search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Internet"

    மும்பையை சேர்ந்த மருத்துவர் ஆன்லைன் ஊழலில் ஒற்றை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்திருக்கிறார். #OnlineScam



    மும்பையை சேர்ந்த மருத்துவர் ஒற்றை க்ளிக் செய்து சுமார் ரூ.3 லட்சம் இழந்துள்ளார். இது தொடர்பாக பிபின் மஹாடோ என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    போலீசார் கைது செய்துள்ள பிபின் மஹாடோ பணத்தை பறிக் கொடுத்த மருத்துவரிடம் ஒரேமுறை மட்டும் பேசி, அவருக்கே தெரியாமல் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2.9 லட்சம் பணத்தை நூதன முறையில் திருடியிருக்கிறார்.

    சில தினங்களுக்கு முன் வங்கியில் இருந்து பேசுவதாக பிபின் மருத்துவரிடம் தெரிவித்தார். மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டதால், பிபின் வங்கியில் இருந்து பேசுவதை மருத்துவரிடம் நிரூபிக்க அவரது வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்தார்.



    மேலும், மருத்துவர் பயன்படுத்தும் வங்கி செயலியை மேம்படுத்த வங்கி சார்பில் அனுப்பப்படும் இணைய முகவரியை க்ளிக் செய்ய பிபின் மருத்துவரிடம் தெரிவித்திருக்கிறார். இதை முழுமையாக நம்பிய மருத்துவர் பிபின் சொன்னதை போன்று அவன் அனுப்பிய இணைய முகவரியை க்ளிக் செய்தார்.

    இணைய முகவரியை க்ளிக் செய்ததும் மருத்துவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.9 லட்சம் தொகை எடுக்கப்பட்டு விட்டதாக மருத்துவருக்கு தகவல் கிடைத்தது. பின் பிபினை தொடர்பு கொள்ள மருத்துவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியை தழுவின.

    இறுதியில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் காவல் துறை உதவியை நாடினார். போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவர் வங்கி கணக்கில் இருந்த தொகை மாற்றப்பட்ட வங்கி கணக்கு கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவரை ஏமாற்றி அவரது பணத்தை பிபின் பறித்தது உறுதி செய்யப்பட்டது.
    கூகுள் க்ரோம் பிரவுசரில் புதிய அம்சங்களை வழங்குவதற்கான சோதனை நடைபெறுகிறது. அந்த வகையில் கூகுள் க்ரோமில் நெவர் ஸ்லோ மோட் வழங்கப்பட இருக்கிறது. #GoogleChrome



    கூகுள் நிறுவனம் தனது க்ரோம் பிரவுசரில் புதிய அம்சங்களை வழங்க இருக்கிறது. சமீபத்தில் பாஸ்வேர்டு செக்கப் எனும் க்ரோம் எக்ஸ்டென்ஷனை கூகுள் அறிமுகம் செய்தது. இத்துடன் லுக்அலைக் யு.ஆர்.எல். அம்சமும் சேர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூகுள் நிறுவனம் நெவர்-ஸ்லோ மோட் எனும் அம்சத்தை வழங்க இருக்கிறது.

    புதிய நெவர்-ஸ்லோ மோட் அம்சம் ஸ்மார்ட்போன்களில் அதிவேக பிரவுசிங் அனுபவத்தை வழங்கும். இந்த அம்சம் தரவுகள் லோட் ஆவதை தடுத்து நிறுத்தி இணைய பக்கங்களை அதிவேகமாக திறக்கச் செய்யும். புதிய அம்சம் பற்றிய விவரம் க்ரோமியம் கெரிட் வலைபக்கத்தில் வெளியாகியுள்ளது. 

    புதிய அம்சம் தரவுகளை சிறிதளவு உடைக்க செய்யும் என்றும் இது மெமரி பயன்பாட்டையும் குறைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. நெவர்-ஸ்லோ மோட் பற்றிய விவரம் அக்டோபர் 2018 இல் பதிவேற்றம் செய்யப்பட்டு, சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது.



    புதிய அம்சம் தற்சமயம் பெரிய ஸ்க்ரிப்ட்களை பட்ஜெட் அடிப்படையில் தடுத்து நிறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தரவுகளை ~CHECK~Content-Length~CHECK~ முறையில் பஃபெர் செய்யும். பட்ஜெட்கள் பயன்பாடிற்கு ஏற்ப அவ்வப்போது மாற்றியமைக்கப்படும்.  இதனால் பெரிய ஸ்க்ரிப்ட் கொண்ட வலைப்பக்கங்கள் குறிப்பிட்ட அளவுக்கு தடுத்து நிறுத்தப்படும். கூகுள் க்ரோம் பிரவுசரில் நெவர்-ஸ்லோ மோட் வழங்குவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.  

    சமீபத்தில் கூகுள் க்ரோம் பிரவுசரில் பாஸ்வேர்டு செக்கப் எக்ஸ்டென்ஷன் சேர்க்கப்பட்டது. இந்த எக்ஸ்டென்ஷன் உங்களது பாஸ்வேர்டு பாதுகாப்பு பற்றிய விவரங்களை அவ்வப்போது சரிபார்க்கும். ஒருவேளை உங்களது கூகுள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டால், கூகுள் தானாக உங்களது அக்கவுண்ட் பாஸ்வேர்டை மாற்றிவிடும். 
    இணையதள தகவல் பரிமாற்ற முறைகளில் பிரபலமானதாக இருக்கும் மின்னஞ்சல் சேவையில் உங்களது இமெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என கண்டறிவது எப்படி என பார்ப்போம். #Email



    இணைய உலகில் தகவல் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வரும் ஒன்றாகி விட்டது. சமீபத்தில் வெளியான தகவல்களின் படி சுமார்  200 கோடி மின்னஞ்சல்கள் மற்றும் பாஸ்வேர்டுகள் களவாடப்பட்டது. இவற்றில் வெறும் 70 கோடி மின்னஞ்சல்கள் மட்டுமே தனித்துவம் வாய்ந்ததாக கண்டறியப்பட்டது. எனினும், இது மிகப்பெரும் தகவல் திருட்டு சம்பவமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உங்களது தகவல்கள் களவாடப்பட்டு இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளரான டிராய் ஹன்ட் 200 கோடி மின்னஞ்சல் விவரங்கள் களவாடப்பட்டு அவற்றின் பாஸ்வேர்டுகள் இணையத்தில் பரவி வருவதை அறிந்து தடுமாறியிருக்கிறார். முன்னதாக இவர் ஆதார் திட்டத்தில் சில தவறுகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். 

    இந்த தவறுகள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டுகள் வெளியாக செய்ததாக அவர் தெரிவித்தார். அவர் வெளியிட்ட தகவல்களில் இந்த விவரங்கள் 12,000 வெவ்வேறு ஃபைல்களாக சுமார் 87 ஜி.பி. அளவு சேமிக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்திருந்தார். 



    முன்னதாக அவர் தனது வலைபக்கத்தில் வெளியிட்ட தகவல்களில் இணையத்தில் வெளியான விவரங்கள் தற்சமயம் கிடைக்கிறதா என தெரியவில்லை. எனினும் அவை ஹேக்கர்களிடையே பிரபலமாக இருக்கும் இணைய முணையங்களில் கிடைப்பதாக அவர் தெரிவித்தார். ஹன்ட் வெளியிட்ட தகவல்களில் சுமார் 200 கோடி மின்னஞ்சல் விவரங்கள் தகவல் திருட்டு மூலம் வெளியாகி இருப்பதை உறுதி செய்திருக்கிறார். மேலும் அவற்றில் வெறும் 70 கோடி மின்னஞ்சல்கள் மட்டுமே தனித்துவம் வாய்ந்தது என அவர் தெரிவித்தார்.

