search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CM Edappadi palanisamy"

    இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னை:

    ராமசாமி படையாச்சியாரின் பிறந்த தினத்தை (செப்டம்பர் 16-ந் தேதி) ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வன்னியர் சத்திரியர்கள் கூட்டு இயக்க தலைவர் சி.ஆர்.ராஜன், முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ஆர்.ராமதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத், வன்னியர் குல சத்திரிய மகா சங்க மாநில தலைவர் வி.பலராமன், வன்னியர் வேலைவாய்ப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் டெல்டா நாராயணசாமி, செயலாளர் ராஜேந்திரன், அகில பாரத சத்திரிய மகாசபை தலைவர் ஜி.சந்தானம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    அதைத் தொடர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்ததற்காக மதுரையை சேர்ந்த டாக்டர்கள் எஸ்.ஏ.பாலமுருகன், பி.கணேஷ் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி கூறினர்.

    இதையடுத்து அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் சங்க தலைவர் என்.ஜெ.போஸ் மற்றும் நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-


    ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு செல்ல ஏதுவாக ராமேசுவரத்தை அடுத்த மூக்கையூரிலும், பாம்பன் குந்துகாலிலும் மீன்பிடி துறைமுகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து விரைவாக பணி தொடங்கியதற்கு நன்றி தெரிவித்தோம். டீசல் விலை உயர்வு மற்றும் இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் மீன்பிடி தொழில் அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இலங்கை அரசு 2014-ம் ஆண்டு முதல் சிறைபிடித்த 184 படகுகளை முறையாக பராமரிக்காததால் அவை முழுமையாக சேதமடைந்து விட்டன. எனவே சேதமடைந்த படகு உரிமையாளர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கடந்த வாரத்தில் 16 மீனவர்களையும், 3 படகுகளையும் இலங்கை அரசு சிறைபிடித்தது. இந்த மீனவர்களை மீட்பதுடன், படகுகள் சேதமடைவதற்கு முன்பாக அவற்றை மத்திய அரசு மூலம் உடனடியாக மீட்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதனிடையே அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகனை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர். 
    தமிழக காவல்துறையில் ஆர்டலி முறை ஒழிக்கப்பட்டுவிட்டதாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #OrderlySystem
    சென்னை:

    சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசும்போது கூறியதாவது:-

    உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கின்ற அரசு தான் நல் அரசு. அமைதியான ஆட்சியை வழங்கும் அரசுதான் நல்லரசு என்று திருவள்ளுவர் கூறி இருக்கிறார்.

    தற்போது தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “தமிழ்நாட்டில் பல்வேறு குற்றங்கள் அதிகரித்து விட்டதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது காவல் துறையினர் மிகவும் மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள்.

    ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக கூறப்பட்ட தமிழக போலீசார் இப்போது மன அழுத்தத்துடன் இருப்பதால்தான் குற்றங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 200 போலீசார் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    போலீசார் மன அழுத்தத்துடன் இருக்க முக்கிய காரணம் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்தது போல உயர் அதிகாரிகளிடம் பணிபுரியும் போலீசார் கொத்தடிமை போல நடத்தப்படுகிறார்கள்.

    பெரிய அதிகாரிகளிடம் போலீசார் வீட்டு வேலை செய்யும் ‘ஆர்டர்லி’ முறை இன்னும் தொடர்கிறது.

