search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kodanad murder"

    கொடநாடு விவகாரம் தொடர்பாக தி.மு.க.வின் போராட்டம் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #KodanadEstate #DMK #MKStalin
    சென்னை:

    கொடநாடு விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து மு.க.ஸ்டாலின் அறித்த பேட்டி வருமாறு:-

    கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு உள்ளது. ஆதாரங்களோடு இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் அவரிடம் நேரடியாக புகார் மனு கொடுத்தோம்.

    4 முக்கியமான கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு அந்த மனு இருந்தது. இதில் ஒன்று குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிற எடப்பாடி பழனிசாமியை உடனடியாக முதல்-அமைச்சர் பதவியில் இருந்து கவர்னர் நீக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான, முறையான விசாரணை நடைபெறும்.

    அடுத்து, கவர்னர் உடனடியாக இந்திய ஜனாதிபதியிடம் நேரடியாக இதுபற்றி விளக்கிச் சொல்லி அவர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவதாக உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும்.

    நான்காவதாக மர்மமான முறையில் விபத்தில் இறந்ததாக சொல்லப்படும் டிரைவர் கனகராஜ் மரணம் குறித்தும் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    ஆனால், இதுவரை கவர்னர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று செய்திகள் வரவில்லை. எனவே, தி.மு.க. சார்பில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம். இதில் பங்கேற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது போலியானது. இதற்கு முதல்- அமைச்சர் சொல்லும் பதிலை ஊடகங்கள் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.

    அமைச்சர்கள், முதல்- அமைச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கொடுத்தும் கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மத்திய அரசு பின்னால் இருந்து கொண்டு இவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. என்றாலும் நாங்கள் இதை விடப்போவதில்லை. தொடர்ந்து இதுபோன்ற போராட்டங்களை தி.மு.க. நடத்தும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். #DMK #MKStalin
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமற்ற புகார்களை கூறி வருவதால் 2 பேரின் ஜாமீனை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் வருகிற 29-ந் தேதி ‌ஷயான், மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
    ஊட்டி:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு இந்த பங்களாவுக்குள் நுழைந்த மர்மநபர்கள் காவலாளியை கொலை செய்து விட்டு கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ‌சயான், மனோஜ் உள்பட பலரை கைது செய்தனர்.

    தற்போது ‌சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். இவர்களுக்கு அடுத்த மாதம் 2-ந் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் இவர்கள் 2 பேரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமற்ற புகார்களை கூறி வருவதால் இவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரி ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வக்கீல் பால நந்தகுமார் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, ‌சயான் தரப்பு இன்று ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

    இதனையடுத்து ‌சயான், மனோஜ் தரப்பில் ஆஜரான வக்கீல் செந்தில் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

    இதனை விசாரித்த மாவட்ட நீதிபதி வடமலை வருகிற 29-ந் தேதி ‌ஷயான், மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். #KodanadEsate
    கொடநாடு தொடர்பான குற்றச்சாட்டுக்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் தெரிவித்தார். #SamuelMathew #KodanadEstate
    சென்னை:

    கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    கொடநாடு கொள்ளை குற்றவாளிகளான சயான், மனோஜ் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மேத்யூஸ் இன்று விமானம் மூலம் சென்னை வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொடநாடு கொள்ளை மற்றும் அதன்பின் நடந்த கொலைகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுப்பது தொடர்பாகவும், முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும், சென்னையில் வக்கீல்களை சந்திக்க வந்துள்ளேன்.

    சயான், மனோஜ் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. என் மீதும் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.


    தமிழக அரசு மீது நான் குற்றம் சாட்டவில்லை. எடப்பாடி பழனிசாமி மீதுதான் குற்றம் சாட்டுகிறேன். அவர் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது.

    கொடநாடு விவகாரத்தில் செய்தியாளராக நான் எனது பணியை முழுமையாக செய்தேன். இந்த குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை.

    கொடநாடு கொள்ளை, அதன்பின் கொலைகள் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை சொல்வது எடப்பாடி பழனிசாமியின் கடமை.