    இந்த தகவல்கள் HIBP (Have I Been Pwned) வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நீங்களும் உங்களது மின்னஞ்சல் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என இந்த வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதற்கு https://haveibeenpwned.com வலைதளம் சென்று உங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும். 

    இதேபோன்று பாஸ்வேர்டு விவரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள https://haveibeenpwned.com/Passwords வலைதளத்தை பயன்படுத்தலாம். 



    மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டு வெளியாகி இருப்பதை அறிந்து கொண்ட பின் என்ன செய்ய வேண்டும்? 

    மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையின் படி உங்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டு வெளியாகி இருப்பதை அறிந்து கொண்டதும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

    - உடனடியாக மின்னஞ்சல் பாஸ்வேர்டுகளை மாற்ற வேண்டும். 

    - டு-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன் (Two-Factor Authentication) வசதியை அனைத்து சேவைகளிலும் செயல்படுத்த வேண்டும். 

    - குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியில் நீங்கள் வழங்கியிருந்த அனுமதிகளை திரும்ப பெற வேண்டும்.

    நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சேவைகளுக்கும் வெவ்வேறு பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும். சில சேவைகளில் மின்னஞ்சல் முகவரி ஒன்றாக இருந்தாலும் இவ்வாறு செய்ய வேண்டும். வெவ்வேறு சேவைகளுக்கென தனித்தனி பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களது தகவல்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்க முடியும்.
    சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சிப் பசிக்கு குடும்ப பெண்களும் தப்பவில்லை. இத்தகைய இணையதள வன்முறைகள் ஆண்களை விட பெண்களுக்கு 27 மடங்கு அதிகமாக நடக்கிறது.
    சமூக வலைத்தளங்கள் தவிர்க்கமுடியாத அங்கமாக சமூகத்துடன் இணைந்துவிட்டன. கணினி வழியாக பரிமாறிக்கொள்ளப்பட்டு வந்த தகவல்கள் கையடக்க கைப்பேசிக்குள் சுலபமாக புகுந்துவிட்டன. அவற்றுள் எவை அவசியமானவை? எவை அவசியமற்றவை? என்பதை வகைப்படுத்தி பிரித்து பார்க்கும் சிந்தனைத் தெளிவு இல்லாமல் அனைத்து தகவல்களையும் பார்வையிடும் நிர்பந்தத்திற்கு பெரும்பாலானவர்கள் உள்ளாகிவிட்டார்கள். அடுத்தவர்கள் அனுப்பும் தகவல்களை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் சமூக வலைத்தளத்திலேயே மூழ்கி கிடப்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள்.

    பயனுள்ள விஷயங்களை அறிந்து கொள்வதற்கு நேரத்தை செலவிடுவதற்கு பதில், வீண் விஷயங்களில் கவனம் செலுத்தி பொழுதை போக்குவது பேஷனாகவே மாறிக்கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சிப் பசிக்கு குடும்ப பெண்களும் தப்பவில்லை. ஒரே வீட்டில் வசித்தாலும் தனித்தனி தீவுகளைப்போல் தனிமையில் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடப்பது குடும்ப கட்டமைப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டிருக்கிறது. சமூகவலைத்தளங்கள் சமூகத்தை எந்த அளவிற்கு தன் பிடிக்குள் அடி பணிய வைத்திருக்கிறது என்பதை உணர்த்தும் சர்வே இது!

    ‘சமூக வலைத்தளங்களில் தினமும் எத்தனை மணி நேரத்தை செலவிடுகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, 68 சதவீதம் பேர் “தினமும் 4 முதல் 5 மணி நேரத்தை ஒதுக்குகிறோம்” என்று கூறி இருக்கிறார்கள். “நேரத்தை கவனத்தில் கொள்ளாமல் டேட்டா தீர்ந்து போகும் வரை அதிலேயே மூழ்கி கிடப்போம்” என்று பத்து சதவீதம் பேர் பதில் சொல்லியிருக்கிறார்கள். “வீட்டில் இருக்கும் நேரத்தில் வீடியோ பார்ப்பது, சாட்டிங் செய்வது என்று பொழுதை போக்கிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் முகம் கொடுத்து பேச நேரம் கிடைப்பதில்லை” என்றும் 8 சதவீதம் பேர் வருத்தப்பட்டிருக்கிறார்கள். டேட்டா தீர்ந்துபோன பிறகும் மற்றவர்களின் வை-பை மூலம் நெட் பயன்படுத்துவதாக 9 சதவீதம் பேர் சொல்கிறார்கள்.

    இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் சமூக வலைத்தளங்களில் ஐந்தாறு மணி நேரத்தை செலவிடுபவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள். அவர்கள், அதன் பிறகு குடும்பத்தோடு செலவிட தங்களுக்கு ஒரு மணி நேரம்கூட கிடைப்பதில்லை என்றும் கூறுகிறார்கள். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எல்லாம் சமூக வலைத்தளத்துடனேயே தொடர்பில் இருப்பதாக 5 சதவீதம் பேர் கூறி இருக்கிறார்கள்.

    ‘இரவு 11 மணிக்கு மேல் இணைய தளத்தை பயன்படுத்துவீர்களா?’ என்ற கேள்விக்கு, 26 சதவீதம் பேர் ‘ஆம்’ என்று பதில் அளித்திருக்கிறார்கள். 39 சதவீதம் பேர் ‘இல்லை’ என்று கூறி இருக்கிறார்கள். 35 சதவீதம் பேர் எப்போதாவது இரவில் இணையதளத்தை பயன்படுத்துவதாக சொல்லியிருக்கிறார்கள்.

    ‘வீட்டில் உள்ளவர்களுடன் குடும்ப விஷயங்களை பேசுவதற்கு தினமும் எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறீர்கள்?’ என்ற கேள்விக்கான பதிலில், சமூக வலைத்தளம் எந்த அளவுக்கு குடும்பத்தினர் மத்தியில் இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. 21 சதவீதம் பேர் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவதற்கு 1 மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் செலவிடுவதாக கூறி இருக்கிறார்கள்.

    2 மணி முதல் 3 மணி நேரம் வரை பேசுவதாக 23 சதவீதம் பேர் சொல்லி இருக்கிறார்கள். 2 முதல் 4 மணி நேரம் வரை ஒதுக்குவதாக 27 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். உறவு பந்தத்திற்கு ஆறுதல் அளிக்கும் விதமாக 29 சதவீதம் பேர் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக பேசுவதாக கூறி இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடுவது விவாகரத்து அதிகரிப்பதற்கும் காரணமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.



    ‘மகளின் செல்போனின் பாஸ்வேர்டு தெரியுமா?’ என்ற கேள்விக்கு, 52 சதவீதம் பேர் தெரியும் என்கிறார்கள். 42 சதவீதம் பேர் ‘தெரியாது’ என்று கூறி இருக்கிறார்கள். மீதி உள்ள 6 சதவீதம் பேர் கட்டாயப்படுத்தி கேட்டால் சொல்வாள் என்று பதிலளித்திருக்கிறார்கள். அதேபோல் மனைவியின் செல்போன் பாஸ்வேர்டு பற்றிய கேள்விக்கு 56 சதவீதம் ஆண்கள் ‘தெரியும்’ என்கிறார்கள். 25 சதவீதம் பேர் ‘தெரியாது’ என்றும், 11 சதவீதம் பேர் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி இருக்கிறார்கள். “நாங்கள் கேட்டாலும் அவள் சொல்வதில்லை” என்று 8 சதவீதம் பேர் கூறியுள்ளார்கள்.