    இதுபோன்ற முறை இந்த ஆட்சியில் மட்டுமல்ல கடந்த தி.மு.க. ஆட்சியிலும் இருந்தது. இதை தவிர்க்க வேண்டும் என்று ஏற்கனவே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஆர்டர்லி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

    இதற்கு பதிலாக அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #OrderlySystem
    நிலவரித் திட்ட இயக்குனரகத்தில் பணியாற்றிய 9 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநரகம் 150 ஆண்டுகளை கடந்த தமிழ்நாடு அரசின் மிகவும் பழமையான துறைகளில் ஒன்றாகும். இத்துறையானது, நிலஅளவைப் பிரிவுகள், நிலஅளவை குறியீடு, நில ஆவணங்கள் பராமரித்தல், நிலஉரிமை மற்றும் பின்னர் அதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை உரிய பதிவேடுகளில் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரகத்தில் அமைச்சுப் பணியாளர்களாவும், நில அளவை சார்நிலைப் பணியாளர்களாகவும் பணிபுரிந்து, பணிக்காலத்தில் காலமான 9 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில், நில அளவர், இளநிலை உதவியாளர் மற்றும் வரைவாளர் பணியிடங்களுக்கான பணிநிய மனஆணைகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். #TNCM #EdappadiPalanisamy
    நொய்யல் ஆற்றை மேம்படுத்துதல் மற்றும் நதியினை தூர்வாரி சுத்தப்படுத்துதல் ஆகிய பணிகள் ரூ.150 கோடியில் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் சின்னாறு மற்றும் காஞ்சிமாநதி இணைந்து நொய்யல் ஆறாக உருப்பெற்று, மேற்கு கிழக்காக, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக சென்று, கரூர் மாவட்டத்தின் நொய்யல் என்ற கிராமத்தின் அருகில் காவிரியில் கலக்கின்றது.

    திருப்பூர் மாநகராட்சி மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளை நொய்யல் ஆறு கடக்கும் போது, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் மாசடைவதைத் தவிர்க்கும் பொருட்டு, ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்.

    இத்திட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச் சுவர் அமைத்து, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல தடுப்புச் சுவரின் வெளிப்புறத்தில் கழிவுநீர் வடிகால் அமைத்தல், தேவையான இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், நடை பாதை அமைத்தல், கரையோர பூங்கா மற்றும் அலங்கார விளக்குகள் அமைத்தல், அணைக்கட்டு பகுதியினை மேம்படுத்துதல் மற்றும் நதியினை தூர்வாரி சுத்தப்படுத்துதல் ஆகிய பணிகள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும்.

    இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, வரும் காலத்தில் நொய்யல் ஆறு மாசடையாமல் இருப்பதற்கான பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நெடுஞ்சாலைகளில் அதிகமாக சாலை விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அவ்விடங்களில் சோதனை அடிப்படையில், வாகனப் பதிவெண் பலகையினை படிக்கும் தானியங்கி புகைப்படக் கருவிகள் மற்றும் வாகன கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகள் 25 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNAssembly #TNCM #EdappadiPalanisamy
    தமிழகத்தில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகளுக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அகில இந்திய ஹஜ் அசோசியே‌ஷன் பாராட்டு தெரிவித்துள்ளது.
    சென்னை:

    அகில இந்திய ஹஜ் அசோசியே‌ஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    “தமிழகத்தில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகளுக்கு ரூ.6 கோடி மானியம் வழங்குவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தமிழகத்தில் யாரும் இதுவரை இந்த அளவு மானியம் வழங்கியதில்லை.

    எனவே ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்கள் சார்பில் அவருக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
    உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் டி.ஜி.பி. நியமனம் நடைபெறும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNAssembly #Edappadipalanisamy
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி. நியமனம் குறித்து ஒரு பிரச்சனையை கிளப்பினார். அப்போது அவர் பேசியதாவது:-

    உச்சநீதிமன்றத்தில் கடந்த 3-ந்தேதி வழங்கப்பட்ட பிரகாஷ்சிங் வழக்கு தீர்ப்பில் டி.ஜி.பி. நியமனத்துக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

    அதன்படி ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யை தொடர்ந்து 2 வருடங்கள் பணியாற்ற அனுமதிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக 2 வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்புக்கு எதிரானது. இது போன்ற நியமனங்களால் மூத்த அதிகாரிகள் பலர் டி.ஜி.பி. பதவியை பெற முடியாமலேயே ஓய்வு பெறும் நிலை உள்ளது.

