search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gudalur"

    கூடலூர் அருகே தோட்டங்களுக்குள் புகுந்து இலவ மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள லோயர்கேம்ப் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் வாழை, தென்னை, மா, இலவ மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

    வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால் அடிக்கடி மான், யானை, காட்டுப்பன்றி, குரங்குகள் ஆகியவை தோட்டத்தில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களை பாதுகாக்க வேலி மற்றும் அகழிகள் அமைத்துள்ளனர்.

    குறிப்பாக நாயக்கர் தொழு, எள்கரடு, பளியங்குடி ஆகிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அங்கு மட்டும் அகழிகள் கூடுதலாக அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது அகழிகளில் மண் மேவி காணப்படுவதால் மீண்டும் யானைகள் வலம் வரத் தொடங்கி உள்ளது.

    நேற்று நாயக்கர் தொழு, சரளைமேடு பகுதியில் பெருமாயி (வயது48) என்பவருக்கு சொந்தமான இலவ மரத்திற்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த மரங்களை வேறுடன் சாய்த்து சேதப்படுத்தியது. அதிகாலையில் எழுந்து பார்த்த பெருமாயி மற்றும் அப்பகுதி விவசாயிகள் யானைகளின் அட்டகாசத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    கடந்த சில நாட்களாக யானைகள் இடம்பெயர்வது குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அட்டகாசம் செய்திருப்பதால் வனத்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். வனத்துறையினர் பார்வையிட்டு மீண்டும் யானைகள் வராமல் இருக்க முகாமிட்டு உள்ளனர்.

    கூடலூரில் அதிக வட்டி கேட்டு பெண்ணை மிரட்டிய கும்பல் மீது மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் மந்தையம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த லெனின் மனைவி பிரியா(வயது28). இவருக்கு கூடலூரைச் சேர்ந்த முத்தையா மனைவி லதா, பாண்டியன் மனைவி சரண்யா, ராஜா மனைவிபோதுமணி, பரமன் மனைவி சிங்காரம் உட்பட 15 பெண்கள் மற்றும் சேகர், ஜெயக்குமார் ஆகியோர் ரூ. 10 லட்சம் வரை வட்டிக்கு கொடுத்தனர்.

    பின்னர்அதிக வட்டி கேட்டு பிரச்சினை செய்துள்ளனர். மேலும் பிரியாவின் வீட்டிற்குள் அத்துமீறி சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து பிரியா கடந்த சிலநாட்களுக்கு முன் தேனி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் கூடலூர் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் அதிக வட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 17 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கூடலூரில் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி 44,700 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 5 வியாபாரிகளிடம் இருந்து ரூ.45,500 அபராதமும் வசூலித்தனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மண்ணின் வளத்தை மேம்படுத்தவும் 50 மைக்ரான் அளவு கீழ் உள்ள பிளாஸ்டிக்பைகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கூடலூர் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகளை பதுக்கி வைத்து சிறு வணிகர்கள், பொதுமக்களுக்கு அதிகளவு விற்பனை செய்வதாக நகராட்சி நிர்வாகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் ஆணையாளர் பார்வதி தலைமையில் ஸ்ரீஜித், ரமேஷ், செல்வம் உள்ளிட்ட பணியாளர்கள் கூடலூர் நகரில் உள்ள வணிக நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தினர். சுமார் 30 கடைகளில் பிளாஸ்டிக்பைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது 25 கடைகளில் 50 மைக்ரான் அளவுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக்பைகள் பயன்படுத்தியது தெரியவந்தது.

    ஆனால் மீதமுள்ள 5 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மொத்தம் 44,700 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகளை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். அப்போது நகராட்சி அலுவலர்களிடம் கையும்களவுமாக சிக்கி கொண்ட வியாபாரிகள் இனி வரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகளை விற்பனை செய்யப்பட மாட்டாது என உறுதி அளித்தனர். ஆனால் நகராட்சி அலுவலர்கள் வியாபாரிகளின் உறுதிமொழியை ஏற்க வில்லை.

