search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cybercrime"

    • சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    • துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி வழிகாட்டுதல் படி , இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார் மேற்பார்வையில் ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ராஜாகுமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.

    இதில் நிதி நிறுவன மோசடி,போலி சமூக ஊடக கணக்குகள் மோசடி,போலி கடன் செயலி ஆகியவை குறித்தும் ,சைபர் கிரைம் உதவி எண் 1930 பயன்படுத்துவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) ருத்ரகோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    • மேலும் 61 கடன் செயலிகள் சட்டவிரோதமாக இயங்கி வருவதை ‘சைபர் கிரைம்' போலீசார் கண்டறிந்து உள்ளனர்.
    • தற்போது ‘ஸ்மார்ட்' செல்போன்களில் கடன் செயலிகள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

    சென்னை :

    சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகளில் அவதூறு தகவல்கள், சட்டவிரோத கருத்துகள், பதிவுகளை 'சைபர் கிரைம்' போலீசார் கண்காணித்து அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் கடந்த 3-ந் தேதி வரையில் 'பேஸ்புக்', 'இன்ஸ்ட்ராகிராம்', 'டுவிட்டர்', 'யூடியூப்' போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து 40 சட்டவிரோத பதிவு கள், கருத்துகள் 'சைபர் கிரைம்' போலீசார் நடவடிக்கை மூலம் நீக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் முக்கிய பிரமுகர்கள் பற்றி 386 அவதூறு 'வீடியோ' பதிவுகள் இருப்பதை 'சைபர் கிரைம்' போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த 'வீடியோ' பதிவுகளை முடக்க வேண்டும் என்று 'யூடியூப்' நிறுவனத்துக்கு 'சைபர் கிரைம்' போலீசார் கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பி உள்ளனர்.

    தற்போது 'ஸ்மார்ட்' செல்போன்களில் கடன் செயலிகள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த செயலி மூலம் கடன் வாங்கி கூடுதல் வட்டியை கட்ட முடியாமல் பலர் பரிதவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே 'சைபர் கிரைம்' போலீசார் நடவடிக்கையால் 221 சட்டவிரோத கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.

    ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் மேலும் 61 கடன் செயலிகள் சட்டவிரோதமாக இயங்கி வருவதை 'சைபர் கிரைம்' போலீசார் கண்டறிந்து உள்ளனர். அந்த செயலிகளையும் முடக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய்குமார், போலீஸ் சூப்பிரண்டுகள் தேவரானி, ஸ்டாலின், அசோக்குமார் ஆகிய அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சைபர் குற்றங்கள் சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சைபர் குற்றங்கள் சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன
    • இக்கூட்டம் புதுவை சாலையில் உள்ள பிரபல வணிக வளாகம் மகாலட்சுமி பிளாசாவில் அமைந்துள்ள கலர்ஸ் ஜவுளி நிறுவனத்தில் நடைபெறுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சைபர் குற்றங்கள் சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சைபர் குற்றங்கள் சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக விழுப்புரம்-புதுவை சாலையில் உள்ள பிரபல வணிக வளாகம் மகாலட்சுமி பிளாசாவில் அமைந்துள்ள கலர்ஸ் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சைபர் குற்றங்கள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மகாலட்சுமி குரூப்ஸ் இயக்குனர்கள் வெங்கடேஷ், பிரகாஷ் ஆகியோர்முன்னிலை வகித்தனர். விழுப்புரம் சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் கலந்து கொண்டு நடைபெற்றது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்களது கிரெட் கார்டு டெபிட் கார்டு, ஒடீபி, சிவிவி எண்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்பு என வரும் போலி லிங்க் விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். பரிசு விழுந்துள்ளதாக வரும் தகவல்களை பார்த்து ஏமாறாதீர்கள் என்பன போன்று பல்வேறு விழிப்புணர்வுகள் குறித்து விளக்கப்பட்டது.

    குற்றங்கள் ஏதேனும் நடந்திருந்தால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும் ஊழியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து துண்டு பிரசு ரங்கள் வழங்கப்பட்டது. முடிவில் கலர்ஸ் ஜவுளி மேனேஜர் ரவி நன்றி கூறினார்.

    • கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
    • சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அச்சுதன், ஏட்டு காளிதாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்தர உறுதிப்பிரிவின் சார்பில், 'சைபர் கிரைம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி உள்தர உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

    தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அச்சுதன், ஏட்டு காளிதாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். மின்னணு தகவல் தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சைபர் குற்றங்கள், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வது குறித்து விளக்கி கூறினர்.

    பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். பேராசிரியர்கள் ரமேஷ், கணேசன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் சிவ இளங்கோ நன்றி கூறினார்.

    • தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
    • இந்த மோசடிக்கு மூலதனமே செல்போன் எண்கள் தான்.

    சென்னை :

    தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பழைய மோசடி செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குள் புதிய மோசடிகள் முளைத்து விடுகின்றன. இந்த மோசடிக்கு மூலதனமே செல்போன் எண்கள் தான். சைபர் மோசடி கும்பல் பல்வேறு செல்போன் எண்கள் மூலம் ஆசைவார்த்தைகளை அள்ளி விடுவது, லிங்குடன் கூடிய குறுந்தகவல் அனுப்புவது என்று அப்பாவி மக்களை மோசடி வலையில் சிக்க வைக்கின்றன.

    எனவே இதுபோன்ற 'சைபர் கிரைம்' மோசடி வழக்குகளில் சிக்கும் செல்போன் எண்களை முடக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய இணையதளம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் சைபர் கிரைம் குற்றவாளிகளின் செல்போன் எண்களை இந்த இணையதளத்தில் 'சைபர் கிரைம்' போலீசார் பதிவேற்றம் செய்யலாம்.

    இந்த செல்போன் எண்கள் ஆய்வுக்கு பின்னர் முடக்கப்பட்டு வருகின்றன.

    இந்த இணையதளத்தில் தமிழ்நாடு 'சைபர் கிரைம்' போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய்குமார், போலீஸ் சூப்பிரண்டுகள் தேவராணி, அசோக்குமார், ஸ்டாலின் ஆகியோரின் முயற்சியால் தமிழ்நாட்டில் நடைபெற்ற சைபர் கிரைம் குற்றங்களில் தொடர்புடைய 20 ஆயிரத்து 197 செல்போன் எண்களை முடக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதில் 19 ஆயிரத்து 654 செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவிலேயே தமிழக 'சைபர் கிரைம்' போலீசார் அதிகமான செல்போன் எண்களை இந்த இணையதளத்தில் முடக்குவதற்கு பதிவேற்றம் செய்துள்ளனர்.

    • போலீசார் விசாரணை நடத்தி கூடலூரை சேர்ந்த நசீமா மற்றும் அவரது நண்பர் முகமது அமீன் ஆகியோரை கைது செய்தனர்.
    • போனில் உள்ள வீடியோ மற்றும் போட்டோக்கள் சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆய்வு செய்யப்படும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த டாக்டரின் மருத்துவமனைக்கு சம்பவத்தன்று ஒரு பெண் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவர் டாக்டரிடம் மருந்து-மாத்திரைகள் வாங்கி விட்டு சென்றுவிட்டார்.

    அதன்பிறகு சில நாட்கள் கழித்து அந்தப் பெண், டாக்டருக்கு போன் செய்து தனது உடல் நலம் மோசமாக உள்ளதாகவும், வீட்டிற்கு வந்து பார்க்குமாறும் கூறி உள்ளார். இதனை நம்பிய டாக்டர், அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றார்.

    அவர் சிகிச்சை அளித்து விட்டு திரும்பிவிட்டார். இந்நிலையில் அந்தப் பெண், மீண்டும் டாக்டரை வரவழைத்துள்ளார். அப்போது தன்னுடன் டாக்டர் இருப்பது போன்ற படங்களை காட்டி மிரட்டி உள்ளார்.

    இதனை பார்த்து டாக்டர் அதிர்ச்சி அடைந்தார். அந்த பெண் படங்களை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என்று கூறி உள்ளார். அப்போது அங்கு பெண்ணுக்கு ஆதரவாக ஒருவர் வந்துள்ளார். அவரும் டாக்டரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஜி.பே. மூலம் டாக்டரிடம் இருந்து ரூ.45 ஆயிரத்தை பறித்துள்ளனர். மேலும் அவரது கார் சாவியையும் பறித்து வைத்துக்கொண்டனர்.