    டி.ஜி.பி.யாகும் இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் கனவும் நிறைவேறாமல் போகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தற்போதைய டி.ஜி.பி. 2 வருடங்கள் பதவி வகிப்பது தவறு. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும். இனி இது போன்ற தவறுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதே கருத்தை வலியுறுத்தி சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமியும் பேசினார்.

    இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    காவல் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம், பிரகாஷ் சிங் மற்றும் பலர் தாக்கல் செய்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு 3.7.2018 அன்று தன்னுடைய இடைக்கால உத்தரவினை வழங்கியுள்ளது.

    உச்ச நீதிமன்றம், மேற்கண்ட இடைக்கால உத்தரவில், மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடும் போது 29 மாநிலங்களில், இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றும், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்கள் மட்டுமே காவல் துறை தலைமை இயக்குநர் நியமனத்திற்கு தேர்வுப் பட்டியலை தயாரிக்க மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு கருத்துருக்களை அனுப்பி வைத்துள்ளன எனவும் தெளிவாகக் குறிப்பிட்டார்.

    ஏற்கனவே நடைமுறையில் இருந்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றித் தான் தமிழ்நாட்டில் காவல்துறை தலைமை இயக்குநர் நியமனம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, அதோடு, 3.7.2018 அன்று மேற்படி வழக்கில், உச்சநீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் சில வழிமுறைகளை புதியதாக வழங்கியுள்ளது.

    தமிழ்நாடு அரசு வரும் காலங்களில், இந்த வழிமுறைகளை பின்பற்றும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் இரண்டு ஆண்டுக்கு மேல் காவல்துறை தலைமை இயக்குநர் பணியாற்றக் கூடாது என்ற ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றார். அது அவ்வாறு அல்ல. ஒரு காவல்துறை தலைமை இயக்குநர் நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து 2 ஆண்டு காலம் இருக்க வேண்டும் என்பது தான், என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, ஏற்கனவே, டிஜிபி நியமனத்தை பொறுத்தவரைக்கும், சட்டத்திட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #Edappadipalanisamy
    தமிழக சட்டசபைக்கு இன்று வந்த கருணாஸ் முதல்-அமைச்சர் இருக்கை அருகே சென்று அவரிடம் தனக்கு சட்டசபையில் பேச அனுமதி தாருங்கள் என்று கேட்டார்.
    சென்னை:

    அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. சமீப காலமாக அரசுக்கு எதிராக குற்றம் சாட்டி வந்தார். தி.மு.க. நடத்திய மாதிரி சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டு கூவத்தூர் பேரம் பற்றி எனக்கு தெரியும் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

    அவரது இந்த நிலையால் சட்டசபையில் பேச முன்பு போல் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதுபற்றி அவர் சபாநாயகரிடம் முறையிட்டபோது அரசு கொறடாவை சந்திக்குமாறு கூறினார்.

    என்றாலும் அவருக்கு சட்டசபையில் பேச அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று சட்டசபைக்கு வந்த கருணாஸ் முதல்- அமைச்சர் இருக்கை அருகே சென்று அவரிடம் தனக்கு சட்டசபையில் பேச அனுமதி தாருங்கள் என்று மெதுவாக கேட்டார். அதற்கு முதல்- அமைச்சர் பார்க்கலாம் என்று கூறிவிட்டார்.

    பின்னர் கருணாஸ் நிருபர்களிடம் கூறும்போது, வரலாற்று பாடப்புத்தகத்தில் பசும்பொன்தேவர் வரலாறு நீக்கம் பற்றி விளக்கம் கேட்டு சட்டசபையில் பேசவே அனுமதி கேட்டேன் என்றார். இந்த பிரச்சனைக்கு ஏற்கனவே அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளிக்கையில் மீண்டும் பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #TNAssembly #Karunas
    விபத்துக்களை குறைக்கவும், விலைமதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றுவதற்காகவே 8 வழிச்சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது என்று முதல்வர் பழனிசாமி பேட்டியில் தெரிவித்துள்ளார். #edappadipalanisamy #chennaisalem8wayroad

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி: சேலம்-சென்னை 8 வழிச்சாலை கமி‌ஷனுக்காக அமைக்கப்படுகிறதாக கூறப்படுகிறதே?

