search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corporation commissioner"

    • சிவகிருஷ்ணமூர்த்தி ஈரோடு மாநகராட்சி கமிஷனராக பணியிட மாறுதலில் சென்றார்.
    • பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மாநகர பகுதிகளில் உள்ள கால்வாய்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய சிவகிருஷ்ணமூர்த்தி ஈரோடு மாநகராட்சி கமிஷனராக பணியிட மாறுதலில் சென்றார். இதையடுத்து நெல்லை மாநகராட்சி புதிய கமிஷனராக நியமிக்கப்பட்ட தாக்ரே சுபம் ஞானதேவ் ராவ் இன்று பொறுப் பேற்றுக் கொண்டார். இவர் நெல்லை மாநகராட்சியின் 30-வது கமிஷனர் ஆவார். அவர் இன்று காலை பொறுப்பேற்ற பின்னர் அலுவலக கோப்புகளை ஆய்வு செய்து கையெழுத்திட்டார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மாநகர பகுதிகளில் உள்ள கால்வாய்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. அந்த பணிகள் துரிதப் படுத்தப்படும். மாநகர பகுதியில் மழைநீரானது சாலைகளில் தேங்காமல் இருக்க அனைத்து நடவடிக் கைகளும் மேற்கொ ள்ளப்படும். பஸ் நிலை யங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். புதிதாக கட்டப்பட்டு வரும் சந்திப்பு பஸ் நிலைய கட்டிட பணியை விரைந்து நிறைவு செய்தல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

    தொடர்ந்து புதிய கமிஷ னர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவை துணை கமிஷ னர் தானுமூர்த்தி, உதவி கமிஷனர்கள், பொறி யாளர்கள், சுகாதார அலுவ லர்கள், சுகாதார ஆய்வா ளர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தனர்.

    • 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும், 14 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும் என போட்டிகள் நடைபெற்றது.
    • இந்த போட்டியில் மாணவ-மாணவிகள், பெண்கள் ,ஆண்கள் என சுமார் 486 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நெல்லை பிரிவு சார்பில் சைக்கிள் போட்டி இன்று நெல்லையில் நடை பெற்றது.

    பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கிய இந்த சைக்கிள் போட்டியை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    இந்த போட்டிகள் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியாக நடைபெற்றது. 14 வயதுக்கு உட்பட்ட வர்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும், 14 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும், 20 வயதுக்கு மேற்பட்டவ ர்களுக்கு 15 கிலோமீட்டர் தூரமும் போட்டிகள் நடைபெற்றது.

    பாளை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி பல்நோக்கு மருத்துவமனை, கே.டி.சி. நகர் மேம்பாலம் வழியாக திருச்செந்தூர் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரம் அருகே ஆட்சி மடம் வரையிலும் இந்த சைக்கிள் போட்டி நடைபெற்றது. பின்னர் வீரர்கள் அதே வழியில் திரும்பி வந்து அண்ணா விளையாட்டு அரங்கத்தை அடைந்தனர்.

    இதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்க ப்பட்டது. இந்த போட்டியில் மாணவ-மாணவிகள், பெண்கள் ஆண்கள் என சுமார் 486 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதனை யொட்டி அந்த சாலையில் மற்ற போக்குவரத்துக்கு சிறிது நேரம் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் சைக்கிள் போட்டி நடைபெற்றது.

    • சென்னையில் இன்று பிற்பகல் முதலே பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • பல பகுதிகளில் மழை பெய்து வருவதை அடுத்து மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு.

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு பெய்யும் கனமழை காரணமாக நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. 

    தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை முதலே மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வடக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

     

    இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த இருக்கிறது. 

    • பாளையங்கால்வாய் பகுதியில் தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அப்போது மேலப்பாளையம் பகுதிகளில் கால்வாய் பகுதியில் குப்பையை கொட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது .

