search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சித்திரை திருவிழா: பக்தர்களுக்கு அடிப்படை வசதி, பாதுகாப்பை அரசு உறுதி செய்ய ஐகோர்ட் உத்தரவு
    X

    சித்திரை திருவிழா: பக்தர்களுக்கு அடிப்படை வசதி, பாதுகாப்பை அரசு உறுதி செய்ய ஐகோர்ட் உத்தரவு

    • கடந்த ஆண்டு வரை 483 மண்டகப்படிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • தற்போது வரை சாதிய பிரச்சனைகள் ஏற்பட்டதாக புகார் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டு கிளையில் மானகிரி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. சாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளையும் களைந்து பொதுமக்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால் கட்டணம் பெற்றுக்கொண்டு சில சாதி அமைப்புக்கு சொந்தமான தனியார் மண்டகப் படிகளுக்கும், தனியாருக்கு சொந்தமான இடங்களுக்கும் கள்ளழகரை கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் மக்களிடையே வேறுபாடு ஏற்படும் நிலை உள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் சாதி ரீதியான தனியார் மண்டகப்படிகள் மற்றும் தனிநபர்களுக்கு சொந்தமான இடங்களுக்கு கள்ளழகரை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். மேலும் கள்ளழகரை பாரம்பரிய மண்டகப்படிகளுக்கு மட்டுமே கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், தனியார் மண்டகப்படிகளுக்கு சாதி ரீதியான அமைப்பு மண்டகப்படிகளுக்கும் கள்ளழகரை கொண்டு செல்வதால் பொருளாதார வேறுபாடு ஏற்படுவதோடு, தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும் நிலை உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    அரசுத்தரப்பில், பல நூற்றாண்டுகளாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை 483 மண்டகப்படிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன. முறையான ஏற்பாடுகளுடன் அனுமதி கோரினால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது வரை சாதிய பிரச்சனைகள் ஏற்பட்டதாக புகார் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு நீதிபதிகள், சித்திரைத் திருவிழா தென் தமிழகத்தின் மிகப்பெரும் பாரம்பரிய கொண்டாட்டம். மண்டகப்படிகளை அதிகரிப்பது சாமியை தரிசிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் விதமாகவே அமையும் பல லட்சம் பக்தர்கள் இந்த விழாவிற்கு வருவதால் போதிய அடிப்படை வசதிகளையும், பாதுகாப்பையும் அரசு தரப்பு உறுதிப்படுத்த வேண்டும். மண்டகப்படி விவாகரத்தில் இதுவரை எந்த புகார்களும் இல்லாததால் அதில் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

    Next Story
    ×