    8 வழி சாலை பசுமை திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். தேசிய அளவில் இது மிகப்பெரிய திட்டம். நிலம் கையப்படுத்துவது மட்டுமே தமிழக அரசின் செயல் ஆகும். நிலம் வழங்குபவர்களுக்கு அதிக இழப்பீடு வழங்கப்படும். கடந்த 2000 முதல் 2006-ம் ஆண்டு வரை உளுந்தூர் பேட்டை-சேலம், சேலம் -கிருஷ்ணகிரி சாலைகள் விரிவுப்படுத்த நிலம் கையப்படுத்தப்பட்டது.

    தமிழகத்தின் வாகனத்தின் எண்ணிக்கை இன்றைய தினம் 2 கோடியே 57 லட்சம் ஆகும். இந்த திட்டம் நிறைவேற்றுவதற்கு குறைந்த பட்சம் 4, 5 ஆண்டு காலம் ஆகும். 5 ஆண்டுகள் ஆகும்போது கிட்டத்தட்ட இன்னும் 70 லட்சம் வாகனங்கள் அதிகரிக்கும். அப்போது 70 லட்சம் வாகனங்கள் அதிகரிக்கும். எனவே தான் இந்த சாலை தேவையானது.

    கடந்த சில ஆண்டுகளாகவே குறுகிய சாலைகளால் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விபத்துக்களை குறைக்கவும், விலைமதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றுவதற்காகவே இந்த 8 வழிச்சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    40 ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடியில் எனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு மண் சாலை இருந்தது. தற்போது அந்த சாலை விரிவுப்படுத்தப்பட்டு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதைப்போல் சென்னை -திருவனந்தபுரம் சாலை, கோவை சாலை விரிவுபடுத்தப்பட்டு இருக்கின்றன.

    நமது பகுதி தொழில் வளர்ச்சி அடைந்த பகுதி. கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்லும். இதனால் சாலை விரிவாக்கம் அவசியமானது. குறிப்பாக ஒரு லாரி 1 லிட்டர் டீசலுக்கு 4 கிலோ மீட்டர் தூரம் தான் செல்லும்.

    15 லிட்டர் டீசலில் 60 கிலோ மீட்டர் தூரம் தான் செல்ல முடியும். டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போது 60 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கு 1300 ரூபாய் வரை செலவாகிறது. இன்னும் வரும் காலங்களில் டீசல் விலை மேலும் உயரும்.

    தொழில் வளர்ச்சி, கட்டமைப்பு வசதி அவசியமானது. அதற்கு 8 வழிச்சாலை தேவை. படித்து விட்டு ஏராளமானோர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. வேலை வாய்ப்பு பெருக்குவதற்கு உள்கட்டமைப்பு வசதி தேவை.

    நிலம் வழங்குபவர்களுக்கு மாற்று இடம், இழப்பீடு மற்றும் பசுமை வீடு வழங்கப்படும்.

    கேள்வி:சந்தை மதிப்பீடு படி இழப்பீடு வழங்கப்படுமா?

    நிலத்தின் வழிகாட்டி மதிப்பீடு படி இழப்பீடு வழங்கப்படும். வழிகாட்டி மதிப்பீட்டில் ஏற்கானவே இழப்பீடு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.4 கோடி முதல் 5 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும்.

    30 தென்னை மரத்திற்கு ரூ.12 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும். ஆனால் ஒரு தென்னை மரத்தின் மூலம் ரூ.900 தான் மாதத்திற்கு வருமானம் கிடைக்கும்.

