search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government employees"

    • சுதந்திர தின உரையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
    • கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு.

    அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படை உயர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    தமிழக முதலமைச்சர் 75-வது சுதந்திர தின உரையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பின்படி தலைமைச் செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணைகள் விரைவில் தனித்தனியே வெளியிடப்படும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோப்புகள் பராமரிப்பில் எளிய நடைமுறை ஆகியன இதன் நோக்கங்கள்.
    • வருவாய் துறை மற்றும் கனிம வளத்துறைக்கு பயிற்சி நடைபெற்றது.

    திருப்பூர்:

    தமிழக அரசு துறைகளில் மின் ஆளுமை செயல்பாடு மூலம் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அலுவலகப் பணிகளில் காகிதப் பயன்பாடு குறைத்தல், நேர விரயம் தவிர்த்தல், அவசர மற்றும் முக்கிய தகவல்கள் உடனுக்குடன் பரிமாறுதல், கோப்புகள் பராமரிப்பில் எளிய நடைமுறை ஆகியன இதன் நோக்கங்கள்.

    இதற்கான பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்டத்தில் உரிய துறை ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது.அவ்வகையில் அரசு துறைகளில் வருவாய் துறை, கனிம வள துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் பேரூராட்சிகள் துறை ஊழியர்களுக்கு இதற்கான பயிற்சி முதல் கட்டமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில் வருவாய் துறை மற்றும் கனிம வளத்துறைக்கு பயிற்சி நடைபெற்றது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மற்றும்9 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இ - ஆபீஸ் நடைமுறை குறித்த பயிற்சி, மாநகராட்சி வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் நடந்தது.இ-சிஸ்டம்ஸ் அலுவலர்கள் முத்துக்குமார், சம்பத்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். அடுத்த கட்டமாக ஊரக வளர்ச்சி மற்றும் பேரூராட்சி துறை ஊழியர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் கமிஷன் 2 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் சாந்தகுமார், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் 6 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அரசின் மீது அதிருப்தியில் உள்ளதால், ஆளும் கட்சிக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என்பதற்காக 1¼ லட்சம் ஊழியர்கள் தபால் மூலம் ஓட்டுபோடுவதற்கான படிவங்கள் வழங்கப்படவில்லை. எனவே, விடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் மூலம் ஓட்டுபோட அனுமதிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் கமிஷன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “தேர்தல் பணியில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 3 அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். அவர்கள் அனைவருக்கும் படிவம் வழங்கப்பட்டன. இதில் 4 லட்சத்து 10 ஆயிரம் பேர் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பித்தனர். 3 லட்சத்து 97 ஆயிரத்து 391 பேரின் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 12 ஆயிரத்து 915 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன” என்று கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து நீதிபதிகள், “அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் கமிஷன் 2 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவிட்டனர். 
    பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #PollachiAbuseCase
    தேனி:

    பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    தேனி - அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் முகமது அலி ஜின்னா தலைமையில் நிர்வாகிகள் ஞான திருப்பதி, அன்பழகன், உடையாளி, பாலமுருகன், கிருஷ்ணசாமி உள்பட அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் அனுமதி இல்லாமல் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வி.ஏ.ஓ. குமரேசன் தேனி போலீசில் புகார் அளித்தார். அதன்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #PollachiAbuseCase
    அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசு ஊழியர்களுக்கு ஜெயில் தண்டனை வழங்கப்படும் என புதுவை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் 10-03-2019 அன்று இந்திய லோக்சபா தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது.

    இந்த அறிவிப்பு வெளி வந்த தினத்திலிருந்து தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    தேர்தல் நெறிமுறைகளை செவ்வனே செயல்படுத்தவும், எதிர்வரும் தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்திட அனைத்து முயற்சிகளும் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த தேர்தலின் போது மாநில மத்திய அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் ஆதரவாக தேர்தல் வேலைகளில் ஈடுபடுவதாக பல புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளது.

    எனவே அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றும் பொழுது நடுநிலையோடு செயல்பட வேண்டும். தேர்தல் நடக்கும் காலத்தில் ஊழியர்கள் நடுநிலையோடு செயல்படுவது மக்களுக்கு தெரிய வேண்டும். அவ்வாறு தெரிந்தால் தான் தேர்தல் நியாயமான, சுதந்திரமான ஒரு நல்ல சூழலில் நடக்கிறது என்று பொதுமக்களுக்கு உணரப்படும்.

    எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது வேட்பாளருக்கும் ஆதரவாக அரசு ஊழியர்கள் செயல்படக்கூடாது. மீறுவோர் மீது மத்திய அரசு பணிநடத்தை விதிகள் 1961-ல் உள்ள விதிகள் கீழ் மற்றும் அனைத்திந்திய பணியில் இருப்போருக்கான விதிகளின் கீழும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊழியர்கள், வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதையும் மற்றும் ஓட்டு பதிவின் போது தங்கள் செல்வாக்கை பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுபவர்கள் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தான் தண்டிக்கப்படுவார்கள்.

    இந்த சட்டத்தில் உள்ள பிரிவு 234-ன் கீழ் அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலக கடமைகளை மீறி செயல்படக்கூடாது.