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி பாளையங்கால்வாய் பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி துணை ஆணையர் தாணுமூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைப்படி மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது மேலப்பாளையம் பகுதிகளில் கால்வாய் பகுதியில் குப்பையை கொட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது .

    மேலும் பொது இடங்களிலும், கால்வாய் களிலும் குப்பைகளைக் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • திருவிழா முடியும் வரை நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி கூடுதல் பொறுப்பாக காரையாறு பகுதியை கவனித்துக்கொள்ள உத்தரவிட்டார்.
    • பக்தர்கள் எவ்வித இடைஞ்சலும் இன்றி கோவிலுக்கு செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.

    நெல்லை:

    பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் வருகிற 16-ந் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது.

    இதையொட்டி பக்தர்கள் கோவிலில் தங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நாளை(திங்கட்கிழமை) முதல் 18-ந் தேதி வரை 5 நாட்கள் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அன்றைய தினங்களில் அரசு பஸ்கள் மட்டுமே கோவிலுக்கு அனுமதிக்கப்படும், தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்தது. அதேநேரத்தில் நேற்று முதல் கோவிலில் குடில் அமைத்து கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் தொடர்ந்து வனத்துறையினருக்கும், பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம், போராட்டங்கள் என பிரச்சினை ஏற்பட்டு வந்ததால், வனத்துறை தலையீடு இல்லாமல் இருப்பதற்காக மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி திருவிழா முடியும் வரை நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி கூடுதல் பொறுப்பாக காரையாறு பகுதியை கவனித்துக்கொள்ள உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில், இன்று அதிகாலையிலேயே கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி பாபநாசம் சோதனை சாவடிக்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். பக்தர்கள் எவ்வித இடைஞ்சலும் இன்றி கோவிலுக்கு செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார். அப்போது சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் சில அறிவுறுத்தல்கள் வழங்க ப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்கள் கோரிக்கையை ஏற்று இன்று மாலை வரை தனியார் வாகனங்களில் பொதுமக்கள் குடில் அமைக்கும் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று இரவு அங்கு தங்கு வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இன்று முதல் 17-ந்தேதி வரை 5 நாட்கள் தங்கிக் கொள்ளலாம். அதே நேரத்தில் வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பக்தர்கள் முழுமையாக மலையில் இருந்து கீழே இறங்கி விட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தாமிரபரணி ஆற்றை பொறுத்தவரை பக்தர்கள் சோப்பு, ஷாம்பு பயன்படுத்தாமலும், ஆழமான பாறைகள் நிறைந்த பகுதிகளுக்கு போகாமல் எப்போதும் போல குளிக்கலாம். அதில் எந்த தடையும் இல்லை. அதுகுறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தமிழ்நாடு ஒப்பந்த வெளிப்படைத்தன்மைச் சட்டம் 1998ன் படி மூன்று நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளிகள் பெறப்பட்டது.
    • பெறப்பட்ட தளவாடப் பொருட்கள் நான்கு மண்டலங்களுக்கு வழங்கப்பட்டு தூய்மைப் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு தளவாடப்பொருட்கள் தேவைப்படுவதாக சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்களிடமிருந்து 21.4.2022அன்று அறிக்கை பெறப்பட்டது, அதன்படி அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தமிழ்நாடு ஒப்பந்த வெளிப்படைத்தன்மைச் சட்டம் 1998ன் படி மூன்று நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளிகள் பெறப்பட்டது.