    ‘டீன் ஏஜ்’ பருவத்தினர் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதும் சர்வேயில் கண்டறியப்பட்டிருக்கிறது. 26 சதவீதம் பேர் செக்ஸ் சார்ந்த விஷயங்களையும், செக்ஸ் ரீதியான தமாஷ்களையும் பகிர்ந்துகொள்வதாக சொல்கிறார்கள். காதலர்களும் சமூகவலைத்தளங்கள் மூலம் அரட்டை அடிப்பதை பிரதானமாக கொண்டிருக்கிறார்கள். அப்போது செக்ஸ் சார்ந்த விஷயங்களும் எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது. சர்வேயில் பங்கெடுத்த பெண்களில் 24 சதவீதம் பேர் காதலிக்கும் நபருக்கு தங்களின் நிர்வாண படங்களை அனுப்புவதாக கூறி அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்கள். தங்களுடைய முகத்தை மறைத்து படம் அனுப்புவதாக 5 சதவீதம் பேர் கூறியுள்ளனர். 71 சதவீதம் பேர் அப்படிப்பட்ட படங்களை அனுப்புவதில்லை என்று கூறி சற்று நிம்மதி பெருமூச்சுவிட வைத்திருக்கிறார்கள்.

    குளிக்க செல்லும்போதுகூட சமூகவலைத்தளங்களில் தங்கள் பிரியமானவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சிலர் அங்கிருந்துகொண்டே புகைப்படங்களை பகிர்வது, வீடியோ கால் செய்து பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். 7 சதவீதம் பேர் குளியல் அறையில் இருந்து வீடியோ காலில் காட்சிகளை பகிர்ந்துகொள்வதாக கூறி இருக்கிறார்கள். ஸ்கிரீன் ரெக்கார்டிங் போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்தி தனிமையில் இருக்கும்போது எடுக்கப்படும் காட்சிகளை பதிவுசெய்து பின்னர் எடிட்டிங் செய்து மற்றவர்களுக்கு அனுப்பலாம் என்பது நிறைய பெண்களுக்கு தெரியவில்லை.

    தனக்கு விருப்பமான அவர் மட்டும்தான் பார்த்து ரசிப்பதாக தவறாக நினைத்து விடுகிறார்கள். இந்த மாதிரியான ஆபாச வீடியோ பதிவுகளை எடுக்கும் ஆண்கள் முதலில் பாத்ரூமில் தங்களை அதுபோன்ற கோணத்தில் படம் பிடித்துக்கொள்கிறார்கள். அதனை காண்பித்து அதுபோன்ற கோணத்தில் தனக்கு விருப்பமான பெண்ணிடம் வீடியோ பதிவு செய்து அனுப்பும்படி சொல்கிறார்கள். அப்படி எடுக்கப்படும் படங்கள் பல கைமாறி அந்த பெண்ணுக்கு விபரீதத்தை உருவாக்கிவிடுகிறது.

    போலி கணக்குகள் தொடங்கி அதன் மூலம் தங்களுக்கு பிடிக்காதவர்களை அவமானப்படுத்தவும் நிறைய பேர் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள். ‘உலகில் 9 கோடி பெண்கள் சைபர் கிரைம் குற்ற வழக்குகளால் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்’ என்று ஐ.நா.வின் பிராட்பேண்ட் கமிஷன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இணையதளங்கள் மூலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்து கொண்டிருக்கின்றன.

    இத்தகைய இணையதள வன்முறைகள் ஆண்களை விட பெண்களுக்கு 27 மடங்கு அதிகமாக நடக்கிறது. சமூகவலைத்தளங்களில் போலி கணக்குகள் தொடங்கி இருப்பதை சர்வேயில் 17 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பெற்றோருக்கு தெரியாமல் இருப்பதற்காகவும், தாங்கள் காதலிக்கும் நபருக்கு தெரியாமல் இருப்பதற்காகவும் போலி கணக்குகள் தொடங்கி இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இது சமூக அமைப்பு ஒன்று மேற்கொண்ட சர்வே தகவலாகும்.

    சமூகவலைத்தளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதே சமூகத்திற்கும், உபயோகிப்பவர்களுக்கும் நன்மை சேர்க்கும்.
    உலகின் சிறந்த சமூக வலைத்தளம் எது? என்று நடத்தப்பட்ட ஒரு புள்ளி விவர கணக்கெடுப்பில் வாட்ஸ்-ஆப் பேஸ்புக்கை விஞ்சிய வலைத்தளமாக வளர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
    உலகின் சிறந்த சமூக வலைத்தளம் எது? என்று நடத்தப்பட்ட ஒரு புள்ளி விவர கணக்கெடுப்பில் வாட்ஸ்-ஆப் பேஸ்புக்கை விஞ்சிய வலைத்தளமாக வளர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

    2018-ம் ஆண்டின் சமூகவலைத்தள பயன்பாட்டை வைத்து ஒரு புள்ளிவிவர கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் வாட்ஸ்ஆப் பேஸ்புக்கை விஞ்சி உலகின் சிறந்த சமூக தகவல்தொடர்பு வலைத்தளமாக பதிவானது. இது பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அப்ளிகேசன் என்றாலும் அது பேஸ்புக்கை மிஞ்சியிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.

    கடந்த 2 வருடங்களில் வாட்ஸ்ஆப் பயன்பாடு 30 சதவீத அளவு வேகமாக உயர்ந்திருக்கிறது.

    மாதாந்திரம் தொடர்ந்து பயன்படுத்தும் ‘ஆக்டிவ்’ பயனாளர்களின் அடிப்படையில் வாட்ஸ்-ஆப் மெஸேஞ்சரில் பேஸ்புக்கைவிட அதிகமான எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் செயல்பாட்டில் உள்ளனர்.

    பேஸ்புக்கின் மற்றொரு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமும் 2017-2018 காலத்தில் 35 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.

    பேஸ்புக் மற்றும் பேஸ்புக் மெஸேஞ்சர் வலைத்தளங்கள் கடந்த 2 வருடங்களில் முறையே 20 சதவீதம் மற்றும் 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

    சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டு நேரம் கடந்த 2 ஆண்டுகளில் 35 சதவீதம் உயர்ந்துள்ளது.

    மொபைல் போன்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாகும்.

    சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை ரசிப்பதும். பகிர்வதும் பெருகி உள்ளது. இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டோக் போன்றவை அதிகம் பிரபலமான வீடியோ காட்சி பகிர்வுத் தளங்களாக தெரியவந்துள்ளன.

    இந்தியாவில் வாட்ஸ்ஆப் மெஸேஞ்சர் தளம் அதிக பயன்பாட்டில் முதலிடத்தையும், அடுத்ததாக இன்ஸ்டாகிராமும், மூன்றாவது இடத்தை பேஸ்புக்கும் பெற்றுள்ளன.

    அமெரிக்காவில் ஸ்னாப்சாட் தளம் முதலிடம் பிடித்திருக்கிறது.

    இலவச போன் அழைப்பு, இலவச மெஸேஜ் மற்றும் தொடர்பு எண் மூலம் தகவல் பரிமாற்றம் ஆகியவை வாட்ஸ்ஆப் பயன்பாட்டிற்கு முக்கிய காரணமாக தெரியவந்துள்ளன. மேலும் ‘என்ட் டூ என்ட் என்கிரிப்டடு’ பாதுகாப்பு அம்சமும் அதன் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
    டிஜிட்டல் பரிவர்த்தனை பாதுகாப்பானதா? எனும் கேள்வி இன்றைக்கு மலையேறிவிட்டது. அதிலிருக்கும் ஆபத்துகளை அங்கீகரித்துக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி மக்கள் முன்னேறிவிட்டார்கள்.
    நமக்கு முந்தைய தலைமுறையினர் சட்டைப்பையில் ஒரு சின்ன நோட்புக்கும், ஒரு பேனாவும் சொருகி வைத்துக் கொண்டு திரிந்தார்கள். அந்த புத்தகம் தான் அவர்களுடைய ஒட்டு மொத்த கணக்கு வழக்குகளுக்கு மான ஆதாரம். அதில் தான் விலாசங்களும், தொலைபேசி எண்களும், கடன் பாக்கிகளும் எழுதப்பட்டிருக்கும். இன்றைக்கு அது டிஜிட்டல் மயமாகிவிட்டது. நமது கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் தான் நமது நடமாடும் தகவல் பெட்டகம். தொலைபேசி எண்களானாலும் சரி, தகவல்களானாலும் சரி, வங்கிக்கணக்கு விஷயங்களானாலும் சரி எல்லாமே அந்த கையடக்க பெட்டிக்குள் டிஜிட்டல் வடிவத்தில் இளைப்பாறுகின்றன.