    கொடநாடு தொடர்பான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்று கூறி உள்ளார். ஆனால் என்னிடம் மேலும் ஆதாரங்கள் உள்ளன. அதை சரியான நேரத்தில் வெளியிடுவேன். இவ்விவகாரத்தை சட்டப்படி நீதிமன்றத்திலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #SamuelMathew #KodanadEstate
    கொடநாடு விவகாரம் என்பது எதிர்கட்சிகளால் புனையப்பட்ட நாடகம் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #KodanadIssue #ThambiDurai
    கோவை:

    எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாளையொட்டி கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

    முன்னதாக கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்த பின் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஏழை மக்களுக்காக போராடி பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். கொடநாடு பிரச்சனை என்பது எதிர்கட்சிகளின் ஒரு புனையப்பட்ட நாடகம்.

    தீர்ப்பு வருகிற நாளில் திசை திருப்பும் வகையில் அரசியல் சதிக்காக தவறான செய்தி மூலம் பிளாக் மெயில் செய்கிறார்கள். இதில் எந்த உண்மையும் இல்லை.

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது. அந்த வெற்றியை சீர்குலைக்க நினைக்கும் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளின் முயற்சி எடுபடாது.



    பஞ்சாயத்து தேர்தலை மனதில் கொண்டு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பஞ்சாயத்து, பஞ்சாயத்தாக செல்கிறார். பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறாது.

    தமிழக முதலமைச்சர் மீது அவதூறு கிளப்பும் கொடநாடு சதித்திட்டம் வெற்றி பெறாது. அ.தி.மு.க. மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி குளிர்காய்வதே தி.மு.க.வின் கொள்கை.

    அவரிடம் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஏன் செல்கிறார்? என நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு தம்பிதுரை பதில் அளிக்கும் போது, பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு யார் ஆட்சிக்கு வந்தாலும் மத்திய அரசில் அங்கம் வகிக்க வேண்டுமென தி.மு.க. முயல்கிறது என்றார்.

    மத்திய அரசுடன், மாநில அரசு என்ற முறையில் நல்ல உறவு உள்ளது. ஆடிட்டர் குருமூர்த்தி பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டுமென கூறியிருப்பது கேலியாக உள்ளது.

    அ.தி.மு.க.வை நாங்கள் மேலும் வளர்க்க பாடுபடுகிறோம். பா.ஜ.க.வை அவர்கள் வளர்க்கட்டும். பா.ஜ.க.வை காலூன்ற வைக்க அ.தி.மு.க.வினர் சுமந்து செல்ல மாட்டோம்.

    ஆடிட்டர் குருமூர்த்தி பா.ஜனதாவா, ஆர்.எஸ்.எஸ்.சா, பத்திரிகையாளரா என எனக்கு தெரியாது. விளம்பரத்திற்காக அவர் பேசுகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் சூழலுக்கு ஏற்ப அ.தி.மு.க. செயற்குழு கூடி முடிவெடுக்கும். அதை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு தம்பிதுரை கூறினார். #ADMK #ThambiDurai
    அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். #AMMK #TTVDhinakaran #DMK #ADMK
    கும்பகோணம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கும்பகோணம் அடுத்த திம்மங்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- கொடநாடு பிரச்சனை பற்றி..?

    பதில்:-கொடநாடு விவகாரத்தில் தமிழக அரசு அவசர அவசரமாக நடந்து கொண்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டிய குற்றவாளிகளை கைது செய்ய டெல்லிக்கு காவல்துறையை அனுப்பி உள்ளனர். மேலும் கோர்ட்டில், குற்றவாளிகளை காவலில் எடுக்க ஆஜர்படுத்தியுள்ளனர். இதில் ஏதோ பதட்டமும், அவசரத்துடன் தமிழக அரசு செயல்பட்டதாகவே தெரிகிறது.

    கொடநாடு எஸ்டேட் 5 பேர் கொலையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் வழக்கு விசாரணை வரும்போது சந்தித்து இருக்கலாம். ஆனால் அவசர அவசரமாக டெல்லிக்கு காவல்துறையை அனுப்பி செயல்படுகிறார்கள் என்பதால் சந்தேகம் ஏற்படுகிறது. இதற்கு காலம் தான் பதில் சொல்லும். அதுவரை பொறுத்திருக்க வேண்டும்.