    மூன்று நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளிகளின் அடிப்படையில், தளவாடப் பொருட்களுக்கான உத்தேச மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, மாநகராட்சி ஆணையாளரின் நிர்வாக அனுமதி பெறப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோர உரிய அரசு வழிகாட்டுதலின்படி, 17.5.2022 அன்று ஒரு நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டு 30.5.2022 அன்று இ-டெண்டர் இணையவழியில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

    மேற்படி ஒப்பந்தப் புள்ளிகளில் இரண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு ஒப்பந்தப்புள்ளி வழங்கியுள்ளனர்.மேற்கண்ட இரண்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளிகளின்படி ஒப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி ஆய்வுக்குழுவின் அறிக்கை பெறப்பட்டு மாமன்றத்தின் தீர்மானத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

    அதன்படி குறைவான ஒப்பந்தப்புள்ளி வழங்கிய நிறுவனத்திற்கு விநியோக உத்தரவு வழங்கப்பட்டது. மேற்படி ஒப்பந்ததாரர் ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தளவாடப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. பெறப்பட்ட தளவாடப் பொருட்கள் நான்கு மண்டலங்களுக்கு வழங்கப்பட்டு தூய்மைப் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தளவாடப்பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக சிலர் சமூகவலைதளங்களில் தகவல்களை பரப்பினர். இதையடுத்து மேயர், ஆணையாளர், துணைமேயர் மற்றும் மாநகர நல அலுவலர் ஆகியோர் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள், தொடர்புடைய கோப்புகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு எவ்வித விதிமீறல்களும் நடைபெறவில்லை எனவும், முறையாக வழிமுறைகளைப் பின்பற்றி பெறப்பட்டது என உறுதி செய்யப்பட்டது.

    எனவே சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட பொருளுக்கும், விநியோகம் செய்யப்பட்ட பொருளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை . இது போன்ற உண்மைக்குப் புறம்பான தவறான தகவல்களை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டிகள் மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று அமைக்க வேண்டும்.
    • சட்டவிதிகளின்படி சமர்ப்பிக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆணையாளரால் உரிமம் வழங்கப்படும்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் சட்டவிதிகளின்படி 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் எச்சரித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகளின் சட்டத்தின்படி விளம்பர பலகைள், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டிகள் மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று அமைக்க வேண்டும். சட்டவிதிகளின்படி சமர்ப்பிக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆணையாளரால் உரிமம் வழங்கப்படும். இதுநாள் வரையிலும் அனுமதி பெறாமல் விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டிகள் வைத்துள்ளோர் 3 நாட்களுக்குள் உரிய பாதுகாப்புடன் தாங்களாகவே விளம்பர பதாகைகள், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டிகளை அகற்றிக்கொள்ள வேண்டும். தவறினால் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் 1998 பிரிவு 117-ன்படி மாநகராட்சி மூலம் அகற்றப்படுவதுடன் உரிய செலவுத்தொகை உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். மேலும் சட்டப்பிரிவு 117-யு-பிரிவின்படி குற்ற வழக்கு தொடரப்பட்டு 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

    • நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு தாமிரபரணி ஆறு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
    • நெல்லை மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் 20 இடங்களில் கழிவுநீர் கலப்பதாகவும், இதனை தடுக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு தாமிரபரணி ஆறு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்தப்பகுதி களுக்கு செல்லக்கூடிய குடிநீர், தற்போது சாக்கடை கலந்து துர்நாற்றம் வீசுவதால் பொது மக்கள் குடிக்க முடியாத நிலைக்கு மாறி வருவதாக புகார் எழுந்து வருகிறது.

    மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

    நெல்லை மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் 20 இடங்களில் கழிவுநீர் கலப்பதாகவும், இதனை தடுக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி நேற்று தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் பகுதியான மீனாட்சி புரம், சிந்துபூந்துறை, குறுக்குத்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து நெல்லை மாந கராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:-

    நெல்லை மாநகரப் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக நீண்டகாலமாக புகார்கள் உள்ளது. இதை தடுக்க ரூ.295 கோடியில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதில் 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.

