search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடநாடு விவகாரம்: பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும்- ஞானதேசிகன்
    X

    கொடநாடு விவகாரம்: பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும்- ஞானதேசிகன்

    தமிழக அரசு உடனடியாக ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து கொடநாடு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து கண்டறிய வேண்டும் என்று ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார். #Kodanad #TamilMaanilaCongress
    சென்னை:

    த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொடநாடு எஸ்டேட் கொலை-கொள்ளை விவகாரத்தில் திடீரென்று இதில் சம்பந்தப்பட்ட இரண்டு குற்றவாளிகள் சயன் மற்றும் மனோஜை டெல்லியில் பத்திரிகையாளர்கள் முன்பு நிறுத்தி ஒரு சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள். இவர்களை கொடநாடு அனுப்பியது தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்று சொல்ல வைத்திருப்பதால் இதன் பின்னணி என்ன என்பதை தமிழக அரசு உடனே ஆய்வு செய்ய வேண்டும்.

    பத்திரிகையாளர் சந்திப்பில் சயன் தனக்கும் தற்போதைய முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாகவோ, முதல்வர் சொல்லித்தான் தான் ஆட்களை கொடநாடு கூட்டிச் சென்றதாகவோ சொல்லவில்லை.

    மாறாக மறைந்த கனகராஜ் தன்னை தொடர்பு கொண்டு தற்போதைய முதல்வர் அவரிடம் சொல்லி அதனால் இந்த ஏற்பாட்டை செய்ய வேண்டுமென்று கூறியதாக கூறியிருக்கிறார். அந்த கனகராஜ் இன்று உயிரோடு இல்லை என்பதை சாதகமாக எடுத்துக் கொண்டு இந்த கருத்தை கூறி இருக்கலாம்.

    இந்திய சாட்சிய சட்டம் 60-ன்படி எந்த சாட்சியமும் நேரடியாக தொடர்புள்ளதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் சயனின் கூற்று ஏற்புடையதல்ல.

    இப்படி ஒரு கூற்றை இந்த நேரத்தில் ஏன் சொல்ல வேண்டும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி? டெல்லியில் உள்ள சாமுவேல் மாத்யேவுக்கும், கேரளாவை சேர்ந்த சயனுக்கும் என்ன தொடர்பு? சயனையும், மனோஜையும் டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு கூட்டிச் சென்றது யார்? இதற்கான செலவுகளை ஏற்றது யார்? இதன் பின்னணி என்ன என்பதை எல்லாம் மிக விரைவாக தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

    அதன் அடிப்படையில் மிகப்பெரிய அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒரு நாட்டையோ, மாநிலத்தையோ தலைமை தாங்குபவர்கள் மீது போகிற போக்கில் சேற்றை வாரி பூசுவது என்பது அனுமதிக்கப்பட்டால் யாரும் எந்தப் பதவியிலும் இருக்க முடியாது.

    ஒரு அரசின் ஸ்திர தன்மையை ஒரு நொடியில் தகர்த்து விட முடியும். இதில் எல்லா அரசியல் கட்சிகளும் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    இந்த விவகாரம் தன்னுடைய அரசியல் லாபத்திற்கு உதவும் என்பதால், இதை ஆளுகிற அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கையில் எடுத்தால் நாளை இது அவர்களையும் தாக்கக்கூடும் அரசியல் எதிரிகளால் என்பதை உணர வேண்டும்.

    தமிழக அரசு உடனடியாக ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து இதில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து கண்டறிய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Kodanad #TamilMaanilaCongress
    Next Story
    ×