search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chithirai thiruvizha"

    • கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது.
    • சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20-ந் தேதி காலை 7 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். கட்டிட கலையில் சிறந்து விளங்குகிறது.

    இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி நடைபெற்றது.

    இந்த நிலையில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு சந்திரசேகரர், பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது.

    முன்னதாக கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் நடைபெற உள்ளது. விழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    2-ம் நாளான நாளை (ஞாயிற்றுகிழமை) காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடு நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவின் கடைசி நாளான 23-ந் தேதி தீர்த்த வாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

    • விதிகளை முறையாக பின்பற்ற மதுரை மாவட்ட கலெக்டர் உடனடியாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
    • இனி எதிர்காலங்களில் இந்த உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த நாகராஜன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரைத்திருவிழா ஏப்ரல் 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது.

    பாரம்பரியமாக ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல் பைகளில் நறுமணநீர் நிரப்பி துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பக்தர்கள் பீய்ச்சி அடிப்பார்கள். பக்தர்கள் விரதமிருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து வந்து சிறிய குழாய் மூலம் சுவாமியின் மீது பீய்ச்சி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் ஐதீகத்தை மீறி தோல் பையில் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகளை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருள்களை கலந்து பீய்ச்சுவதால் கள்ளழகர் சுவாமி, தங்கக்குதிரை வாகனம் மற்றும் சுவாமியின் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் திரவியம் மற்றும் வேதிப்பொருள்கள் கலந்த தண்ணீரால் பட்டர்கள், பிரசாரகர் பணியாளர்கள், பெண்கள் மற்றும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த ஆண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்ச தடை விதிக்க வேண்டும் என மனு செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை முடித்து தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் என்பது உலக பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்த விழாவில் பாரம்பரியமாக கள்ளழகர் வேடமணிந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பது என்பது நடந்து வருகிறது.

    தற்போது இது பெண்கள், குழந்தைகள் மீது ஒரு சில இளைஞர்கள் தவறுதலாக வேண்டுமென்றே அடித்து துன்புறுத்தி வருகின்றனர். இது போன்ற துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பது சட்டத்தின் கடமையாக உள்ளது.

    எனவே இனி இந்த விவகாரம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். பாரம்பரிய உடை அணிந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பவர்கள், மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அதுவும் அவர்களின் முன் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.

    மேலும் கள்ளழகர் மலையிலிருந்து இறங்கி வரும் வழிகளில் எங்குமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க அனுமதிக்க கூடாது. ஆற்றில் இறங்கும் போது மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகள், முதியோர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை காவல்துறையினர் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

    எனவே இந்த விதிகளை முறையாக பின்பற்ற மதுரை மாவட்ட கலெக்டர் உடனடியாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு இந்த வருடத்திற்கு மட்டுமானது அல்ல. இனி எதிர்காலங்களில் இந்த உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • கடந்த ஆண்டு வரை 483 மண்டகப்படிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • தற்போது வரை சாதிய பிரச்சனைகள் ஏற்பட்டதாக புகார் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டு கிளையில் மானகிரி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. சாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளையும் களைந்து பொதுமக்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால் கட்டணம் பெற்றுக்கொண்டு சில சாதி அமைப்புக்கு சொந்தமான தனியார் மண்டகப் படிகளுக்கும், தனியாருக்கு சொந்தமான இடங்களுக்கும் கள்ளழகரை கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் மக்களிடையே வேறுபாடு ஏற்படும் நிலை உள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் சாதி ரீதியான தனியார் மண்டகப்படிகள் மற்றும் தனிநபர்களுக்கு சொந்தமான இடங்களுக்கு கள்ளழகரை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். மேலும் கள்ளழகரை பாரம்பரிய மண்டகப்படிகளுக்கு மட்டுமே கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், தனியார் மண்டகப்படிகளுக்கு சாதி ரீதியான அமைப்பு மண்டகப்படிகளுக்கும் கள்ளழகரை கொண்டு செல்வதால் பொருளாதார வேறுபாடு ஏற்படுவதோடு, தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும் நிலை உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    அரசுத்தரப்பில், பல நூற்றாண்டுகளாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை 483 மண்டகப்படிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன. முறையான ஏற்பாடுகளுடன் அனுமதி கோரினால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது வரை சாதிய பிரச்சனைகள் ஏற்பட்டதாக புகார் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு நீதிபதிகள், சித்திரைத் திருவிழா தென் தமிழகத்தின் மிகப்பெரும் பாரம்பரிய கொண்டாட்டம். மண்டகப்படிகளை அதிகரிப்பது சாமியை தரிசிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் விதமாகவே அமையும் பல லட்சம் பக்தர்கள் இந்த விழாவிற்கு வருவதால் போதிய அடிப்படை வசதிகளையும், பாதுகாப்பையும் அரசு தரப்பு உறுதிப்படுத்த வேண்டும். மண்டகப்படி விவாகரத்தில் இதுவரை எந்த புகார்களும் இல்லாததால் அதில் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

    • மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிந்தவுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது.
    • 21-ந்தேதி கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் கோலத்தில் சுந்தர்ராஜ பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மதுரைக்கு புறப்பாடாகிறார்.

    உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை பெருவிழா அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதன் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அடுத்த மாதம் 20ந்தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மறுநாள் (21ந்தேதி) தேரோட்டம் நடக்கிறது.

    மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிந்தவுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது. அதன்படி வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை), மறுநாள் (20-ந்தேதி) மாலை 6.00 மணிக்கு மேல் கள்ளழகர் கோவிலில் உள்ள தோளுக்கினியானின் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். 21-ந்தேதி மாலை 6.10 மணிக்கு மேல் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் கோலத்தில் சுந்தர்ராஜ பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மதுரைக்கு புறப்பாடாகிறார்.

    அப்பன் திருப்பதி, பொய்கைக்கரைபட்டி, கள்ளந்திரி என வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மறுநாள் 22-ந்தேதி மதுரை மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்கிறார்கள்.

    மறுநாள் (23-ந்தேதி) காலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதனைத் தொடர்ந்து மதியம் ராம ராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சுதல் நடக்கிறது. தொடர்ந்து அண்ணாநகர் வழியாக இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் அழகர் எழுந்தருளுகிறார்.

    24-ந்தேதி காலை அங்கிருந்து புறப்பாடாகி கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு முதல் விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் தசாவதார கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    25-ந்தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் காட்சியளிக்கும் கள்ளழகர் பிற்பகலில் ராஜாங்க அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளி ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பாடாகிறார். இரவு பூப்பல்லக்கில் சுவாமி காட்சியளிக்கிறார்.

    மறுநாள் (26-ந்தேதி) அழகர்மலைக்கு புறப்பாடாகும் அழகர் 27-ந்தேதி காலை 11 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார். 28-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் சித்திரை பெருவிழா முடிவடைகிறது.

    மேற்கண்ட தகவலை கோவில் செயல் அலுவலர் கலைவாணன் தெரிவித்துள்ளார்.

    • தினசரி மண்டகப்படி விழாக்கள் நடைபெற்றது.
    • மஞ்சள் நீராட்டு நிகழச்சி நடந்தது.

    மணப்பாறை நகரின் மையப்பகுதியில் புகழ்பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறும். இதே போல் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 30-ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தினசரி மண்டகப்படி விழாக்கள் நடைபெற்றது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பால்குட விழா, வேடபரி விழா ஆகியவை நடைபெற்று முடிந்த நிலையில் இறுதி விழாவான விடையாற்றி எனும் காப்புகளைதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடைபெற்றது. அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட மாலை, காப்பு உள்ளிட்டவைகளை மேளதாளங்கள் முழங்க கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ராஜவீதியின் வழியாக வாகைக்குளம் அருகில் உள்ள கோவில் கிணற்றை அடைந்ததும், அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் நீரில் கரைக்கப்பட்டன. அதேபோல் முளைப்பாரிகளும் நீரில் விடப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு நிகழச்சி நடந்தது. அதில் மஞ்சள் மற்றும் வண்ணப்பொடிகள் கலந்த நீரால் ஒருவருக்கொருவர் ஊற்றிக்கொண்டு மகிழ்சியை வெளிப்படுத்தினர்.

