search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நில்.. கவனி.. பயன்படுத்து
    X

    நில்.. கவனி.. பயன்படுத்து

    டிஜிட்டல் பரிவர்த்தனை பாதுகாப்பானதா? எனும் கேள்வி இன்றைக்கு மலையேறிவிட்டது. அதிலிருக்கும் ஆபத்துகளை அங்கீகரித்துக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி மக்கள் முன்னேறிவிட்டார்கள்.
    நமக்கு முந்தைய தலைமுறையினர் சட்டைப்பையில் ஒரு சின்ன நோட்புக்கும், ஒரு பேனாவும் சொருகி வைத்துக் கொண்டு திரிந்தார்கள். அந்த புத்தகம் தான் அவர்களுடைய ஒட்டு மொத்த கணக்கு வழக்குகளுக்கு மான ஆதாரம். அதில் தான் விலாசங்களும், தொலைபேசி எண்களும், கடன் பாக்கிகளும் எழுதப்பட்டிருக்கும். இன்றைக்கு அது டிஜிட்டல் மயமாகிவிட்டது. நமது கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் தான் நமது நடமாடும் தகவல் பெட்டகம். தொலைபேசி எண்களானாலும் சரி, தகவல்களானாலும் சரி, வங்கிக்கணக்கு விஷயங்களானாலும் சரி எல்லாமே அந்த கையடக்க பெட்டிக்குள் டிஜிட்டல் வடிவத்தில் இளைப்பாறுகின்றன.

    டிஜிட்டல் பரிவர்த்தனை பாதுகாப்பானதா? எனும் கேள்வி இன்றைக்கு மலையேறிவிட்டது. அதிலிருக்கும் ஆபத்துகளை அங்கீகரித்துக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி மக்கள் முன்னேறிவிட்டார்கள். அது தருகின்ற வசதிக்காக, சில சவால்களை எதிர்கொள்ளவும் அவர்கள் தயாராக இருக்கின்றனர். உதாரணமாக நீண்ட நெடிய கியூவில் சில மணி நேரங்கள் காத்திருப்பதை விட ஒரு சின்ன ஆபத்து வரலாம் எனும் எச்சரிக்கை உணர்வுடன் ஆன்லைனில் பில் கட்டுவதையே மக்கள் இன்று விரும்புகின்றனர். தியேட்டரில் கவுண்டர் முன்னால் அதிகாலையிலேயே நின்று மண்டை உடைய, ரத்தம் சொட்டச் சொட்ட முதல் காட்சி டிக்கெட் வாங்கியதெல்லாம் வரலாறுகளாகிவிட்டன. இன்று ஏதோ ஒரு ஆப் தான் நமக்கு டிக்கெட்களை வசதியாய் வாங்கித் தருகிறது.

    வணிகம் எப்போதும் மக்களுடைய வசதிக்கு ஏற்ப கடைகளை விரித்துக் கொண்டே இருக்கும். இன்றைக்கு மக்களின் டிஜிட்டல் பயன்பாட்டை முன்னிறுத்தி தான் ஏகப்பட்ட புதிய பிஸினஸ் முறைகள் கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கின்றன. டிஜிட்டலைத் தொடாத எந்த தொழிலும் இனிமேல் வெற்றி பெற முடியாது என்பது எழுதப்படாத விதி. அது உணவகம், மருத்துவம் போன்ற அடிப்படை விஷயங்களானாலும் கூட. அந்தவகையில் டிஜிட்டல் வாலெட்கள் இன்றைக்கு வசீகர அம்சமாக மாறியிருப்பதற்கும், புதிது புதிதாய் முளைத்தெழும்புவதற்கும் அது தான் காரணம். உதாரணமாக பே டி எம், மொபிவிக், பே-யு, கூகுள் பே, ஆப்பிள் பே, ஓலா மணி என ஏகப்பட்ட வாலெட் சேவைகள் இன்றைக்கு களத்தில் குதித்திருக்கின்றன. அவற்றில் சில, மிக வெற்றிகரமாக காலூன்றியும் இருக்கின்றன.

    பயனர்களுக்கு எதைப் பயன்படுத்தலாம்?, எது நல்லது?, எது ஆபத்தில்லாதது? எனும் கேள்விகள் எழுவது சகஜம். குறிப்பாக சில டிஜிட்டல் வாலெட் நிறுவனங்கள் ஏகப்பட்ட தள்ளுபடிகளை அள்ளி வீசுகின்றன, ஏகப்பட்ட ‘கேஷ் பேக்’ ஆபர்களையும் கொட்டித் தருகின்றன. டிஜிட்டல் வாலெட்டுகளின் மூலம் பணம் அனுப்பினாலும், வரப்பெற்றாலும் கேஷ்பேக் சலுகைகள் கிடைக்கின்றன. கூடவே ‘ஸ்கிராட்ச் கார்ட்’ ஆபர்களும் கிடைப்பதால், டிஜிட்டல் வாலெட்டை மக்கள் அதிகமாக பயன் படுத்துகின்றனர்.