    டிஜிட்டல் பரிவர்த்தனை பாதுகாப்பானதா? எனும் கேள்வி இன்றைக்கு மலையேறிவிட்டது. அதிலிருக்கும் ஆபத்துகளை அங்கீகரித்துக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி மக்கள் முன்னேறிவிட்டார்கள். அது தருகின்ற வசதிக்காக, சில சவால்களை எதிர்கொள்ளவும் அவர்கள் தயாராக இருக்கின்றனர். உதாரணமாக நீண்ட நெடிய கியூவில் சில மணி நேரங்கள் காத்திருப்பதை விட ஒரு சின்ன ஆபத்து வரலாம் எனும் எச்சரிக்கை உணர்வுடன் ஆன்லைனில் பில் கட்டுவதையே மக்கள் இன்று விரும்புகின்றனர். தியேட்டரில் கவுண்டர் முன்னால் அதிகாலையிலேயே நின்று மண்டை உடைய, ரத்தம் சொட்டச் சொட்ட முதல் காட்சி டிக்கெட் வாங்கியதெல்லாம் வரலாறுகளாகிவிட்டன. இன்று ஏதோ ஒரு ஆப் தான் நமக்கு டிக்கெட்களை வசதியாய் வாங்கித் தருகிறது.

    வணிகம் எப்போதும் மக்களுடைய வசதிக்கு ஏற்ப கடைகளை விரித்துக் கொண்டே இருக்கும். இன்றைக்கு மக்களின் டிஜிட்டல் பயன்பாட்டை முன்னிறுத்தி தான் ஏகப்பட்ட புதிய பிஸினஸ் முறைகள் கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கின்றன. டிஜிட்டலைத் தொடாத எந்த தொழிலும் இனிமேல் வெற்றி பெற முடியாது என்பது எழுதப்படாத விதி. அது உணவகம், மருத்துவம் போன்ற அடிப்படை விஷயங்களானாலும் கூட. அந்தவகையில் டிஜிட்டல் வாலெட்கள் இன்றைக்கு வசீகர அம்சமாக மாறியிருப்பதற்கும், புதிது புதிதாய் முளைத்தெழும்புவதற்கும் அது தான் காரணம். உதாரணமாக பே டி எம், மொபிவிக், பே-யு, கூகுள் பே, ஆப்பிள் பே, ஓலா மணி என ஏகப்பட்ட வாலெட் சேவைகள் இன்றைக்கு களத்தில் குதித்திருக்கின்றன. அவற்றில் சில, மிக வெற்றிகரமாக காலூன்றியும் இருக்கின்றன.

    பயனர்களுக்கு எதைப் பயன்படுத்தலாம்?, எது நல்லது?, எது ஆபத்தில்லாதது? எனும் கேள்விகள் எழுவது சகஜம். குறிப்பாக சில டிஜிட்டல் வாலெட் நிறுவனங்கள் ஏகப்பட்ட தள்ளுபடிகளை அள்ளி வீசுகின்றன, ஏகப்பட்ட ‘கேஷ் பேக்’ ஆபர்களையும் கொட்டித் தருகின்றன. டிஜிட்டல் வாலெட்டுகளின் மூலம் பணம் அனுப்பினாலும், வரப்பெற்றாலும் கேஷ்பேக் சலுகைகள் கிடைக்கின்றன. கூடவே ‘ஸ்கிராட்ச் கார்ட்’ ஆபர்களும் கிடைப்பதால், டிஜிட்டல் வாலெட்டை மக்கள் அதிகமாக பயன் படுத்துகின்றனர்.

    இதற்கிடையில் இந்த இணையதளத்தில் வாங்கினால் இவ்வளவு சலுகை, அந்த இணையதளத்தில் அவ்வளவு ஆபர்... என கவர்ச்சி வலைகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். ‘லாபம்’ எனும் விஷயம் இல்லாமல் எந்த நிறுவனமும் அதன் சுண்டு விரலைக் கூட பயனர்களை நோக்கி நீட்டுவதில்லை. பெரும்பாலான டிஜிட்டல் வாலெட் நிறுவனங்களும், மொபைல் அப்ளிகேஷன்களும் அப்படித் தான்.

    இவை பயனர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே ஒரு பாலம் போல இருக்கின்றன. பயனர்களின் தேவையை, விற்பனையாளர்களிடமிருந்து வாங்கி தங்கள் மூலமாக பரிவர்த்தனை செய்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு லாபம் பல வகைகளில் வருகின்றன. ஒன்று, விற்பனையாளர்களிடமிருந்து ஒரு தொகையை கமிஷனாகப் பெறுகின்றன. சில சேவைகளுக்கு பயனர்களிடமிருந்தே கட்டணத்தைப் பெறுகின்றன. இன்னொன்று தங்கள் மூலமாக நடைபெறும் மொத்த பரிவர்த்தனைகளின் மூலம் சேரும் பல கோடி ரூபாய்களை ஒரு குறிப்பிட்ட காலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து பல இடங்களில் முதலீடு செய்கின்றன.

    வங்கியின் மூலம் நடக்கவேண்டிய பணப்பரிமாற்றம், தனியார் நிறுவனங்களின் வழியே நடப்பதனால், அதில் கிடைக்கும் லாபத்தின் சில பங்கை நமக்கு ‘ஆபர்’ என்ற பெயரில் கொடுக்கிறார்கள். இப்படி சின்ன மீனை ‘ஆபர்’ என்ற பெயரில் அள்ளி வீசுவது, ‘பெரிய பரிவர்த்தனை’ என்ற மீனை பிடிக்கத்தான். ஏனெனில் ஒருசில ஆயிரங்களை பரிமாற்றம் செய்யும்போதே கொள்ளை லாபம் கிடைக்கிறது என்றால், பரிவர்த்தனை லட்சங்களை தொட்டால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற தொலைநோக்கு பார்வையில்தான் நமக்கு ஆபர்கள் கிடைக்கின்றன. இந்த ஆபர்களுக்கு நமக்கு டிஜிட்டல் பணமாகவே கிடைக்கிறது. உதாரணமாக, உங் களுக்கு 300 ரூபாய் பணம் திரும்ப வருகிற தெனில் அது உங்கள் பாக்கெட்டில் பணமாக வருவதில்லை. ஏதோ ஒரு டிஜிட்டல் வடிவத்தில் தான் தருகின்றன.

    உண்மையில் அந்த பணம் நீங்கள் பயன்படுத்தும் வரை அவர்களுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கும். ஒரு கோடி பேருக்கு 300 ரூபாய் கிடைத்தால் அந்த முன்னூறு கோடி ரூபாயும் உண்மையில் அவர்களிடம் தான் இருக்கும். இந்த பணத்தை வைத்திருக்கின்ற வங்கியும் நிறுவனத்துக்கு வட்டி கொடுக்கும். அந்த பணத்தை முதலீடு செய்யும்போதும் கணிசமான லாபம் கிடைக்கும். அந்த பரிவர்த்தனைகளுக்கும் நல்ல கட்டணம் கிடைக்கும். இவையெல்லாம் போக விளம்பரங்களை தளங்களில் வெளியிடு வதன் மூலமும் பணம் கிடைக்கும்.