    அவ்வாறு மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள். தேர்தலின் போது தேர்தல் முகவர்களாக, வாக்குச்சாவடி முகவர்களாக மற்றும் எண்ணுகை முகவர்களாக செயல்பட தடை செய்யப்பட்டுள்ளது.

    அரசு ஊழியர்கள் மேற்கூறிய நடத்தை விதிகளை கடைபிடிக்க வேண்டும். மீறுவோர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கைக்கு எடுத்து தண்டிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #tamilnews

    ஓய்வூதிய திட்டத்துக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த பங்களிப்பு தொகை அவரவரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என தம்பிதுரை கூறியுள்ளார். #Thambidurai #ADMK
    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 95 சதவீதம் அளவுக்கு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டனர். உயர்நீதிமன்றம் வேலை நிறுத்தம் தீர்வாகாது என்று தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசும் தனது நிதி நிலை குறித்து தெளிவாக மக்களிடம் எடுத்து கூறியுள்ளது. எதுவாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால் மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். மேலும் தேர்தலும் வர உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

    ஓய்வூதிய திட்டத்துக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த பங்களிப்பு தொகை குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது. பிடித்தம் செய்த தொகை அவரவரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



    முன்னதாக கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கம்பநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் தேவை இல்லாதது. உயர்நீதிமன்ற வழிகாட்டலை மதித்து பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என நம்புகிறோம். கோரிக்கைகளை முன்வைக்கட்டும், போராடட்டும். ஆனால் வேலை நிறுத்தம் தேவையில்லை. மாணவர்களின் படிப்பு பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான் அரசு தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளது.

    தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தேவைப்பட்டால் கூட்டணி குறித்து முடிவெடுக்கவே அ.தி.மு.க. சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சி அ.தி.மு.க. என எந்த இடத்திலும் அவர்களும் சொல்லவில்லை. அ.தி.மு.க.வும் கூறியதில்லை. நட்பின் அடிப்படையில் பல கோரிக்கைகளை பா.ஜ.க. அரசிடம் முன் வைத்தோம்.

    குறிப்பாக ஜி.எஸ்.டி. நிலுவை தொகையான ரூ.5 ஆயிரம் கோடியை கேட்டோம். தரவில்லை. கஜா புயலுக்கு ரூ.15 ஆயிரம் கோடி கேட்டோம். அதுவும் வந்தபாடில்லை. தமிழகத்துக்கு நன்மை செய்யும் கட்சியுடன் கூட்டணி என முதல்வர் கூறியுள்ளார். பா.ஜ.க. ஏதாவது நல்லது செய்துள்ளதா?. இதுவரை செய்யவில்லை.

    ரூ. 8 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளவர்களை வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.8லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு மத்திய அரசு வரி விலக்கு அளிக்குமா?. பா.ஜ.க. தமிழகத்தில் கட்சியை வளர்க்க திட்டம் கொண்டு வந்தால் மட்டும் போதாது. தமிழகத்தில் திராவிடர்களின் கலாச்சாரத்தை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்காகத்தான் ஆசிரியர்கள். ஆசிரியர்களுக்காகவே மாணவர்கள் என்று வந்து விட்டால் கல்வி சீரழிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #ADMK
    புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 2 ஆயிரத்து 566 பேரை போலீசார் கைது செய்தனர். #JactoGeo
    புதுக்கோட்டை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டம் தொடங்கியது.

    இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் ரெங்கசாமி, செல்லத்துரை, தாமரைச்செல்வன் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 14 ஆசிரியர்கள் உள்பட 15 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட 7 ஆயிரத்து 30 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தொடர்ந்து உடனடியாக ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்து உள்ளது.

    இந்நிலையில் நேற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொது அலுவலக வளாகத்தில் நேற்று காலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் பொதுமக்கள் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 2 ஆயிரத்து 566 பேரை கைது செய்தனர். இதில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மணிகண்டன், செல்வராஜ், கண்ணன், குமரேசன், தியாகராஜன், சக்திவேல் உள்பட 87 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக புதுக்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்து உள்ளனர். இவர்களை நள்ளிரவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    வேலை நிறுத்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், இந்துசமய அறநிலையத்துறை அலுவலகங்கள் உள்பட பல அரசுத்துறை அலுவலகங்கள் பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல பல பள்ளிகள் ஆசிரியர்கள் பணிக்கு வராததால், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து விட்டு, மீண்டும் வீட்டிற்கு சென்றனர்.  #JactoGeo
    திருவாரூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 600 பெண்கள் உள்பட 1,000 பேரை போலீசார் கைது செய்தனர். #Jactogeo
    திருவாரூர்:

    பழைய ஓயவூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

    21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கடந்த 22-ந் தேதி தொடங்கினர்.

    திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 5-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. இதை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர்் சங்கத்தின் மாவட்ட தலைவர் பைரவநாதன், அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் செல்வமணி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் முருகேசன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் முத்துவேல், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் சண்முகவடிவேல், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 600 பெண்கள் உள்பட 1,000 பேரை கைது செய்தனர். #Jactogeo
    கோர்ட் உத்தரவால் திருச்சியில் அதிக அளவில் இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர். #Jactogeo
    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் நேற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தை தூண்டியதாக 48 ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

    நேற்று திருச்சி உறையூர் மாநகராட்சி பள்ளி உள்பட சில பள்ளிகள் ஆசிரியர்கள் வராததால் பூட்டப்பட்டிருந்தது. சில பள்ளிகளில் வந்திருந்த ஒரு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு திண்ணைகளில் பாடம் எடுத்தனர். இன்று 8-வது நாளாக திருச்சி மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் காலை 10 மணிக்கு போராட்டம் நடத்துவதற்காக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் திரண்டிருந்தனர்.

    இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு வராவிட்டால் அந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியிடம் காலியாக அறிவிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்ததால் நேற்றைய கூட்டத்தை விட இன்று போராட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

    திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுவரை போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர் இன்று காலை பணிக்கு திரும்பியிருந்தனர்.

    ஆசிரியர்கள் வராத பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் இன்று முதல் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்காக திருச்சி மாவட்டத்தில் 3 ஆயிரம் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். #Jactogeo
    கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் போராட்டத்தில் ஈடுப்பட்டு கைதான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 150 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். #Jactogeo
    திருப்பூர்:

    9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.

    கோவையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களை கைது செய்து பல்வேறு மண்டபங்களில் போலீசார் தங்க வைத்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் 1626 பெண் ஊழியர்கள் உள்பட 1941 பேரை இரவில் விடுவித்தனர். ஆனால் முக்கிய நிர்வாகிகளான சம்பத்குமார், சாமி குணம், சிவம், வெள்ளிங்கிரி உள்பட 42 பேரை விடுவிக்கவில்லை.

    இவர்கள் 42 பேரும் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் ஆவார்கள். இவர்கள் மீது சட்டவிரோதமாக கூடியது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், வழிமறித்து தடுத்து இடையூறு ஏற்படுத்துதல், அரசுக்கு எதிராக கலகம் செய்தல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    பின்னர் 42 பேரையும் இன்று அதிகாலை கோவை ஜே.எம்.3 மாஜிஸ்திரேட்டு வேலுசாமி முன்பு ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, பந்தலூர் உள்ளிட்ட இடங்களில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டனர். ஊட்டி சேரிங் கிராஸ் பகுதியில் மறியல் செய்த ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு கலெக்டர் பங்களா அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    நீலகிரி மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 566 அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர்.

    கூடலூர், பந்தலூர் பகுதியில் கைது செய்யப்பட்ட 63 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மதியம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள 6 மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இரவு 10 மணிக்கு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அம்சராஜ், நிர்வாகிகள் கனகராஜ் உள்பட 45 பேரை போலீசார் விடுவிக்கவில்லை. அவர்களை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 45 பேரையும் தனியாக திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இன்று காலை அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்த 2 போலீஸ் வாகனங்களில் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். #Jactogeo
    சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 100 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #Jactogeo
    சேலம்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையொட்டி சேலத்திலும் கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலத்தில் கடந்த 25-ந் தேதி மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அதில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 45 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜே.எம்.1 கோர்ட் மாஜிஸ்திரேட் செந்தில்குமார் முன்பு 45 பேரையும் ஆஜர்படுத்தினர்.

    அவர்களை வருகிற 11-ந் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நாமக்கல்லில் பூங்கா சாலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கைது செய்யப்பட்ட 55 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர்.

    அவர் வருகிற 4-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே கடந்த 25-ந் தேதி நாமக்கல்லில் மறியலில் ஈடுபட்ட 72 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Jactogeo
    திண்டுக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். #Jactogeo
    திண்டுக்கல்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சாலை மறியலில் ஈடுபட்டு வரும் அவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்து வருகின்றனர். திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட 3,200 ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு 8 இடங்களில் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டனர்.

    கைதானவர்கள் வழக்கமாக மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள். ஆனால் நேற்று முக்கிய நிர்வாகிகள் சிலரது பெயர்களை குறித்து வைத்துக் கொண்டு அவர்களை விடுவிக்கவில்லை. இதனால் நிர்வாகிகள் இடையே கைது செய்யப்படலாம் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டது.

    திண்டுக்கல் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக்அலி உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இரவு 9 மணிக்கு பிறகும் பெண் ஊழியர்கள் விடுவிக்கப்படாததால் மண்டபங்களில் தங்கி இருந்த அரசு ஊழியர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    மண்டபங்களில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி இல்லை என குற்றம்சாட்டி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மண்டபங்களில் அடைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த ஊழியர்களில் பலர் சர்க்கரை நோயாளிகள் என்பதால் அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு கிடைக்காமல் அவதி அடைந்தனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 9 ஆசிரியர்கள், 6 அரசு ஊழியர்கள் என 15 பேர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சிறையில் அடைக்கப்பட்ட 9 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து மற்ற பள்ளிகளில் உபரியாக இருந்த ஆசிரியர்கள் அந்த 9 பணியிடங்களிலும் நியமிக்கப்பட்டனர். #Jactogeo
    ×