search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தண்ணீர் வழங்க நடவடிக்கை -மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
    X

    மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தண்ணீர் வழங்க நடவடிக்கை -மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

    • நெல்லை மாநகர பகுதியில் தற்போது ஓரளவு குடிநீர் தட்டுப்பாடு குறைந்துள்ளது.
    • பாளை மண்டலத்தில் சட்ட விரோத குடிநீர் இணைப்புகள் பெரும் அளவில் கண்டுபிடிக்கப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி யில் உள்ள 4 மண்டலங்களிலும் சுமார் 5 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.

    குடிநீர் தட்டுப்பாடு

    இங்குள்ள மக்களுக்கு தினமும் சராசரியாக 75 முதல் 79 எம்.எல்.டி. குடி தண்ணீர் தேவைப்படுகிறது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு மாநகரப் பகுதியில் ஓடி தூத்துக்குடி மாவட்டத்தை அடைகிறது.

    இதன் காரணமாக மாநகரப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு என்பது இருக்கக் கூடாது. ஆனால் ஆற்றின் கரையை ஒட்டி அமைந்திருக்கும் கொக்கிரகுளம் பகுதியில் கூட வாரம் ஒரு முறை தான் தண்ணீர் கிடைக்கிறது என்ற நிலைதான் தற்போது நெல்லை மாநகராட்சியில் நிலவி வருகிறது.

    அரியநாயகிபுரம் திட்டம்

    மொத்த தேவையான 79 எம்.எல்.டி. தண்ணீருக்கு இதுவரை பழைய திட்டத்தின்படி 47 முதல் 48 எம்.எல்.டி. குடிநீர் மட்டுமே மாநகரப் பகுதி மக்களுக்கு கிடைத்து வந்தது.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட அரியநாயகிபுரம் திட்டத்தின் மூலம் இந்த குடிநீர் தேவை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தற்போது 65 எம்.எல்.டி. தண்ணீர் கிடைப்பதால் மாநகர பகுதியில் ஓரளவு குடிநீர் தட்டுப்பாடு குறைந்துள்ளது. குறிப்பாக நெல்லை, தச்சநல்லூர், மேலப்பாளையம் மண்ட லங்களில் சமீப காலமாக குடிநீர் தட்டுப்பாடு பெரு மளவுக்கு குறைந்துள்ளது.

    பாளை மண்டலம்

    ஆனால் பாளை மண்ட லத்தில் மட்டும் குறிப்பாக அந்த மண்டலத்துக்குட்பட்ட விரிவாக்க பகுதிகளில் மட்டும் குடிநீர் தட்டுப்பாடு என்பது இன்னும் தீரவில்லை.

    இதற்காக மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

    ஆனாலும் தொடர்ந்து அந்த மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

    மின்மோட்டார்கள்

    இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:-

    பாளை மண்டலத் துக்குட்பட்ட விரிவாக்க பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் குடிநீரை மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி எடுக்கிறார்கள். இது தொடர்பாக பலமுறை மனு அளித்து இருக்கிறோம்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சட்ட விரோத குடிநீர் இணைப்புகள் பெரும் அளவில் பாளை மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. 2 நாட்களுக்கு முன்பு குடிநீர் உறிஞ்சிய 59 மின் மோட்டார்கள் அந்த மண்டலத்தில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    செயற்கை தட்டுப்பாடு

    இந்த பகுதியில் செயற்கையாக தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது. ஒரு சில குடிநீர் வால்வு ஆபரேட்டர்கள் அரசியல் பிரமுகர்களுக்கு சாதகமாக செயல்பட்டு அவர்களுக்கு தேவையான நபர்கள் உள்ள தெருக்களுக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது.

    எனவே செயற்கை குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் கண்டுபிடித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும் என்று ஆதங்கமாக கூறினர்.

    இது தொடர்பாக கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, பாளை பகுதியில் மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதாக தகவல் கிடைத்ததால் அங்கு சிறப்பு குழு மூலமாக அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் சுமார் 59 சட்ட விரோத மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இது போன்ற செயற்கை குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக முழுமையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கம்ப்யூட்டர் மூலம் தண்ணீர் சப்ளை மேற்கொள்ள திட்டம் செயல்படுத்த உள்ளோம். முழுமையாக கம்ப்யூட்டர் மயமாக்கல் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வார்டுக்கும் எத்தனை மணிக்கு தண்ணீர் திறந்து விடப்படும், எத்தனை மணிக்கு தண்ணீர் நிறுத்தப்படும், எவ்வளவு தண்ணீர் ஒரு வார்டுக்கு தேவை என்று அனைத்து விபரங்களும் கம்யூட்டரில் ஏற்றப்பட்டு அதன் மூலம் எவ்வித தட்டுப்பாடும் இன்றி குடிநீர் சப்ளை செய்ய ஒரு திட்டத்தை பரிசீலனை செய்து வருகிறோம்.

    இது தவிர பாளை மண்டலம் விரிவாக்கப் பகுதிகளில் மாற்று ஏற்பாடாக முறப்பநாட்டில் இருந்து வரும் குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் சப்ளை செய்வதற்கு ஒரு திட்டம் பரிசீலனையில் உள்ளது.

    விரைவில் அந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் விரிவாக்கப் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறைக்கப்படும். வால்வு ஆபரேட்டர்கள் குறித்து தொடர்ந்து புகார் வந்ததால் முருகேசன், மந்திரம் என்ற 2 பேரை வேறு இடத்துக்கு மாற்றம் செய்துள்ளோம். தொடர்ந்து வேறு எந்த பகுதியிலும் இது போல் புகார்கள் வந்தால் அங்கும் வால்வு ஆபரேட்டர்கள் மாற்றம் செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×