூட்டணியில் இருந்த பாஜக இன்று உறவை முறித்துள்ள நிலையில், முதல்வர் பதவி போனதில் எந்த அதிர்ச்சியும் இல்லை என ராஜினாமா செய்த பின் மெகபூபா முப்தி பேட்டி கூறியுள்ளார். #BJPDumpsPDP #BJPPDP
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், இன்று கூட்டணியில் இருந்து வெளியேவதாக பாஜக அறிவித்தது. இதனால், பிடிபி கட்சி தலைவர் மற்றும் முதல்வராக இருந்த மெகபூபா முப்தி தனது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பினார்.

    ராஜினாமா செய்த பின்னர் பத்திரிக்கையாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாஜக கூட்டணியை முறித்ததிலும், முதல்வர் பதவி பறிபோனதிலும் எனக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. ஏனென்றால், அதிகாரத்திற்காக இந்த கூட்டணி அமைக்கவில்லை. மிகப்பெரிய கனவை செயல்படுத்தவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டது. இருதரப்பு போர்நிறுத்தம், மோடியின் பாகிஸ்தான் பயணம், 11 ஆயிரம் இளைஞர்கள் மீதான வழக்குகள் வாபஸ் ஆகியவை நடந்துள்ளது.

    எனது ராஜினாமா கடித்தத்தை கவர்னரிடம் சமர்பித்தேன். மேலும், எந்த கூட்டணிக்கும் முயற்சிக்கவில்லை எனவும் அவரிடம் தெரிவித்தேன். காஷ்மீர் மீதான பாதுகாப்பு கொள்கை மாற்றப்பட வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    ஜம்மு காஷ்மீரில் பிடிபி உடனான உறவை முறித்துள்ள பாஜக, கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணங்களை எடுத்துக் கூறியுள்ளது. #BJPDumpsPDP
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி அமைத்து கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சி செய்த நிலையில், கூட்டணியில் இருந்து விலகுவதாக பாஜக இன்று அறிவித்தது. இந்த அறிவிப்பை இன்று வெளியிட்ட அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம், வன்முறை அதிகரித்துள்ளது. பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் அங்கு ஆபத்தில் உள்ளது. சமீபத்தில், பத்திரிகை ஆசிரியர் புகாரி கொல்லப்பட்டது அதற்கு எடுத்துக்காட்டான ஒன்று. காஷ்மீருக்காக மத்திய அரசு அனைத்தையும் செய்தது. எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறலை தடுத்து நிறுத்த நாங்கள் முயன்றோம். ஆனால், தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்ற பிடிபி முயற்சிக்கவில்லை.

    ஜம்மு லடாக் பகுதியில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் பாஜக தலைவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 


    முப்தி முகம்மது சயீத் உடன் மோடி

    இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை கருதியும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒன்றினைந்த பகுதிதான் என்பதை நிலைநாட்டவும், அங்குள்ள நிலமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு அதிகாரத்தை கவர்னரிடம் ஒப்படைக்க பாஜக தீர்மானித்துள்ளது.

    கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டாலும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் எங்களது நடவடிக்கை தொடரும். 

    இவ்வாறு அவர் கூறினார். 
    ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையிலான பிடிபி கட்சியுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த பாஜக, இன்று கூட்டணியில் இருந்து விலகுவதாக இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. #Kashmir #BJPDumpsPDP
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பிடிபி கட்சி - பாஜக இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. பிடிபி தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த நிர்மல் சிங் பொறுப்பேற்றார். முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    பல்வேறு விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில், காஷ்மீர் நிலவரம் தொடர்பாக அம்மாநில கட்சி தலைவர், பாஜக மந்திரிகளுடன் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனைக்கு பின்னர், அக்கட்சியில் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காஷ்மீரில் பிடிபி கூட்டணி ஆட்சியில் இருந்து பாஜக விலகுவதாக அவர் அறிவித்தார். பாஜக கூட்டணியில் இருந்து விலகியதால் அம்மாநிலத்தில் ஆட்சி கலையும் நிலை ஏற்பட்டுள்ளது. 