    • 5-ந்தேதி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடந்தது.
    • நாளை அழகருக்கு உற்சவ சாந்தி நடைபெறுகிறது.

    மதுரை கள்ளழகர் கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் பிரசித்தி பெற்றது சித்திரை திருவிழா வாகும். இந்த திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து 3-ந்தேதி சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு மதுரைக்கு புறப்பட்டார். சுமார் 450க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி 4-ந்தேதி மதுரை வந்து சேர்ந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் திரளாக நின்று கள்ளழகரை தரிசித்தனர்.

    மதுரை வந்த கள்ளழகருக்கு மூன்று மாவடி, தல்லாகுளம் பகுதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் எதிர்சேவை நடந்தது. இதைத்தொடர்ந்து 5-ந்தேதி அதிகாலையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கள்ளழகரை தரிசித்தனர். தொடர்ந்து தீர்த்தவாரியும் நடந்தது. கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும், உற்சாக நடனமாடியும் பக்தர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

    6-ந்தேதி காலை தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அதைத்தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் தசாவதார நிகழ்வும் நடைபெற்றது.

    மறுநாள் (7-ந்தேதி) கள்ளழகர் மோகினி அவதார கோலத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அன்று இரவு 11 மணியளவில் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு ராஜ அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை அங்கிருந்து பூப்பல்லக்கில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவிலில் விடைபெற்று அழகர்மலைக்கு கள்ளழகர் புறப்பட்டார். அப்போது பக்தர்கள் மலர்களை தூவி உற்சாகத்துடன் அவரை வழியனுப்பி வைத்தனர்.

    மலைக்கு புறப்பட்ட கள்ளழகர் புதூர், மூன்று மாவடி, சுந்தரராஜன்பட்டி வழியாக நேற்று இரவு அப்பன் திருப்பதி சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 11.10 மணியளவில் அழகர் இருப்பிடம் சென்றடைந்தார். அழகர் மலைகோட்டை வாசலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்தும், ஆரத்தி எடுத்தும் அழகரை வரவேற்றனர்.

    இதையடுத்து நாளை (10-ந்தேதி) அழகருக்கு உற்சவ சாந்தி நடைபெறுகிறது. அத்துடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

    • மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி தொடங்கியது.
    • நாளை, அழகர்கோவிலில் உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி தொடங்கியது. 3-ந் தேதி தங்கப்பல்லக்கில் அழகர், மதுரைக்கு புறப்பட்டார். 450-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளியபடி மதுரை வந்த கள்ளழகரை மூன்றுமாவடி, தல்லாகுளத்தில் பக்தர்கள் எதிர்சேவை அளித்து வரவேற்றனர்.கடந்த 5-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும், மறுநாள் தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், ராமராயர் மண்டகப்படியில் தசாவதார நிகழ்வும் நடைபெற்றன.

    நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நேற்று அதிகாலை 3 மணி அளவில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் எழுந்தருளிய கள்ளழகரை, கோவிந்தா கோவிந்தா... எனும் கோஷம் முழங்கிட பல்லாயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    அதை தொடர்ந்து கருப்பணசுவாமி கோவில் சன்னதியில் விடைபெற்று, அழகர் மலைக்கு கள்ளழகர் புறப்பட்டார். அப்போது பக்தர்கள் மலர் தூவியும், கண்ணீர் மல்க, மனமுருகி வணங்கி அவரை வழியனுப்பி வைத்தனர்.