    பலமுறை எச்சரிக்கை செய்தும் அதிகாரிகளின் உத்தரவை அலட்சியப்படுத்தும் வகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகளை பதுக்கி வைத்து மொத்தமாக விற்பனை செய்தது தவறு என கூறி நகராட்சி ஆணையாளர் பார்வதி 5 வியாபாரிகளுக்கு ரூ.45,500 அபராதம் விதித்து உடனடியாக வசூலித்தார். நகராட்சி வரலாற்றில் அதிக அளவு பிளாஸ்டிக்பைகள் பறிமுதல் செய்து அபராத தொகையும் வசூலித்தது இதுவே முதன்முறையாகும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
    கூடலூர் பகுதியில் பலத்த சூறாவளி காற்றில் வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    கூடலூர்:

    தேனி மாவட்டம், கூடலூர் பகுதியில் முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் மூலம் இருபோக நெல் விவசாயமும், மானாவாரி நிலங்களில் எள், நிலக்கடலை, தட்டைபயறு, மொச்சை, கம்பு, சோளப் பயிர்களையும் தோட்டங்களில் வாழை, தென்னை, திராட்சை உள்பட பணப்பயிர் வகைகளும் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது.

    கடந்த சில வருடங்களாக கூடலூர் பகுதியில் தென்னை மரங்களை அழித்துவிட்டு அதிகளவில் ஒட்டு ரக திசு வாழைகளை சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர்.

    குறிப்பாக செவ்வாழை, நாழிபூவன், ரஸ்தாலி, பச்சை பழம் வகைகளை பயிரிட்டுள்ளனர். வாழை மரங்களில் தார்கள் நன்கு விளைந்து உள்ள நிலையில் தற்போது எதிர்பாராமல் பலத்த சூறவாளிகாற்று வீசியதால் கூடலூர் பகுதிகளில் உள்ள வாழை தோட்டங்களில் வாழை மரங்கள் முறிந்து தார்களுடன் கீழே விழுந்துள்ளது. இதனால் வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    பெருமாள் கோவில் புலம் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர்.

    கூடலூர்:

    தேனி அருகே கூடலூர் மந்தைவாய்க்கால் பாலத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் பெருமாள் கோவில் புலம் உள்ளது. மானாவாரி நிலங்களில் எள், நிலக்கடடலை, தட்டைப்பயறு, அவரை, மொச்சை, கம்பு, சோளப் பயிர்களையும், தோட்டங்களில் வாழை, தென்னை, திராட்சை, வெங்காயம், மா உள்ளிட்ட பணப்பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இவர்கள் தினசரி இருசக்கர வாகனங்கள் மற்றும் மினி ஆட்டோக்களில் கூலி ஆட்களை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். விவசாயிகள் விளைவித்த பொருட்களை மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டர் வண்டிகளில் ஏற்றி சந்தைகளுக்கு கொண்டு செல்கின்றனர்.

    கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தார் சாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து சாலையில் பராமரிப்பு பணிகள் செய்யாததால் சாலைகள் தற்போது சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்து வருகிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு வழங்கினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, பெருமாள் கோவில் புலம் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர். #tamilnews

    சேலம், கூடலூரில் இருந்து ரூ.72 லட்சம் ஹவாலா பணம் கடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் குழல்மன்னம் மதுவிலக்கு அதிகாரி உதயகுமார் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் சாந்தி சந்திப்பு என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பாலக்காடு- திருவனந்தபுரத்திற்கு சென்ற அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சுக்குள் சந்தேக்கப்படும்படி ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.11 லட்சத்து 40 ஆயிரம் பணம் இருந்தது. இது குறித்து ஆவணங்கள் கேட்டபோது அவரிடம் இல்லை. முறையான காரணமும் அவர் கூறவில்லை. இதனையடுத்து ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த மதுவிலக்கு அதிகாரிகள் பணத்தையும், வாலிபரையும் குழல்மன்னம் போலீசில் ஒப்படைத்தனர்.

    குழல்மன்னம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வயநாடு கோட்டத்தரையை சேர்ந்த விபிசின் (வயது 32) என்பது தெரியவந்தது. இவர் ஏதற்காக பணம் கடத்தினார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோன்று பாலக்காடு மதுவிலக்கு அதிகாரி ரியாஸ் தலைமையில் ஒலவக்கோடு ரெயில் நிலையத்தில் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது 2 வாலிபர்கள் சந்தேகப்படும்படி நின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    இதனையடுத்து அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது ரூ.60 லட்சம் ஹவாலா பணம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் மலப்புரம் கண்ணமங்கலத்தை சேர்ந்த அப்துல் சமீது (35), யாஸ்துல் பசாரி (30) ஆகியோர் என்பதும் இவர்கள் சேலத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு இந்த பணத்தை கடத்தி வருவதாகவும் கூறினர்.