    இந்நிலையில் சில நாட்களுக்கு பிறகு அந்த 2 பேரும், டாக்டருக்கு போன் செய்து மேலும் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான டாக்டர், இது பற்றி போலீசில் புகார் செய்தார். அதில், தன்னை சிகிச்சைக்காக வீட்டுக்கு வரவழைத்த பெண், தான் சிகிச்சை அளித்த போது, அதனை ஆட்டோ டிரைவர் முகமது அமீன் என்பவர் மூலம் படம் பிடித்து பின்னர் பணம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி கூடலூரை சேர்ந்த நசீமா மற்றும் அவரது நண்பர் முகமது அமீன் ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், பணம் பறித்தவர்கள் போனில் உள்ள வீடியோ மற்றும் போட்டோக்கள் சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆய்வு செய்யப்படும் என்றனர்.

    • சமூக வலைதளங்களில் பல்வேறு தவறான தகவல்களை பரப்பி வருவதாக காவல்துறை கவனத்திற்கு வந்துள்ளது.
    • வழக்கு தொடர்பாக ஆவணங்கள் ஆதாரங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் 84389 81930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் குடயால் விளை பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29).

    இளம்பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் சாட்டிங் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பெனடிக்ட் ஆன்றோ நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    பாதிரியார் தெரிவித்த வாக்குமூலம் மற்றும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்-டாப் செல்போனில் உள்ள தகவல்களை வைத்து இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2 வார காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில் பாதிரியாரின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து பாதிரியாரின் ஆபாச படங்கள் மற்றும் ஆபாச சாட்டிங் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே பாதிரியாரின் செல்போனை எடுத்து சென்றதாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவரை கைது செய்தால்தான் பாதிரியாரின் மேலும் ஒரு செல்போன் மீட்கப்படும். அந்த செல்போனில் ஏதாவது வழக்கு தொடர்பான ஆதாரங்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள னர்.

    இந்நிலையில் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தவறான தகவல்களை பரப்பி வருவதாக காவல்துறை கவனத்திற்கு வந்துள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்கள் ஆதாரங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் 84389 81930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். வழக்கை திசை திருப்பும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • யூடியூப் லிங்கை கிளிக் செய்ய வைத்து ஒரு கும்பல் புதுவித ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை பறித்து வருகிறது.
    • ஆன்லைன் மோசடியில் பொது மக்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

    சென்னை:

    ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடம் ஆன்லைன் மூலம் மோசடி செய்து பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது.

    இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் பகுதி நேர வேலை தருவதாக கூறி யூடியூப் லிங்கை கிளிக் செய்ய வைத்து ஒரு கும்பல் புதுவித ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை பறித்து வருகிறது.

    இதுதொடர்பாக சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீசார் கூறியதாவது:

    தற்போது ஆன்லைன் மூலம் புதிய வகை மோசடி நடந்து வருகிறது. பகுதி நேர வேலை தருவதாக வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்புவார்கள். என்ன வேலை என்று ரிப்ளை செய்தால் 'யூடியூப் வீடியோவை லைக் செய்வது' என்று பதில் அளிப்பார்கள்.

    அதன்படி அவர்களின் யூடியூப் வீடியோவை லைக் செய்தால் ரூ.50 முதல் ரூ.500 வரை உடனடியாக பணம் வரும். பின்னர் அவர்கள் நம்மை டெலிகிராம் குரூப்பில் இணைத்து விடுவார்கள். அதில் பகுதி நேர வேலை, முதலீடு என்று 2 வாய்ப்பு தருவார்கள். பகுதி நேர வேலையை தேர்வு செய்தால் ஒரு வேலையை கொடுப்பார்கள். அதற்கு மிக குறைந்த அளவு பணம் கட்ட வேண்டும். அதில் பல படிநிலைகள் இருக்கும்.

    முதல் 2 படிநிலைகள் எளிதாக இருக்கும். அதை செய்து முடித்தவுடன் முதலீடு செய்த பணம் போக 30 முதல் 60 சதவீதம் பணம் நமக்கு கமிஷனாக கிடைக்கும்.

