search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farooq Abdullah"

    • 2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
    • காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துமாறு தேசிய மாநாடு கட்சி பிச்சை கேட்காது.

    ஜம்மு :

    அடுத்த ஆண்டு (2024) பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு வருகின்றன.

    இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தொடங்கி உள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார்.

    இந்த நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது நிதிஷ் குமாரின் இந்த கூட்டணி முயற்சி வெற்றி பெறுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சி ஒற்றுமை உருவாகுமா? என்பதை கணிக்க என்னிடம் மந்திர விளக்கு எதுவும் இல்லை. அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. அவர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள், நல்ல உணர்வு மேலோங்கும் என்று நம்புகிறோம்.

    காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் கூட பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ள எதிர்க்கட்சி ஒற்றுமை ஏற்பட வேண்டும் என கூறியுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சிகள் உணர்வார்கள் என நம்புகிறேன். ஜனநாயகத்தை பாதுகாக்க அவர்கள் இணைந்து பாடுபடுவார்கள்.

    காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துமாறு தேசிய மாநாடு கட்சி பிச்சை கேட்காது. ஏனெனில் அவர்கள் (பா.ஜனதா) ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டார்கள்.

    இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் நீங்கள் மக்களின் உரிமையை மறுக்கிறீர்கள்.

    ஆனால் உள்ளாட்சி தேர்தல் மற்றும் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலோ அல்லது சட்டசபை தேர்தலோ, இவை எப்போது நடந்தாலும் அதில் போட்டியிட தேசிய மாநாடு கட்சி தயாராக உள்ளது.

    எனினும் இங்கு ஏதோ நடக்கிறது, அதற்காக கடவுளுக்கு நன்றி. குறைந்தபட்சம் பஞ்சாயத்து தேர்தலாவது நடக்கும் என நினைக்கிறேன். அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் எந்த தேர்தலையும் விடமாட்டோம்.

    சட்டசபை தேர்தல் எப்போது நடைபெறும் என்று கவலை இல்லை. அதை எப்போது நடத்துவது? என அவர்கள் முடிவு செய்யட்டும். நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம்.

    இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.

    • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போதைய பா.ஜ.க. அரசு சிறப்பு சட்டத்தை நீக்கிய பின்னரும் தீவிரவாதம் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.
    • தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், சாலைவசதி உள்ளிட்ட அனைத்து துறைகளும் சிறப்பாக உள்ளன. ஸ்டாலின் சிறந்த முதல்வராக செயல்படுகின்றார்.

    கொடைக்கானல்:

    ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் தலைவருமான பரூக் அப்துல்லா கொடைக்கானல் வந்தார். கொடைக்கானலில் இவரது தந்தை ஷேக் அப்துல்லா வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்ட அரசு விருந்தினர் மாளிகையில் உணவருந்தி சிறிது நேரம் ஓய்வெடுத்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

    பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    43 ஆண்டுகளுக்குப் பிறகு நான் கொடைக்கானலுக்கு வந்தது மகிழ்ச்சியை தருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் அன்னை தெரசா ஆகியோர் கொடைக்கானலுக்கு வந்தது பசுமை நிறைந்த நினைவுகளாக உள்ளது. இதனை நினைவில் அசைபோடவே நான் இங்கு வந்தேன்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போதைய பா.ஜ.க. அரசு சிறப்பு சட்டத்தை நீக்கிய பின்னரும் தீவிரவாதம் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ராஜூரி மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. இன்னமும் தீவிரவாதம் அங்கு முடிவுக்கு வரவில்லை. இந்தியாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    ராகுல் காந்தியின் யாத்திரை சிறப்பாக உள்ளது. இது இளைஞர்களை எழுச்சியூட்டும் வகையில் வெகுவாக கவர்ந்துள்ளது. ராகுல் காந்தி சிறப்பாக அரசியல் நகர்வுகளை செய்து வருகிறார்.