    கேள்வி: கஞ்சமலையில் உள்ள இரும்பு தாதுக்களை வெட்டி எடுத்துச் செல்லவே இந்த சாலை அமைக்கப்படுகிறதாக கூறப்படுகிறதே?

    கற்பனையான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. விமர்ச்சிப்பதற்கு என்றே இந்த திட்டத்தை சிலர் எதிர்த்து வருகிறார்கள். எத்தனை சாதனைகள் செய்தாலும் அதை மறைக்கப்படுகின்றன.

    2 ஆண்டுகளுக்கு முன்பு 2 கைகளையும் இழந்தவருக்கு இறந்தவரின் கைகளை எடுத்து பொருத்தி மருத்துவ துறையில் சாதனை படைத்து இருக்கிறார்கள். இது இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் தமிழகம் தான் முதல் முதலாக இந்த சாதனையை பெற்றுள்ளது. இதற்கு யாரும் நன்றி தெரிவிக்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் இதற்கு காரணம். 8 வழிச்சாலையை எதிர்க்க பல்வேறு சதிகள் நடக்கிறது.

    கேள்வி: 8 வழிச்சாலைக்கு நில அளவீடு பணிகளில் போலீசாரால் விவசாயிகள் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறதே?

    அதிகாரிகள் நில அளவீடு பணியில் ஈடுபடும்போது அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை.

    அரசு அதிகாரிகளின் பாதுகாப்புக்காகவே போலீசார் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். தமிழகம் முழுவதும் ரூ.75 ஆயிரம் கோடிக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட முக்கிய சாலைகள் விரிவுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் புதிய தொழிற்சாலைகள் வர வாய்ப்பு உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 44.14 சதவீதம் பேர் உயர் கல்வி படிக்கிறார்கள்.

    30-6-1977-ல் எம்.ஜி.ஆர்.முதல்-அமைச்சராக பதிவி ஏற்றார். அன்று முதல் இன்று வரை பல்வேறு வளர்ச்சி பணிகளை அ.தி.மு.க. அரசு செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #edappadipalanisamy #chennaisalem8wayroad

    நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு நடிகர் பிரபு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு நடிகர் பிரபு பாராட்டு தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து நடிகர் பிரபு கூறியதாவது:-

    ‘சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்கள் குடும்பத்தின் கோரிக்கை என்பதைவிட, தமிழக மக்களின் நீண்டநாள் விருப்பமாக இருந்தது. ஒவ்வொரு தமிழர்களின் வீடுகளிலும் அவர்களுடைய குடும்பத்தில் ஒருவராக எங்கள் தந்தை வாழ்கிறார்.

    அரசியலுக்கு அப்பாற்பட்டவர். தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் மிக சிறப்பாக பிரதிபலித்தார். சமூக நற்பணிகளுக்காக நிறைய உதவிகள் செய்து இருக்கிறார்.

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் சட்டசபையில் சிவாஜி கணேசனை பாராட்டி பேசி உள்ளனர். அவர் மீது ரசிகர்கள் இன்றைக்கும் அன்பாக இருக்கிறார்கள். அவருக்கு சிறப்பு சேர்த்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு நன்றி.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி நிர்வாகிகள் ஆகியோர் வாழ்த்தினார்கள். அவர்களுக்கும் நன்றி’.

    இவ்வாறு பிரபு கூறினார்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    “தமிழ் சினிமாவின் அடையாளங்களில் முக்கியமானவர், தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர், கலைத்துறைக்கு பெருமை சேர்த்த கலைமாமணி நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

    காலத்தால் அவரது புகழ் மறைந்துவிடக்கூடாது என்பதற்காக அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முயற்சி எடுத்த முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், செய்தித்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.”