    87 இடங்களை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையான 44 இடங்கள் யாருக்கும் இல்லை. பிடிபி 28 இடங்கள், பாஜக 25 இடங்கள், தேசிய மாநாட்டுக்கட்சி 15 இடங்கள், காங்கிரஸ் 12 மற்றும் இதர கட்சிகள் 7 இடங்களை வைத்துள்ளன.
    ரம்ஜான் பண்டிகையை குடும்பத்தாருடன் கொண்டாடும் வகையில் கல்வீச்சு போன்ற சிறிய குற்றங்களுக்காக கைதான 115 பேரை சிறைகளில் இருந்து விடுதலை செய்ய மெகபூபா முப்தி உத்தரவிட்டுள்ளார். #JKgovt #115prisonersrelease
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையின்போது பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது, தடையை மீறி பேரணி சென்றது போன்ற வழக்குகளில் கைதானவர்களை ரம்ஜான் பண்டிகைக்குள் விடுதலை செய்ய வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதையடுத்து, கொடுங்குற்றம் அல்லாத சிறிய குற்றங்களுக்காக கைதான 115 பேரை சிறைகளில் இருந்து விடுதலை செய்ய மெகபூபா முப்தி உத்தரவிட்டுள்ளார். #JKgovt  #115prisonersrelease
    காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியை அவதூறாக பேசிய வீடியோ விவகாரத்தில் தேடப்பட்ட முன்னாள் பா.ஜ.க. மந்திரியின் சகோதரரை அம்மாநில போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
    ஸ்ரீநகர் :

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஹிராநகர் பகுதியில் கடந்த மாதம் பேரணி ஒன்று நடைபெற்றது. அதில், முன்னாள் பா.ஜ.க. மந்திரி லால் சிங்கின் சகோதரரான ராஜிந்தர் சிங் அலியாஸ் பாபி என்பவர் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியை அவதூறாக பேசியுள்ளார்.

    அவர் பேசிய வீடியோ சமூக வளைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, அவர் மீது காஷ்மீர் போலீசார் அவதூறு வழக்கு பதிவு செய்தனர். வழக்கு பதியப்பட்டதை அடுத்து, ராஜிந்தர் சிங் அலியாஸ் கைது நடவடிக்கைகளுக்கு பயந்து தலைமறைவானார்.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் அவரை இன்று கைது செய்துவிட்டதாக ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
    இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளதற்கு ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி மெஹ்பூபா முப்தி வரவேற்றுள்ளார். #MehboobaMufti
    ஜம்மு:

    இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் அனில் சவுகானும், பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் சகிர் ஷம்சத் மிர்சாவும் நேற்று தொலைபேசியில் ‘ஹாட்லைன்’ வசதி மூலமாக பேசினர். எல்லை கட்டுப்பாட்டு கோடு, சர்வதேச எல்லை ஆகிய இடங்களில் உள்ள நிலவரம் பற்றி ஆய்வு செய்தனர்.

    இந்த பேச்சுவார்த்தையின்போது, 2003-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக கடைபிடிப்பது என்றும், இருதரப்பிலும் போர் நிறுத்த மீறலில் ஈடுபடுவது இல்லை என்றும் உடன்பாடு ஏற்பட்டது.

    இந்தநிலையில் இது குறித்து காஷ்மீர் முதல்-மந்திரி மெஹ்பூபா முப்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

    ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு இந்த செய்தி ஆறுதலாக இருக்கும். இந்த போர் நிறுத்தம் தொடர்ந்து நீடிக்கும் என நம்புகிறேன். எல்லையில் அமைதி நிலவுவது தான் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்படுவதற்கான முதல் அடி என குறிப்பிட்டுள்ளார். #MehboobaMufti #India #Pakistan
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு துறைகள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்யும் போது, 30 சதவிகிதம் சுய உதவிக்குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். #MehboobaMufti #SelfHelpGroups





    ஸ்ரீநகர் :

