என் மலர்
நீங்கள் தேடியது "Imprisoned"
- ராமநாதபுரம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வாலிபர் மற்றும் பாஸ்போர்ட் ஏஜெண்ட் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- தலை மறைவான ஜகாங்கீரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கை கொழும்பு மரதானா பகுதியை சேர்ந்த துவான் சபைதீன் (வயது 45) என்பவரை ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய சோதனையில் வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, ஆதார்கார்டு ஆகியவை இருந்ததை கண்டு அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரின் பாஸ்போர்ட்டை சோதனையிட்டபோது அவர் சட்டவிரோதமாக உரிய காலத்திற்கு பிறகு தங்கியிருப்பதுடன் மேற்கண்ட ஆவணங்களை பெற்றுள்ளதும் தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீ சார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாமனாரின் முகவரியை பயன்படுத்தி பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார். இந்த நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதால் பழைய பாஸ்போர்ட்டை பயன் படுத்த முடியாததால் புதிய பாஸ்போர்ட் பெற எண்ணி உள்ளார்.
இதற்காக பெரிய பட்டி னத்தை சேர்ந்த ஜகாங்கீர் என்பவரை அணுகினார். அவர் ஆவணங்களை பெற்றுக்கொண்டு ராமநாதபுரம் அருகே பனைக் குளம் மேற்குத்தெருவை சேர்ந்த டிராவல் ஏஜென்சி நடத்தும் அன்வர்ராஜா(45) என்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்து தூத்துக்குடி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற்று கொடுத்துள்ளார். இதனை வைத்து அவர் குடும்பத்துடன் துபாய் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கியூ பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பு ல்லாணி போலீசார் வழக்கு பதிவு செய்து துவான் சபைதீனை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு போலீசார் பனைக்குளத்தில் டிராவல் ஏஜென்சி நடத்தும் பனைக்குளத்தை சேர்ந்த அன்வர் ராஜாவை பிடித்து வந்து விசாரித்தனர்.
இதையடுத்து துவான் சபைதீன் (வயது 45), பனைக்குளம் அன்வர் ராஜா(45) ஆகியோரை போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர். தலை மறைவான ஜகாங்கீரை போலீசார் தேடி வருகின்றனர்.
- மதுரை மாவட்டம் ஆணையூர் பகுதியை சேர்ந்த பூதப்பாண்டி என்பவரது மகன் இளங்கோவன்
- பணத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்
பல்லடம் :
மதுரை மாவட்டம் ஆணையூர் பகுதியை சேர்ந்த பூதப்பாண்டி என்பவரது மகன் இளங்கோவன் (வயது 44). இவர் கடந்த செப்.18-ந்தேதி பல்லடம், மாணிக்கபுரம் சாலை பாரதிபுரத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் சென்னையை சேர்ந்த பல் மருத்துவர் பிரபாகரன் என்பவரது வீட்டில் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த ரூ. 95 ஆயிரம் பணத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் மீது மதுரை, அவிநாசி, சேலம், திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 37-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. இதையடுத்து பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்மொழிவின் பேரில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் பரிந்துரையின் பேரில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் குற்றவாளி இளங்கோவனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள அவரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு அளிக்கப்பட்டது. மேற்கண்ட தகவலை பல்லடம் ேபாலீசார் தெரிவித்துள்ளனர்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.
கோவையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களை கைது செய்து பல்வேறு மண்டபங்களில் போலீசார் தங்க வைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 1626 பெண் ஊழியர்கள் உள்பட 1941 பேரை இரவில் விடுவித்தனர். ஆனால் முக்கிய நிர்வாகிகளான சம்பத்குமார், சாமி குணம், சிவம், வெள்ளிங்கிரி உள்பட 42 பேரை விடுவிக்கவில்லை.
இவர்கள் 42 பேரும் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் ஆவார்கள். இவர்கள் மீது சட்டவிரோதமாக கூடியது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், வழிமறித்து தடுத்து இடையூறு ஏற்படுத்துதல், அரசுக்கு எதிராக கலகம் செய்தல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் 42 பேரையும் இன்று அதிகாலை கோவை ஜே.எம்.3 மாஜிஸ்திரேட்டு வேலுசாமி முன்பு ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, பந்தலூர் உள்ளிட்ட இடங்களில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டனர். ஊட்டி சேரிங் கிராஸ் பகுதியில் மறியல் செய்த ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு கலெக்டர் பங்களா அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 566 அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர்.
கூடலூர், பந்தலூர் பகுதியில் கைது செய்யப்பட்ட 63 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மதியம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள 6 மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இரவு 10 மணிக்கு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அம்சராஜ், நிர்வாகிகள் கனகராஜ் உள்பட 45 பேரை போலீசார் விடுவிக்கவில்லை. அவர்களை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 45 பேரையும் தனியாக திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இன்று காலை அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்த 2 போலீஸ் வாகனங்களில் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். #Jactogeo
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையொட்டி சேலத்திலும் கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலத்தில் கடந்த 25-ந் தேதி மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அதில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 45 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜே.எம்.1 கோர்ட் மாஜிஸ்திரேட் செந்தில்குமார் முன்பு 45 பேரையும் ஆஜர்படுத்தினர்.
அவர்களை வருகிற 11-ந் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாமக்கல்லில் பூங்கா சாலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கைது செய்யப்பட்ட 55 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர்.
அவர் வருகிற 4-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே கடந்த 25-ந் தேதி நாமக்கல்லில் மறியலில் ஈடுபட்ட 72 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Jactogeo
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலை மறியலில் ஈடுபட்டு வரும் அவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்து வருகின்றனர். திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட 3,200 ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு 8 இடங்களில் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டனர்.
கைதானவர்கள் வழக்கமாக மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள். ஆனால் நேற்று முக்கிய நிர்வாகிகள் சிலரது பெயர்களை குறித்து வைத்துக் கொண்டு அவர்களை விடுவிக்கவில்லை. இதனால் நிர்வாகிகள் இடையே கைது செய்யப்படலாம் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டது.
திண்டுக்கல் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக்அலி உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இரவு 9 மணிக்கு பிறகும் பெண் ஊழியர்கள் விடுவிக்கப்படாததால் மண்டபங்களில் தங்கி இருந்த அரசு ஊழியர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
மண்டபங்களில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி இல்லை என குற்றம்சாட்டி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மண்டபங்களில் அடைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த ஊழியர்களில் பலர் சர்க்கரை நோயாளிகள் என்பதால் அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு கிடைக்காமல் அவதி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 9 ஆசிரியர்கள், 6 அரசு ஊழியர்கள் என 15 பேர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட 9 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து மற்ற பள்ளிகளில் உபரியாக இருந்த ஆசிரியர்கள் அந்த 9 பணியிடங்களிலும் நியமிக்கப்பட்டனர். #Jactogeo







