search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தேர்தல் பார்வையாளரால் பரபரப்பு
    X

    வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தேர்தல் பார்வையாளரால் பரபரப்பு

    பாராளுமன்ற தேர்தல் பணிக்காக வந்த தேர்தல் பார்வையாளர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #LokSabhaElections2019 #Electionofficer

    அரியலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    மேலும் அதிகாரிகள் வாக்குப் பதிவிற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். வாக்குசாவடி மையங்களுக்கு மின்னணு எந்திரங்களை அனுப்பி வைப்பது மற்றும் பணப்பட்டு வாடாவை தடுப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்காக வட மாநிலங்களை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர் தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பார்வையாளர்கள், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனை நடத்தி, உரிய அனுமதியின்றி எடுத்து செல்லும் பணம், நகை மற்றும் பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அரியலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளராக ஹரியானாவை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஹேமந்த் ஹல்க் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து தேர்தல் பணிகளை கவனித்து வந்தார்.

    இன்று காலை சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவர், துப்பாக்கி மூலம் வானத்தை நோக்கி 9 முறை சுட்டதாக பரபரப்பு தகவல் பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் எஸ்.பி. (பொறுப்பு)திஷாமித்தல் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது ஹேமந்த் ஹல்க் இன்று அதிகாலை சுற்றுலா மாளிகை அறையில் இருந்து வெளியே வந்தததும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியை கேட்டுள்ளார். உயர் அதிகாரி என்பதால் போலீஸ்காரரும் தன்னிடமிருந்த துப்பாக்கியை கொடுத்துள்ளார்.

    அதனை வாங்கிய ஹேமந்த் ஹல்க் திடீரென வானத்தை நோக்கி 9 முறை துப்பாக்கியால் சுட்டார். இதனால் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த மற்ற அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    அதன்பிறகு ஹேமந்த் ஹல்க் துப்பாக்கியுடன் தனது அறைக்கு சென்று அமர்ந்து கொண்டார். அவர் எதற்காக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    வேலைப்பளு காரணமாக அவர் இந்த செயலில் ஈடுபட்டாரா? அல்லது மன ரீதியாக ஏற்பட்ட பிரச்சினையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது பணப்பட்டுவாடா புகார் எழுந்த தன் காரணமாக அதனை தடுப்பதற்காக எச்சரிக்கை விடுக்கும் வகையில் சுட்டாரா? என்றும் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் தேர்தல் பார்வையாளர் ஹேமந்த் ஹல்க் குடிபோதையில் இருந்ததால் அவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் மீது அரியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

    ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், அரியலூர் தேர்தல் பார்வையாளர் குடிபோதையில் துப்பாக்கியால் சுட்டது அரசியல் கட்சியினர், வாக்காளர்கள், அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #LokSabhaElections2019 #Electionofficer

    Next Story
    ×