    ஒரு குழுவை அமைத்து மாநகராட்சி பகுதியில் தாமிர பரணி ஆற்றின் நதிக்கரைகளில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் கலப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதல் கட்டமாக நோட்டீஸ் வழங்க உள்ளோம். மேலும் அந்தந்த பகுதியில் கழிவுநீர் ஓடைகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்காத வண்ணம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளோம். மேலும் அவர்கள் வீட்டிற்கு அருகே பாதாள சாக்கடை திட்டம் இருந்தால் பாதாள சாக்கடை திட்டத்தில் உடனடியாக அந்த இணைப்புகளை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீண்டும் அதேபோல் செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், நாங்களே அவர்கள் வீட்டிற்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கவும் தயாராக இருக்கிறோம் என்றார்.

    ஆய்வின்போது, முன்னாள் மண்டல சேர்மனும், 3-வது வார்டு கவுன்சிலருமான தச்சை சுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் எஸ்.வி.சுரேஷ், கண்ணன், செல்வம், சிவா, போஸ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் 100 வாகனங்கள் உள்ளன.
    • சேகரிக்கும் கழிவுகளை நீர் வழிப்பாதை உள்ளிட்ட பொது வெளியில் கொட்டக்கூடாது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் 100 வாகனங்கள் உள்ளன. மாநகராட்சி சார்பில் வாகன உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.கமிஷனர் பவன்குமார் தலைமை வகித்தார். மாநகர பொறியாளர் வெங்கடேஷ், துணை கமிஷனர் சுல்தானா, நகர் நல அலுவலர் கவுரி சரவணன் முன்னிலை வகித்தனர். மண்டல உதவி கமிஷனர்கள், பொறியியல் மற்றும் சுகாதாரப்பிரிவு அலுவலர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்கள் முறையாக மாநகராட்சியில் பதிவு செய்யப்பட வேண்டும். சேகரிக்கும் கழிவுகளை நீர் வழிப்பாதை உள்ளிட்ட பொது வெளியில் கொட்டக்கூடாது. கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் தான் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

    உரிய அனுமதி பெற்ற அனுபவமிக்க ஊழியர்கள் மட்டுமே அந்த வாகனங்களை இயக்க வேண்டும். அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம் ஜி.பி.எஸ்., கருவி பொருத்த வேண்டும். மாநகராட்சி சுகாதாரப்பிரிவினரின் வழிகாட்டி நடை முறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன. 

    • திருப்பூர் மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனமாக சொத்துவரி கருதப்படுகிறது.
    • தகவல்களுக்கு 155304 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர்பவன்குமார் ஜி.கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனமாக சொத்துவரி கருதப்படுகிறது. சொத்துவரி, தொழில்வரி போன்ற வரிகள் மூலம் பெறப்படும் வருவாயினை கொண்டு, திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தூய்மைப் பணிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், பொது மக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்குதல் போன்ற சேவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 31.12.2022ல் சொத்துவரி ரூ. 50.73 கோடி, காலியிட வரி ரூ. 1.75 கோடி, தொழில் வரி ரூ.2.21 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.11.84 கோடி, வாடகை - குத்தகை இனங்கள் ரூ.3.56 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ. 46 லட்சம் என மொத்தம் ரூ. 79.13 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 31.1.2023ல் சொத்துவரி ரூ. 66.47 கோடி, காலியிட வரி ரூ. 1.99 கோடி, தொழில் வரி ரூ.2.53 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.15.66 கோடி, வாடகை -குத்தகை இனங்கள் ரூ.3.66 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ. 58 லட்சம் என மொத்தம் ரூ. 101.83 கோடி பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

    அதன்படி 16.2.2023ல் சொத்துவரி ரூ. 73.66 கோடி, காலியிட வரி ரூ. 2.12 கோடி, தொழில் வரி ரூ. 3.20 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.17.68 கோடி, வாடகை - குத்தகை இனங்கள் ரூ. 3.68 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ. 64 லட்சம் என மொத்தம் ரூ. 13.58 கோடி பொது மக்கள் கட்டணங்களாக செலுத்தியுள்ளனர்.