    இந்த நிறுவனங்களைப் பயன்படுத்துவதில் ஏதேனும் ஆபத்து உண்டா? என்றால் சில ஆபத்துகள் உண்டு என்பதே பதில். உதாரணமாக, இவை உங்களுக்கும் உங்களுடைய வங்கிக்கும் இடையேயான பாலமாக இருக்கின்றன. உங்களுடைய முக்கியமான தகவல்கள் இந்த இடை நிறுவனத்திற்குக் கிடைக்கிறது. அவற்றை அவை தவறாகப் பயன்படுத்துவதில்லை, காரணம் நீங்கள் அவர்களுடைய கஸ்டமர். ஆனால் அவர்களிடமிருந்து அவை திருடப்படலாம், ஹேக்கர்களால் கடத்திச் செல்லப்படலாம் எனும் ஆபத்து உண்டு.



    எனினும், இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் இத்தகைய நிறுவனங்களின் பாதுகாப்பையும் ‘என்கிரிப்ஷன் டெக்னாலஜி’ மூலமாக உறுதி செய்கின்றன. இதன்மூலம் தகவல்கள் திருடப்படுவது குறையும். ஆயிரம் தான் இருந்தாலும், டிஜிட்டல் பயன் பாட்டுக்கே உரிய ஆபத்துகள் இவற்றிலும் உண்டு. டிஜிட்டலை முழுமையாய் ஒதுக்கி விடவே முடியாது எனும் காலகட்டத்தில் நாம் வாழ் கிறோம். விரும்பியோ, விரும்பாமலோ அந்த சூழல் உருவாகியிருக்கிறது. இத்தகைய சூழலில் பாதுகாப்பாய் இருக்க இந்த அடிப்படை விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:

    1. டிஜிட்டல் வாலெட் அப்ளிகேஷன்களில் சிரமம் பார்க்காமல் மிகவும் கடினமான பாஸ்வேர்டு பயன் படுத்துங்கள். அதை அடிக்கடி மாற்றுங்கள்.

    2. உங்கள் ஸ்மார்ட்போன் எப்போதும் லாக் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

    3. பொது வை-பைகளில் அதை இணைக்காதீர்கள். வீட்டை விட்டு வெளியே வந்தால் வை-பையை அணைத்தே வையுங்கள்.

    4. புதிதாக வருகின்ற பாதுகாப்பு அப்டேட்களை உதாசீனம் செய்யாதீர்கள்.

    5. எந்த ஆப் பயன்படுத்தினாலும் அதை பயன்படுத்தியபின் அதை விட்டு முழுமையாக வெளியே வாருங்கள்.

    6. அடிக்கடி உங்களுடைய கணக்கு வழக்குகளைப் பார்த்து ஏதேனும் சந்தேகப்படும்படியான பரிவர்த்தனை நடந்திருக்கிறதா என கவனியுங்கள்.

    7. பாதுகாப்பற்ற ஆப்களை உங்கள் ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்யாதீர்கள்.

    8. சிறப்பு வைரஸ் பாதுகாப்பு மென் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

    9. சந்தேகத்திற்கிடமான தளங்களில் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யாதீர்கள்.

    10. உங்கள் பாஸ்வேர்டு, பயனர் பெயர், மின்னஞ்சல் பாஸ்வேர்டு போன்ற அனைத்தையும் பாதுகாப்பாகவே வைத்திருங்கள்.

    பரிவர்த்தனை முறைகள்

    யூ.பி.ஐ. UPI (Unified platform interface), பி.எச்.ஐ.எம். BHIM (Bharath Interface for Money), ஐ.எம்.பி.எஸ். IMPS (Immediate Payment Service), பி.பி.பி.எஸ். BBPS (Bharat Bill Payment System) போன்றவையெல்லாம் இந்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தயாரிப்புகள். இவற்றில் யூ.பி.ஐ. (UPI) இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. உங்களுடைய மொபைல் எண்ணையோ, பயனர் சொல்லையோ மட்டும் வைத்துக் கொண்டு பணப் பரிமாற்றம் செய்யும் எளிய முறை இது. இதன் மூலம் நமது வங்கிக் கணக்கு எண்ணையோ, தகவல்களையோ எங்கும் கொடுக்க வேண்டிய தேவையில்லை. உடனடியாகப் பணப் பரிமாற்றம் நடக்கும். இது பாதுகாப்பானது, ஆர்.பி.ஐ-யின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயல்படக் கூடியது என்பதால் நம்பிக்கையானது. இந்திய அரசின் டிஜிட்டல் கனவுக்குக் கைகொடுக்கப் போவது இது தான்.

    எந்த ஆப்கள் சிறந்தது?


    எல்லா வங்கிகளும் தங்களுக்கென தனியே மொபைல் ஆப்களை வைத்திருக்கின்றன. முடிந்தவரை அவற்றையே பயன் படுத்துங்கள். ‘தேர்ட் பார்ட்டி’ எனப்படும் வெளி ஆப்கள் மூலமாக உங்களுடைய வங்கியைத் தொடர்பு கொள்ளும் ஆப்களை முடிந்தவரை நீங்கள் தவிர்க்கலாம். உங்களுடைய வாகனத்தை முறையான சர்வீஸ் சென்டரில் விடுவதற்கும், ஏதோ ஒரு கடையில் சர்வீஸுக்கு விடுவதற்கும் இடையேயான வித்தியாசம் என இதைப் புரிந்து கொள்ளலாம்.

    பாதுகாப்பான அப்ளிகேஷனை தேர்ந்தெடுங்கள்

    இது டிஜிட்டல் யுகம். இன்னும் சிறிது காலத்தில் ஏ.டி.எம். எனும் ஒரு விஷயமே அபூர்வமாகிவிடும். எல்லாமே மொபைல் மூலமாக அல்லது அணியும் தொழில்நுட்பம் மூலமாக நடக்கின்ற பரிவர்த்தனைகளாக மாறிவிடும். விரும்பியோ, விரும்பாமலோ இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையில் அனைவரும் இணையும் நிலை உருவாகி வருகிறது. எனவே பாதுகாப்பான, நல்ல ஆப்களை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தத் தொடங்குவது நல்லது.

    சேவியர்
    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ புதிதாக வோ வைபை சேவையை சோதனை செய்வது தெரியவந்துள்ளது. #Jio #WiFi



    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ வோ வைபை (வாய்ஸ் ஓவர் வைபை) எனும் சேவையை சோதனை செய்கிறது. புதிய வைபை சேவை அடுத்த சில மாதங்களுக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ வோ வைபை சேவையை சோதனை செய்வதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், மீண்டும் சோதனை துவங்கியிருப்பதால் இதன் வெளியீடு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கலாம். ஜியோவின் வோ வைபை சேவை மத்திய பிரதேச மாநிலத்தில் சோதனை செய்யப்படுவதாக டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதேபோன்று ஆந்திர பிரதேசம், தெலங்கானா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களிலும் ரிலையன்ஸ் ஜியோ தனது வோ வைபை சேவையை சோதனை செய்வதாக கூறப்படுகிறது. ஜியோ வைபை சேவையை பயன்படுத்தும் ஸ்கிரீன்ஷாட் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் ஜியோ வைபை சேவை தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் ஜியோ விரைவில் வோ வைபை சேவையை வெளியிடலாம்.