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து..?

    பதில்:- பாராளுமன்ற தேர்தலில் ஒருசில கட்சிகள் கூட்டணி குறித்து எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தொகுதி பங்கீடு குறித்து ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டு சென்றால் கூட, கடந்த 2014-ம் ஆண்டில் ஜெயலலிதா தனியாக நின்றது போல் 40 தொகுதிகளிலும் அ.ம.மு.க. தனியாக போட்டியிடும்.

    மக்கள் ஆதரவு என்றும் முழுமையாக எங்களுக்கு உள்ளது. 40 தொகுதிகளிலும் எங்களது எம்.பி.க்கள் வெற்றி பெறுவர். இதில் எந்த சந்தேகமும் இல்லை.


    கேள்வி:- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை விட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வசதியுடன் உள்ளார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளாரே?

    பதில்:- 60-40 என்ற வி‌ஷயத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள். தி.மு.க.வினர் கேட்கும் டெண்டர்கள் உடனே வழங்கப்படுகிறது.

    மு.க.ஸ்டாலினும், தினகரனும் கூட்டணி என்று அமைச்சர் ஜெயக்குமார் புலம்பினார். ஆனால் இப்போது அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மறைமுக கூட்டணி வைத்துள்ளனர். இதை அமைச்சர் ஜெயக்குமார் ஒத்துக்கொள்கிறாரா?

    கஜா புயல் பாதித்த நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க. - தி.மு.க.வினரை கிராம மக்கள் உள்ளே விடவில்லை. ஆளுங்கட்சியும், எதிர் கட்சியும் கூட்டணியாக உள்ளனர் என்பதால் தான் அவர்களை கிராமங்களுக்குள் செல்ல பொதுமக்கள் அனுமதிக்கவில்லை.

    திருவாரூரில் இடைத்தேர்தல் நடந்திருந்தால் எங்கள் கட்சி வேட்பாளர் காமராஜ் தான் வெற்றி பெற்றிருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #AMMK #TTVDhinakaran #DMK #ADMK
    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புகார் மனு அளிக்கிறார். #KodanadIssue #DMK #MKStalin
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின.

    இதை மறைப்பதற்காக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் ‌சயான், மற் றொரு குற்றவாளி மனோஜ், தெகல்கா இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத் யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந்தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

    கொடநாடு கொலை- கொள்ளை சம்பவங்கள் தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தன் மீதான குற்றச்சாட்டுகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்ததுடன் இந்த குற்றச்சாட்டில் அரசியல் பின்புலம் இருப்பதாக கருதுகிறேன் என்றார். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொடநாடு விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும். சிறப்பு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். ஐகோர்ட்டில் நீதிபதி மேற்பார்வையில் இந்த விசாரணை நடத்தப்படவேண்டும்.

    முதல்-அமைச்சரை அழைத்து ஜனாதிபதியும், கவர்னரும் விளக்கம் கேட்க வேண்டும்.


    இந்த பிரச்சனையை ஜனாதிபதி, கவர்னர் ஆகியோரின் கவனத்துக்கு தி.மு.க. கொண்டு செல்ல இருக்கிறது. இன்று கவர்னரிடம் புகார் மனு அளிக்க உள்ளோம் என்றார்.

    இதையடுத்து கவர்னரை மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. அதன்படி கவர்னரை சந்திக்க மு.க.ஸ்டாலினுக்கு இன்று மாலை 5.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து மாலை 5.30 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, மு.க.ஸ்டாலின் சந்தித்து கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புகார் மனு அளிக்கிறார். #KodanadIssue #DMK #MKStalin #BanwarilalPurohit
    தமிழக அரசு உடனடியாக ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து கொடநாடு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து கண்டறிய வேண்டும் என்று ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார். #Kodanad #TamilMaanilaCongress
    சென்னை:

    த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொடநாடு எஸ்டேட் கொலை-கொள்ளை விவகாரத்தில் திடீரென்று இதில் சம்பந்தப்பட்ட இரண்டு குற்றவாளிகள் சயன் மற்றும் மனோஜை டெல்லியில் பத்திரிகையாளர்கள் முன்பு நிறுத்தி ஒரு சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள். இவர்களை கொடநாடு அனுப்பியது தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்று சொல்ல வைத்திருப்பதால் இதன் பின்னணி என்ன என்பதை தமிழக அரசு உடனே ஆய்வு செய்ய வேண்டும்.