    இந்தியா என்பது பன்முகம், பல மொழி, பல்வேறு மதங்களைக் கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு இந்தியா. இங்கு ஒரே நாடு ஒரே மொழி என்பது சாத்தியமில்லை. ஜி 20 மாநாடு தற்போது உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவை சீர்படுத்த உதவுவதாக இருக்கும்.

    மோடியும், பாஜகவும் சிறப்பாக செயல்படுவதாக கூறுகின்றனர். ஆனால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு, விவாதம் செய்வதற்கு கூட அவர்கள் அனுமதிப்பதில்லை. ஒன்றுபட்ட இந்தியாவை நாங்கள் விரும்புகின்றோம். பிளவுபட்ட இந்தியா எங்களுக்கு தேவை இல்லை. தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது.

    தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், சாலைவசதி உள்ளிட்ட அனைத்து துறைகளும் சிறப்பாக உள்ளன. ஸ்டாலின் சிறந்த முதல்வராக செயல்படுகின்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.
    • இனி தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என பரூக் அப்துல்லா தகவல்

    ஸ்ரீநகர்:

    நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா (வயது 85), தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'இனி தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டேன். தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. புதிய தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்கும் நேரம் இது. கட்சியின் உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம். இது ஒரு ஜனநாயக நடைமுறை' என்றார்.

    தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் பரூக் அப்துல்லா, கட்சியின் புரவலராகப் பொறுப்பேற்பார் என்றும், தற்போது கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் அவரது மகன் உமர் அப்துல்லா, புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • காஷ்மீரில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
    • காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்ப கிடைக்கும்வரை தேர்தல்களில் போட்டி இல்லை என்று உமர் அப்துல்லா அறிவிப்பு.

    ஸ்ரீநகர் :

    காஷ்மீரில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதை முன்னிட்டு சட்டசபை தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை தேசிய மாநாட்டுக்கட்சி நியமித்து வருகிறது.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கட்சித்தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லா, பொறுப்பாளர் நியமனம் குறித்து அவர்களிடம் விளக்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், 'காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்ப கிடைக்கும்வரை தேர்தல்களில் போட்டியிடமாட்டேன் என உமர் அப்துல்லா ஏற்கனவே கூறிவிட்டார்' என்று தெரிவித்தார்.

    முன்னாள் முதல்-மந்திரியும், கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா இந்த முடிவை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதை அவரது தந்தையும், கட்சித்தலைவருமான பரூக் அப்துல்லாவும் உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    சட்டசபை தேர்தலுக்காக தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம், தேர்தலில் வேறு கட்சிகளுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லையா? என செய்தியாளர்கள் கேட்டனர்.

    அதற்கு, 'தேர்தலுக்கு இன்னும் போதுமான நேரம் இருப்பதால், அதுகுறித்து பின்னர் முடிவு செய்யப்படும்' என்று பதிலளித்தார்.

    • ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
    • இதில் பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தியது.

    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா. இவர் 2001 முதல் 2011 வரை ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தார். அப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.112 கோடி அளவிற்கு மோசடி செய்ததாக பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, இந்த வழக்கில் பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே கையகப்படுத்தியது.

    இந்நிலையில், ஸ்ரீநகர் கோர்ட்டில் பரூக் அப்துல்லாவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அமலாக்க இயக்குனரகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

    இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பணமோசடி வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 27-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    பரூக் அப்துல்லா ஏற்கனவே கடந்த மே மாதம் 31-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திருட்டு இயந்திரங்கள் என குறிப்பிட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அவற்றை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தினார். #MamataBanerjee #KolkattaRally #FarooqAbdullah #EVM
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் இன்று மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நாடு முழுவதிலும் இருந்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர்.

    இந்த கூட்டத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசியதாவது:

    'உண்மையை சொல்லப் போனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எல்லாமே திருட்டு இயந்திரங்கள். உலகில் தற்போது எந்த நாட்டு தேர்தல்களிலும் புழக்கத்தில் இல்லாத இந்த திருட்டு இயந்திரங்களை நமது நாட்டில் இருந்தும் ஒழிக்க வேண்டும்.



    இதுதொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதி மற்றும் தலைமை தேர்தல் ஆணையாளரை அணுக வேண்டும், மின்னணு இயந்திர வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வெளிப்படைத்தன்மை கொண்ட வாக்குச்சீட்டு முறையில் இனி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்த வேண்டும்’ என குறிப்பிட்டார்.

    'எந்த தனிமனிதரையும் (மோடி) ஒழிப்பது நமது எண்ணமல்ல. நமது நாட்டை காப்பாற்றுவதும் நமது நாட்டின் விடுதலைக்காக பலர் புரிந்த தியாகங்களை கவுரவிப்பதும்தான் நமது நோக்கமாகும்.

    காஷ்மீரில் தற்போது உருவாகியுள்ள சூழ்நிலைக்கு, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தான் காரணம். மதத்தின் அடிப்படையில் மக்கள் பிளவுப்படுத்தப்படுகிறார்கள். பாகிஸ்தானியர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.

    ஆனால், அதற்கு நேர்மாறாக அங்குள்ள மக்கள் அனைவரும் இந்தியர்களாக வாழ்வதற்குதான் ஆசைப்படுகிறார்கள். நான் ஒரு முஸ்லிம், ஆனால் எனது தாய்நாடான இந்தியாவை நான் நேசிக்கிறேன்.

    முத்தலாக் தடுப்பு சட்ட மசோதாவுக்காக பாராளுமன்றத்தில் வரிந்துக்கட்டிக் கொண்டு குரல் கொடுத்த பா.ஜ.கவினர் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாமல் இருந்து விட்டனர்.

    பா.ஜ.க. அரசை வெளியேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இதற்காக நாம் ஓரணியில் திரண்டு, ஒருமித்த குரலில் போராடுவோம். பிரதமர் யார்? என்பதை தேர்தல் முடிவுக்கு பிறகு தீர்மானித்து கொள்ளலாம். இனி அமையும் புதிய அரசு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்’

    இவ்வாறு அவர் பேசினார். #MamataBanerjee #KolkattaRally #FarooqAbdullah #EVM 
    ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி, உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை புறக்கணிக்க போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. #FarooqAbdullah #NC
    ஸ்ரீநகர்:

    இந்திய ஜனாதிபதியின் உத்தரவின்  பேரில் கடந்த 1954-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு  சட்ட சாசனத்தில் 35-ஏ என்னும் சட்டப்பிரிவுஇணைக்கப்பட்டது. 

    இந்தப் பிரிவின் மூலம் ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாதென்று விதியுள்ளது. அதேபோல, அம்மாநில பெண்கள் வெளி மாநில ஆண்களை திருமணம் முடித்தால், அங்கு சொத்துரிமை கோர முடியாது என்றும் விதி வகுக்கப்பட்டுள்ளது. 

    இந்த 35-ஏ பிரிவை நீக்குவது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததில் இருந்தே அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ளதால் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என அம்மாநில அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை சுப்ரீம் கோர்ட் ஏற்று விசாரணையை ஒத்திவைத்துள்ளது.



    ஜம்மு காஷ்மீரில் முக்கிய எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் தேசிய மாநாட்டு கட்சி உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முன்னர் அறிவித்திருந்தது. 

    இந்நிலையில்,  தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் ஷேக் மொகமது அபதுல்லாவின் 36வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பரூக் அப்துல்லா இன்று கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசு ஒருபுறம் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது. மறுபுறம் சட்டப்பிரிவு 35 ஏ-ஐ நீக்கவும் முடிவெடுத்துள்ளது. அதுபோல், 370 சட்டப்பிரிவை நீர்த்துப் போக செய்வதன் மூலம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கிறது. 

    எனவே,  மத்திய அரசை கண்டிக்கும் வகையில் சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை புறக்கணிக்கப் போகிறோம் என தெரிவித்துள்ளார். #FarooqAbdullah #NC
    ஆர்ட்டிகிள் 35 ஏ சட்ட பிரிவை பாதுகாக்க வில்லை என்றால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என தேசிய மாநாடு கட்சித்தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். #Article35A #FarooqAbdullah
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. 

    இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற பின்னர் ஏற்பட்ட கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது, அங்கு பதற்றம் தணிந்து, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் வரும் அக்டோபர் முதல் தேதி முதல் 5-ம் தேதி வரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் 8-ம் தேதியில் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் பிரிவு 35 ஏ குறித்தான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டால் சட்டம் - ஒழுங்கி பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என மாநில கவர்னர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதால், வழக்கு விசாரணை அடுத்தாண்டு ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

    இந்நிலையில், அம்மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாடு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா இன்று செய்தியாளர்களை சந்திக்கும் போது, “ஆர்டிக்கிள் 35 ஏ சட்ட பிரிவை நீதிமன்றத்தில் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்” என குறிப்பிட்டார்.

    ஏற்கனவே, காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத இயக்கங்கள் உள்ளாட்சி தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
    ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #FarooqAbdullah #IntruderShotDead
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவின் வீடு ஜம்முவின் பதிண்டி பகுதியில் உள்ளது. இவரது வீட்டை நோக்கி இன்று மர்ம நபர் ஒருவர் காரில் வந்துள்ளார். வந்த வேகத்தில் வீட்டின் முன்பக்க கேட் மீது காரை மோதிய அந்த நபர், வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார். பாதுகாப்பு  அதிகாரிகள் தடுத்தும் அவர் நிற்காமல் உள்ளே சென்றுள்ளார்.  எனவே, பாதுகாப்பு படையினர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



    சுட்டுக் கொல்லப்பட்ட நபர் யார்? எதற்காக பரூக் அப்துல்லா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து ஜம்மு சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு கூறுகையில், “பரூக் அப்துல்லா வீட்டிற்குள் நுழைய முயன்ற நபர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுடனும் கைகலப்பில் ஈடுபட்டார். இதில் ஒரு அதிகாரிக்கு காயம் ஏற்படடது. அதன்பின்னர், வீட்டிற்குள் நுழைந்து சில பொருட்களை அடித்து நொறுக்கினார். இதனால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்” என்றார். #FarooqAbdullah  #IntruderShotDead

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த இதுவே சரியான தருணம் என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். #FarooqAbdullah #MehboobaMufti
    ஸ்ரீநகர் :

    தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

    காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த இதுவே சரியான தருணம், சட்டசபையை கலைத்துவிட்டு மக்கள் ஜனநாயகத்தின் பலனை அனுபவிக்க வேண்டும். கவர்னர் ஆட்சியை எப்போதும் எங்கள் கட்சி ஆதரித்தது இல்லை ஆனாலும் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சியினால் குழப்பத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் காஷ்மீர் மாநிலத்தை அமைதியை நோக்கி திருப்ப கவர்னர் ஆட்சி ஒன்றே வழி.

    முன்னாள் துணை முதல்வர் நிர்மல் சிங், ராணுவ வெடிமருந்து சேமிப்பு கிடங்கு அருகே 12 ஏக்கர் பரப்பளவில் வீடு கட்ட கட்டுமான பணியை மேற்கொண்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராணுவம் காஷ்மீர் மாநில உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    சட்ட விரோதமாக நிலம் வாங்கி சர்ச்சையை ஏற்படுத்தியது மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள பாஜகவை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் நிர்மல் சிங் மற்றும் முன்னாள் சட்டசபை சபாநாயகர் குப்தா ஆகியோர் மீது இதுவரை ஏன் முதல்வர் மெகபூபா முப்தி நடவடிக்கை எடுக்கவில்லை ? எதற்காக அவர் மவுனம் காக்கிறார் ? மாநிலத்தில் அரசு திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாத நிலையில் அரசாங்கம் என்ற ஒன்று உள்ளதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

    முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத் மறைவினால் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட காலகட்டமான 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மட்டுமே மாநிலம் சரியான திசையை நோக்கி பயணித்தது. எனவே, இப்போதும் காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளர். #FarooqAbdullah #MehboobaMufti
    ×