    2019 ஆம் ஆண்டு வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ தனது வோ வைபை சேவையை வணிக ரீதியில் வெளியிட திட்டமிட்டிருக்கலாம். முதற்கட்டமாக ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்குகளில் மட்டும் இந்த சேவை வழங்கப்பட்டு அதன் பின் மற்ற நெட்வொர்க்குகளிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ஜியோபோன்களிலும் இந்த சேவை வழங்கப்படலாம்.



    இந்திய ஃபீச்சர் போன் சந்தையில் மூன்றில் ஒரு பங்கு ஜியோபோன்கள் விற்பனையாவதால், வோ வைபை சேவை வெளியீட்டுக்கு பின் ஜியோபோன் விற்பனை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கலாம். 

    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வோ வைபை சேவையை பரிந்துரை செய்தது. இதன் மூலம் பயனர்கள் வைபை இணைப்பை கொண்டே வாய்ஸ் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதனால் மொபைல் நெட்வொர்க் வசதியில்லா சூழல்களிலும் அழைப்புகளை மேற்கொள்ளலாம். 

    ரிலையன்ஸ் ஜியோ போன்றே பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களும் வோ வைபை சேவையை இந்தியாவில் சோதனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ஆபாச செய்கைகள், அரை நிர்வாண காட்சிகள், இளைஞர்கள்-இளம்பெண்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படும் கவர்ச்சி திரைப்படங்கள் என... இந்திய சினிமாவிலும் ஆபாசம் அதிரடியாக நுழைந்திருக்கிறது.
    ‘அ டல்ட் கண்டன்ட்’, ‘18+ தகவல்கள்’, ‘போர்னோகிராபி’... போன்ற வார்த்தைகள் எல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. ஏனெனில் இளைய தலைமுறை `இணையதலைமுறை' என்பதால், அவர்களது கைகளில் இருக்கும் ஸ்மார்ட் போன்களில் ஆபாச படங்களும், அந்தரங்க கட்டுரைகளும் தாராளமாக காணக்கிடைக்கின்றன. அதுமட்டுமா..?, பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும், கவர்ச்சி மீம்ஸ்களின் ஆதிக்கமே அதிகரித்திருக்கிறது. இது நவீன யுகத்தின் தலைவிதி என்றால், இக்காலத்து சினிமாவும், கவர்ச்சி டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது.

    இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச செய்கைகள், அரை நிர்வாண காட்சிகள், இளைஞர்கள்-இளம்பெண்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படும் கவர்ச்சி திரைப்படங்கள் என... இந்திய சினிமாவிலும் ஆபாசம் அதிரடியாக நுழைந்திருக்கிறது. பிரபல நடிகர்களும், இத்தகைய திரைப்படங்களில் நடித்து டிரெண்டிங் ஆவதுதான், இந்திய சினிமாவின் தலையெழுத்தாகிவிட்டது.

    ஒரு காலத்தில் இலை மறைகாயாக மட்டுமே நடமாடி வந்த ஆபாசம் இன்று வெளிப்படையாகவே நடமாட ஆரம்பித்துவிட்டது. குளியறையிலும், ஒதுக்கு புறமான இடத்திலும் மறைத்து மறைத்து படித்த ஆபாச கதைகளை, இன்று தங்களுடைய தனி அறையிலேயே ஏ.சி.வசதியுடனேயே படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கூடவே, கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன்களின் மூலம் ஆபாச படங்களையும் பார்க்க பழகிவிட்டனர். படங்களை தரவிறக்கம் செய்து பார்க்கும் இந்தக்காலத்திலும், டி.வி.டி.களின் ராஜ்ஜியம் நடக்கிறது என்றால், அதற்கு ஆபாச படங்களும் ஒரு காரணமாகின்றன.

    ஆபாசத்தை ரசிக்கும் பழக்கம், இந்தியாவில் பலரது பழக்கமாக மாறியதால் இந்தியர்களை குறிவைத்தே புதுப்புது ஆபாசப் படங்களும், பிரத்யேக இணையதளங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. இதை பொழுதுபோக்கிற்காக பார்ப்பவர்களுடன், பணம் செலுத்தி பார்ப்பவர்களும் அதிகரித்துவிட்டனர். அவர்களுக்காகவே ஆபாச இணையதளங்கள், ரூ.30-ல் தொடங்கி ரூ.10,000 வரை கட்டணத்தை நிர்ணயித்து உள்ளன. அதிலும் மிகத்தெளிவான ஹெச்.டி. வீடியோக்கள் என்றால், நுழைவு கட்டணம் ரூ. 20 ஆயிரம் வரை நீளும். ஆபாச வீடியோக்களை பார்த்து சலித்தவர்கள், தங்களது அந்தரங்க ஆசைகளை புதுவிதமாக நிறைவேற்றி பார்க்கவும் ஆசைப்படுகிறார்கள். அதற்கும் சில இணையதளங்கள் ‘லைவ்-சாட்’ எனப்படும் நேரலை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளன.

    இந்த இணையதளங்களில் நுழைவு கட்டணம் செலுத்தி தங்களை பதிவு செய்துகொண்டால், நம்முடைய கட்டளைக்கு தலையாட்டும் பொம்மைகளை போன்ற பெண்கள் நேரலையில் தோன்றுவார்கள். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா... போன்ற பல நாடுகளில் இருந்தும் பலர் இந்த இணைய தளங்களில் இணைந்திருப்பதால், ஆசைக்கேற்ப ஆட்களை தேர்வு செய்யமுடியும். இவை பல இளையோரின் ஆசைகளைத் தீர்க்க வழியாக அமைகின்றன. தங்களை நல்லவராக சமூகத்தில் காண்பிக்க நினைப்பவர்கள் இத்தகைய ஆபாச இணைய தளங்கள் வழியாக தங்களது அந்தரங்க ஆசைகளை தீர்த்துக்கொள்கிறார்கள்.

    மேலும் உடல் அழகை வெளிப்படுத்த விரும்பியும், ஆண்மையின் பெருமையை வெளிக்காட்டும் ஆசையாலும், ஆண், பெண் நட்புகளை உருவாக்கும் நோக்கத்துடனும், நிர்வாண உடலை பொழுதுபோக்காக காட்ட நினைத்தும் பலர் இத்தகைய இணையதளங்களில் இணைகின்றனர். சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காகவும், இதில் இணைகிறார்கள். அதனால்தான் அந்தரங்க கதைகள், ஆபாச வீடியோக்கள், லைவ் செக்ஸ் சாட் சம்பந்தமான உலக மார்க்கெட்டில், இந்தியா முன்னேறிக்கொண்டே இருக்கிறது. இந்த வேகம் இணைய தலைமுறையினரின் எதிர்காலம் மீதான அச்சத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. ஏனெனில் சமீபகாலமாக அரங்கேறி வரும் காம களியாட்டங்களுக்கு, ஆபாசப் படங்களும் ஒருவித காரணமாகிவிட்டன.



    ‘போர்னோகிராபி’ என்பது, உடலுறவு சம்பந்தப்பட்ட காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்படும் ஆபாச திரைப்படம். இதுபோன்ற திரைப்படங்களை எடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அனுமதி வழங்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க கற்பனை கதையில் உருவாகும் திரைப் படம் என்பதால், இதில் உறவு முறைகளை கொச்சப்படுத்தி எடுப்பதும் உண்டு. அதாவது ‘பிறர் மனை நோக்காதே’ என்பதற்கு எதிர்மறையாக உறவுமுறையிலும், வயது வித்தியாசமின்றியும் கதைக்களம் அமைத்து, உடலுறவு காட்சிகளை படம்பிடிப்பார்கள்.