    அவர்கள் 2 பேரையும் பாலக்காடு தெற்கு போலீசார் கைது செய்து ரூ.60 ஹவாலா பணத்தையும் பறிமுதல் செய்தனர். #tamilnews

    கூடலூரில் இ-சேவை மைய இணையதளம் முடக்கத்தால் சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    பொதுமக்கள் சாதி, வருமானம், இருப்பிடம், ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்காக அரசு அலுவலகங்களில் இ-சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. கூடலூர் தாலுகாவில் உள்ள பொதுமக்கள் சான்றிதழ்கள் பெறுவதற்காக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகை தருகின்றனர். இதேபோல் ஆதார் புகைப்படம் எடுக்கும் மையமும் இங்கு இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக அரசு இ-சேவை மையத்தில் சான்றிதழ்கள் கிடைப்பதில் காலதாமதம் ஆகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் விளக்கம் கேட்டால் இ-சேவை மைய இணையதள சேவை சரிவர செயல்படாமல் உள்ளது. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி வருகின்றனர். இதை அறியாத பொதுமக்கள் தினமும் வந்து ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர்.

    மேலும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் சான்றிதழ்கள் கிடைக்காமல் வாரக்கணக்கில் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பொதுத்தேர்வுகள் முடிந்து உயர்கல்வி படிப்பதற்காக மாணவர்கள் சான்றிதழ்கள் பெறுவதற்காக இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் இ-சேவை மைய இணையதள சேவை முடக்கம் காரணமாக சான்றிதழ்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
    கூடலூர் அருகே சந்தன மரங்களை மர்ம கும்பல் வெட்டி கடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி 21-வது வார்டுக் குட்பட்டது லோயர்கேம்ப். இங்கு 168 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் பெரியாறு நீர்மின்நிலையம் உள்ளது.

    இப்பகுதியில் மின் நிலையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இங்கு வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த குடியிருப்பு பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பல் 2 சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்றனர். இது குறித்து வனத்துறை மற்றும் லோயர்கேம்ப் போலீசில் மின்வாரியத்துறை சார்பாக புகார் அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், பல லட்சம் மதிப்புள்ள சந்தன மரங்கள் தொடர்ந்து வெட்டி கடத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் போலீஸ் மற்றும் வனத்துறையினர் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். தொடர்ந்து நடைபெறும் இந்த சம்பவங்களால் குடியிருப்பு வாசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    எனவே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு சந்தன மரங்களை வெட்டி கடத்தும் கும்பலை பிடிக்க வேண்டும். வனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், மின்வாரிய குடியிருப்பில் வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் உள்ளவர்களின் உதவியுடன்தான் சந்தன மரம் வெட்டி கடத்தி இருக்க கூடும். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என கூறினர்.

    கூடலூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கூடலூர் 2-ம் நிலை நகராட்சியாக உள்ளது. இங்கு 21 வார்டுகள் உள்ளன. நகராட்சியின் அனைத்து பகுதியிலும் சேரும் குப்பைகள் பெத்துக்குளம் குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டன. இதனால் அப்பகுதி மலைபோல் குவிந்து காணப்பட்டது. அடிக்கடி அங்கு தீ வைக்கப்படுவதால் புகை மூட்டம் ஏற்பட்டு சுற்றுச் சூழல் மாசுபட்டது.

    எனவே 8 மற்றும் 10 வது வார்டு பொதுமக்கள் குப்பைக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கம்பம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கம்பம் நகராட்சி குப்பைக்கிடங்கில் தற்காலிகமாக கொட்டப்பட்டு வந்தது.

    2 மாதத்துக்குள் மாற்று இடம் தேர்வு செய்யப்படும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால் 2 மாத கால அவகாசம் முடிந்து விட்டதால் கம்பம் குப்பைக்கிடங்கில் கடந்த 10 நாட்களாக குப்பை கொட்ட முடியவில்லை. இதனால் நகர் முழுவதும் குப்பைகள் அல்லாமல் தேங்கி கிடந்தன.

    நகராட்சியின் இந்த மெத்தனப் போக்கை கண்டித்து கூடலூர் - குமுளி சாலையில் இன்று பொதுமக்கள் பஸ் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மற்றும் கூடலூர் வடக்கு, தெற்கு போலீசார் சமரசம் செய்தும் கேட்கவில்லை.

