search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trash"

    தனியார் நிறுவனம் சார்பில் குப்பைகள் அகற்றும் துப்புரவு பணியாளர்கள் அணிவகுத்து நின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு தினம் தோறும் குப்பைகள் அகற்றுவதற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் 162 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றுவதற்கு தனியார் நிறுவனம் மூலம் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் தனியார் நிறுவனம் சார்பில் 335 துப்புரவு பணியாளர்கள் பணிகள் மேற்கொள்ள வேண்டும். இதன் காரணமாக மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கால்வாய் சுத்தம் செய்தல், அரசு பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்தல், கொசு மருந்து அடித்தல், குப்பைகளில் உரம் மாற்றுதல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் குப்பை அகற்றும் பணிகளில் ஈடுபடவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் கடந்த மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவரும் குப்பைகள் சரியான முறையில் அகற்றாத தனியார் நிறுவன டென்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று கடலூர் மாநகராட்சியில் நடந்த மருத்துவ முகாமில் கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டார். அப்போது கவுன்சிலர்கள் மீண்டும் கலெக்டர் அருண் தம்புராஜிடம் குப்பைகள் சரியான முறையில் அகற்றவில்லை என மீண்டும் புகார் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் திடீரென்று நேரடியாக வந்தார். அப்போது அங்கு தனியார் நிறுவனம் சார்பில் குப்பைகள் அகற்றும் துப்புரவு பணியாளர்கள் அணிவகுத்து நின்றனர். அப்போது தனியார் நிறுவனம் சார்பில் பராமரித்து வரும் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். மேலும் எத்தனை நபர்கள் வந்துள்ளனர் என கேட்டபோது 294 நபர்கள் வந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் 41 தற்காலிக துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு வரவில்லை என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ் பேசுகையில், கடலூர் மாநகராட்சி தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக தனியார் நிறுவனம் மூலமாக தற்காலிக துப்புரவு பணியாளர்கள் குப்பைகள் அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் பொதுமக்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் குப்பைகள் அகற்றாததால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதோடு, சுகாதாரம் சீரழிந்து வருகின்றது என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.ஆகையால் துப்புரவு பணியாளர்கள் அந்தந்த கவுன்சிலர்களை அணுகி எந்தெந்த பகுதியில் குப்பையில் உள்ளது என்பதனை பார்வையிட்டு அகற்ற வேண்டும். மேலும் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை மக்காத குப்பை என தனியாக பிரித்து வாங்க வேண்டும். ஆகையால் துப்புரவு பணியாளர்கள் தினந் தோறும் குப்பைகளை அகற்றி சுகாதாரமான மாநகராட்சியாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் வருங்காலங்களில் இது போன்ற ஆய்வுகள் அடிக்கடி நடைபெறும் என்பதால் தூய்மை பணியில் சரியான முறையில் ஈடுபட வேண்டும். இந்த நிலையில் ஒரு மாத காலத்திற்குள் தனியார் நிறுவனம் அனைத்து பணியாளர்களையும் நியமித்து சரியான முறையில் குப்பைகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் தனியார் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்தார். அப்போது மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் காந்தி ராஜ், மாநகர நகர் அலுவலர் எழில் மதனா, துப்புரவு ஆய்வாளர்கள் அப்துல் ஜாபர், கிருஷ்ணராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் சாய்துனிஷா சலீம், சங்கீதா, பார்வதி, சுபாஷிணி ராஜா, விஜயலட்சுமி செந்தில், பாலசுந்தர், சரவணன், சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பாளையங்கால்வாய் பகுதியில் தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அப்போது மேலப்பாளையம் பகுதிகளில் கால்வாய் பகுதியில் குப்பையை கொட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது .

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி பாளையங்கால்வாய் பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி துணை ஆணையர் தாணுமூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைப்படி மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது மேலப்பாளையம் பகுதிகளில் கால்வாய் பகுதியில் குப்பையை கொட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது .

    மேலும் பொது இடங்களிலும், கால்வாய் களிலும் குப்பைகளைக் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • குப்பையில் வீசப்படும் கழிவுகள் அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.
    • தேங்கி கிடக்கும் கழிவுகள் முழுவதையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வேளச்சேரி:

    வேளச்சேரியில் தண்டீஸ்வரர் வேதஸ்ரேணி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்ததமான காலி இடம் வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் 3-வது மெயின்ரோட்டில் உள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவில் நிலம் தற்போது பொதுமக்களின் குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது.