    இவை கற்பனை படங்கள் என்பதை உணர்ந்தவர்கள், எளிதில் கடந்துவிடுவார்கள். ஆனால் அதை உணராதவர்கள், அந்த படத்தில் நிகழ்த்தப்பட்டதை தங்களது நிஜ வாழ்விலும், நிகழ்த்தி பார்க்க முயலும்போதுதான் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல், ஆசிரியர்-மாணவர் இடையிலான காதல், கள்ளத்தொடர்பு, கூட்டாக நிகழும் பாலியல் வன்முறை... போன்ற பல பிரச்சினைகளுக்கு இத்தகைய ஆபாச படங்கள் காரணமாகிவிடுகின்றன. அதனால்தான் ஆபாசத்தை விரும்பும் இளையதலைமுறையினர் பற்றிய கவலை அதிகரித்திருக்கிறது.

    ஆபாச இணையதளங்கள் பலவும் மேற்கத்திய கலாசாரத்தை மற்ற நாடுகளில் திணிக்கும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. நமது சமூகத்தில் அருவருப்பாகவும், ஆபாசமாகவும் பார்க்கப்படும் பல விஷயங்கள், மேற்கத்திய நாடுகளில் கலாசாரமாக கொண்டாடப்படுகின்றன. அவர்களின் கொண்டாட்டத்தைதான் நாம் பணம் செலுத்தி, ஆபாசம் என்ற பெயரில் ரசித்துக்கொண்டிருக்கிறோம். இதை மேற்கத்திய நாடுகள் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் இந்திய இளையதலைமுறை கொண்டாடுவதுதான் பெரும் சிக்கலாக மாறியிருக்கிறது.

    இதை உணர்ந்துகொண்ட இந்திய அரசாங்கம், இந்தியாவில் அதிகம் தேடப்படும் ஆபாச இணையதளங்களை முடக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறது. 2015-ம் ஆண்டு முதலே இத்தகைய முயற்சிகளில் இறங்கியிருக்கும் இந்திய அரசாங்கம், அந்த சமயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களை முடக்க முயற்சித்தது. இருப்பினும் ஆபாச இணையதளங்களின் கொட்டம் அடங்கியபாடில்லை. புதுப்புது பெயர்களில் ஆபாச வீடியோக்களையும், அந்தரங்க கதை களையும் உள்ளடக்கிய இணையதளங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

    அதேசமயம் இளைஞர்களின் காமப்பசிக்கு தீனி போடும் விதமாக குறிப்பிட்ட சில தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இலவச மொபைல் டேட்டாக்களை வழங்குகின்றன. இதன்மூலம் செலவில்லா சீரழிவு திட்டத்தின் வாயிலாக, இலவசமாகவே ஆபாச வீடியோக்களை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

    ஆபாசம் என்பதை ‘ஆடை குறைபாடு’ என்ற சொற்களில் அடக்கிவிட முடியாது. அதையும் தாண்டி, அந்தரங்கமாக மட்டுமே நிகழ வேண்டிய செயல்களை பொது இடத்தில் அரங்கேற்றுவதையே ‘ஆபாசம்’ என்ற வார்த்தையின் அர்த்தமாக கொள்ளலாம்.



    ஓர் இளைஞன் முன்பின் அறிமுகம் இல்லாத பெண்ணிடமும், ஓர் இளம்பெண் யாரென்றே தெரியாத ஆணிடமும் ‘வீடியோ சாட்’ மூலம் நிர்வாணமாகத் தன்னை அறிமுகம் செய்து கொள்வதும் ஆபாசமாக பார்க்கப்படுகிறது. இது எதிர்கால வாழ்வில் பல சிக்கல்களை உருவாக்க வாய்ப்புள்ளது.

    சிலர் தினந்தோறும் இத்தகைய இணையதளங்களில் நேரத்தை செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது அவர்களது நிகழ்காலத்தை பாதித்து, எதிர்மறை சிந்தனைகளை மனதில் உருவாக்கும். திருமணத்துக்கு புறம்பான உடலுறவை ஊக்குவிக்கும் வகையிலான பல வீடியோக்களும் இத்தகைய தளங்களில் காணப்படுகின்றன.

    ஓரினச்சேர்க்கை, தகாத உறவுமுறைகள், வயது வித்தியாசமில்லாத உறவுகள்... போன்றவற்றை தூண்டுவதாக இவை அமைந்துவிடுகின்றன.

    இப்போது பெரும்பாலானோர் கேமரா உள்ள செல்போன் களையே பயன்படுத்துகின்றனர். அவர்களில் துடுக்கான சிலர் பூங்காக்கள், கடற்கரைகள் போன்ற பொது இடங்களில் அரங் கேறும் அந்தரங்ககாட்சிகளை ரகசியமாக படம்பிடித்து இத்தகைய இணையதளங்களில் பதிவேற்றம் செய்து விடுகின்றனர்.

    ஆபாச இணையதளங்களும் காப்புரிமை பற்றி எவ்வித கவலையும் இன்றி வீடியோக்களைப் பதிவேற்றம் செய்ய அனு மதிக்கின்றன. அதேசமயம் சிறந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களுக்கு தக்க சன்மானமும் வழங்குகின்றன. இலவசமாக ஆபாச வீடியோக்களை காண்பித்து, அதுபோன்ற தவறான உறவுகளில் ஈடுபட வைத்து, அதை வீடியோவாக எடுத்து, தங்களுடைய இணையதளங்களை பலப்படுத்தி கொள்கின்றன.

    அமேசான் மற்றும் அந்தமான் காடுகளில் இன்றளவும் ஆடை அணியாமல் வாழும் சில பழங்குடி சமூகங்கள் கட்டுக்கோப்பான ஒழுக்கம் கொண்டவர்களாக வாழ்கின்றனர். கோவணத்துடன் வயலில் வேலை செய்யும் விவசாயிகளையோ, குறைந்த உடையுடன் சாக்கடைகளைத் தூய்மை செய்வோரையோ யாரும் ஆபாசமாக பார்ப்பதில்லை. ஆகவே, நிர்வாணமோ குறைவான ஆடையோ ஒருவரை ஆபாசம் என்ற வரம்புக்குள் கொண்டு வராது. நமது எண்ணங்களே எது ஆபாசம் என்று முடிவு செய்கிறது.

    நிர்வாணம் என்பது இயல்பாகவே தவறானது அல்ல. கெட்ட எண்ணம் கொண்ட பார்வையில் அது ஆபாசமாக மாறுகிறது. எதையும் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியாத சிந்தனையே ஆபாசத்தின் எல்லையைத் தீர்மானம் செய்கிறது. சமூகத்தில் நிகழும் பாலியல் வன்முறைகளுக்கும் ஒழுக்கக்கேடுகளுக்கும் ஆபாச இணையதளங்கள் தீனி போடுகின்றன. இனப்பெருக்கத்திற்காக இயற்கை தந்துள்ள பாலுணர்வைத் தவறான வழியில் பயன்படுத்த இளையோரை அவைத் தூண்டுகின்றன என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.

    தனியாக இருக்கும் பிள்ளைகள் அதிக அளவில் ஆபாச இணையதளங்களுக்கு அடிமையாவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இளம் வயதினருக்கு செல்போன்களைக் கொடுத்து வளர்க்கும் பெற்றோர்கள், அவர்கள் அவற்றை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனிப்பது அவசியம். எது தவறு என்று சுட்டிக் காட்டுவதை விடவும், குழந்தைகள் சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து முன்னேற உடனிருந்து பயிற்சி அளிப்பது நன்மை பயக்கும். இளையோரும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால், வருங்காலத்திலும் கட்டுப்பாடான சமூக ஒழுக்கத்தைப் பாதுகாக்க முடியும்.