    இதற்கிடையில் இந்த இணையதளத்தில் வாங்கினால் இவ்வளவு சலுகை, அந்த இணையதளத்தில் அவ்வளவு ஆபர்... என கவர்ச்சி வலைகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். ‘லாபம்’ எனும் விஷயம் இல்லாமல் எந்த நிறுவனமும் அதன் சுண்டு விரலைக் கூட பயனர்களை நோக்கி நீட்டுவதில்லை. பெரும்பாலான டிஜிட்டல் வாலெட் நிறுவனங்களும், மொபைல் அப்ளிகேஷன்களும் அப்படித் தான்.

    இவை பயனர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே ஒரு பாலம் போல இருக்கின்றன. பயனர்களின் தேவையை, விற்பனையாளர்களிடமிருந்து வாங்கி தங்கள் மூலமாக பரிவர்த்தனை செய்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு லாபம் பல வகைகளில் வருகின்றன. ஒன்று, விற்பனையாளர்களிடமிருந்து ஒரு தொகையை கமிஷனாகப் பெறுகின்றன. சில சேவைகளுக்கு பயனர்களிடமிருந்தே கட்டணத்தைப் பெறுகின்றன. இன்னொன்று தங்கள் மூலமாக நடைபெறும் மொத்த பரிவர்த்தனைகளின் மூலம் சேரும் பல கோடி ரூபாய்களை ஒரு குறிப்பிட்ட காலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து பல இடங்களில் முதலீடு செய்கின்றன.

    வங்கியின் மூலம் நடக்கவேண்டிய பணப்பரிமாற்றம், தனியார் நிறுவனங்களின் வழியே நடப்பதனால், அதில் கிடைக்கும் லாபத்தின் சில பங்கை நமக்கு ‘ஆபர்’ என்ற பெயரில் கொடுக்கிறார்கள். இப்படி சின்ன மீனை ‘ஆபர்’ என்ற பெயரில் அள்ளி வீசுவது, ‘பெரிய பரிவர்த்தனை’ என்ற மீனை பிடிக்கத்தான். ஏனெனில் ஒருசில ஆயிரங்களை பரிமாற்றம் செய்யும்போதே கொள்ளை லாபம் கிடைக்கிறது என்றால், பரிவர்த்தனை லட்சங்களை தொட்டால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற தொலைநோக்கு பார்வையில்தான் நமக்கு ஆபர்கள் கிடைக்கின்றன. இந்த ஆபர்களுக்கு நமக்கு டிஜிட்டல் பணமாகவே கிடைக்கிறது. உதாரணமாக, உங் களுக்கு 300 ரூபாய் பணம் திரும்ப வருகிற தெனில் அது உங்கள் பாக்கெட்டில் பணமாக வருவதில்லை. ஏதோ ஒரு டிஜிட்டல் வடிவத்தில் தான் தருகின்றன.

    உண்மையில் அந்த பணம் நீங்கள் பயன்படுத்தும் வரை அவர்களுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கும். ஒரு கோடி பேருக்கு 300 ரூபாய் கிடைத்தால் அந்த முன்னூறு கோடி ரூபாயும் உண்மையில் அவர்களிடம் தான் இருக்கும். இந்த பணத்தை வைத்திருக்கின்ற வங்கியும் நிறுவனத்துக்கு வட்டி கொடுக்கும். அந்த பணத்தை முதலீடு செய்யும்போதும் கணிசமான லாபம் கிடைக்கும். அந்த பரிவர்த்தனைகளுக்கும் நல்ல கட்டணம் கிடைக்கும். இவையெல்லாம் போக விளம்பரங்களை தளங்களில் வெளியிடு வதன் மூலமும் பணம் கிடைக்கும்.

    இந்த நிறுவனங்களைப் பயன்படுத்துவதில் ஏதேனும் ஆபத்து உண்டா? என்றால் சில ஆபத்துகள் உண்டு என்பதே பதில். உதாரணமாக, இவை உங்களுக்கும் உங்களுடைய வங்கிக்கும் இடையேயான பாலமாக இருக்கின்றன. உங்களுடைய முக்கியமான தகவல்கள் இந்த இடை நிறுவனத்திற்குக் கிடைக்கிறது. அவற்றை அவை தவறாகப் பயன்படுத்துவதில்லை, காரணம் நீங்கள் அவர்களுடைய கஸ்டமர். ஆனால் அவர்களிடமிருந்து அவை திருடப்படலாம், ஹேக்கர்களால் கடத்திச் செல்லப்படலாம் எனும் ஆபத்து உண்டு.



