search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "injured"

    • விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.
    • விபத்தால் சூளகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த கார் சூளகிரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது ஒரு நாய் குறுக்கே வந்தது. அந்த நாய் மீது மோதாமல் இருக்க அந்த காரை ஓட்டி வந்தவர் திடீரென்று பிரேக் போட்டார். அப்போது காரின் பின்னால் திருச்சியில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த கண்டெய்னர் லாரியும் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது.

    இதனை சற்று எதிர்பாராத பின்னால் வந்த கிருஷ்ணகிரி -ஓசூர் செல்லும் அரசு பஸ் ஒன்று கண்டெய்னர் லாரி மீது மோதியது.

    இந்த விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.

    இந்த விபத்தில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர்களான அரசு பஸ் டிரைவர் திம்மராயன் (வயது50), கண்டக்டர் சிங்கமாதவன் (51), பஸ்சில் பயணம் செய்த அரசு பள்ளி ஆசிரியை கலா உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சூளகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் சூளகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • பஸ்சின் முன்பக்க மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
    • பஸ் டிரைவரை கைது செய்து விசாரித்ததில் பஸ் டிரைவர் தருமபுரியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகேயுள்ள ஒடசல்பட்டி பத்திரஅள்ளி கிராமத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று காலை திருச்சியில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டுக்கு ஒரு தனியார் பஸ்சில் அந்த கட்சியை சேர்ந்த 60 பேர் சென்றனர்.

    அப்போது பொம்மிடி பகுதியில் தருமபுரி சாலையில் உள்ள ரெயில்வே பாலம் அருகே சென்றபோது திடீரென்று பஸ் எதிரே வைக்கோல் பாரம் ஏற்றி லாரி வந்தது. அந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் பஸ்சின் முன்பக்க மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதில் பஸ்சில் பயணித்த கட்சியினர் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து பொம்மிடி போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது மாநாட்டுக்கு செல்லும் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மதுப்போதையில் இருப்பது தெரியவந்தது. எதிரே வந்த லாரி டிரைவர் சாதூர்யமாக செயல்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து பஸ் டிரைவரை கைது செய்து விசாரித்ததில் பஸ் டிரைவர் தருமபுரியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    காயமடைந்தவர்களை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து தனியார் பஸ் நிர்வாகத்தை கண்டித்து பஸ்சில் வந்த விடுதலை கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் தொப்பூர் கணவாய் பகுதில் நடந்த விபத்தில் 4 பேர் இறந்த நிலையில் இன்று பொம்மிடியில் நடந்த விபத்தால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

    • மூலக்கரை தடுப்பு பாலம் அருகில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முருகவனம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • சேது நாராயணபுரத்தை சேர்ந்த பிச்சை என்பவர் பின்னால் அமர்ந்து சென்றார்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மறவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகவனம்(வயது56). இவரது மனைவி முல்லை கொடி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பிரதாப் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.

    தற்போது அவர் சென்னையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முருகவனம் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். அவருடன் சேது நாராயணபுரத்தை சேர்ந்த பிச்சை என்பவர் பின்னால் அமர்ந்து சென்றார்.

    மூலக்கரை தடுப்பு பாலம் அருகில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முருகவனம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகவனம், பிச்சை, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கூமாபட்டி இமானுவேல் கீழத்தெருவை சேர்ந்த மகேந்திரன்(30) ஆகியோர் கீழே விழுந்தனர்.

    இதில் முருகவனம் பலத்த காயமடைந்தார். உடனடியாக அந்த பகுதியினர் அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்தரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகவனம் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தில் பிச்சை கொடுத்த புகாரின்பேரில் மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரின் போது சூர்யகுமார் யாதவ் காயம் ஏற்பட்டது.
    • ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் பெரியதாக இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து நாடு திரும்பிய சூர்யகுமார் யாதவ் உடனடியாக லண்டன் சென்று அதற்கான அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். பின்னர் அவர் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து வரும் சில புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

    இதன் காரணமாக அடுத்த சில வாரங்கள் அவரால் எவ்வித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என்பதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் கணுக்கால் காயம் ஏற்பட்டதோடு மட்டுமின்றி தற்போது அவர் குடலிறக்க பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வரும் சூர்யகுமார் யாதவ் இன்னும் ஓரிரு நாட்களில் ஜெர்மனி சென்று அங்கு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உள்ளார் என்றும் அதன் பிறகு சில மாதங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதனால் ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சில போட்டிகளை அவர் தவறவிடுவார் என்று கூறப்படுகிறது.