    -டே. ஆக்னல் ஜோஸ்
    மீடூ விவகாரம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கூகுள் பணியாளர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். #GoogleWalkout



    ‘மீ டூ’ இயக்கம் தற்போது உலகம் முழுவதும் பிரபல மடைந்துள்ளது. தொடக்கத்தில் ஆசிய நாடுகளில் விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த அமைப்பு ஐரோப்பாவிலும், அதை தொடர்ந்து வடஅமெரிக்கா நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தற்போது இது சர்வதேச அளவில் பிரபல நிறுவனமான கூகுளையும் அதிர வைத்துள்ளது. இங்கு பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகள் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்தன. அதை ஏற்றுக் கொண்ட கூகுள் நிறுவன தலைமை அதிகாரி சுந்தர்பிச்சை. இது தொடர்பாக 2 ஆண்டுகளில் 48 அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என கூறி இருந்தார்.

    இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் பணிபுரியும் கூகுள் நிறுவன ஊழியர்கள், கூகுளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் உள்ள குர்கான், ஐதராபாத், மும்பை மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஷீரீச், டியூப்ளின், பெர்லின், சிங்சப்டர், லண்டன் உள் ளிட்ட நகரங்களிலும் இப்போராட்டம் நடைபெற்றது.



    இந்தியாவில் உள்ள 4 கூகுள் நிறுவனங்களில் பணிபுரியும் 150 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மவுன்டெயின் வியூ பகுதியில் அமைந்துள்ளது. அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

    ‘செக்ஸ்’ குற்றம் இழைப்பவர்களுக்கு எதிராக வாசகங்களுடன் கூடிய அட்டைகளை ஏந்தி இருந்தனர். நீலநிற ரிப்பன்களை அணிந்திருந்தனர். நியூயார்க், மேன்காட்டன், அட்லாண்டாவில் உள்ள கூகுள் நிறுவனங்களின் ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை இது குறித்து ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஊழியர்களின் பாதுகாப்பு ஒரு திடமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
    இன்டர்நெட் இயங்க அடிப்படையாக இருக்கும் சர்வர்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய சேவை பாதிக்கப்படுகிறது. #internetshutdown



    இணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் சர்வர்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக ரஷியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

    அடுத்த 48 மணி நேரங்களில் ‘டொமைன் சர்வர்கள்’ மற்றும் அது தொடர்பான உள்கட்டமைப்பு வசதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்டர்நெட் சேவையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. டி.என்.எஸ்.-ஐ (டொமைன் நேம் சிஸ்டம்) பாதுகாக்கும் க்ரிப்டோகிராஃபிக் கீ-யை மாற்றும் பணியை ஐ.சி.ஏ.என்.என். மேற்கொள்ள உள்ளது. 

    ஐ.சி.ஏ.என்.என். என்பது இணைய சேவையை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ளும் தொண்டு அமைப்பு ஆகும். உலகம் முழுக்க சைபர் சார்ந்த அச்சுறுத்தல்கள் அதிகமாகி வரும் நிலையில் பராமரிப்பு பணி அவசியமானது என்று ஐ.சி.ஏ.என்.என். தெரிவித்துள்ளது.   
      
    தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான சி.ஆர்.ஏ. வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாதுகாப்பான, ஸ்திரமான டி.என்.எஸ்.-ஐ உறுதி செய்ய உலகளாவிய ஷட்-டவுன் அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    “மாற்றத்திற்கு தொலைதொடர்பு நிறுவனங்கள் தயாராகவில்லை என்றால் பயனாளர்கள் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும், சரியான சிஸ்டம் பாதுகாப்பை மேற்கொள்வதன் மூலம் இதனால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியும்,” என்று சி.ஆர்.ஏ. தெரிவித்துள்ளது.
     
    இணையதளங்கள் பயன்படுத்துதல் மற்றும் பரிமாற்றம் உள்ளிட்டவைக்கு 48 மணி நேரங்களுக்கு இன்டர்நெட் பயனாளர்கள் இடையூறை எதிர்க்கொள்ள வேண்டி இருக்கும்.
    இந்தியாவின் முன்னணி பிராட்பேன்ட் இன்டர்நெட் சேவை வழங்கும் பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 விலையில் புதிய சலுகை அறிவித்துள்ளது. #BSNL #broadband



    இந்தியாவின் முன்னணி பிராட்பேன்ட் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் பி.எஸ்.என்.எல். ரூ.99 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இத்துடன் மூன்று புதிய சலுகைகளையும் குறைந்த விலையில் அறிவித்துள்ளது.

    நான்கு புதிய சலுகைகளிலும் 20Mbps வேகம், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்களுக்கு இலவச மின்னஞ்சல் முகவரி மற்றும் 1 ஜி.பி. ஸ்டோரேஜ் வேகம் வழங்குகிறது.

    ரூ.99 விலையில் கிடைக்கும் பிராட்பேன்ட் சலுகையில் மொத்தம் 45 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது, இதில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா டவுன்லோடு செய்ய முடியும். தினசரி டேட்டா அளவு நிறைவுற்றதும், டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.-யாக குறைக்கப்படும்.

    இரண்டாவது சலுகையின் கட்டணம் ரூ.199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 150 ஜி.பி. டேட்டா தினமும் 5 ஜி.பி. டேட்டாவுடன் வழங்கப்படுகிறது. டேட்டா வேகம் நொடிக்கு 20 எம்.பி.யாகவே இருக்கிறது, எனினும் தினசரி டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.யாக குறைக்கப்படுகிறது.

    இதேபோன்று ரூ.299 மற்றும் ரூ.399 விலையில் இரண்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றிலும் டேட்டா வேகம் நொடிக்கு 20 எம்.பி.யாக இருக்கிறது. தினசரி டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.யாக குறைக்கப்படுகிறது. ரூ.299 சலுகையில் தினமும் 10 ஜி.பி. டேட்டாவும், ரூ.399 சலுகையில் தினமும் 20 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 
    இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தினசரி அடிப்படையில் பயன்படுத்தி வரும் டேட்டா விவரங்கள் வெளியாகியுள்ளது. #smartphone



    இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தினமும் 1 ஜி.பி. டேட்டா பயன்படுத்தி வருவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

    நெயில்சன் இந்தியா வெளியிட்டு இருக்கும் அறிக்கையின் படி சிலகாலத்திற்கு முன் இந்தியர்கள் மாதாந்திர அடிப்படையில் அதிகபட்சம் 4 ஜி.பி. டேட்டா மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அந்த வகையில் அவர்கள் தினமும் அதிகபட்சம் 90 நிமிடங்களுக்கும் அதிகமாக ஆன்லைன் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    மலிவு விலை ஸ்மார்ட்போன்கள் மற்றும் மிக குறைந்த விலையில் டேட்டா கிடைப்பதால் உலகளவில் அதிகம் விரும்பப்படும் ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளதாக நெயில்சன் ஸ்மார்ட்போன் 2018 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "அதிவேக 4ஜி இண்டர்நெட், விலை குறைந்த மொபைல் போன் மாடல்கள் மற்றும் அழைப்பு கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டது போன்ற காரணங்களால் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு வேகமாக அதிகரிக்கத் துவங்கியது," என நெயில்சன் இந்தியாவின் தலைவர் அபிஜித் மடாகர் தெரிவித்தார். 



    இந்திய சந்தையில் ஏற்படும் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ரூ.5,000 பட்ஜெட்டில் புதிய மொபைல் போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

    "திடீரென மலிவு விலை புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமானதால், புதிய பயனர்கள் தங்களது ஃபீச்சர்போன்களை ஸ்மார்ட்போன் மாடல்களாக மாற்றிக் கொண்டனர்," என மடாகர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

    கடந்த 15 முதல் 18 மாதங்களில் டேட்டா பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதிகபட்ச பயன்பாடு டேட்டா அதிகம் எடுத்துக் கொள்ளும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், மெசன்ஜர், இன்ஸ்டாகிராம் மற்றும் கூகுள் குரோம் போன்றவற்றில் இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×