    1 மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இன்று மாலைக்குள் அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

    கூடலூர் பகுதியில் அகற்றப்படாத குப்பையால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கூடலூர்:

    கூடலூர் நகராட்சி பகுதியில், பொதுமக்கள் பயன்படுத்திய குப்பை கழிவுகள், கழிவுப் பொருட்கள், தெருக்களில் இருந்து அள்ளப்படும் சாக்கடை கழிவுகள், இறைச்சிக்கழிவு, காய்கறி கழிவுகள் அனைத்தும் துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காகுப்பை என தரம் பிரித்து நகராட்சி டிராக்டர், மற்றும் மூன்று சக்கர சைக்கிள்களில் எடுத்துச் சென்று பெத்துக்குளம் பகுதியிலுள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வந்தனர்.

    சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு காலியிடமாகக் கிடந்த பெத்துக்குளம் சுற்றுப்பகுதி தற்போது காந்திகிராமம், சவுடம்மன் கோவில் தெருப்பகுதி, புதுக்குளம் முருகன் கோவில் பகுதி என குடியிருப்புப் பகுதிகளாக மாறியுள்ளது. பலஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பை கழிவுகள் இங்கு மலைபோல் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

    எனவே குப்பை கிடங்கை மாற்ற கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் செய்ததால் நகராட்சி அதிகாரிகள் கூடலூர் பெருமாள்கோவில் புலம் பகுதியில் குப்பை கொட்டும் வகையில் 5 ஏக்கர் தரிசுநிலத்தை தேர்வு செய்தனர். ஆனால் இப்பகுதியில் குப்பை கொட்டினால் விளைநிலங்கள் மாசுபடும்.

    பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குப்பை கழிவுகள் கம்பம் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது.

    கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழைபெய்து வருவதால் குப்பை கிடங்கிற்கு உள்ளே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூடலூரிலிருந்து கம்பத்தில் கொண்டுவந்து குப்பைகள் கொட்ட கம்பம் நகராட்சி அனுமதி மறுத்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக கூடலூர் நகர் பகுதியில் சேகரமாகி உள்ள குப்பைக்கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கிறது. இதனால் தெருப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு நோய்பரவும் அபாயமும் ஏற்பட்டள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் இவ்வி‌ஷயத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கூடலூரில் கர்ப்பிணிகளுக்கு வழங்க வேண்டிய மருந்து குப்பையில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவு இருந்தும் டாக்டர்கள் வராத காரணத்தால் அது நடைமுறையில் இல்லாமல் உள்ளது. பெரும்பாலான டாக்டர்கள் தங்கள் கிளீனிக்கிலேயே இருந்து விடுகின்றனர். வாரத்தில் 2 நாட்களுக்கு மட்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசி போட்டு மற்ற நாட்களில் வரும் நோயாளிகளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விடுகின்றனர்.

    இதனிடையே 8-வது வார்டு நடுத்தெரு பகுதியில் கர்ப்பிணிகளுக்கு வழங்கும் ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்புக்கரைசல் மருந்து ஏராளமான அளவு குப்பையில் வீசப்பட்டு இருந்தது.

    இந்த மருந்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கும் இலவச கரைசல் ஆகும். அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உரிய காலத்தில் வழங்கப்படாமல் காலாவதியாகி விட்டதால் அவை குப்பையில் வீசப்பட்டு இருந்தன. இந்த மருந்துகளின் பயன்பாடு கடந்த பிப்ரவரி மாதத்திலேயே முடிந்து விட்டது. உரிய நேரத்தில் நோயாளிகளுக்கு வழங்காமல் வீணாக குப்பையில் வீசப்பட்டதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சென்றனர்.

    இது குறித்து மருத்துவ துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கூடலூர் அருகே மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

    கூடலூர்:

    கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 1-வது வார்டு அரசமர தெருவில் அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது ஒரு இடத்தில் மதுபாட்டில் பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது.

    பசும்பொன் நகரை சேர்ந்த ராஜேந்திரன் (32) என்பவரை கைதுசெய்து அவரிடம் இருந்து 110 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கீழகூடலூர் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தெய்வேந்திரன் (55) என்பவர் தனது வீட்டு அருகே மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரையும் கைது செய்து 130 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவருடன் விற்பனையில் ஈடுபட்ட குள்ளப்ப கவுண்டன்பட்டியை சேர்ந்த மனோஜ் என்பவரை தேடி வருகின்றனர்.

    ×