    இருப்பினும் டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் ஜூன் மாதம் தான் துவங்கும் என்பதனால் அதற்குள் அவர் தயாராகும் வரை கால அவகாசமும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற திருநாவலூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    உளுந்தூர்பேட்டை:

    சென்னையில் இருந்து மதுரைக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இந்த பஸ் இன்று அதிகாலை 5.30 மணியளவில் உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் கிராமம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றது.

    அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த 40 பேரில் 10 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற திருநாவலூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும், கிரேன் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடந்த பஸ்சினை சாலையோரமாக தூக்கி வைத்து போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • மோட்டார் பைக்கை அதிகமாக ஓட்டி வந்து பொன்னுசாமி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.
    • அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் மூலம் ஆம்புலன்ஸ் வரவ ழைக்கப்பட்டு அவரை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 60). விவசாயி.

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் நொய்யல் பகுதியில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு பின்பு வீட்டிற்கு வருவதற்காக ஈரோடு- கரூர் நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது ஓலப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது அதே சாலையில் அவருக்கு பின்னால் வந்த ஈரோடு மாவட்டம் நொச்சிபா ளையம்

    சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்( 25 ) என்பவர் மோட்டார் பைக்கை அதிகமாக ஓட்டி வந்து பொன்னுசாமி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

    இதில் நிலை தடுமாறி பொன்னுசாமி மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது . அதை பார்த்த அந்த வழியாக சென்றவர்களும், அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் மூலம் ஆம்புலன்ஸ் வரவ ழைக்கப்பட்டு அவரை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் வேலாயு தம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்த கோபால் மற்றும் போலீசார் விபத்து ஏற்படுத்திய தினேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் சாலை ஓரமாக நடந்து சென்ற முதியவர் மீது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மூலம் ஆம்புலன்ஸ் வரவ ழைக்கப்பட்டு அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

    இது குறித்து வேட்ட மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் முருகே சன் வேலாயு தம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோட்டார் சைக்கிளை அதிகமாக ஓட்டி சென்று முதியவர் மீது மோதி விபத்து ஏற்படுத்திய கோம்புப்பாளையம் பகுதி யை சேர்ந்த குருசாமி (வயது 70) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விடுமுறையை முடிந்த பின்னர் மீண்டும் சென்னைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
    • இந்த விபத்தில் குமார் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

    குன்னம்

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி, உடையார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(வயது 35). சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் விடுமுறைக்காக பொன்னமராவதி வந்துள்ளார். விடுமுறையை முடிந்த பின்னர் மீண்டும் சென்னைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பாடாலூர் காரைபிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியை சேர்ந்த குமார் என்பவர் சாலையை கடக்க முற்பட்டு உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சந்தோஷ்குமார் இருசக்கர வாகனம் குமார் மீது மோதி விபத்துக்குள்ளா னது. இந்த விபத்தில் குமார் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். ஆனால் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாரை பாடாலூர் போலீசார் மீட்டு, ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல பெரம்பலூர் மாவட்டம் ஊட்டத்துரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 22). விவசாய தொழில் செய்து வந்த இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஊட்டத்தூர் பிரிவு ரோடு பகுதியில் அவர் சென்று கொண்டிருந்த போது செய்யாறுவில் இருந்து வந்த அய்யப்பபக்தர்கள் கார் ஒன்று இவர் மீது மோதி உள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டு உள்ளார். பாடா லூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • பைக்கை அதிவேகமாக ஒட்டி வந்து பொக்லின் வாகனத்தின் பின்னால் மோதியதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குறுக்குச்சாலை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விவேக்(32). இவர் பொக்லின் டிரைவர் . இந்நிலையில் இவர் தனக்கு சொந்தமான பொக்லின் வாகனத்தை கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது மலையம்பாளையம் பிரிவு சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் ஜேசிபி இயந்திரத்திற்கு பின்னால் அதிவேகமாக வந்த செம்மடையை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் விக்னேஷ்(23) என்பவர் மோட்டார் பைக்கை அதிவேகமாக ஒட்டி வந்து பொக்லின் வாகனத்தின் பின்னால் மோதியதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அது பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பொக்லின் வாகனத்தின் டிரைவர் விவேக் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • தேயிலை தோட்டத்துக்கு சென்றபோது சம்பவம்
    • ஊட்டி மருத்துவ கல்லூரியில் திவிர சிகிச்சை

    அருவங்காடு,

    குன்னூர் பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதில் காட்டு யானை, காட்டு எருமை, சிறுத்தை, கரடி மற்றும் காட்டு பன்றிகளும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாடி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருவதுடன் அச்சத்திலும் உள்ளனர்.

    இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள நல்லப்பன் தெரு பகுதியில் காட்டுப்பன்றி பகல் மட்டும் அல்லாமல் இரவு நேரத்திலும் குடியிருப்பு பகுதிகளை சுற்றி வந்து அங்குள்ள கழிவுகளை ருசி பார்த்து செல்கிறது.

    நேற்று இப்பகுதி சேர்ந்த ரமணி (வயது 40) என்ற பெண் இயற்ைக உபாதை கழிப்பதற்காக அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்றார்.

    அப்போது தேயிலைச் செடிகளுக்கு இடையே மறைந்திருந்த காட்டுப்பன்றி திடீரென அவர் மீது பாய்ந்து தாக்கி உள்ளது. இதில் அவர் கை, கால் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து காட்டுப்பன்றியை விரட்டி விட்டு உடனடியாக அவரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வனவிலங்குகளின் நடமாட்டத்தின் காரணமாக கிராமவாசிகள் தொடர்ந்து அச்சம் அடைந்துள்ளனர்.

    எனவே வனத்துறையினர் இதனை கண்காணித்து பொதுமக்களை அச்சுறுத்தும் வனவிலங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • டிப்பர் லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டனர்
    • குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிளிஞ்சடா பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 22). இவரது நண்பர் சுபாஷ் (வயது 21).

    இவர்கள் இருவரும் நேற்று மோட்டார்சைக்கிள் மூலம் கோவை சென்று கொண்டிருந்தபோது குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மரப்பாலம் பகுதியில் எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த கோபாலகிருஷ்ணன் கோவை அரசு மருத்துவமனையிலும், சுபாஷ் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் ராமச்சந்திரனை (வயது 39) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோல் இன்று அதிகாலை இதே வழித்தடத்தில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த காரில் 5 பேர் பயணம் மேற்கொண்டனர். இதில் குறும்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென குரங்குகள் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கார் தடுப்பு சுவர் மீது மோதி நின்றது. இதில் சிறு காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர். 

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே வாகன விபத்தில் 2 பேர் காயம்

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே பழமாபுரம் காலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (47). கூலி தொழிலாளி. இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த தஞ்சாவூர் பழைய நெல்லு மண்டித்தெருவை சேர்ந்த புருஷோத்தமன் இவர் மீது மோதினார்.

    இதில் இருவரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    டிப்பர் லாரி மீது வேன் மோதிய விபத்தில்பள்ளி மாணவர்கள் - ஆசிரியர்கள் உள்ளிட்ட 11 பேர் காயம்

    குன்னம்,  

    விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே ஆரோவில் உள்ள தனியார் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 11 மாணவா்கள், 2 மாணவிகள் என மொத்தம் 13 பேர் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற குராஷ் தற்காப்பு கலை போட்டியில் விளையாட தங்களது ஆசிரியர்கள், பயிற்சியாளர்களுடன் ஒரு வேனில் புறப்பட்டு வந்துள்ளனர். இந்த வேன் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை பிரிவு சாலையை தாண்டி வந்து கொண்டிருந்தது. அப்போது டீசல் இல்லாமல் ஜல்லிக்கற்களுடன் சாலையில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேனின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் வேனின் டிரைவர், மாற்று டிரைவர், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி காயமடைந்தனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்றும் விபத்துக்குள்ளாகி நின்ற வேனின் மீது மோதியது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைக்கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் பாடாலூர் போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார், போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் வேனின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்டிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், டிரைவர்கள் ஆகியோரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    இதில் மாணவர்கள் அகத்தியன் (வயது 13), கேசவ் சரண் (14) இன்பராஜன் (14), ரமணன் (14), நிர்மல் (14), டிரைவர் குமார் (40), பயிற்சியாளர்கள் ராமமூர்த்தி (51), மற்றும் அவர்களுடன் வந்திருந்த ஹரி கிருஷ்ணன் (47), பூபதி (20) உள்ளிட்ட 11 பேர் காயமடைந்தனர்.

    பின்னர் காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். மருத்துவமனையில் அகத்தியன், ஹரிகிருஷ்ணன், ராமமூர்த்தி ஆகிய 3 பேரும் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 7 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்து அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×