    பத்திரிகையாளர் சந்திப்பில் சயன் தனக்கும் தற்போதைய முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாகவோ, முதல்வர் சொல்லித்தான் தான் ஆட்களை கொடநாடு கூட்டிச் சென்றதாகவோ சொல்லவில்லை.

    மாறாக மறைந்த கனகராஜ் தன்னை தொடர்பு கொண்டு தற்போதைய முதல்வர் அவரிடம் சொல்லி அதனால் இந்த ஏற்பாட்டை செய்ய வேண்டுமென்று கூறியதாக கூறியிருக்கிறார். அந்த கனகராஜ் இன்று உயிரோடு இல்லை என்பதை சாதகமாக எடுத்துக் கொண்டு இந்த கருத்தை கூறி இருக்கலாம்.

    இந்திய சாட்சிய சட்டம் 60-ன்படி எந்த சாட்சியமும் நேரடியாக தொடர்புள்ளதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் சயனின் கூற்று ஏற்புடையதல்ல.

    இப்படி ஒரு கூற்றை இந்த நேரத்தில் ஏன் சொல்ல வேண்டும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி? டெல்லியில் உள்ள சாமுவேல் மாத்யேவுக்கும், கேரளாவை சேர்ந்த சயனுக்கும் என்ன தொடர்பு? சயனையும், மனோஜையும் டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு கூட்டிச் சென்றது யார்? இதற்கான செலவுகளை ஏற்றது யார்? இதன் பின்னணி என்ன என்பதை எல்லாம் மிக விரைவாக தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

    அதன் அடிப்படையில் மிகப்பெரிய அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒரு நாட்டையோ, மாநிலத்தையோ தலைமை தாங்குபவர்கள் மீது போகிற போக்கில் சேற்றை வாரி பூசுவது என்பது அனுமதிக்கப்பட்டால் யாரும் எந்தப் பதவியிலும் இருக்க முடியாது.

    ஒரு அரசின் ஸ்திர தன்மையை ஒரு நொடியில் தகர்த்து விட முடியும். இதில் எல்லா அரசியல் கட்சிகளும் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    இந்த விவகாரம் தன்னுடைய அரசியல் லாபத்திற்கு உதவும் என்பதால், இதை ஆளுகிற அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கையில் எடுத்தால் நாளை இது அவர்களையும் தாக்கக்கூடும் அரசியல் எதிரிகளால் என்பதை உணர வேண்டும்.

    தமிழக அரசு உடனடியாக ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து இதில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து கண்டறிய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Kodanad #TamilMaanilaCongress
    கவர்னரை நாளை நேரடியாக சந்தித்து கொடநாடு விவகாரம் தொடர்பாக முறையிட உள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #Kodanad
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது நான் கிராமம் கிராமமாக சென்றேனா? இப்போது சென்று குறை கேட்பதா? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்னை பார்த்து கேள்வி கேட்டு வருகிறார்.

    அதற்கு நான் சில விளக்கத்தை சொல்கிறேன். 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தியது நாங்கள் தான். பல ஆண்டுகாலமாக பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் ஊராட்சிகளுக்கு தேர்தலை நடத்தியதும் நாங்கள்தான்.

    நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது நிதி பகிர்வு குறித்து எனது தலைமையில் குழு அமைக்கப்பட்டு கலைஞர் முதல்- அமைச்சராக இருந்தபோது 99 பரிந்துரைகளை நிறைவேற்றி செயல்படுத்தினோம்.

    கிராம ஊராட்சிகளுக்கு அதிக நிதியை உருவாக்கி கொடுத்தோம். நாங்கள் சமத்துவபுரத்தை உருவாக்கினோம். நமக்குநாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்தினோம். காங்கிரீட் வீடுகளை கட்டிக்கொடுத்தோம்.