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் கே.ஆர்.விஜயா. சிவாஜிகணேசன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவது பற்றி கே.ஆர்.விஜயா கூறியதாவது:-


    ‘நடிகர் திலகம்’ ஒரு கலைக்கூடம். 4 வயதில் இருந்தே நாடகங்களில் நடித்து, அனுபவம் பெற்றவர். அவர் நடித்த ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைகள், வித்தியாசமான வேடங்கள். நடிப்பு பற்றி ஏதாவது சந்தேகம் வந்தால், அவர் நடித்த 10 படங்களை பார்த்தால் போதும். நூலகத்தில் விடை கிடைத்தது போல இருக்கும். அந்தளவுக்கு நடிப்புத்திறன் வேறு யாருக்கும் இருக்குமா? என்பது சந்தேகம். நடிப்புத்திறமை, அவருக்கு கடவுள் கொடுத்த வரம். அவருக்கு கிடைத்த மரியாதை கலைக்குடும்பத்துக்கு கிடைத்த மரியாதை.

    இவ்வாறு கே.ஆர்.விஜயா கூறினார்.

    நடிகை ராதிகா சரத்குமார் கூறியதாவது:-

    ‘நடிகர் திலகம்’ சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவது என்று எடுத்த முடிவு மகிழ்ச்சியாக இருக்கிறது. நடிப்புக்கு இலக்கணம் சிவாஜி தான். அவருடைய தமிழ் வசன உச்சரிப்பு வேறு எந்த நடிகருக்கும் வராது. அவருக்கு கிடைத்திருக்கும் மரியாதை நடிகர்களுக்கு பெருமையான விஷயம். நான் ஒரு ரசிகையாக மட்டுமல்ல, ஒரு மகளாகவும் பெருமைப்படுகிறேன். நடிகர்களுக்கு அவர் ஒரு புத்தகம் மாதிரி. வருங்கால தமிழ் சந்ததிகளுக்கு இது ஒரு உதாரணமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகர் ராஜேஷ் கூறியதாவது:-

    ‘நடிகர் திலகம்’ சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவது சந்தோஷம். அவருடைய சிலையை எடுத்ததால் வருத்தப்பட்ட எங்களை போன்ற நடிகர்களுக்கும், என்னை போன்ற ரசிகர்களுக்கும் இது ஒரு ஆறுதல். மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய அளவிலும், தமிழக அளவிலும் பல தியாகிகளின் வேடங்களில் நடித்து சாதனை புரிந்தவர் ‘நடிகர் திலகம்’.

    பல தெய்வங்களின் வேடங்களிலும் நடித்து புகழ்பெற்றார். சீனா, பாகிஸ்தான் போர்களின்போது நாட்டின் எல்லைக்கே சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி ராணுவ வீரர்களை சந்தோஷப்படுத்தி, நிதியும் திரட்டி கொடுத்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டி கொடுத்தார். அவருக்கு கொடுக்கப்பட்டு உள்ள மரியாதை பொருத்தமானது, மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் கூறியதாவது:-

    தமிழ் திரை உலகில் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தன் நடிப்பு திறமையால் மக்கள் இதயங்களை வென்றவர் நடிகர் சிவாஜி கணேசன்.

    அவருடைய பிறந்தநாளான அக்டோபர் 1-ந்தேதி தேதியை அரசு விழாவாக கொண்டாடுவது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை உலகெங்கும் வாழும் சிவாஜி கணேசனின் ரசிகர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் பாராட்டி வரவேற்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக காங்கிரஸ் கட்சி கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவாஜி கணேசனின் பிறந்தநாள் (அக்டோபர் 1-ந் தேதி) அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டசபையில் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்ததற்கு, தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பிலும், ரசிகர்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவது போன்று, சிவாஜி கணேசன் பிறந்தநாளை ‘கலை வளர்ச்சி நாள்’ என்று அறிவித்து கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்று பாசனத்துக்காக பாரூர் ஏரியில் இருந்து வருகிற 1-ந்தேதி முதல் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

