search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 40 பேர் சிறையில் அடைப்பு
    X

    சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 40 பேர் சிறையில் அடைப்பு

    திண்டுக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். #Jactogeo
    திண்டுக்கல்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சாலை மறியலில் ஈடுபட்டு வரும் அவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்து வருகின்றனர். திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட 3,200 ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு 8 இடங்களில் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டனர்.

    கைதானவர்கள் வழக்கமாக மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள். ஆனால் நேற்று முக்கிய நிர்வாகிகள் சிலரது பெயர்களை குறித்து வைத்துக் கொண்டு அவர்களை விடுவிக்கவில்லை. இதனால் நிர்வாகிகள் இடையே கைது செய்யப்படலாம் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டது.

    திண்டுக்கல் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக்அலி உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இரவு 9 மணிக்கு பிறகும் பெண் ஊழியர்கள் விடுவிக்கப்படாததால் மண்டபங்களில் தங்கி இருந்த அரசு ஊழியர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    மண்டபங்களில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி இல்லை என குற்றம்சாட்டி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மண்டபங்களில் அடைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த ஊழியர்களில் பலர் சர்க்கரை நோயாளிகள் என்பதால் அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு கிடைக்காமல் அவதி அடைந்தனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 9 ஆசிரியர்கள், 6 அரசு ஊழியர்கள் என 15 பேர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சிறையில் அடைக்கப்பட்ட 9 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து மற்ற பள்ளிகளில் உபரியாக இருந்த ஆசிரியர்கள் அந்த 9 பணியிடங்களிலும் நியமிக்கப்பட்டனர். #Jactogeo
    Next Story
    ×