    எனினும், இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் இத்தகைய நிறுவனங்களின் பாதுகாப்பையும் ‘என்கிரிப்ஷன் டெக்னாலஜி’ மூலமாக உறுதி செய்கின்றன. இதன்மூலம் தகவல்கள் திருடப்படுவது குறையும். ஆயிரம் தான் இருந்தாலும், டிஜிட்டல் பயன் பாட்டுக்கே உரிய ஆபத்துகள் இவற்றிலும் உண்டு. டிஜிட்டலை முழுமையாய் ஒதுக்கி விடவே முடியாது எனும் காலகட்டத்தில் நாம் வாழ் கிறோம். விரும்பியோ, விரும்பாமலோ அந்த சூழல் உருவாகியிருக்கிறது. இத்தகைய சூழலில் பாதுகாப்பாய் இருக்க இந்த அடிப்படை விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:

    1. டிஜிட்டல் வாலெட் அப்ளிகேஷன்களில் சிரமம் பார்க்காமல் மிகவும் கடினமான பாஸ்வேர்டு பயன் படுத்துங்கள். அதை அடிக்கடி மாற்றுங்கள்.

    2. உங்கள் ஸ்மார்ட்போன் எப்போதும் லாக் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

    3. பொது வை-பைகளில் அதை இணைக்காதீர்கள். வீட்டை விட்டு வெளியே வந்தால் வை-பையை அணைத்தே வையுங்கள்.

    4. புதிதாக வருகின்ற பாதுகாப்பு அப்டேட்களை உதாசீனம் செய்யாதீர்கள்.

    5. எந்த ஆப் பயன்படுத்தினாலும் அதை பயன்படுத்தியபின் அதை விட்டு முழுமையாக வெளியே வாருங்கள்.

    6. அடிக்கடி உங்களுடைய கணக்கு வழக்குகளைப் பார்த்து ஏதேனும் சந்தேகப்படும்படியான பரிவர்த்தனை நடந்திருக்கிறதா என கவனியுங்கள்.

    7. பாதுகாப்பற்ற ஆப்களை உங்கள் ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்யாதீர்கள்.

    8. சிறப்பு வைரஸ் பாதுகாப்பு மென் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

    9. சந்தேகத்திற்கிடமான தளங்களில் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யாதீர்கள்.

    10. உங்கள் பாஸ்வேர்டு, பயனர் பெயர், மின்னஞ்சல் பாஸ்வேர்டு போன்ற அனைத்தையும் பாதுகாப்பாகவே வைத்திருங்கள்.

    பரிவர்த்தனை முறைகள்

    யூ.பி.ஐ. UPI (Unified platform interface), பி.எச்.ஐ.எம். BHIM (Bharath Interface for Money), ஐ.எம்.பி.எஸ். IMPS (Immediate Payment Service), பி.பி.பி.எஸ். BBPS (Bharat Bill Payment System) போன்றவையெல்லாம் இந்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தயாரிப்புகள். இவற்றில் யூ.பி.ஐ. (UPI) இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. உங்களுடைய மொபைல் எண்ணையோ, பயனர் சொல்லையோ மட்டும் வைத்துக் கொண்டு பணப் பரிமாற்றம் செய்யும் எளிய முறை இது. இதன் மூலம் நமது வங்கிக் கணக்கு எண்ணையோ, தகவல்களையோ எங்கும் கொடுக்க வேண்டிய தேவையில்லை. உடனடியாகப் பணப் பரிமாற்றம் நடக்கும். இது பாதுகாப்பானது, ஆர்.பி.ஐ-யின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயல்படக் கூடியது என்பதால் நம்பிக்கையானது. இந்திய அரசின் டிஜிட்டல் கனவுக்குக் கைகொடுக்கப் போவது இது தான்.

    எந்த ஆப்கள் சிறந்தது?


    எல்லா வங்கிகளும் தங்களுக்கென தனியே மொபைல் ஆப்களை வைத்திருக்கின்றன. முடிந்தவரை அவற்றையே பயன் படுத்துங்கள். ‘தேர்ட் பார்ட்டி’ எனப்படும் வெளி ஆப்கள் மூலமாக உங்களுடைய வங்கியைத் தொடர்பு கொள்ளும் ஆப்களை முடிந்தவரை நீங்கள் தவிர்க்கலாம். உங்களுடைய வாகனத்தை முறையான சர்வீஸ் சென்டரில் விடுவதற்கும், ஏதோ ஒரு கடையில் சர்வீஸுக்கு விடுவதற்கும் இடையேயான வித்தியாசம் என இதைப் புரிந்து கொள்ளலாம்.

    பாதுகாப்பான அப்ளிகேஷனை தேர்ந்தெடுங்கள்

    இது டிஜிட்டல் யுகம். இன்னும் சிறிது காலத்தில் ஏ.டி.எம். எனும் ஒரு விஷயமே அபூர்வமாகிவிடும். எல்லாமே மொபைல் மூலமாக அல்லது அணியும் தொழில்நுட்பம் மூலமாக நடக்கின்ற பரிவர்த்தனைகளாக மாறிவிடும். விரும்பியோ, விரும்பாமலோ இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையில் அனைவரும் இணையும் நிலை உருவாகி வருகிறது. எனவே பாதுகாப்பான, நல்ல ஆப்களை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தத் தொடங்குவது நல்லது.

    சேவியர்
    Next Story
    ×