    இப்படி ரூ.13 ஆயிரம் வரை பணத்தை திரும்ப நமக்கு தருவார்கள். அதற்கு அடுத்த படிநிலையில் முதலீடு செய்யும் தொகை ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என படிப்படியாக ரூ.5 லட்சம் வரை உயர்ந்து கொண்டே செல்லும்.

    நாம் அவர்கள் கொடுக்கும் பணியை முடித்துவிட்டால் நமக்கு கமிஷன் தொகை கிடைக்கும் என்று நினைத்திருப்போம். அதாவது நாம் ரூ.10 லட்சம் கட்டி இருந்தால் கமிஷன் தொகை 50 சதவீதத்தையும் சேர்த்து ரூ.15 லட்சம் நமக்கு கிடைக்க இருப்பதாக டிஸ்பிளேயில் காட்டும்.

    அதனால் ஆர்வத்துடன் ரூ.10 லட்சத்தை செலுத்தினால் அதன்பிறகு பணத்தை எடுக்க முடியாது. உங்கள் கணக்கு முடங்கிவிட்டது. பணத்தை எடுக்க வேண்டும் என்றால் உங்களுக்கு வர வேண்டிய ரூ.15 லட்சத்துக்கு 20 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். அதை செலுத்தினால் முழு பணமும் கிடைத்துவிடும் என்பார்கள்.

    இல்லாவிட்டால் நீங்கள் செய்த பணி தவறாகிவிட்டது. எனவே நீங்கள் இருக்கும் குழுவில் உள்ளவர்களுக்கு உங்கள் பணம் பகிர்ந்து அளிக்கப்பட்டுவிட்டது என்று கூறுவார்கள். இப்படி ஒவ்வொரு காரணமாக கூறி உங்களிடம் வெவ்வேறு வழிகளில் பணத்தை பறித்துக் கொண்டே இருப்பார்கள். அதன்பிறகு எந்த பணமும் நமக்கு வராது.

    நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் பகுதி நேர வேலை என்பதற்கு பதிலாக முதலீடு என்று தேர்வு செய்தால் நமது சேமிப்பு பணம் முழுவதையும் முதலீடு செய்ய வைத்து அதிக வட்டி தருவதாக கூறி நமது பணத்தை மோசடி செய்து விடுவார்கள்.

    எனவே, இதுபோன்ற ஆன்லைன் மோசடியில் பொது மக்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அதையும் மீறி நீங்கள் ஏமாற்றப்பட்டால் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இணையவழிக் குற்றங்கள் சர்வசாதாரணமாக அதிகரித்து வருகிறது.
    • கல்லூரிகளில் ‘சைபர் கிளப்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கோவை,

    நவீன உலகில் சைபர் கிரைம் எனப்படும் இணையவழிக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வங்கியிலிருந்து பேசு வதாகக்கூறி ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பாதுகாப்பு குறியீட்டு எண்ணை பெற்று வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து பணத்தை திருடுவது, உடனடிக் கடன் வழங்கும் செயலிகள் மூலமாக ஏமாற்றுவது, பரிசுத் தொகை விழுந்துள்ளதாகக் கூறி லிங்கை அனுப்பி மோசடி செய்வது, முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என லிங்க்கை அனுப்பி மோசடி செய்வது என பல வழிகளில் இணைய வழிக் குற்றங்கள் அரங்கேறுகின்றன.

    இணையவழி குற்றங்களைத் தடுக்கும் வகையில் கோவை மாநகரில் உள்ள கல்லூரிகளில் 'சைபர் கிளப்' அமைக்கும் பணிகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இணையவழிக் குற்றங்கள் சர்வசாதாரணமாக அதிகரித்து வருகிறது. இணையவழிக் குற்றங்களால் பாதிக்கப்பட்டு, பணத்தை இழந்தவர்கள் உடனடியாக 1930 என்ற எண்ணில் புகார் அளித்தால் திருடுபோன பணத்தை திரும்பப்பெற வாய்ப்புள்ளது. இதில் தொடர்புடையவர்களை பிடிப்பது கடினம். அதேசமயம் நாம் எச்சரிக்கையாக இருந்தால் இணையவழிக் குற்றங்களில் சிக்காமல் இருக்கலாம்.இணையவழிக் குற்றங்கள், இணையதளங்களை பாது காப்பாக பயன்படுத்துவது குறித்து மாணவ, மாணவிகள், இளைஞர்கள், இளம் பெண்கள், பொதுமக்கள் அறிந்திருப்பது அவசியம், என்றனர்.