    மேற்கண்ட தகவலின்படி டிசம்பர் 2022 ல் 36.36 சதவீதமும், ஜனவரி 2023ல் 44.22 சதவீதமும் பிப்ரவரி 2023 நாளது வரை 47.96 சதவீதமும் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வரி, வாடகை மற்றும் குத்தகை இனங்கள் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பொதுமக்கள் விடுமுறை நாட்களில் வரி செலுத்த ஏதுவாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் ஆகிய கணிணி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாக செலுத்தமேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் தகவல்களுக்கு 155304 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    எளிய முறையில் இணையதளம் வழியாக வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தும் சேவையை பயன்படுத்த.Use "Quick Payment" or "Register & Login" tohttps://tnurbanepay.tn.gov.in. மேலும்,அனைத்து மண்டலங்களிலும் சொத்துவரி மற்றும் காலியிடவரி வரி விதித்தல் தொடர்பிலும், பெயர் மாறுதல்கள் செய்தல் தொடர்பிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய காலகெடுவிற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளவும் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • மேலப்பாளையம், பாளை விரிவாக்கப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள தற்காலிக குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • சுத்தமல்லி நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு நீண்ட காலமானதால் அவற்றில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யுள்ளதாவது:-

    நெல்லை மாநகராட்சி பகுதிகளான மேலப் பாளையம், பாளை விரிவாக்கப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள தற்காலிக குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் சுத்தமல்லி நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு நீண்ட காலமானதால் அவற்றில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது. இதனால் சீரான குடிநீர் விநியோகம் செய்வதில் அடிக்கடி தடங்கல் ஏற்படுகிறது.

    இவ்வாறு குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை சரிசெய்யும் பொருட்டு அடிக்கடி உடைப்பு ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு அவற்றை மாற்றுவதற்காக தனியாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டி னை போக்குவதற்கு நிரந்திர தீர்வாகவும் சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலை யத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யும் பழைய பிரதான குழாய்களை அகற்றி அங்கு புதிதாக குழாய் அமைப்பதற்காக ரூ.8.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மேலப்பாளை யம், பாளை விரிவாக்க பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டினை நீக்க தற்காலிகமாக மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

    மேலும் நிரந்தர தீர்வாக இந்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு அரியநாயகிபுரம் குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சேவியர் காலனி குடிநீர் மேல்நிலைநீர்த் தேக்க தொட்டியில் இருந்து மகிழ்ச்சிநகர் மற்றும் ஆசிரியர்காலனி பகுதிகளில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் நிரப்பி ஆசிரியர் காலனி, தமிழ்நகர், மகிழ்ச்சிநகர்,என்.ஜி.ஓ. 'பி' காலனி, எழில்நகர், திருமால்நகர், பெருமாள்புரம் சி காலனி, குமரேசன் காலனி,கனரா பேங்க் காலனி,பி.ஏ.பிள்ளை நகர் (தியாகராஜநகர்),எல்.கே.எஸ். நகர், அன்புநகர் ஆகிய இடங்களில் உள்ள 12 குடிநீர் மேல்நிலைநீர்த் தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே தேவைப்படும் இடங்களில் சிறிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்கள் மத்திகள் குடிநீர் விநியோகம் தொடர்பாக வதந்திகள் ஏதும் பரப்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது. மாநகராட்சி குடிநீர் விநியோக வால்வு களை மாநகராட்சி சம்பந்தமில்லாத நபர்கள் யாரேனும் இயக்கினால் அவர்கள் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகின்றது.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • விளம்பர பலகைகள் மற்றும் பதாகைகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • 10-ந் தேதி முதல் அனுமதியற்ற பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகள் அகற்றப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், அனைத்து வணிக மற்றும் வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக, உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள், விளம்பர பலகைகள் மற்றும் பதாகைகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    எனவே அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் வைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகளையும் வருகிற 9-ந் தேதிக்குள் தாங்களாகவே அகற்றிட வேண்டும். இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலமாக வருகிற 10-ந் தேதி முதல் அனுமதியற்ற பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தகவலை மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

    ×