    அதை ஏற்று போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் போக சாகுபடிக்கு பாரூர் பெரிய ஏரியிலிருந்து 1.7.2018 முதல் 12.11.2018 வரை 135 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

    இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2397.42 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
    பணியின்போது தவறு செய்ததாக தெரிந்தால் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #ADMK #EdappadiPalanisamy #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தமிழ்நாடு காவல் துறையில், 1-6-2018 அன்றைய நிலவரப்படி, அனைத்து பதவிகளிலும் அனுமதிக்கப்பட்ட இடங்கள் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 235 ஆகும். இதில் பணியில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 586 ஆகும். தற்போது காலியாக உள்ள பணியிடங்கள் 10,649 ஆகும்.

    காலியாக உள்ள காவலர் பணியிடங்களில் 5,538 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 28-12-2017 அன்று அறிவிக்கை வெளியிட்டு, அதற்கான தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

    மேலும், 1,480 சார்பு ஆய்வாளர்கள், தொழில்நுட்பம் மற்றும் விரல்ரேகை பிரிவு சார்பு ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியிட உள்ளது. இத்துடன், 34 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் பணியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை வெளியிட்டு, நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், 56 துணைக் காவல் கண்காணிப்பாளர்களை தேர்வுசெய்ய விரைவில் அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது. இவர்கள் அனைவரும் பயிற்சி முடித்து பணியில் சேரும்போது, தற்போதுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கணிசமாக குறையும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மக்கள் நலன் காக்கும் அரசில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரின் பணி என்பது ஒரு மகத்தான பணியாகும். இதில் அவர்கள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல் துறையினரின் சீரிய பணியை பாராட்டி, அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம், அவர்கள் மீது வசைபாடுவதையாவது நிறுத்தி, அவர்களை புண்படுத்தாமல், அவர்களது அன்றாட பணிகளை ஊக்கத்துடன் செய்ய நாம் துணை நிற்க வேண்டும்.

    அதே தருணத்தில், அவர்கள் தவறு செய்ததாக தெரிந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காது என்பதையும் இந்த நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, ஒவ்வொரு வருடமும், தடய அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் இரண்டு அறிவியல் அறிஞர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தடய அறிவியல் துறையில் சிறந்தோருக்கான விருது இந்தாண்டு முதல் வழங்கப்படும்.

    இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #ADMK #EdappadiPalanisamy #TNAssembly
    தமிழக ஆளுநரின் ஆய்வுப் பணிகள் விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மக்களை ஏமாற்றுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. #TNAssembly #CongressAttacksCM
    சென்னை:

    தமிழக ஆளுநரின் ஆய்வுப் பணிகள் குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் விளக்கம் அளிக்காததால் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். பின்னர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டசபையில் இன்று நேரமில்லா நேரத்தில் ஆளுநரின் சுற்றுப்பயணம் பற்றி முழு விவரத்தை முதலமைச்சர் வாயிலாக தெரிந்துகொள்ள நாங்கள் விரும்பினோம்.

    ஆளுநர் அலுவலக செய்தியின்படி, முதன்மைச் செயலாளரிடம் எல்லாதவிதமான தகவல்களையும் சொல்லிவிட்டுதான் ஆளுநர் சுற்றுப்பயணம் செய்வதாக சொல்லியிருக்கிறார்.



    இது முதலமைச்சருக்கு தெரியுமா? என்று கேட்பதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் வெளிநடப்பு செய்தோம்.

    தமிழகத்தில் அரசு செயல்படுகிறதா? அல்லது ஆளுநர் செயல்படுகிறாரா? என்பது தெரியவில்லை. ஆளுநரின் சுற்றுப்பயணத்திற்கு இந்த அரசு அனுமதி கொடுக்கிறது என்றால் தமிழக மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்றுதான் பொருள்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #CongressAttacksCM
    ×