search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gun Fire"

    • வீரமரணம் அடைந்த கமலேஷ் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • கமலேஷ் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    நங்கவள்ளி:

    பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்த துப்பாக்கி சூட்டில் பீரங்கி படைப்பிரிவை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் இறந்தனர். அவர்கள் பெயர்கள் சாகர் பன்னே (வயது 25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) என்று தெரியவந்தது. இதில் பலியான ராணுவ வீரர் கமலேஷ், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்.

    கமலேஷின் சொந்த ஊர் சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி மசக்காளியூர் பனங்காடு பகுதி ஆகும். இவருடைய தந்தை ரவி, நெசவு தொழிலாளி ஆவார். தாய் செல்வமணி. இவர்களின் 2-வது மகனான கமலேஷ் பி.ஏ. பொருளாதாரம் படித்துவிட்டு திருமணம் ஆகாத நிலையில், ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.

    சிறு வயது முதலே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை ஆற்ற வேண்டும் என விரும்பினார். அதன்படி அவர் தனது தொடர் முயற்சியினால் ராணுவத்தில் சேர்ந்து தனது விருப்பதை நிறைவேற்றினார்.

    கடைசியாக பஞ்சாப்பில் உள்ள பதிண்டா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை கமலேஷ் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்ததும் அவரது குடும்பத்தினர் துடிதுடித்தனர். கமலேஷ் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு தான் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து விட்டு திரும்பி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலேசுக்கு சந்தோஷ் (27) என்ற அண்ணன் உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

    துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் கமலேஷ் இறந்தது அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் மசக்காளியூர் பனங்காடு கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது வீட்டில் கமலேஷ் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் தொடர்ந்து கதறி அழுதபடி உள்ளனர். கிராம மக்கள், அவரது வீட்டின் முன்பு திரண்டு உள்ளனர். இதனால் ஊரில் எங்கு பார்த்தாலும் சோகமாக காணப்படுகிறது.

    வீரமரணம் அடைந்த கமலேஷ் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    • மர்ம கும்பல் பாரில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர்.
    • குண்டு காயத்துடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மெக்சிகோ:

    மெக்சிகோ நாட்டில் குனான்ஜிவோட்டோ என்ற பகுதி தொழில் நகரமாக திகழ்கிறது. மேலும் சிறந்த சுற்றுலாதலமாகவும் இது விளங்குகிறது.

    இங்குள்ள ஒரு மதுபான பாரில் நேற்று இரவு ஏராளமானோர் மது அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரு மர்ம கும்பல் கையில் துப்பாக்கியுடன் பாருக்குள் புகுந்தனர். அவர்கள் பாரில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர்.

    இதை கண்டதும் அங்கிருந்தவர்கள் உயிர் பயத்தில் மதுபான பாரைவிட்டு வெளியே ஓடி வந்தனர். ஆனாலும் மர்ம கும்பல் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து 10 பேர் இறந்தனர். இதில் 7 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் ஆவார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று குண்டு காயத்துடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார்? என்று தெரியவில்லை. அவர்கள் 10 பேரையும் சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • கொலையில் வினோத், மேலூர் மாரி, விஜயராகவன், மார்க்கெட் சூர்யா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    மதுரை:

    மதுரை மாட்டுத்தாவணி உலகநேரி கன்னிமாரியம்மன் கோவில் தெரு செங்குந்தர் நகரை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் டோரா பாலா என்கிற பாலமுருகன்(வயது29). இவர் மீது கே.புதூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    உலகநேரி பகுதியில் ரவுடியாக உலாவந்த பாலமுருகன் கடந்த 22-ந்தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். உத்தங்குடி வளர்நகர் பகுதியில் உள்ள முட்புதரில் கிடந்த அவரது உடலை மாட்டுத்தாவணி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து கொலையாளிகள் யார்? என்று விசாரணை நடத்தினர். அப்போது உலகநேரி அருகே உள்ள அம்பலக்காரன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் வினோத்(25), ஜெகதீஷ்வரன் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து ரவுடி பால முருகனை கொன்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் ஜெகதீஷ்வரன் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினா்.