    பின்னர் கள்ளழகர் புதூர், மூன்று மாவடி, சுந்தரராஜன்பட்டி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, வழியாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.32 மணிக்கு மேல் அழகர் மலைக்கு சென்றடைகிறார். அதனை தொடர்ந்து நாளை, அழகர்கோவிலில் உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    • 16-ந்தேதி வேதாளம் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும்.
    • 17-ந் தேதி தேரோட்டம் நடைபெறும்.

    நெல்லை மாவட்டம் ஆவரைகுளத்தில் முத்தாரம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருக்கொடியினை நடேசன் ஏற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

    விழா நாட்களில் தினமும் காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். 8-ம் திருநாளான 15-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு 1,008 திருவிளக்கு பூஜையும், நள்ளிரவு 1 மணிக்கு பெருமாள் சாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    9-ம் திருநாளான 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு நாதஸ்வரம் இசை மற்றும் சிறப்பு பூஜையும், தொடர்ந்து வில்லிசையும் நடைபெறும். நள்ளிரவு 1 மணிக்கு முத்தாரம்மன் எழுந்தருளல், பத்திரகாளி அம்மன் எழுந்தருளல், வேதாளம் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    17-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு மஞ்சள் மாரியம்மன் உலா வருதல் நிகழ்ச்சியும், மதியம் 1 மணிக்கு சுடலை ஆண்டவர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறும். மாலை 5 மணிக்கு வாணவேடிக்கை, செண்டை மேளம் முழங்க தேரோட்டம் நடைபெறும். ஒவ்வொரு நாளும் மதியம் 12.30 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு சமய மாநாடும், தொடர்ந்து இரவு சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை முத்தாரம்மன் கோவில் நிர்வாக கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

    • நாளை தொடங்கி 11-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • அம்மன் வாகன பவனி நடைபெறுகிறது.

    நாகர்கோவில் அருகே உள்ள பிள்ளையார்புரத்தில் தேவி முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 11-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    நாளை அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், அம்மனுக்கு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும், மாலை 5 மணிக்கு பக்தி மஞ்சரி நிகழ்ச்சியும், நாதஸ்வர கச்சேரியும் நடைபெறுகிறது. இரவு 7:30 மணிக்கு சக்தி மகளிர் மன்றத்தாரின் பஜனையும், 8 மணிக்கு அதிர்ஷ்ட பிள்ளையாருக்கு பூஜையும், 9 மணிக்கு குருசாமிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், 10 மணிக்கு சுடலைமாடசாமிக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜையும், 11 மணிக்கு வில்லிசையும், நள்ளிரவு 1:30 மணிக்கு சாஸ்தா சாமிக்கு அலங்கார பூஜையும், பெருமாள் சாமிக்கு அலங்கார பூஜையும் நடக்கிறது.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வில்லிசையும், மதியம் 1.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், பைரவநாதன் பூஜையும், அன்னதானமும், மாலை 4 மணிக்கு நாசிக்டோல் நிகழ்ச்சியும், 5.30 மணிக்கு கால சாமிக்கு சிறப்பு பூஜையும், 6.30 மணிக்கு பக்தர்கள் அம்பாளை வரவேற்கும் முகமாக குத்து விளக்கு ஏற்றி மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அம்மன் வாகன பவனியும் நடைபெறுகிறது. இந்த வாகன பவனியை என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., பிள்ளையார்புரம் சிவந்திஆதித்தனார் கல்லூரி தலைவர் என்.காமராஜ், செயலாளர் சி.ராஜன் மற்றும் லயன். டி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். வாண வேடிக்கையும் நடைபெறுகிறது.

    இரவு 9.30 மணிக்கு உற்சவமூர்த்திக்கு ஊஞ்சல் சேவை, 10.30 மணிக்கு பத்திரகாளி அம்மனுக்கு வில்லிசையும், நள்ளிரவு 12. 30 மணிக்கு பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், உஜ்ஜைனி மாகாளி அம்மனுக்கு பூஜையும், மாரி அம்மனுக்கு பூஜையும் நடைபெறுகிறது.

