search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பஸ் மறியல்
    X

    கூடலூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பஸ் மறியல்

    கூடலூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கூடலூர் 2-ம் நிலை நகராட்சியாக உள்ளது. இங்கு 21 வார்டுகள் உள்ளன. நகராட்சியின் அனைத்து பகுதியிலும் சேரும் குப்பைகள் பெத்துக்குளம் குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டன. இதனால் அப்பகுதி மலைபோல் குவிந்து காணப்பட்டது. அடிக்கடி அங்கு தீ வைக்கப்படுவதால் புகை மூட்டம் ஏற்பட்டு சுற்றுச் சூழல் மாசுபட்டது.

    எனவே 8 மற்றும் 10 வது வார்டு பொதுமக்கள் குப்பைக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கம்பம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கம்பம் நகராட்சி குப்பைக்கிடங்கில் தற்காலிகமாக கொட்டப்பட்டு வந்தது.

    2 மாதத்துக்குள் மாற்று இடம் தேர்வு செய்யப்படும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால் 2 மாத கால அவகாசம் முடிந்து விட்டதால் கம்பம் குப்பைக்கிடங்கில் கடந்த 10 நாட்களாக குப்பை கொட்ட முடியவில்லை. இதனால் நகர் முழுவதும் குப்பைகள் அல்லாமல் தேங்கி கிடந்தன.

    நகராட்சியின் இந்த மெத்தனப் போக்கை கண்டித்து கூடலூர் - குமுளி சாலையில் இன்று பொதுமக்கள் பஸ் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மற்றும் கூடலூர் வடக்கு, தெற்கு போலீசார் சமரசம் செய்தும் கேட்கவில்லை.

    1 மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இன்று மாலைக்குள் அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

    Next Story
    ×