    அப்போது வினோத்தின் தாய் பற்றி தவறாக பேசியதால் பீர்பாட்டிலால் குத்தி பாலமுருகனை கொன்று முட்புதரில் வீசி சென்றதாக தெரிவித்தார். இந்த கொலையில் வினோத், மேலூர் மாரி, விஜயராகவன், மார்க்கெட் சூர்யா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து தலைமறைவாகிய வினோத் உள்ளிட்ட 4பேரையும் கடந்த 23-ந்தேதி முதல் போலீசார் தேடி வந்தனர். வினோத் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரும் அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிந்தது.

    இந்நிலையில் வண்டியூர் சோதனைச் சாவடியை அடுத்த பாண்டியன் கோட்டை கல்குவாரியில் ரவுடி வினோத் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாட்டுத்தாவணி இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெள்ளைச்சாமி, ராஜூ, ஏட்டு சரவணன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

    போலீசாரை பார்த்ததும் வினோத் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் அவரை சுற்றிவளைத்தனர். இதையடுத்து தன்னிடம் இருந்த அரிவாளை காட்டி போலீசாரை மிரட்டியுள்ளார். மேலும் போலீசார் மீது அரிவாளை வீசினார்.

    அதில் போலீஸ் ஏட்டு சரவணன் வெட்டுக்காயமடைந்தார். இதையடுத்து வினோத் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் வினோத்தை சுட்டார்.

    இதில் வினோத்தின் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அவரால் மேற்கொண்டு ஓட முடியாமல் சுருண்டு விழுந்தார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த வினோத்தை போலீசார் அங்கிருந்து மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரிவாள் வெட்டு காயமடைந்த போலீஸ் ஏட்டு சரவணனும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசாரை தாக்கி தப்பிக்க முயற்சித்த போது துப்பாக்கி சூடு
    • 5 கொலை வழக்கு உள்ளிட்ட 64 வழக்குகள் உள்ள ரவுடிகள்...

    திருச்சி,

    திருச்சி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி துரைராஜ் என்கிற துரை. இவர் மீது 5 கொலை வழக்கு உள்ளிட்ட 64 வழக்குகள் உள்ளன. இவரின் சகோதரர் சோமு. திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பகுதிைய சேர்ந்த மற்றொரு ரவுடி இளவரசன் என்பவர் புதுக்கோட்டை கோர்ட்டில் வழக்கு ஒன்றில் ஆஜராகி திரும்பி வந்தபோது 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய கொலையாளியான துரைராஜை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் போலீசாரிடம் சிக்கிய துரைராஜ் மற்றும் அவரது சகோதரர் சோமு ஆகியோரை உறையூர் குற்றப்பிரிவு போலீசார் பிடித்துள்ளனர். அவரிடம் கொள்ளையடித்த பொருட்களை மீட்பதற்காக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது துரையின் உறவினர் அனுராதா என்பவரிடம் கொள்ளையடித்த பொருட்களை கொடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதனை மீட்பதற்காக போலீஸ் வாகனத்தில் துரையையும், சோமுவையும் உறையூர் குற்றப்பிரிவு பிரிவை சேர்ந்த போலீசார் மோகன் உள்ளிட்ட போலீசார் அழைத்து சென்றனர். போலீஸ் வாகனத்தை சிற்றரவு ஓட்டிச்சென்றுள்ளார். போலீஸ் வாகனமானது புத்துார் குழுமாயி அம்மன் கோயில் கலிங்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது தப்பிச்செல்லும் நோக்கத்தில் துரை டிரைவர் சிற்றரசு கழுத்தை பிடித்து நெறித்து உள்ளார். இதனால் போலீஸ் நிலை தடுமாறி உள்ளது. விபத்து நடப்பதற்கு முன்பாக வாகனத்தை சிற்றரசு நிறுத்தி உள்ளார். இந்த நேரத்தை பயன்படுத்தி ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை பயன்படுத்தி துரையும், சோமுவும் போலீசாரை வெட்டி உள்ளனர். இதில் மோகன் மற்றும் சிற்றரசு ஆகிய போலீசார் காயம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து மோகன் தான் பாதுகாப்பிற்கு வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எச்சரித்துள்ளார். ஆனால் அதனையும் மீறி இருவரும் போலீசாரை தாக்க எந்தனிக்கவே மோகன் தனது துப்பாக்கியால் 3 முறை சுட்டு உள்ளார். இதில் ரவுடிகள் இருவருக்கும் கால்களில் குண்டு பாய்ந்துள்ளது. இதனை தொடர்ந்து ரவுடிகளை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். காயமடைந்த போலீசாரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவ இடத்திலும் திருச்சி அரசு மருத்துவமனையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.இன்று காலையிலேயே துரையின் தாயார் மல்லிகா, தனது மகனை எண்கவுன்டர் செய்வதற்காக போலீசார் கைது செய்துள்ளனர் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா–வுக்கு புகார் மனு அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நாச வேலையில் ஈடுபடுவதற்காக அவன் வந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
    • தக்க சமயத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் அவனை சுட்டுக்கொன்றதால் நாசவேலை சதி முறியடிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படையினர் இன்று காலை 8 மணி அளவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தானை சேர்ந்த ஒருவன் ஆயுதங்களுடன் இந்திய எல்லையில் ஊடுருவ முயன்றான். இதனை பார்த்த பாதுகாப்பு படையினர் அவனை சுட்டுக்கொன்றனர்.

