search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பொதுமக்களை பாதுகாக்கவே 8 வழி சாலை: எடப்பாடி பழனிசாமி பேட்டி
    X

    பொதுமக்களை பாதுகாக்கவே 8 வழி சாலை: எடப்பாடி பழனிசாமி பேட்டி

    விபத்துக்களை குறைக்கவும், விலைமதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றுவதற்காகவே 8 வழிச்சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது என்று முதல்வர் பழனிசாமி பேட்டியில் தெரிவித்துள்ளார். #edappadipalanisamy #chennaisalem8wayroad

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி: சேலம்-சென்னை 8 வழிச்சாலை கமி‌ஷனுக்காக அமைக்கப்படுகிறதாக கூறப்படுகிறதே?

    8 வழி சாலை பசுமை திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். தேசிய அளவில் இது மிகப்பெரிய திட்டம். நிலம் கையப்படுத்துவது மட்டுமே தமிழக அரசின் செயல் ஆகும். நிலம் வழங்குபவர்களுக்கு அதிக இழப்பீடு வழங்கப்படும். கடந்த 2000 முதல் 2006-ம் ஆண்டு வரை உளுந்தூர் பேட்டை-சேலம், சேலம் -கிருஷ்ணகிரி சாலைகள் விரிவுப்படுத்த நிலம் கையப்படுத்தப்பட்டது.

    தமிழகத்தின் வாகனத்தின் எண்ணிக்கை இன்றைய தினம் 2 கோடியே 57 லட்சம் ஆகும். இந்த திட்டம் நிறைவேற்றுவதற்கு குறைந்த பட்சம் 4, 5 ஆண்டு காலம் ஆகும். 5 ஆண்டுகள் ஆகும்போது கிட்டத்தட்ட இன்னும் 70 லட்சம் வாகனங்கள் அதிகரிக்கும். அப்போது 70 லட்சம் வாகனங்கள் அதிகரிக்கும். எனவே தான் இந்த சாலை தேவையானது.

    கடந்த சில ஆண்டுகளாகவே குறுகிய சாலைகளால் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விபத்துக்களை குறைக்கவும், விலைமதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றுவதற்காகவே இந்த 8 வழிச்சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    40 ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடியில் எனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு மண் சாலை இருந்தது. தற்போது அந்த சாலை விரிவுப்படுத்தப்பட்டு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதைப்போல் சென்னை -திருவனந்தபுரம் சாலை, கோவை சாலை விரிவுபடுத்தப்பட்டு இருக்கின்றன.

    நமது பகுதி தொழில் வளர்ச்சி அடைந்த பகுதி. கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்லும். இதனால் சாலை விரிவாக்கம் அவசியமானது. குறிப்பாக ஒரு லாரி 1 லிட்டர் டீசலுக்கு 4 கிலோ மீட்டர் தூரம் தான் செல்லும்.

    15 லிட்டர் டீசலில் 60 கிலோ மீட்டர் தூரம் தான் செல்ல முடியும். டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போது 60 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கு 1300 ரூபாய் வரை செலவாகிறது. இன்னும் வரும் காலங்களில் டீசல் விலை மேலும் உயரும்.

    தொழில் வளர்ச்சி, கட்டமைப்பு வசதி அவசியமானது. அதற்கு 8 வழிச்சாலை தேவை. படித்து விட்டு ஏராளமானோர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. வேலை வாய்ப்பு பெருக்குவதற்கு உள்கட்டமைப்பு வசதி தேவை.

    நிலம் வழங்குபவர்களுக்கு மாற்று இடம், இழப்பீடு மற்றும் பசுமை வீடு வழங்கப்படும்.

    கேள்வி:சந்தை மதிப்பீடு படி இழப்பீடு வழங்கப்படுமா?

    நிலத்தின் வழிகாட்டி மதிப்பீடு படி இழப்பீடு வழங்கப்படும். வழிகாட்டி மதிப்பீட்டில் ஏற்கானவே இழப்பீடு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.4 கோடி முதல் 5 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும்.

    30 தென்னை மரத்திற்கு ரூ.12 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும். ஆனால் ஒரு தென்னை மரத்தின் மூலம் ரூ.900 தான் மாதத்திற்கு வருமானம் கிடைக்கும்.

    கேள்வி: கஞ்சமலையில் உள்ள இரும்பு தாதுக்களை வெட்டி எடுத்துச் செல்லவே இந்த சாலை அமைக்கப்படுகிறதாக கூறப்படுகிறதே?

    கற்பனையான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. விமர்ச்சிப்பதற்கு என்றே இந்த திட்டத்தை சிலர் எதிர்த்து வருகிறார்கள். எத்தனை சாதனைகள் செய்தாலும் அதை மறைக்கப்படுகின்றன.

    2 ஆண்டுகளுக்கு முன்பு 2 கைகளையும் இழந்தவருக்கு இறந்தவரின் கைகளை எடுத்து பொருத்தி மருத்துவ துறையில் சாதனை படைத்து இருக்கிறார்கள். இது இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் தமிழகம் தான் முதல் முதலாக இந்த சாதனையை பெற்றுள்ளது. இதற்கு யாரும் நன்றி தெரிவிக்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் இதற்கு காரணம். 8 வழிச்சாலையை எதிர்க்க பல்வேறு சதிகள் நடக்கிறது.

    கேள்வி: 8 வழிச்சாலைக்கு நில அளவீடு பணிகளில் போலீசாரால் விவசாயிகள் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறதே?

    அதிகாரிகள் நில அளவீடு பணியில் ஈடுபடும்போது அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை.

    அரசு அதிகாரிகளின் பாதுகாப்புக்காகவே போலீசார் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். தமிழகம் முழுவதும் ரூ.75 ஆயிரம் கோடிக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட முக்கிய சாலைகள் விரிவுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் புதிய தொழிற்சாலைகள் வர வாய்ப்பு உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 44.14 சதவீதம் பேர் உயர் கல்வி படிக்கிறார்கள்.

    30-6-1977-ல் எம்.ஜி.ஆர்.முதல்-அமைச்சராக பதிவி ஏற்றார். அன்று முதல் இன்று வரை பல்வேறு வளர்ச்சி பணிகளை அ.தி.மு.க. அரசு செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #edappadipalanisamy #chennaisalem8wayroad

    Next Story
    ×