    கோவை மாநகர காவல் தலைமையிட துணை போலீஸ் கமிஷனர் சுகாஷினி கூறியதாவது:-

    போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், கல்லூரிகளில் 'சைபர் கிளப்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் உள்ள ஐ.டி பிரிவை தலைமையாகக் கொண்டு இந்த கிளப் தொடங்கப்படுகிறது. இக்கு ழுவில் பேராசிரியர்கள், மாணவர்கள் என 30 பேர் உறுப்பினர்களாக இருப்பர்.

    இணையவழிக் குற்றங்கள் என்றால் என்ன?, அதில் பாதிக்கப் படாமல் இருப்பது எப்படி? என போலீசாரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இக்குழு வினர், மற்றவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்துவர். மாநகரில் தற்போது வரை 15 கல்லூரிகளில் சைபர் கிளப் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற கல்லூரிகளுக்கும் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  

    • ஓ.டி.பி. எண்ணை சொன்ன அடுத்த நொடியே வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போயுள்ளது.
    • தேவையில்லாமல் வரும் அழைப்புகளை உதாசீனப்படுத்தி விடுவதுதான் நல்லது என்றும் சைபர்கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.

    சென்னை:

    செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டுப் பெற்று பணத்தை பறிக்கும் வட மாநிலத்தவர்கள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் பிரபலமான உணவு டெலிவரி நிறுவனங்களின் பெயரைச் சொல்லி பொதுமக்களின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசும் வடமாநில வாலிபர்கள் உங்கள் செல்போன் எண்ணில் இருந்து உணவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்று கூறி வலை விரிக்கிறார்கள்.

    எதிர்முனையில் பேசும் பொதுமக்கள், நாங்கள் உணவு ஆர்டர் செய்யவில்லையே என்று கூறியதும்... என்ன சார் இப்படி சொல்றீங்க... உங்கள் செல்போனில் இருந்துதானே ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இப்படி சொன்னால் எப்படி? என்று எதிர்கேள்வி கேட்கும் வடமாநில வாலிபர் சரி... உணவை நான் கேன்சல் செய்து கொள்கிறேன். உங்கள் நம்பருக்கு ஓ.டி.பி. வரும் அதை சொல்லுங்கள் என்பார்.

    அதேபோன்று சம்பந்தப்பட்ட நபரின் சொல்போனுக்கு ஓ.டி.பி. எண் வந்ததும் எதிர்முனையில் பேசிக் கொண்டு இருக்கும் வட மாநில வாலிபர் அதனை கூறுமாறு சொல்வார்.

    ஓ.டி.பி. எண்ணை சொன்ன அடுத்த நொடியே வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போயுள்ளது.

    இப்படி ரூ.20 ஆயிரம் ரூபாயை ஒருவர் பறி கொடுத்துவிட்டு போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் பொது மக்களை உஷார்படுத்தி உள்ளனர். உங்கள் செல்போனுக்கு இதுபோன்று யாராவது தொடர்பு கொண்டு பேசினால் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்பை துண்டித்து விடுங்கள்.

    அதுதான் நல்லது. இல்லையென்றால் நீங்கள் பணத்தை இழப்பது உறுதி என்று போலீசார் தெரிவித்தனர். எப்போதுமே தேவையில்லாமல் வரும் அழைப்புகளை உதாசீனப்படுத்தி விடுவதுதான் நல்லது என்றும் சைபர்கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.