    அந்த காலி இடத்தில் பழைய உபகரணங்கள், உடைந்த கண்ணாடி, பிளாஸ்டிக் பைகள் மற்றும் உணவுக்கழிவுகள் தினந்தோறும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் புதிய குப்பை கிடங்காக கோவில் நிலம் மெல்ல மெல்ல மாறி வருகிறது.

    அப்பகுதியில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு விருந்து வைத்தார்போல் உணவு கழிவுகள் அதிக அளவில் குவிந்து கிடப்பதால் மாடு உள்ளிட்ட விலங்குகள் எந்த நேரமும் அந்த இடத்தி, சுற்றி வருகின்றன.

    குப்பையில் வீசப்படும் கழிவுகள் அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சுகாதாரகேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    மேலும் இந்த இடத்தின் குறுகலான சாலைகளில் வாகனங்களும் பல நாட் களாக ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக சாலை முழுவதும் வாகனங்கள் நிரம்பி காணப்படுகின்றன.

    கோவில் நிலத்தில் குப்பை கொட்டுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து, தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது, 'நான் இந்த பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். கடந்த சில மாதங்களாக கோவி லுக்கு சொந்தமான இந்த காலி இடத்தில் குப்பைகள் கொட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால் கோவில் நிலம் குப்பை கொட்டும் கிடங்காக மாறி துர்நாற்றம் வீசுகிறது.

    இந்த இடத்தின் அருகே ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் ஏராளமான கடைகள் உள்ளன. கடை உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கோவில் இடத்தில் குப்பைகள், உணவுக்கழிவுகளை கொட்டி செல்கிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது.

    பொதுமக்களே இந்த இடத்தில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும். மேலும் தற்போது தேங்கி கிடக்கும் கழிவுகள் முழுவதையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் கழிவுகளை கொட்டாத அளவுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

    இதுகுறித்து மண்டல அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, வெங்கடேஸ்வரா நகரில் உள்ள கோவில் காலி இடத்தில் குப்பைகள் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் வந்து உள்ளது. இந்த மாதிரியான பொது இடத்தில் கழிவுகளை கொட்டாமல் இருக்க பொதுமக்கள், குடியிருப்போர் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

    இல்லையெனில் கழிவுகளை கொட்டும் குடியிருப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதிகாரிகள் விரைவில் அந்த இடத்தை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

    • பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன
    • கழிவுகளை பொது வெளியில் கொட்டினாலோ தீ வைத்து எரித்தாலோ ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் 500-க்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்கள், ஒட்டல்கள், 10 திருமண மண்டபங்கள்,3 திரையரங்குகள் செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் 5 டன்னிற்கு மேல் குப்பை கழிவுகளை நகராட்சி நிர்வாகம் தரம்பிரித்து சேகரித்து வருகிறது.

    இந்தநிலையில், நகராட்சிக்கு உட்பட்ட, கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், திருமண மண்டப உரிமையாளர்களிடையே திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அதிகாரிகள் கூறும்போது, நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் திரையரங்குகள், திருமண மண்டபங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் போன்றவற்றில் தினந்தோறும் 100 கிலோவுக்கு அதிகமான கழிவுகளை வழங்குபவர்கள் மற்றும் 5 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள வணிக வளாகம் கொண்டவர்கள் என தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    தினமும் 100 கிலோவுக்கு மேல் குப்பை கழிவுகளை வழங்கும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் நகராட்சி நிர்வாகத்திற்கு மாதம் ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும். மேலும் கழிவுகளை பொது வெளியில் கொட்டினாலோ தீ வைத்து எரித்தாலோ ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றனர்.

    • விராலிமலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது
    • தடுத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் குப்பைகளை கொட்டி சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், இதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி குறிச்சிப்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி பொதுமக்கள் மற்றும் குளம் ஆயக்கட்டுதாரர்கள் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலருக்கு புகார் மனு அளித்துள்ளனர்.

    மேலும் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- விராலிமலை அருகே உள்ள வடுகப்பட்டி ஊராட்சி தென்னங்குடி குளம் கரையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடம் காலியாக உள்ளது. அங்கு சிலர் விராலிமலை பகுதியில் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பல்வேறு நச்சு கழிவுகள், தொழிற்சாலையில் சேரும் குப்பைகளை வாகனம் மூலம் கொண்டு வந்து குளக்கரையில் உள்ள காலியிடத்தில் கொட்டுகின்றனர்.