    11-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு வில்லிசையும், காலை 7 மணிக்கு சிவ சுடலைமாட சாமிக்கு அலங்கார பூஜையும், சாமிகளுக்கு அமுது படைத்து ஒடுக்கு பூஜையும் நடக்கிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கவுரவ தலைவர் ஆர்.சுரேஷ்குமார், தலைவர் சி.பொன்ராகவன், உதவி தலைவர் சி.ராஜேஷ் என்ற வீரமணி, செயலாளர் ஆர்.கனகராஜன், உதவி செயலாளர் டி.முத்துகுமார், பொருளாளர் பி. பரமேஸ்வரன், சட்ட ஆலோசகர் டி.தங்கசுவாமி மற்றும் ஊர் மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • கள்ளழகருக்கு சக்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கடந்த 1-ந்தேதி சித்திரை திருவிழா தொடங்கியது. அன்று முதல் 2 நாட்கள் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தார்.

    அதனைத்தொடர்ந்து 3-ந்தேதி மாலை பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து அங்குள்ள பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி சன்னதி முன்பு உத்தரவு பெற்று கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார்.

    கள்ளந்திரி, அப்பன் திருப்பதி என வழி நெடுகிலும் உள்ள மண்டகப் படிகளில் எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மறுநாள்(4-ந்தேதி) மதுரை மூன்று மாவடிக்கு கள்ளழகர் வருகை தந்தார். அப்போது பக்தர்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்றடைந்தார்.

    மறுநாள் (5-ந்தேதி) அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்பட்ட கள்ளழகர் அதிகாலை 6 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு இரவு விடிய விடிய திருவிழா நடந்தது.

    மறுநாள் (6-ந்தேதி) வைகையாற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். பின்னர் அங்கு திருமஞ்சனமாகி தங்க கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடந்தது. கள்ளழகர் முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராமர் அவதாரம், கிருஷ்ணர் அவதாரம், மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். நேற்று (7-ந்தேதி) மோகினி அலங்காரத்தில் பல்வேறு மண்டகப்படி களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிய ளித்தார்.

    இன்று (8-ந்தேதி) அதிகாலை 2.30 மணிக்கு அனந்தராயர் பூப்பல்லக்கில் கள்ளழகர் தமுக்கத்தில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் வையாழியாக உருமாறிய கள்ளழகர் அழகர் மலைக்கு புறப்படும் வைபவம் நடந்தது.

    தல்லாகுளம், அவுட்போஸ்ட் ஆகிய பகுதி களில் உள்ள ஒவ்வொரு மண்டகப்படிகளிலும் எழுந்தருளிய கள்ளழகர் காலை 6 மணிக்கு அவுட் போஸ்ட் மாரியம்மன் கோவிலிலும், 7 மணிக்கு அம்பலக்காரர் மண்டபத்திலும் எழுந்தருளினார்.

    இதையொட்டி ரேஸ்கோர்ஸ், புதூர், தாமரைதொட்டி, ரிசர்வ்லைன், டி.ஆர்.ஓ. காலனி ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது கள்ளழகருக்கு சக்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர். திரளான பக்தர்கள் "கோவிந்தா...கோவிந்தா..." கோஷமிட்டு கள்ளழகரை வழியனுப்பி வைத்தனர்.

    அதனைத்தொடர்ந்து கள்ளழகர் இரவு 7 மணியளவில் மூன்று மாவடி, கடச்சனேந்தல் வழியாக அப்பன் திருப்பதிக்கு இரவு சென்றடைகிறார். அங்கு இன்று இரவு விடிய, விடிய திருவிழா நடைபெறுகிறது.

    கடந்த 3-ந்தேதி கோவிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் மதுரை சித்திரை திருவிழாவை முடித்துக் கொண்டு நாளை காலை 11 மணியளவில் தனது இருப்பிடம் சேருகிறார்.

    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமராயர் மண்டபத்தில் கூடி இருந்தனர்.
    • இன்று கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருள்கிறார்.

    சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக மதுரை சித்திரை திருவிழா நடந்து வருகிறது. முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தொடங்கிய சித்திரை திருவிழாவில் கடந்த 2-ந் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், மறுநாள் தேரோட்டமும் நடந்தது.

    அழகர்கோவில் சித்திரை பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 5-ந் தேதி நடந்தது. தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

    நேற்று முன்தினம் காலை வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து கருட வாகனத்தில் புறப்பாடாகி மதுரை வண்டியூரில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அனுமன் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு பக்தர்களின் அங்கப்பிரதட்சணம் நடந்தது. பின்னர் மேள, தாளம் முழங்க மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள ராமராயர் மண்டபத்துக்கு கிளம்பினார்.

    அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு மேல் தசாவதார நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் முத்தங்கி சேவையும் அதை தொடர்ந்து மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் நடந்தது.

    இறுதியாக நேற்று காலை மோகினி அவதாரத்தில் அழகர் காட்சி தந்தார். விடிய, விடிய தசாவதாரம் நிகழ்ச்சி அங்கு நடந்தது. இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமராயர் மண்டபத்தில் கூடி இருந்தனர்.

    நேற்று மதியம் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளினார். அதை தொடர்ந்து கோரிப்பாளையம் வழியாக இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமானார்.

    இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருள்கிறார். அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் இருந்து இன்று அழகர்மலைக்கு புறப்படுகிறார்.

    • நாளை காலை 6 மணிக்கு மோகன அவதார கோலத்தில் கள்ளழகர் வீதி உலா வருகிறார்
    • 8-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.
    • 9-ந்தேதி காலை கள்ளழகர் இருப்பிடம் போய் சேருகிறார்.

    மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நேற்று காலை நடந்தது. இதற்காக கடந்த 3-ந்தேதி அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் பூண்டு பெருமாள் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

    கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் உள்ளிட்ட இடங்களை கடந்து நேற்று முன்தினம் (4-ந்தேதி) மூன்று மாவடிக்கு வந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர் சேவை நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர்.

    பின்பு தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்தார். அங்கு நள்ளிரவு 12 மணியளவில் திருமஞ்சனமாகி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து நேற்று அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் அருகில் ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.

    அங்கிருந்து அதிகாலை 3 மணி அளவில் தங்க குதிரையில் அமர்ந்தபடி வைகை ஆற்றுக்கு வந்தார். பின்னர் அதிகாலை 5.52 மணியளவில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். இதனை காண 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர்.

    சுமார் ஒரு மணி நேரம் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின்னர் மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர்.

    இரவு 9 மணி அளவில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர்.

    வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகருக்கு இன்று காலை திருமஞ்சனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஏகாந்த சேவை, பக்தி உலாத்துதல் நடந்தன.

    அதனைத் தொடர்ந்து கள்ளழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் சர்க்கரை தீபம் எடுத்து வழிபட்டனர். பின்பு அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் தேனூர் மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

    பின்னர் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மாலை 3.30 மணியளவில் அனுமன் கோவிலில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். அப்போது பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து வழிபாடு நடத்துகின்றனர்.

    இரவில் கள்ளழகர் மீண்டும் ராமராயர் மண்டகப்படிக்கு வருகிறார். அங்கு இரவு 11 மணி முதல் நாளை(7-ந்தேதி) காலை வரை விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.

    மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவ தாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகன அவதாரம் ஆகிய திருக்கோலங்களில் அழகர் காட்சி அளிக்கிறார்.

    நாளை காலை 6 மணிக்கு மோகன அவதார கோலத்தில் கள்ளழகர் வீதி உலா வருகிறார். பகல் 12 மணிக்கு ராமராயர் மண்ட பத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார்.

    நாளை இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி 8-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். அதே அதே கோலத்தில் கருப்பண சாமி கோவில் சன்னதியில் இருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார்.

    மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 9-ந்தேதி காலை இருப்பிடம் போய் சேருகிறார்.

    ×