    அவன் யார்? எதற்காக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றான் என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. நாச வேலையில் ஈடுபடுவதற்காக அவன் வந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தக்க சமயத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் அவனை சுட்டுக்கொன்றதால் நாசவேலை சதி முறியடிக்கப்பட்டது.

    • ஈரானில் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான்-பலுகிஸ்தான் மாகாணங்களில் இயங்கி வரும் பயங்கரவாத கும்பல் சட்ட விரோத போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பயங்கரவாத கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    ஈரானில் ஹிஜாப் விவகாரம் சூடுபிடித்து உள்ளது. அங்கு பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் ஈரான்-பாகிஸ்தான் எல்லையையொட்டி உள்ள ஒரு போலீஸ் நிலையைத்தில் மர்மகும்பல் திடீரென தாக்குதல் நடத்தினார்கள், அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

    இதையடுத்து போலீசாரும் அவர்களை நோக்கி திருப்பி சுட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் உளவுத்துறை அதிகாரி கர்னல் அலிமவுசலி உள்பட 19 பேர் இறந்ததாக ஈரான் தெரிவித்து உள்ளது. இந்த சண்டையில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை.

    ஈரானில் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான்-பலுகிஸ்தான் மாகாணங்களில் இயங்கி வரும் பயங்கரவாத கும்பல் சட்ட விரோத போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    இதனால் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஈரானில் ஏற்கனவே ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் இதற்கும் இந்த சம்பவத்திற்கும் சம்மந்தம் எதுவும் உள்ளதா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

    • துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு ஆயத்தமாகி வருகிறது.
    • ஆனாலும் அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தபடியே இருக்கிறது.

    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளியில் வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 22 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு ஆயத்தமாகி வருகிறது. ஆனாலும் அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தபடியே இருக்கிறது.

    இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள். லாஸ் ஏஞ்சல்சின் பாய்ல் ஹைட்ஸ் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அங்கு திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்தும், துப்பாக்கியால் சுட்டவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

    அமெரிக்காவில் தேவாலயம் அருகே மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். #Baltimore #GunFire
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரில் தேவாலயம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த தேவாலயத்துக்கு அருகே திறந்தவெளி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், கலந்துகொண்ட மக்கள் பலர் உணவை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கிருந்த அனைவரையும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.

    இதனால் பீதியடைந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து போலீசார், படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  #Baltimore #GunFire 
    பாராளுமன்ற தேர்தல் பணிக்காக வந்த தேர்தல் பார்வையாளர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #LokSabhaElections2019 #Electionofficer

    அரியலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    மேலும் அதிகாரிகள் வாக்குப் பதிவிற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். வாக்குசாவடி மையங்களுக்கு மின்னணு எந்திரங்களை அனுப்பி வைப்பது மற்றும் பணப்பட்டு வாடாவை தடுப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்காக வட மாநிலங்களை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர் தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பார்வையாளர்கள், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனை நடத்தி, உரிய அனுமதியின்றி எடுத்து செல்லும் பணம், நகை மற்றும் பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அரியலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளராக ஹரியானாவை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஹேமந்த் ஹல்க் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து தேர்தல் பணிகளை கவனித்து வந்தார்.