    மேலும் பிளாஸ்டிக், ஆயில் கேன்கள் உள்ளிட்ட பொருட்களும் இக்குப்பை கழிவுடன் கொட்டப்படுவதால் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் புற்களுடன் இக்குப்பைகளை உண்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், குப்பைகளில் இருந்து கிளம்பும் துர்நாற்றத்தால் அப்பகுதி வழியாக பயணிக்கும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவித்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படும் மேலும் சூற்றுச்சூழலை பாதிக்கும் எனவே கோவில் இடத்தை ஆக்கிரமித்து குப்பை கழிவுகளை கொட்டுபவர்களை கண்டறிந்து அவர்களை தடுத்து நிறுத்தி கோயில் இடத்தின் ஆக்கிரமிப்பை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • அரியலூர்-பெரம்பலூர் சாலையில் குப்பைகளை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.
    • சாலையில் குப்பைகளை எரிப்பதை தடை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பெரம்பலூர்:

    அரியலூர்-பெரம்பலூர் சாலையின் மத்தியில் குன்னம் சட்டமன்ற தொகுதி அமைந்துள்ளது. வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னம் ஊராட்சியில் சேகரமாகும் குப்பைகள் அரியலூர்- பெரம்பலூர் சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டு தினமும் மாலை எரியூட்டப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் புகையால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். குப்பைகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுவதோடு இதனை சுவாசிக்கும் பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் மக்காத குப்பைகளை மக்கும் குப்பைகளோடு சேர்த்து கொட்டி எரிப்பதனால் மக்கும் குப்பைகளும் வீணாகிறது. நிலமும், காற்றும் மாசடைகிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி குப்பைகளை முறையாக பெற்று மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதோடு மக்காத குப்பைகளை முறையாக கையாள குன்னம் ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர்-பெரம்பலூர் சாலையில் குப்பைகளை எரிப்பதை தடை செய்ய வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சிலுவைமுக்கு சாலையில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
    • முக்கிய பகுதிகளில் குப்பை தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை -குற்றாலம் நெடுஞ்சாலைக்கு உட்பட்ட சிலுவைமுக்கு பகுதியானது வல்லம், பிரானூர் பார்டர், வாஞ்சிநகர், இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாகும். இந்த சாலையை சுற்றுவட்டார மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் சிலுவைமுக்கு சாலையில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடப்பதுடன், துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் போது வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மீது காற்றில் பறந்து சென்று விழுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியினர் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே முக்கிய பகுதிகளில் குப்பை தொட்டி அமைத்து அவ்வப்போது குவியும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீடு, வீடாக தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து வாங்கி நாள்தோறும் வரும் வாங்கி வாகனங்கள் மூலம் நகராட்சி குப்பை கிடங்கில் கொண்டு கொட்டுகின்றர்.
    • நாள்தோறும் இந்த குப்பைகளை அகற்றினாலும் குப்பைகள் அகற்றிய உடனே பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் பல்வேறு இடங்களில் நகராட்சி சார்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம்பிரித்து வைத்து எடுத்து செல்லும் வகையில் குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் நகராட்சி சார்பில் வீடு, வீடாக தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து வாங்கி நாள்தோறும் வரும் வாங்கி வாகனங்கள் மூலம் நகராட்சி குப்பை கிடங்கில் கொண்டு கொட்டுகின்றர்.

    இந்நிலையில் சீர்காழி நகராட்சி 14வது வார்டில் உள்ள கல்யாணி சீனிவாசபுரம் செல்லும் பகுதியில் முகப்பில் குப்பைகள் அதிக அளவு கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சி யளிக்கிறது. நாள்தோறும் இந்த குப்பைகளை அகற்றினாலும் குப்பைகள் அகற்றிய உடனே பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர்.

    அதன்படி சீர்காழி நகராட்சி சார்பில் அப்பகுதியில் பொது இடத்தில் குப்பை கொட்ட தடை விதித்து, மீறினால் நடவடிக்கை அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாக

    சார்பில் எச்சரிக்கை விடுக்கும் எச்சரிக்கை பலகை தயார் செய்யப்பட்டு அப்பகுதியில் வைக்கப்பட்டது. இந்தப் பணியை நகர மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு மற்றும் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.