    12,617 ஊராட்சிகளிலும் நூலகத்தை உருவாக்கினோம். 29 ஆயிரம் ஊரக சாலைகளை, 54 ஆயிரம் சாலைகளாக அதிகரித்தோம். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.6,364 கோடி கடன் வழங்கினோம். நானே நேரடியாக சென்று மகளிருக்கு உதவி வழங்கினேன்.

    ராமநாதபுரத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், வேலூரில் கூட்டு குடிநீர் திட்டம், மீஞ்சூர் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றினோம். இப்படி பல திட்டங்களை எங்கள் ஆட்சியில் செய்ததை சொல்ல முடியும்.

    ஆனால் இன்று கொலை, கொள்ளை, வழிப்பறி, லஞ்சம் என்று சொல்ல வேண்டுமென்றால் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரைத்தான் சொல்லமுடியும்.


    உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது தி.மு.க. தான் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் திட்டமிட்டு ஒரு பொய்யை சொல்லி வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலுக்காக வழக்கு போட்டது நாங்கள் தான். அதை நிறுத்த வழக்கு போடவில்லை.

    ஆனால் தேர்தலை முறையாக நடத்த, அதில் உள்ள குறைகளை நீக்க ஆர்.எஸ்.பாரதி மூலம் வழக்குபோட்டோம். மலை வாழ் மக்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கி முறைப்படி நடத்த வழக்கு போட்டோம். 2017-ம் ஆண்டு மே மாதம் தேர்தலை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இந்த அரசு தேர்தலை நடத்தவில்லை. பலமுறை கோர்ட்டு சொல்லியும் இதுவரை உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. இது யார் தவறு? என் தவறா? எடப்பாடி பழனிசாமி மீது தவறா? மக்களுக்கு உண்மை தெரியும்.

    இப்போது நான் முதல்-அமைச்சராக இல்லை. தேர்தல் ஆணையம் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தலை நடத்த வேண்டியது அவர்கள் பொறுப்பு.

    ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு இணையானது கொடநாடு பங்களா. ஜெயலலிதா இருந்த போதும், அவர் இறந்த பிறகும் கொடநாட்டில் மர்ம மரணம், திருட்டு, கொள்ளை, கொலை, விபத்து தொடர்ந்து நடக்கிறது. கொடநாடு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள சி.சி.டி.வி. ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை செய்துள்ளார். கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்.

    சயன் என்பவரின் மனைவி, மகள், சாலை விபத்தில் மரணம் அடைந்தனர். இதற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது.

    தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு குறும்படம் வெளியிட்டுள்ளார். அதில் சயன், வாளையார் பேட்டி கொடுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் காரியங்களை செய்ததாக அதில் கூறுகிறார்கள்.

    இந்த குற்றச்சாட்டு எதற்கும் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லவில்லை. அதற்கு பதில் போலீசில் புகார் செய்துள்ளதாக கூறுகிறார். கனகராஜை தெரியாது என்று அவர் சொல்லவில்லை. சயன் என்பவர் யார் என்றே தெரியாது என்றும் அவர் சொல்லவில்லை. ரூ.2000 கோடி பணம் குறித்தும் எதுவும் சொல்லவில்லை. ரூ.5 கோடி பேரம் நடந்தது குறித்தும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

    ஆனால் பொத்தாம் பொதுவாக அரசியல் சதி என்று கூறுகிறார். இவர்கள் சொன்ன புகாரை நிரூபித்தால் பதவி விலக தயார் என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அதற்கு மாறாக குற்றச்சாட்டு சொன்னவர்கள் மீது வழக்குபோட்டு மிரட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்.

    இந்த வி‌ஷயத்தில் தி.மு.க.வின் கோரிக்கை என்னவென்றால் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும்.

    மத்திய அரசு சிறப்பு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமியிடம், ஜனாதிபதியும், கவர்னரும் விளக்கம் கேட்க வேண்டும். குற்றச்சாட்டு கூறியவர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

    கவர்னரை நாளை நான் நேரடியாக சந்தித்து இதுபற்றி முறையிடுவேன். இதில் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தி.மு.க. நீதிமன்றத்தை நாடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #DMK #MKStalin #Kodanad
    ×