    • மும்பையில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை புதுப்பிக்க முயன்ற முதியவர் சைபர் மோசடியில் சிக்கி இருக்கிறார்.
    • இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் இந்தியா முழுக்க சைபர் குற்றங்கள் 15.3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் ஒடிடி தளங்களில் ஒன்றாக நெட்ஃப்ளிக்ஸ் இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் பயனர் ஒருவர் சந்தாவை புதுப்பிக்க முயன்று சைபர் மோசடியில் சிக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த மோசடியில் மும்பையை சேர்ந்த முதியவர் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்தை இழந்துள்ளார். இந்த சம்பவம் பற்றிய புகார் மும்பையை அடுத்த ஜூஹூ காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    காவல் நிலைய தகவல்களின் படி, முதியவருக்கு நெட்ஃப்ளிக்ஸ் ஆட்டோ-ஜெனரேட் செய்த மின்னஞ்சல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை புதுப்பிப்பதற்கான நினைவூட்டல் தொடர்பான தகவல் இடம்பெற்று இருந்தது. அதில் அவர் மாதாந்திர கட்டணமான ரூ. 499 செலுத்தி ஸ்டிரீமிங் சந்தாவை புதுப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக மின்னஞ்சலுடன் வந்த இணைய முகவரியை 73 வயதான நபர் க்ளிக் செய்துள்ளார்.

    இவர் க்ளிக் செய்ததும் திறந்த மற்றொரு வலைப்பக்கத்தில் இவரின் கிரெடிட் கார்டு விவரங்களை பதிவிட கேட்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு செய்து நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்ட்-ஐ புதுப்பிக்கலாம் என்றும் அந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. பின் இவரது மொபைல் எண்ணிற்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஒடிபி) அனுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கான குறுந்தகவலில் தொகையை சரியாக பார்க்காமல், முதியவர் ஒடிபி-யை வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு செய்ததும், அவரின் கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் உடனடியாக காணாமல் போய்விட்டது.

    சைபர் செக்யுரிட்டி வல்லுனர்கள், சட்ட நிறுவனங்கள் பொது மக்களிடம் ஒடிபி-யை யாரிடமும் பகிர வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனினும், இது போன்ற சைபர் குற்றங்களுக்கு மக்கள் தொடர்ந்து பலியாவது வாடிக்கையாகவே உள்ளது. இந்த சம்பவத்தில் வங்கி சார்பில் இவ்வளவு பெரிய தொகைக்கான பரிவர்த்தனையை உண்மையில் நீங்கள் செய்தீர்களா? என்ற கேள்வியுடன் அழைப்பு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த அழைப்பில் தான் முதியவர், ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்டார். இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் இந்தியா முழுக்க சைபர் குற்றங்களை பற்றிய தகவல் தெரிவிக்கும் முனையத்தில் புகார்களின் எண்ணிக்கை 15.3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இது பற்றிய தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.

    • திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூக பணித்துறை சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
    • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பண மோசடி, ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

    திருச்சி:

    திருச்சியை அடுத்த நவலூர் குட்டப்பட்டு பகுதியில், பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப் பணித்துறை மாணவர்களால் மக்கள் நலனுக்காக சமீப காலமாக அதிகரித்து வரும் 'சைபர் கிரைம்' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊர் பொதுமக்களிடையே நடத்தப்பட்டது.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பண மோசடி, ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவும், அது தொடர்பாக பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியை ஊர் தலைவர் எஸ்.ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் ஊர் துணை தலைவர் எஸ்.கலையரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து கவுன்சிலர், பட்டையார், மணியார், வார்டு உறுப்பினர்கள், சைபர் கிரைம் காவல் நிலையத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சங்கர் ஆகியோர் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.

    இதனைத் தொடர்ந்து பிஷப் கல்லூரி மாணவர்களான ஜாஸ்மின் சிந்தியா, ஜோஸ்வா சாமுவேல், ஜெயவர்ஷினி, சுதர்ஷனன் ஆகியோர் நிகழ்ச்சியினை நடத்தினர். நிகழ்ச்சியை சமூக பணித்துறை மாணவர் சுதர்ஷனன் தொகுத்து வழங்கினார்.

    முடிவில் ஜாஸ்மின் சிந்தியா நன்றி கூறினார். இணையதள குற்றங்கள் குறித்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஆசிரிய ஆலோசகரான சாம்சன் வாழ்த்துரை வழங்கினார்.

    மேலும், இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    ×