    • கொடுவாய் பஸ் நிறுத்தம் என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
    • ஊராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ளது கொடுவாய். இங்கு சுமார் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் திருப்பூர் - ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையும் செல்கிறது. இந்த வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்களும் சென்று வருகிறது. எனவே கொடுவாய் பஸ் நிறுத்தம் என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

    இதன் அருகே ஏராளமான பேக்கரிகள், உணவகங்கள், பள்ளிக்கூடம், மின்மயானம் உட்பட பல்வேறு நிறுவனங்கள் உள்ளது. இந்த நிலையில் இந்த பகுதியில் மின்மயானத்தின் அருகே ஊராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. மேலும் குட்டை போல் தேங்கியுள்ள கழிவு நீரில் இந்த குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தியும் அதிக அளவில் உள்ளது. இந்த வழியாக செல்பவர்கள் இந்த துர்நாற்றத்தை சகித்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் மின்மயானத்திற்கு வருபவர்கள் அங்கு சிறிது நேரம் கூட உள்ளே நிற்க முடியாத அளவிற்கு மின்மயானத்தை சுற்றிலும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை அப்புறப்படுத்த எந்தவித நடவடிக்கையும் ஊராட்சி சார்பில் எடுக்கப்படாததால் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக இந்த குப்பைகளை அகற்றி ஒரு சுகாதாரமான சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Add Comments

    • கால்நடைகள் துவசம் செய்து வருவதால் குப்பைகள் ரோட்டின் நடு பகுதிக்கு வந்து விடுகிறது.
    • குப்பைகளால் துர்நாற்றம் ஏற்பட்டு மூக்கை பிடித்துக் கொண்டே பயணிகள் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    உடுமலை:

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட மலையப்ப கவுண்டர் லேஅவுட்டில் இருந்து காந்தி நகர் செல்லும் ரோட்டின் ஓரத்தில் மலை போல் குப்பைகள் குவிக்கப்பட்டு உள்ளது.

    அவற்றை கால்நடைகள் துவசம் செய்து வருவதால் குப்பைகள் ரோட்டின் நடு பகுதிக்கு வந்து விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தற்போது அடிக்கும் காற்றால் குப்பை மழையில் நனைந்து கொண்டே வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்த குப்பைகளால் துர்நாற்றம் ஏற்பட்டு மூக்கை பிடித்துக் கொண்டே பயணிகள் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே இவற்றை அப்புறப்படுத்தி குப்பைத் தொட்டி வைத்து குப்பைகளை அதில் போட்டு அப்புறப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • 10 பேட்டரி வாகனங்கள் சீரமைக்கப்பட்டு 1-வது மண்டல அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
    • பேட்டரி வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகளில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குப்பை அள்ளுவதற்கு வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்களில் முறைகேடு புகார் எழுந்து, ஆவணங்களில் உள்ள, வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் அனைத்தையும் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பழுதடைந்த வாகனங்களை சீரமைத்து குப்பை அள்ளுவதற்கு வழங்க வேண்டும் என்று உதவி ஆணையாளர்கள், தனியார் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டது. இதன் விளைவாக தற்போது 10 பேட்டரி வாகனங்கள் சீரமைக்கப்பட்டு 1-வது மண்டல அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த குப்பை அள்ளும் வாகனங்களை ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆய்வு செய்தார். வீடு, வீடாக சென்று குப்பை பெறுவதற்கு இந்த பேட்டரி வாகனங்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. இதனால் பேட்டரி வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகளில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    • மக்கும் குப்பை, மக்காத குப்பை இவைகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் தர வேண்டும்.
    • நமது கிராமத்தை நாம் நினைத்தால் மட்டுமே அழகாக வைத்துக் கொள்ள முடியும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியம் சார்பாக நம்ம ஊர் சூப்பர் என்ற திட்டம் ஒவ்வொரு கிராமங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

    விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரமணிராஜ் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், அருள்மொழி முன்னிலை வகித்தனர்.

    பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ பேரணியை தொடங்கி வைத்தார்.

    அப்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை இவைகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் தர வேண்டும் எனவும், நமது கிராமத்தை நாம் நினைத்தால் மட்டுமே அழகாக வைத்துக் கொள்ள முடியும் எனவும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் எனவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், துணைத் தலைவர் உஷா நந்தினி பிரபாகரன், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் சுப்பராயன், மாவட்ட கவுன்சிலர் தியாக.விஜயேஸ்வரன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்துகுபேரன் மகளிர் சுய உதவிக் குழுக்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிறைவில் ஊராட்சி செயலர் தியாகராஜன் நன்றிக் கூறினார்.

    ×