search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட 2 ஆயிரத்து 566 பேர் கைது
    X

    சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட 2 ஆயிரத்து 566 பேர் கைது

    புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 2 ஆயிரத்து 566 பேரை போலீசார் கைது செய்தனர். #JactoGeo
    புதுக்கோட்டை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டம் தொடங்கியது.

    இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் ரெங்கசாமி, செல்லத்துரை, தாமரைச்செல்வன் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 14 ஆசிரியர்கள் உள்பட 15 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட 7 ஆயிரத்து 30 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தொடர்ந்து உடனடியாக ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்து உள்ளது.

    இந்நிலையில் நேற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொது அலுவலக வளாகத்தில் நேற்று காலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் பொதுமக்கள் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 2 ஆயிரத்து 566 பேரை கைது செய்தனர். இதில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மணிகண்டன், செல்வராஜ், கண்ணன், குமரேசன், தியாகராஜன், சக்திவேல் உள்பட 87 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக புதுக்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்து உள்ளனர். இவர்களை நள்ளிரவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    வேலை நிறுத்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், இந்துசமய அறநிலையத்துறை அலுவலகங்கள் உள்பட பல அரசுத்துறை அலுவலகங்கள் பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல பல பள்ளிகள் ஆசிரியர்கள் பணிக்கு வராததால், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து விட்டு, மீண்டும் வீட்டிற்கு சென்றனர்.  #JactoGeo
    Next Story
    ×