    இன்று காலை சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவர், துப்பாக்கி மூலம் வானத்தை நோக்கி 9 முறை சுட்டதாக பரபரப்பு தகவல் பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் எஸ்.பி. (பொறுப்பு)திஷாமித்தல் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது ஹேமந்த் ஹல்க் இன்று அதிகாலை சுற்றுலா மாளிகை அறையில் இருந்து வெளியே வந்தததும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியை கேட்டுள்ளார். உயர் அதிகாரி என்பதால் போலீஸ்காரரும் தன்னிடமிருந்த துப்பாக்கியை கொடுத்துள்ளார்.

    அதனை வாங்கிய ஹேமந்த் ஹல்க் திடீரென வானத்தை நோக்கி 9 முறை துப்பாக்கியால் சுட்டார். இதனால் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த மற்ற அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    அதன்பிறகு ஹேமந்த் ஹல்க் துப்பாக்கியுடன் தனது அறைக்கு சென்று அமர்ந்து கொண்டார். அவர் எதற்காக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    வேலைப்பளு காரணமாக அவர் இந்த செயலில் ஈடுபட்டாரா? அல்லது மன ரீதியாக ஏற்பட்ட பிரச்சினையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது பணப்பட்டுவாடா புகார் எழுந்த தன் காரணமாக அதனை தடுப்பதற்காக எச்சரிக்கை விடுக்கும் வகையில் சுட்டாரா? என்றும் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் தேர்தல் பார்வையாளர் ஹேமந்த் ஹல்க் குடிபோதையில் இருந்ததால் அவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் மீது அரியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

    ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், அரியலூர் தேர்தல் பார்வையாளர் குடிபோதையில் துப்பாக்கியால் சுட்டது அரசியல் கட்சியினர், வாக்காளர்கள், அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #LokSabhaElections2019 #Electionofficer

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #ChhattisgarhEncounter #NaxalsKilled
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சத்தீஸ்கரில் மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிறார்கள்.

    இதையும் மீறி அங்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலையும் மீறி மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    இந்தநிலையில் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் கிஸ்தாராம் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் நக்சல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது நக்சலைட்டுகள் துப்பாக்கியால் தாக்கினார்கள். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினர் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. போலீசாரின் தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இந்த என்கவுண்டர் சம்பவத்தில் 2 போலீசாரும் பலியானார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். #ChhattisgarhEncounter #NaxalsKilled
    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடைபெற்று இன்று 100-வது நாளையொட்டி தூத்துக்குடியில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பு திருப்பலி இன்று மாலை நடக்கிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், போராட்டக்குழுவினர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த மே மாதம் 22-ந்தேதி இதன் 100-வது நாளில் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முடிவு செய்தனர்.

    இதற்கு போலீசார் அனுமதி வழங்காததால் போராட்டத்தில் தடியடி, துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 13 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்துள்ளது.

    இந்நிலையில் துப்பாக்கி சூடு நடைபெற்று இன்று 100-வது நாளையொட்டி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் மற்றும் சின்னகோவிலில் சிறப்பு திருப்பாலி நடத்த முடிவு செய்தனர். ஆனால் இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா அனுமதி வழங்கவில்லை.

    இதையடுத்து அவர்கள் தூத்துக்குடியில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் தனித்தனியாக சிறப்பு திருப்பலி இன்று மாலை 6 மணிக்கு நடத்துவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறா வண்ணம் தூத்துக்குடியில் போலீஸ் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். மேலும் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள கான்டி வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து, அந்த காட்டுக்குள் இன்று காலை பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காட்டின் நடுப்பகுதிக்கு சென்றபோது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.

    பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கு நடந்துவரும் துப்பாக்கிச் சண்டையில்  படுகாயமடைந்த இரு வீரர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ஒரு வீரர் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்ததும் கான்டி வனப்பகுதிக்கு கூடுதலாக பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். #Kupwaraencounter #Soldiermartyred
    ×