    காஷ்மீர் மாநிலத்தில் திறமை வாய்ந்த பட்டதாரிகள் மூலம் அவர்களின் திறமைக்கு ஏற்ப அம்மாநிலத்தின் பொறியியல், கட்டுமானம் மற்றும் உள் கட்டமைப்புகளை தரம் உயர்த்தும் பணிகளுக்கு தேவையான பொருட்களை சுயமாக தயாரித்துக்கொடுப்பதற்காக சுய உதவிக்குழுக்கள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் இயங்கி வரும் பல்வேறு துறைகளை சேர்ந்த சுய உதவிக்குழுக்களை சீரமைப்பது, தேவைக்கு ஏற்ப அவர்களை துறைவாரியாக ஒருங்கிணைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த ஆலோசனையின் போது சுய உதவிக்குழுக்களை மேம்படுத்த தேவையான திருத்தங்கள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பான கருத்துக்களை அவர் கேட்டறிந்தார். ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் மெகபூபா முப்தி சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்களுக்கு அம்மாநில அரசுத்துறைகளில் 30 சதவிகிதம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    மேலும், இதுவரை சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை 60 லட்சத்தில் இருந்து 1 கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளார். இதை செயல்படுத்த தேவைப்படும் நிதி குறித்த திட்ட வரைவை ஜம்மு காஷ்மீர் வங்கி அடுத்த 10 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். #MehboobaMufti #SelfHelpGroups
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த இதுவே சரியான தருணம் என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். #FarooqAbdullah #MehboobaMufti
    ஸ்ரீநகர் :

    தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

    காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த இதுவே சரியான தருணம், சட்டசபையை கலைத்துவிட்டு மக்கள் ஜனநாயகத்தின் பலனை அனுபவிக்க வேண்டும். கவர்னர் ஆட்சியை எப்போதும் எங்கள் கட்சி ஆதரித்தது இல்லை ஆனாலும் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சியினால் குழப்பத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் காஷ்மீர் மாநிலத்தை அமைதியை நோக்கி திருப்ப கவர்னர் ஆட்சி ஒன்றே வழி.

    முன்னாள் துணை முதல்வர் நிர்மல் சிங், ராணுவ வெடிமருந்து சேமிப்பு கிடங்கு அருகே 12 ஏக்கர் பரப்பளவில் வீடு கட்ட கட்டுமான பணியை மேற்கொண்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராணுவம் காஷ்மீர் மாநில உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    சட்ட விரோதமாக நிலம் வாங்கி சர்ச்சையை ஏற்படுத்தியது மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள பாஜகவை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் நிர்மல் சிங் மற்றும் முன்னாள் சட்டசபை சபாநாயகர் குப்தா ஆகியோர் மீது இதுவரை ஏன் முதல்வர் மெகபூபா முப்தி நடவடிக்கை எடுக்கவில்லை ? எதற்காக அவர் மவுனம் காக்கிறார் ? மாநிலத்தில் அரசு திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாத நிலையில் அரசாங்கம் என்ற ஒன்று உள்ளதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

    முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத் மறைவினால் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட காலகட்டமான 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மட்டுமே மாநிலம் சரியான திசையை நோக்கி பயணித்தது. எனவே, இப்போதும் காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளர். #FarooqAbdullah #MehboobaMufti
    காஷ்மீர் பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி தொலைபேசியில் பேசினார். #Kashmirpeopleattack #MehboobaMufti #ArvindKejriwal
    புதுடெல்லி: 

    புதுடெல்லியின் சன்லைட் காலனி என்ற பகுதியில் வசிக்கும் காஷ்மீரை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 5 பேர் மீது கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதி மக்கள் திடீரென தாக்கினர். 

    இதுதொடர்பாக தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கூறுகையில், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் அச்சத்துடனேயே வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவித்தனர். 

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி காஷ்மீர் பெண்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

    இதுதொடர்பாக டெல்லி முதல் மந்திரி அலுவலக அதிகாரிகள் கூறுகையில், முதல் மந்திரி கெஜ்ரிவாலிடம் ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி முப்தி தொலைபேசியில் பேசினார். அப்போது, காஷ்மீர் பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பேசி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அவரிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார் என தெரிவித்துள்ளனர். #Kashmirpeopleattack #MehboobaMufti #ArvindKejriwal
    ×